அந்த வீடு என்றுமில்லாது அன்று மயான அமைதியில் ஆழ்ந்திருந்தது. இரவுப் பொழுதும் வந்துவிட்ட போதும், விளக்கேற்ற மறந்து, இரவு உணவைத் தயாரிக்க மறந்து, அப்படியே கிடந்தார் லக்ஷ்மி.
வீடு முழுவதும் கும்மிருட்டில் மூழ்கிக் கிடப்பதை அப்போதுதான் உணர்ந்த சந்தானம் எழுந்து மின்விளக்குகளை ஒளிரவிட்டார்.
ஓய்ந்து போயிருந்த மனைவி மகளோடு, மதியம் சமைத்த யாருமே சாப்பிடாமல் கிடந்த உணவையே பெயருக்குக் கொரித்தவர்கள் தங்கள் தங்கள் அறைகளில் முடங்கினர்.
அடுத்தநாள் காலையில் நேரத்துக்கே எழுந்து தயாராகி, “நான் வெளியே போய்விட்டு வருகிறேன்..” என்றார் சந்தானம்.
விழித்துவிட்டபோதும் எந்த வேலையும் பார்க்கத் தோன்றாமல் கட்டிலில் கிடந்த லக்ஷ்மி, வேகமாக எழுந்தார். “எங்கே.. எங்கே போகிறீர்கள்? அவனிடம் நேரில் கதைக்கப் போகிறீர்களா?”
இறுகிய குரலில், “போய்விட்டு வந்து சொல்கிறேன்..” என்றபடி வெளியேறினார் அவர்.
அவர் சென்றதும் சித்ராவின் அறைக்குச் சென்று பார்த்தார் லக்ஷ்மி. அங்கே, எங்கோ வெறித்தபடி கிடந்த மகளைப் பார்க்க வேதனையும் ஆத்திரமும் சேர்ந்தே வந்தது. பூ மாதிரி வளர்த்த மகளுக்கு மிகச் சிறப்பாகத் திருமணம் செய்துகொடுத்து ராணி மாதிரி அவள் வாழ்வதைக் கண்ணாரக் காணவேண்டும் என்று ஆசைப்பட்டது தப்பா?
தான தர்மங்கள் செய்தால் பிள்ளையின் வாழ்க்கையைக் கடவுள் நன்றாக வைப்பார் என்று நம்பி எத்தனையோ நல்ல காரியங்களைச் செய்தோமே, அதில் ஒன்று கூட என் பிள்ளையின் வாழ்க்கையைக் காப்பாற்றாதா?
கடமையைச் செய் பலனை எதிர்பாராதே என்றல்லவா சொல்வார்கள். செய்த தர்மத்திற்குப் பலனாக மகளின் நல்வாழ்க்கையை எதிர்பார்த்தார்களே, அதற்கான தண்டனைதான் இதுவா?
அதற்காக இவ்வளவு பெரிய தண்டனையா?
அவரால் தன் மனதைச் சமாதனாப்படுத்தவோ அல்லது அறுதல் படுத்தவோ முடியவே இல்லை. இப்படி ஆகிவிட்டதே.. இப்படி ஆகிவிட்டதே என்று அதிலேயே நின்று உழன்றார்.
என்னென்னவோ எண்ணி உள்ளுக்குள்ளேயே உழன்றபடி காலைக் கடன்களை முடித்துக்கொண்டு அறையை விட்டு வெளியே வந்தவர், “அம்மா, நான் வெளியே போய்விட்டு வருகிறேன்..” என்று, திடீரென்று கேட்ட மகளின் குரலில் திடுக்கிட்டுத் திரும்பினார்.
அடித்ததனால் வீங்கிக் கிடந்த அவளின் கன்னங்களை பார்த்ததுமே அவர் விழிகள் கலங்கின. அதையும் மீறி வெளியே செல்வதற்கு தயாராக நின்றவளின் மீது கோபம் எழுந்தது.
“திரும்ப எங்கே போகப் போகிறாய். இனி வீட்டு வாசலை நீ தாண்டக் கூடாது. உள்ளே போ!” என்றார்.
“இல்லைமா. நான் கட்டாயம் போயே ஆகவேண்டும். ஒரு மணித்தியாலத்தில் திரும்பி வந்துவிடுவேன்.” என்றவளின் குரலில் திரும்பியிருந்த பிடிவாதம் அவரை உசுப்பியது.
“இப்படிப் போய் வயிற்றில் வாங்கி வந்தது போதாதா? போடி உள்ளே!” என்றார் ஆத்திரத்தோடு.
விழிகள் மீண்டும் கலங்கத் துவங்க, தாயின் முகத்தை நேராகப் பார்த்தாள் சித்ரா. “இல்லைமா. கட்டாயம் நான் போயே ஆகவேண்டும். என் வயிற்றில் இருப்பதற்கு ஒரு வழி கண்டே ஆகவேண்டும்.” என்றவள், அதற்கு மேலும் அங்கே நில்லாது மடமடவென்று வெளியேறினாள்.
தன் சொல் கேளாமல் போகும் மகளையே பொங்கிய ஆத்திரத்தோடு பார்த்திருந்தார் லக்ஷ்மி.
முதல் நாள் முழுவதும் ஒழுங்காகச் சாப்பிடாததிலும், மனதிலும் உடலிலும் தெம்பு இல்லாததிலும் ஸ்கூட்டரை விட்டுவிட்டு ஒரு ஆட்டோவை மறித்து ஏறியவள் ரஞ்சனின் முதல் கடைக்குச் என்றாள்.
கடைசி முறையாக அந்தக் கடையை விட்டு வெளியேறுகையில் என்ன நினைத்தோம், அங்கிருந்து நேராக எங்கே போனோம், அதன் பிறகு நடந்தவைகள் என்று அனைத்தும் மனக்கண்ணில் ஓட, ஆத்திரமும் அழுகையும் ஒருங்கே தோன்றியது.
அன்று ஜீவனும் சுகந்தனும் சொன்னதை அவள் கேட்டிருக்க இன்று இந்த நிலை வந்திருக்காதே என்று பச்சாதாபத்தில் கரைந்தாள். அதையெல்லாம் அடக்கிக் கொண்டு கடையின் உள்ளே சென்றவளைக் கண்டதும் சுகந்தனும் ஜீவனும் முற்றிலுமாக அதிர்ந்து போனார்கள்.
கன்னங்கள் வீங்கி, கண்மடல்கள் தடித்து, முகமெல்லாம் அதைத்து பார்க்கவே முடியாமல் இருந்தாள்.
அதைவிட அவள் நடையில் இருந்த சோர்வும், முகத்தில் தெரிந்த களைப்பும், தங்கையாக நினைத்துப் பழகியவர்களின் மனதைத் துடிக்க வைத்தது.
“சித்ரா? என்ன நடந்தது உனக்கு? ஏன் இப்படி முகமெல்லாம் வீங்கிக் கிடக்கிறது?”என்று அவர்கள் பதற, “அம்மா அடித்தார்..” என்றாள் அவள்.
உணர்ச்சியின்றித்தான் சொல்ல நினைத்தாள். ஆனாலும் தொண்டை அடைத்தது.
திகைத்துப்போய், “ஏன்?” என்று அவர்கள் கேட்க, அந்தக் கேள்வியை ஒதுக்கி, “அன்று ஏன் அப்படிச் சொன்னீர்கள்?” என்று இருவரிடமும் பொதுவாகக் கேட்டாள்.
எதைக் கேட்கிறாள் என்று இருவருக்குமே புரிந்தாலும், அவளின் நிலை அவர்களது வாயை அடைத்தது.
தாங்களும் எதையாவது சொல்லி, அது அவளை இன்னும் வருத்திவிடுமோ என்று பயந்தனர்.
“சொல்லுங்கள், மிஸ்டர் ரஞ்சன் என்னைத் திருமணம் செய்துகொள்ள மாட்டார் என்று ஏன் சொன்னீர்கள்.” என்று திரும்பக் கேட்டாள் சித்ரா.
அவள் குரலில் இருந்த விலகலும், ‘மிஸ்டர் ரஞ்சன்’ என்கிற சொற்பதமும் ஏதோ பிரச்சனை என்பதை உணர்த்தியது. பிரச்சனை வரும் என்பதை அவர்களுமே ஊகித்தனர் தான். ஆனால், அதில் சித்ரா இப்படி வாடி வதங்கிவிடுவாள் என்று கனவிலும் நினைக்கவில்லை.
காரணம், எவ்வளவு துடிப்பான துணிவான பெண் அவள் என்பதை அவர்கள் மிக நன்றாக அறிவார்களே!
அப்படியானவள் இன்று இப்படி நிற்கிறாள் என்பதே பிரச்சினையின் அளவைச் சொல்ல, “சொல்கிறோம். முதலில் நீ அமர்ந்துகொள்!” என்று, முதலாளியின் இருக்கையைக் கட்டினான் சுகந்தன்.
எப்போதுமே அவள் அங்கு வந்தால் அமரும் இருக்கை அது. ரஞ்சனுக்காகப் போடப் பட்டாலும், அவள் கடையில் நின்றால் ரஞ்சன் கூட அதில் அமரமாட்டான். அவனை அமர சித்ரா விடமாட்டாள்.
என்றுமே தன் உரிமை என்று நிலை நாட்டுபவள், இன்று அதை மறுத்துவிட்டு, அங்கிருந்த முக்காலியை இழுத்து அந்த மேசையின் முன்னால் போட்டு அதில் அமர்ந்து, பாராங்கல்லாகக் கனத்த தலையை, மேசையில் ஊன்றிய கையில் தாங்கிக் கொண்டாள்.
அதைப் பார்த்துவிட்டு, “ஏதாவது குடிக்கிறாயா?” என்று சுகந்தன் கேட்க, “நீயிரு. நான் போய் சாப்பிட ஏதாவது வாங்கி வருகிறேன்..” என்றான் ஜீவன்.
இருவருக்குமே அவள் நிலை மனதைப் பிசைந்தது.
“இல்லை! எனக்கு ஒன்றும் வேண்டாம். நான் கேட்டதற்கு மட்டும் பதிலைச் சொல்லுங்கள். அது போதும்!” என்றாள் சுரத்தின்றி.
உயிர்ப்பில்லாத பேச்சு அவள் இயல்பில்லையே!
அவள் நிலை உள்ளே வலித்தபோதும், “ரஞ்சன் சாதனாவைக் கல்யாணம் செய்யப் போகிறான்..” என்றான் சுகந்தன் மரத்த குரலில்.
ஏற்கனவே தெரிந்த செய்திதான். ஆனாலும் அதைக் கேட்கையில் ஈட்டியால் குத்தியது போன்று இதயம் வலித்தது சித்ராவுக்கு.
விழிகளில் திரண்ட கண்ணீரை அடக்கியபடி, “அந்தப் பெண்ணுக்கு ஏற்கனவே வெளிநாட்டு மாப்பிள்ளையைப் பார்த்து இருந்தார்களே..” என்றாள்.
“அந்த நாய் ஒழுங்காக இருந்திருக்க இந்தப் பிரச்சினையே வந்திருக்காதே!” என்று பல்லைக் கடித்தான் ஜீவன்.
சித்ரா புருவங்களைச் சுருக்கிக் கேள்வியாகப் பார்க்க, “உன் பிறந்தநாள் வந்ததே. அதற்கு அடுத்தநாள் இங்கே அவர்கள் இருவரும் ஜோடி போட்டுக்கொண்டு வந்தார்கள். அப்போது அவனுக்கு அடிக்கடி அழைப்பு வந்தது. இங்கே மேசையில் கைபேசியை வைத்துவிட்டு அவன் செருப்பைப் போட்டுப் பார்த்துக்கொண்டு இருந்தான். நான்தான் இவனுக்கு அப்படி யார் இத்தனை தரம் அழைப்பது என்று சந்தேகத்தில் அவன் கைபேசியை நோண்டினேன். யாரோ லிசி என்கிற பெண்ணின் பெயரில் இருந்து அழைப்பு.. அதுவும் பலதடவைகள். அந்த நம்பரைக் குறித்து ரஞ்சனிடம் கொடுத்தேன். அவர்கள் போனபிறகு அவளுக்கு அழைத்து நீ யார் என்று கேட்டால் அவன் காதலி என்கிறாள் அவள்.” என்றான் ஜீவன் ஆத்திரத்தோடு.
“சாதனாவின் அப்பா வழிச் சொந்தம் யாரோ அங்கே லண்டனில் இருக்கிறார்களாம். அவர்கள் மூலமாக வந்த வரன் தானாம் அது. அவர்கள் திரும்ப விசாரித்தால், அந்தப் பெண் அவர்களிடமும் அப்படித்தான் சொல்லியிருக்கிறாள். இதில் என்ன வேடிக்கை என்றால், அந்த லிசி இவனின் பக்கத்து வீட்டுக் காரியம். முதலில் அவளிடம் அவனைப் பற்றி விசாரித்ததற்கு தங்கமான பொடியன் என்று சான்றிதழ் வழங்கியதும் அவள் தானாம். ஏன் அப்படிப் பொய் சொன்னாய் என்று கேட்டதற்கு இந்த மூதேவிதான் அப்படிச் சொல்லச் சொன்னானாம். பிறகுதான் அவளுக்கு யாரோ சொல்லி இருக்கிறார்கள், அவன் உன்னை ஏமாற்றிவிட்டு கல்யாணம் செய்யத்தான் இலங்கைக்குப் போயிருக்கிறான் என்று.. அதுதான் அவள் இவனை அழைத்து ஒரே தொந்தரவாம். அந்த ஏழரை என் கண்ணில் மாட்டி, உன் வாழ்க்கையில் பிரச்சனையாக வந்து விடிந்திருக்கிறது.” என்றான் ஜீவன் எரிச்சலும் ஆத்திரமும் நிறைந்த குரலில்.
“ஒரு பெண்ணின் வாழ்க்கை நாசமாகக் கூடாது என்று நினைத்துத்தான் லிசியின் நம்பரை எடுத்து ரஞ்சனிடம் கொடுத்தேன் சித்ரா. ஆனால், ரஞ்சன் அவளையே கட்டப் போவதாகச் சொல்வான் என்று நான் கனவிலும் நினைக்கவில்லை.” என்றான் வேதனையுடன்.
“என்னை மன்னித்துக்கொள் சித்ரா. இப்படியாகும் என்று தெரிந்திருக்க சத்தியமாக நான் அதைச் செய்திருக்கவே மாட்டேன்.”
“நல்லதுதானே செய்து இருக்கிறீர்கள். விடுங்கள்.” என்று ஒரு பெருமூச்சை வெளியேற்றிவிட்டு எழுந்தவள், “சரி நான் வருகிறேன்..” என்றபடி வெளியே நடந்தாள்.
“சித்ரா நில்லு. உன் அம்மா ஏன் உன்னை அடித்தார்கள்?” என்று கேட்டான் ஜீவன்.
அவள் ரஞ்சனைக் காதலிக்கும் விஷயம் தெரிய வந்திருந்தாலும், அதற்கு இப்படியா அடிப்பார்கள்? அந்தளவுக்கு அவள் முகம் வீங்கி விரல் தடங்கல் பதிந்து கிடந்தது.
பதில் சொல்லாமல் அவனைத் திரும்பிப் பார்த்தவளின் கலங்கிய விழிகளையும், துடித்த இதழ்களையும், கசங்கிய முகத்தையும் பார்த்தவன் ஒன்றும் புரியாமல் குழம்பி நின்றான்.