இரவு முழுவதுமே தூங்காது விழித்துக் கிடந்தவளின் மனம் கொதித்துக் கொண்டே இருந்தது.
அவள் அவனை விரும்புவதாகச் சொன்னபோது நானும் உன்னை விரும்புகிறேன் என்று ஏன் சொல்லவேண்டும்?
அவன் தன் அத்தைப் பெண்ணை மணக்கப் போகிறான் என்றால் அவளுடன் எதற்குப் பழகினான்?
எல்லாவற்றையும் கொஞ்சம் கூட குற்ற உணர்வே இன்றிச் செய்துவிட்டு, இன்று அவளை ‘நல்ல்ல’ மாப்பிள்ளையாகப் பார்த்துக் கட்டச் சொன்னால் அதன் பொருள் என்ன?
அவளை என்னவென்று நினைத்துக் கொண்டிருக்கிறான் அவன்?
தனக்குள் தானே போராடிக் கொண்டிருந்தவள் விடிந்ததுமே எழுந்து தயாரானாள். கருவுற்று, அதனால் உண்டான சோர்வில் தளர்ந்திருந்தவள் தாயிடம் வாங்கிய அடியினாலும் மனப்போராட்டத்தினாலும் மிகவும் களைத்திருந்தாள். இதில் கருக்களைப்பினால் உண்டான வேதனை ஒருபக்கம் என அவள் உடல் மனதின் வேகத்துக்கு ஒத்துழைக்க மறுத்தது.
ஆனாலும், மனதில் இருந்த ஆவேசமும் வேகமுமே அவளை நடமாட வைத்தது.
கடந்தவை இரண்டு நாட்கள் தானா என்றிருந்தது அவளுக்கு. இரண்டு ஜென்மங்களுக்குப் போதுமான வேதனைகளையும் சோதனைகளையும் அல்லவா அனுபவித்திருக்கிறாள்.
முதல்நாள் தான் உறங்கிவிட்டதாக நினைத்துத் தாயும் தந்தையும் பேசிக்கொண்டது நினைவிலாடியது.
சந்தானம் எவ்வளவுக்கு நல்ல மனிதரோ அந்தளவுக்குப் பொல்லாத மனிதர் என்பது அவளுக்கு மிக நன்றாகவே தெரியும். அப்படிப்பட்ட அவள் தந்தை நிச்சயம் ரஞ்சனை ஒருவழி ஆக்காமல் ஓயமாட்டார்.
அவன் சமுதாயத்தில் எதைத் தேடி ஓடுகிறானோ அதை வாழ்நாளில் அடையவிடாமல் பண்ணும் வல்லமை மிக்கவர்!
அவன் இந்த நிலையை எட்ட என்னவெல்லாம் பாடுபட்டான் என்பதை அவள் அறிவாளே!
அப்படியானவனுக்கு அவர் செய்யப் போவது பெருத்த அடியாக இருக்கும் என்பது புரிந்தாலும், அவளின் நிலையை அது ஈடுகட்டுமா?
திருப்பிக் கிடைக்கவே முடியாதவற்றை எல்லாம் அல்லவா இழந்துவிட்டாள். அதுவும் அவள் குழந்தை? அதை அழித்தது அவள் தாயாராக இருந்தாலும், அதற்கு மூலகாரணம் அவன் அல்லவா? அவனை அப்படியே விட்டுவிடுவதா?
என்ன நினைத்துக் கொண்டிருக்கிறான்? மற்றப் பெண்களைப் போல வாயை மூடிக்கொண்டு மூலையில் முடங்கிவிடுவாள் என்றா?
பெண்கள் ஊருக்கும் உலகுக்கும் பயந்து, நடந்த அநியாயங்களை தங்களுக்குள்ளேயே புதைப்பதால் தானே இந்தத் தைரியம் ஆண்களுக்கு வருகிறது!
அப்படி அவளும் செய்வாள் என்று எண்ணினான் போலும்!
அவள் என்ன அந்தளவுக்கு முதுகெலும்பு அற்றவளா?
குட்டக் குட்டக் குனியும் ரகமல்ல அவள் என்று அவனுக்குக் காட்டவேண்டாமா?
ஆத்திரம் மேலோங்கத் தயாராகி வெளியே வந்தவளை, சந்தானம் கேள்வியாகப் பார்த்தார்.
அவரும் வெளியே செல்லத் தயாராக இருப்பது தெரியவும், “எங்கேப்பா போகப் போகிறீர்கள்?” என்று மெல்லிய குரலில் கேட்டாள் சித்ரா.
“வெளியே.. கடைக்கு.” என்றார் பொதுவாக.
“அப்பா..”என்று தயக்கத்தோடு அழைத்த மகளை கேள்வியாகப் பார்த்தார் சந்தானம்.
அவள் தலை தானாகத் தரையைப் பார்த்தது.
“நம் பேச்சிலோ செயலிலோ தவறு இல்லையெனில் தலை குனியவேண்டிய அவசியம் இல்லையே!”
அதைக்கேட்டவளின் தலை தானாகவே நிமிர்ந்தது.
“நான் ரஞ்சனைப் பார்க்கப் போகிறேன் அப்பா.” என்றாள், அவர் விழிகளை நேராக நோக்கி!
பார்வை கூர்மை பெற, “ஏன்?” என்று கேட்டார் சந்தானம்.
“என்னப்பா ஏன்? என்னை விரும்புவதாகச் சொல்லி என்னோடு பழகிவிட்டு இன்று அத்தை மகளைக் கட்டப் போகிறேன் என்றால் அப்படியே விட்டுவிட முடியுமா? அல்லது அவன் சொன்னதுபோல இன்னொருவனை நான் கட்டி, ரஞ்சன் எனக்குச் செய்த அதே துரோகத்தை நான் அவனுக்குச் செய்யமுடியுமா? பிறகு அவனுக்கும் எனக்கும் என்னப்பா வித்தியாசம்?” என்று, விழிகள் கலங்கியபோதும் ஆவேசத்துடன் கேட்டாள் மகள்.
“எல்லாம் சரிதான். ஆனால், அவன்தான் உன்னைத் திருமணம் செய்யமாட்டேன் என்று சொல்லிவிட்டானே.” என்றார் தந்தை.
அவர் வாயால் அதைக் கேட்கையிலேயே வலித்தது அவளுக்கு.
“அவன் என்னப்பா மறுப்பது? இந்த மறுப்பை, ‘உங்களை விரும்புகிறேன்’ என்று நான் சொன்னபோது மறுத்திருந்தால் ஏற்றுக் கொண்டிருப்பேன். ஆனால் இனி முடியாது! எனக்குக் கல்யாணம் என்று ஒன்று நடந்தால் அது அவனோடுதான்.” என்று உறுதியான குரலில் சொன்னவள், “என்னை இழந்தது மட்டுமல்லாமல் என் குழந்தையைக் கூட இழந்திருக்கிறேன் அப்பா. என்னால் இன்னொருவனைக் கட்ட முடியாது. அந்தத் தகுதி எனக்கில்லை..” என்றாள் குரலடைக்க.
அதுவரை கணவனும் மகளும் பேசிக்கொண்டிப்பதைக் கேட்டிருந்த லக்ஷ்மி ஆத்திரத்தோடு இடைபுகுந்தார். “ஏன், உனக்கு என்ன தகுதி இல்லை? அவனுக்குத்தான் எந்தத் தகுதியுமே இல்லை. ஏமாற்றுக்காரன்! வேண்டுமானால் கொஞ்ச நாட்கள் போகட்டும். பிறகு நல்ல மாப்பிள்ளையாகப் பார்த்துக் கட்டிவைக்கிறோம். அந்தக் கேடுகெட்டவன் உனக்கு வேண்டாம்.”
இப்போதே திருமணத்திற்கு மறுத்தவன் கட்டியபிறகு மகளைத் துன்புறுத்தினால் என்ன செய்வது என்கிற பயம் அவருக்கு.
ஆனால், அவர் முகம் கூடப் பார்க்காத மகளோ, “நான் அவனைத்தான் கல்யாணம் செய்வேன் அப்பா!” என்றாள் தந்தையிடம் உறுதியான குரலில்.
மகள் தன்னோடு பேசாததில் கோபம் கொண்டு, “ஏய் என்னடி, இந்த வீட்டுக்கு அவன்..” என்று படபடத்தவர்,
“லக்ஷ்மி!” என்ற சந்தானத்தின் அதட்டலில் பேச்சை நிறுத்திவிட்டுக் கணவரைப் பார்த்தார்.
“கொஞ்சம் பேசாமல் இரு. நீ அவசரப்பட்டுச் செய்தது, கதைத்தது எல்லாம் போதும்!” என்று அவர் சொன்னதும் விழிகள் கலங்க அமைதியானார் லக்ஷ்மி.
மகளிடம் திரும்பி, “நீ போய்க் கதைப்பதால் கல்யாணத்துக்கு அவன் சம்மதிப்பான் என்று நினைக்கிறாயா?” என்று கேட்டார் அவர்.
“அவன் சம்மதிக்கிறானோ இல்லையோ, இந்தத் திருமணம் கட்டாயம் நடக்கும் அப்பா. நீங்கள் என்னை நம்பவேண்டும்.”
“உன்னை நம்பாமல் என்னம்மா..” என்று அவர் கேட்கவும், தான் இவ்வளவு செய்தபிறகும் தன்னை நம்பும் தந்தையின் பாசத்தில் கண்ணைக் கரித்தது அவளுக்கு.
எப்போதும் தனக்காகத் தாயிடம் பரிந்து பேசும் அவருக்கு அவமானத்தைப் பரிசளித்துவிட்டாளே!
அதை எப்படியாவது நேராக்கியே தீரவேண்டும் என்கிற ஆவேசம் இன்னும் அதிகமாக எழுந்தது.
“சரி நீ போய்விட்டு வா. நானும் டவுனுக்குத்தான் போகிறேன், என்னுடன் வருகிறாயா?” என்று கேட்டவரிடம், “இல்லைப்பா, நான் ஆட்டோவில் போய்க்கொள்வேன். ஆனால்..” என்று இழுத்தாள் சித்ரா.
“என்ன சித்து? சொல்ல நினைப்பதைத் தயங்காமல் சொல்லு.”
“அதுவரை நீங்கள் ஒன்றும் செய்யவேண்டாம்.” என்றாள் அவரைப் பாராது.
அவளைப் பார்வையால் துளைத்தபடி, “ஒன்றும் செய்யவேண்டாம் என்றால்?” என்று புருவங்களைச் சுருக்கியவர், “அங்கே, ஆஸ்பத்திரியில் நானும் அம்மாவும் பேசிக்கொண்டதைக் கேட்டாயா?” என்று கேட்டார்.
நிலம் நோக்கியிருந்த அவள் தலை ஆமென்பதாக ஆடியது.
“இன்னும் அவனைக் காக்கத்தான் நினைக்கிறாய் இல்லையா?”
“இல்லைப்பா.. அது..” என்றவளின் குரலில் மறுப்புக்கான திடம் குறைவாகவே இருந்தது.
ஒன்றும் சொல்லாது மகளையே பார்த்தார் சந்தானம்.
அவளும் அவரைப் பார்க்க, அவர் தலை மறுப்பாக ஆடியது. “இல்லை சித்து. அது சரிவராது. நீ அவனைத் திருமணம் செய்ய நினைப்பதில் எனக்கும் சம்மதமே. நான் எப்படி என் பிள்ளைக்கு நல்லவன் ஒருவன் வாழ்க்கைத் துணையாக வரவேண்டும் என்று நினைக்கிறேனோ அப்படித்தான் ஒவ்வொரு பெற்றவர்களும் நினைப்பார்கள். அதனால் தான் அவனை மடக்கி என்னிடம் வரவைத்து அவனோடு உனக்குத் திருமணம் செய்ய நினைக்கிறேன். நீ பேசி அவனைச் சம்மதிக்க வைத்தாலும் திருமணத்திற்குப் பிறகும் அவன் உன்னிடம் வாலாட்டக் கூடாது. ஒருமுறை ஏமாந்த நான் மறுமுறையும் ஏமாறத் தயாராக இல்லை. அதனால் அவன் கடைகளை நான் வாங்கப் போவது உறுதி.” என்று சொல்லிக் கொண்டிருந்தவர் மகளின் விழிகளில் தெரிந்த இரைஞ்சலைக் கண்டு பேச்சை நிறுத்தினார்.
பின்னர் தொடர்ந்து, “வேண்டுமானால் வங்கி லோனிலும், அவன் செருப்புக்களைக் கொள்வனவு செய்யும் இடங்களிலும் கைவைக்காமல் இருக்கிறேன். அதுவும் நீ அவனுடன் கதைத்துவிட்டு உன் முடிவை என்னிடம் சொல்லும் வரைதான். இந்தத் திருமணம் நடந்தால் அவனுக்கு நல்லது. இல்லையானால் அவன் நடுத்தெருவுக்கு வருவது உறுதி.” என்றார் உறுதியான குரலில்.
தந்தை அதுவரை இறங்கி வந்ததே போதுமானதாக இருக்க, “சரிப்பா..” என்றவள், அவரிடம் சொல்லிக்கொண்டு ரஞ்சனின் கடைக்குக் கிளம்பினாள்.