இந்து சமுத்திரத்தின் நித்திலம் எனப் போற்றப்படும் இலங்கையின் மிகப் பெரிய நதியான மகாவலிகங்கை கடலுடன் கலக்கும் அற்புத இடமே திருகோணமலை!
அப்படியான வளம் கொழிக்கும் திருகோணமலையில் அருள்மிகு இறைவியார் மாதுமை அம்பாளுடன் வீற்றிருக்கும் திருக்கோணேஸ்வரப் பெருமானை, இராமேஸ்வரக் கரையிலிருந்து அகக்கண்ணால் கண்டு மகிழ்ந்து, ‘கோயிலும் சுனையும் கடலுடன் சூழ்ந்த கோணமாமலை யமர்ந்தாரே’ என்று பாடியிருக்கிறார் திருஞானசம்மந்த மூர்த்தி நாயனார்.
அவ்வாறு மூவாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட வரலாற்றுச் சிறப்பு மிக்க திருக்கோணேஸ்வரர் ஆலயத்தில், உள்ளத்திலும் முகத்திலும் கலக்கம் மட்டுமே முதன்மையாக நிறைந்திருக்க நின்றிருந்தனர் சந்தானம் குடும்பத்தினர்.
சந்தானத்தின் முகம் உணர்ச்சிகளைக் காட்டாதிருக்க, லக்ஷ்மியின் மனமோ இந்தத் திருமணம் நல்லபடியாக நடந்து முடியவேண்டும் என்று அருள்மிகு கோணேஸ்வரப் பெருமானை வேண்ட, எளிமையாக அமைக்கப்பட்டிருந்த மணமேடையில் அமர்ந்திருந்தனர் சித்ராவும் ரஞ்சனும்.
ஒரே மகளின் திருமணம், தான் நினைத்ததுபோல் நடக்கவில்லையே என்கிற ஏமாற்றம் மனம் முழுவதும் நிறைந்து கிடந்தபோதும், முடிந்தவரை மகளுக்கு அழகிய பட்டுச் சேலை, சிறப்பான நகைகள் அணிவித்து மிக அழகாக அலங்கரித்து விட்டிருந்தார் லக்ஷ்மி. ஆனாலும் அவள் முகமோ வெய்யிலில் வாடிய தாமரையாய் மலர்ச்சியின்றிக் கிடந்தது.
ரஞ்சனின் முகம் பாறையைப் போன்று இறுகிக் கிடந்தது. அவன் பக்க ஆட்கள் என்று சுகந்தன், ஜீவன், கண்ணன் மட்டுமே நின்றிருந்தனர்.
சித்ராவைத் திருமணம் செய்யப் போகிறேன் என்று சொன்னதும் தாம் தூம் என்று குதித்த இராசமணி, தன் சொல்லைக் கேட்காத மகனின் திருமணத்திற்கு வர மறுத்துவிட்டார். தாயோடு நித்தியும் சேர்ந்துகொண்டாள்.
ஆக மொத்தம் சந்தானம், லக்ஷ்மி, கண்ணன், ஜீவன் மற்றும் சுகந்தன் என்று ஐவர் குழுமி நிற்க, ஐயர் மந்திரத்தைச் சொல்ல பொன் தாலியைக் கையில் ஏந்தியபடி சித்ராவைப் பார்த்தவனின் விழிகள் நெருப்பை வெறுப்போடு கக்கின.
அவள் நினைத்ததைச் சாதித்துவிட்டாளே என்று பெரும் சினம் கொண்டது அவன் மனம்!
சித்ராவின் விழிகளோ நிலம் நோக்கியிருக்க, அழுகையை அடக்கியதில் விடைத்த மூக்கும் துடித்த இதழ்களுமாக இருந்தவளின் நெஞ்சோ வெடித்துவிடும் போன்று துடித்துக் கொண்டிருந்தது.
அவளது சங்குக் கழுத்தில் அவன் தாலியைக் கட்ட, எவ்வளவு தடுக்க முயன்றும் முடியாமல் அவள் கன்னங்களில் கண்ணீர் வழிந்தோடியது.
தன் மணிவயிற்றில் உதித்த முத்தை இழந்தல்லவா இந்தத் தாலியை அவனிடமிருந்து வாங்குகிறாள். அது இருந்திருக்க குழந்தை மட்டுமே என் வாழ்க்கைக்குப் போதும் என்று ஒதுங்கி இருப்பாளே.
தாலியின்றி அம்மா இருக்கக் கூடாது என்று எண்ணித்தான், தன் உயிரைக் கொடுத்துத் தாயின் மானத்தைக் காத்ததோ அவள் செல்வம்?
‘நான் செய்த தவறுக்கு நீ பலியாகிப் போனாயா…’
அவள் மடியில் தவழ மறுத்துச் சென்றுவிட்ட அந்தத் தளிரோடு மனதால் பேசியவளின் மார்பு தாங்கொணா வேதனையில் துடிதுடித்தது.
கண்ணீர் வடிப்பவளைப் பார்த்த அவளின் தாய் தந்தையரின் மனமோ இரத்தக் கண்ணீரை வடிக்க, கையாலாகத் தனத்துடன் அர்ச்சதையைத் தூவி மகள் நன்றாக வாழவேண்டும் என்று உளமார வாழ்த்தினர். அந்த இடத்தில் அவர்களால் முடிந்தது அது மட்டுமே!
ரஞ்சனுக்கோ அவளைப் பார்க்க ஆத்திரத்தோடு எரிச்சலும் கூடவே வந்தது.
பின்னே, அவ்வளவு பிடிவாதம் பிடித்து அவனைத் தாலியைக் கட்ட வைத்தவள் எதற்குக் கண்ணீர் வடிக்க வேண்டும்? வெற்றிக் களிப்பில் துள்ளிக் குதிக்காமல் எதற்கு நடிக்கிறாள்?
குனிந்திருந்த அவளைப் பார்த்து முறைத்துவிட்டு வெறுப்போடு முகத்தைத் திருப்பிக் கொண்டான்.
அடுத்தடுத்த சடங்குகள் அனைத்தும் ஒருவித இயந்திரத் தனத்துடன் முடிவடைய, கண்ணன், ஜீவன் மற்றும் சுகந்தன் மூவரும் ரஞ்சனை அணைத்து திருமணத்துக்கு வாழ்த்தினர்.
பதிலேதும் சொல்லாமல் கல்லாக நின்றவன், “எல்லாம் முடிந்துவிட்டது என்றால் புறப்படலாம்!” என்றான் யாரையும் பாராது.
அன்று சித்ராவுக்கு அழைத்துத் திருமணத்திற்குச் சம்மதம் சொன்னவன் அப்படியே சுகந்தனுக்கும் அழைத்து விசயத்தைச் சொல்லி, “இனி நீங்கள் கடையை விட்டுப் போகத்தேவையில்லை.” என்றும் சொல்லியிருந்தான்.
அவர்கள் மகிழ்ச்சியோடு வாழ்த்த அதைக் கேளாது கைபேசியை அணைத்தவன் அதன்பிறகு அந்தக் கடைக்குச் செல்லவும் இல்லை. அவர்களோடு கதைக்கவும் இல்லை.
ரஞ்சன் புறப்படலாம் என்றதும் பரபரப்பான லக்ஷ்மி, “நாங்கள் முன்னால் போகிறோம். கண்ணன் எல்லோரையும் அழைத்துக்கொண்டு நீ பின்னால் வா..” என்றார். அவருக்கு மகளின் திருமணம் நடந்துவிட்டதில் ஓரளவுக்கு மனம் சமாதானம் ஆகியிருந்தது.
முதலில் ரஞ்சன் மகளுக்குக் கணவனாக வருவதில் உடன்பாடு இல்லாத போதும், மகளின் பிடிவாதத்தையும் அதற்கு ஆதரவாக நின்ற கணவரையும் பார்த்துவிட்டு அமைதியாகிவிட்டார் லக்ஷ்மி.
இப்போது, அவன் அவரது மருமகன் என்பதை விட மகளின் கணவன் என்பதே முதன்மையாகத் தெரிந்தது அந்தத் தாய்க்கு. அவனுக்கான சகல மரியாதைகளையும் குறைவின்றிச் செய்தால் மகளை நன்றாகப் பார்த்துக்கொள்வானே!
எனவே அனைத்துச் சடங்குகளையும் தன்னால் முடிந்தவரை சிறப்பாக முடிக்க நினைத்தார்.
ஆனால் ரஞ்சனோ, மாமியாரின் கூற்றுக்கு எந்தப் பதிலையும் சொல்லாது சித்ராவின் காதோரமாகக் குனிந்து, “நான் என் வீட்டுக்குப் போகப் போகிறேன். என் மனைவியாக உனக்கு வர விருப்பம் இருந்தால் இப்போதே வா. இல்லையானால் என்றும் வராதே!” என்றான் அழுத்தமான குரலில்.
அவனை நிமிர்ந்து பார்த்தாள் சித்ரா. உறுதியாய் அவளது விழிகளைச் சந்தித்த அவன் விழிகளைப் பார்த்துவிட்டு தகப்பனின் புறம் திரும்பியவள், “அப்பா, நாங்கள் இப்படியே இவரின் வீட்டுக்குப் போகிறோம். நீங்கள் நம் வீட்டுக்குக் கிளம்புங்கள்.” என்றாள்.
“என்னம்மா இப்படிச் சொல்கிறாய். முறைப்படி..” என்று ஆரம்பித்த லக்ஷ்மியை சந்தானத்தின் பார்வை அடக்கியது.
“நாங்களே உங்களைக் கொண்டுவந்து விடுகிறோமே ரஞ்சன். இனியாவது உன்.. உங்கள் அம்மாவிடமும் நாங்கள் கதைப்பதுதானே முறை.” என்று, மகளிடம் அல்லாமல் ரஞ்சனிடமே நேரிடையாகக் கேட்டார் சந்தானம்.
திருமணத்திற்கு அவன் சம்மதம் சொன்னதும் உன் வீட்டில் வந்து கதைக்கிறோம் என்று சந்தானம் சொன்னதற்கு உறுதியாக மறுத்துவிட்டிருந்தான் ரஞ்சன்.
இனியாவது சம்மந்தி அம்மாவுடன் கதைப்போம் என்று அவர் நினைக்க, அவர் விழிகளை நேராக நோக்கி, “இல்லை அங்கிள். இப்போதைக்கு வேண்டாம். பிறகு ஒரு நாள் வீட்டுக்கு வாருங்கள். இப்போது நாங்கள் மட்டுமே கிளம்புகிறோம்.” என்றான் அவன்.
அதற்கு மேலும் அவனை வற்புறுத்தாத சந்தானம், “சரிப்பா. கவனமாகப் போய் வாருங்கள்..” என்றபடி மகளைப் பார்த்தார்.
கம்பீரமாகக் காட்டிக்கொள்ள முயன்று அதிலே தோற்றுப்போன அந்தத் தந்தையின் விழியோரங்கள் மெலிதாகக் கசிந்தன.
அவர் வீட்டின் இளவரசி இன்று ஒருவனுக்கு மனைவியாக, இன்னொரு வீட்டுக்கு மருமகளாகப்போகிறாள். சொத்து சுகம் என்று எத்தனையோ அவளுக்காகச் சேர்த்து வைத்திருந்த போதும் அவளைச் சீரும் சிறப்புமாக வழியனுப்ப முடியாத நிலையில் நிற்கும் தன்னையே நொந்துகொண்டது அவர் மனம்.
தந்தையின் மனவேதனையை மிக நன்றாகப் புரிந்துகொண்ட சித்ரா, அவளுக்கும் அவருக்குமான தூரம் இரண்டடியாக இருந்தபோதும் ஓடிவந்து அவரது தோள் சாய்ந்து, “நன்றிப்பா..” என்றாள் அழுகையில் குரல் உடைய!
அந்த நன்றி எதற்காகச் சொல்லப்பட்டது?
அவள் செய்த பிழையைப் பொறுத்து அவளுக்காகப் பாடுபட்டாரே, அதற்கா?
அவனையே திருமணம் செய்யப் போகிறேன் என்று அவள் சொன்னபோதும், அவளுக்காக நின்றாரே, அதற்கா?
அல்லது, இப்போது ரஞ்சனின் எண்ணத்தை அவள் வாய்மொழியாகச் சொன்னபோது, அதை உணர்ந்து தூண்டித் துருவாமல் மகளுக்காக அனைத்தையும் விட்டுக் கொடுத்துவிட்டு நிற்கிறாரே, அதற்கா?
எதற்காக இருந்தாலும் அவரைப் போன்ற ஒரு தந்தை கிடைக்க அவள் கொடுத்து வைத்திருக்க வேண்டும். அவருக்காகத் தன்னும் தான் அவனோடு மிக நன்றாக வாழ்ந்து காட்டவேண்டும் என்கிற லட்சியம் எழுந்தது அவள் மனதில்.
மகளின் கன்னங்களில் வழிந்த கண்ணீரைத் துடைத்து விட்டவர், “சந்தோசமாக இரடா..” என்றார் நெகிழ்ந்துவிட்ட குரலில்.
லக்ஷ்மிக்கோ சொல்லத் தேவையில்லை. கண்ணீர் தாரை தாரையாக வழிந்தது. சேலை முந்தானையால் துடைக்கத் துடைக்கப் பெருகியது.
ஒரேயொரு செல்ல மகள் இன்று புகுந்த வீடு செல்கிறாள். ஊரே கூடி அவளை வாழ்த்தி அனுப்ப வேண்டிய நேரத்தில் இப்படித் தனியாகச் செல்கிறாளே என்று தவித்தார்.
அங்கே கோணேஸ்வரப் பெருமானுடன் சாந்தமே வடிவமாய் வீற்றிருந்த மாதுமை அம்பாளைப் பார்த்து, ‘என் மகளுக்கு மனம் நிறைந்த வாழ்க்கையைக் கொடு தாயே..’ என்று உருகி வேண்டியது அவர் உள்ளம்!
தாய் தந்தையரின் பாதம் பணிந்து வணங்கி எழுந்த சித்ரா, கண்ணனின் காலில் விழவும் தவறவில்லை.
கண்ணனோ அதை எதிர்பாராததில் திக்கு முக்காடிப் போனார். ஒரு வேலைக்காரனாக இல்லாமல் தன்னையும் சகோதரனாக மதித்தவளின் செயலில் அவர் கண்களும் கலங்கிவிட, அவசரமாகக் குனிந்து அவளைத் தூக்கிவிட்டவர், “சீரும் சிறப்புமாய் வாழவேண்டும் சித்து..” என்றார் நெகிழ்ந்துவிட்ட குரலில்.
இதழ்களில் புன்னகையும், விழிகளில் கண்ணீருமாக எல்லோரிடமும் தலையசைத்து விடைபெற்றவள், தன் கணவனாகி விட்டவனைப் பின் பற்றிச் சென்றாள்.
அவள் செல்லும் வரை அழுகையை அடக்கியபடி நின்ற லக்ஷ்மி அதற்கு மேலும் தாங்க முடியாமல் கணவரின் தோள் சாய்ந்து வெடித்து அழுதார். தொண்டைக்குழி அடைத்துவிட்டதில் வாய் வார்த்தையாகத் தேற்ற முடியாமல் மனைவியின் தோளை ஆதரவாக அணைத்துக்கொண்ட சந்தானத்தின் விழிகளும் கசிந்திருந்தன.
அவர்கள் அருகே வந்த ஜீவன், “ஆன்ட்டி! நல்ல நாளும் அதுவுமா அழாதீர்கள். சித்து சந்தோசமாக வாழ்வாள். ரஞ்சன் கட்டாயம் வாழ வைப்பான். அவனுக்கு அவன் அப்பா என்றால் உயிர். அதனால் தான் சில பைத்தியக்கார வேலைகளைச் செய்யப் பார்த்தான். மற்றும்படி அவன் மிக மிக நல்லவன் ஆன்ட்டி. அவனை எங்களுக்குச் சிறு வயதில் இருந்தே தெரியும். அங்கிளையும் கேட்டுப் பாருங்கள். அதைவிட சித்துவின் மனதுக்கு அவள் கட்டாயம் நன்றாக வாழ்வாள்.” என்றான், அவர்கள் இருவரையும் அறிந்தவனாக.
மெல்லக் கண்களைத் துடைத்துக்கொண்ட லக்ஷ்மி, “உன் வாய் முகூர்த்தம் பலிக்கட்டும் தம்பி. எங்களுக்கு ஒரேயொரு குழந்தை. நான் சும்மா அவள் முதுகில் தட்டினாலே இவர் கத்துவார். அங்கு போய் என்ன செய்யப் போகிறாளோ.. அவள் மாமியார் எப்படி நடத்துவாரோ.. ரஞ்சன் பாசமாக இருந்தாலாவது அவன்.. அவர் பார்த்துக் கொள்வார் என்று நினைக்கலாம். இங்கே அந்தத் தம்பியும் கோபமாக இருக்கிறதே.. என் பிள்ளை என்ன செய்யப் போகிறாளோ தெரியவில்லை..” என்று வேதனையோடு சொன்னவரின் கைகள், மகளின் நல்வாழ்க்கையை யாசகமாக ஏந்தின அந்தக் கோணேஸ்வரப் பெருமானைப் பார்த்து!
சித்ராவுடன் கோவிலை விட்டு வெளியே வந்த ரஞ்சன் வீதியில் வந்துகொண்டிருந்த ஒரு ஆட்டோவைக் கைகாட்டி மறித்தான். ஆட்டோ நிற்கவும் கழுத்தில் இருந்த மாலையைக் கழட்டி அருகில் நின்றவளின் கையில் திணித்தான்.
எதுவும் சொல்லாமல் வாங்கிக்கொண்டு தன்னுடையதையும் கழட்டி, ஒரு கையில் தொங்கப் போட்டவள் அவனோடு ஆட்டோவில் ஏறி அமர்ந்துகொண்டாள்.
ரஞ்சனின் வீடு வந்ததும் ஆட்டோவில் இருந்து இறங்கித் தான் வாழப் போகும் வீட்டை ஆவல் இன்றி ஆராய்ச்சியாகப் பார்த்தாள் சித்ரா.
ரஞ்சனோ ஆட்டோவுக்குப் பணத்தைக் கொடுத்துவிட்டு, அருகில் நின்றவளை ஒரு பொருட்டாகவே மதிக்காமல் விறுவிறு என்று உள்ளே நடந்தான்.
“ரஞ்சன்..!”
அவள் அழைப்பில் நின்றவன், நின்ற இடத்திலிருந்தே விழிகளில் எரிச்சல் தொக்க திரும்பிப் பார்த்தான்.