“எங்கே உங்கள் அம்மாவும் தங்கையும்..” என்று சித்ரா கேட்டு முடிக்க முதலே, “ஏன், அவர்கள் வந்து ஆராத்தி எடுத்தால் தான் உள்ளே வருவாயோ? உனக்கு அதெல்லாம் தேவையில்லை!” என்று பட்டென்று சொல்லிவிட்டு வேகமாக நடந்து சென்றான்.
அதைக் கேட்டவளுக்கு சட்டென நெஞ்சுக்குள் வலித்தது. ஏன், அவளுக்கு அதெல்லாம் தேவையில்லை? அவள் என்ன பின் கட்டு வழியாகவா வருகிறாள்? அவன் கையால் முறையாகத் தாலியை வாங்கி, அவன் மனைவியாகத்தானே வருகிறாள்?
ஆத்திரமும் அழுகையும் வந்தபோதும், இதையெல்லாம் அவள் யாரிடம்தான் கேட்க முடியும்?
கேட்டாலும் நியாயம் கிடைத்துவிடுமா என்ன?
தன் நிலையை எண்ணித் துன்பம் மனதை அரித்தபோதும், அவனோ அந்த வீட்டில் இருப்பவர்களோ அவளை ஆராத்தி எடுத்து அழைக்கப் போவதில்லை என்பதை மிக நன்றாகவே உணர்ந்தவள், வலது காலை எடுத்துவைத்து உள்ளே நுழைந்தாள்.
அந்த வீட்டை மேலோட்டமாகப் பார்த்தவள் சற்று ஆச்சர்யப் பட்டுத்தான் போனாள். அந்தளவுக்கு கலைநயத்துடன் கூடிய அழகான பெரிய வீடு. அவர்கள் வாழ்ந்த வாழ்க்கையின் சான்றாக நின்ற வீட்டுக்குள் மாமியாரையும் மச்சாளையும் தேடியது அவள் விழிகள்.
அவர்களைக் காணாவில்லை என்றதும், ரஞ்சன் சென்றதைக் கவனித்து வைத்திருந்தவள் மாடியேறி அவன் நுழைந்த அறைக்குள்ளேயே சென்றாள்.
வேட்டி சட்டையில் இருந்து ஜீன்ஸ் டி-ஷர்ட்க்கு மாறிக்கொண்டிருந்தான் அவன். அவளைக் கண்டதும் ஆத்திரத்தில் முகம் கடுக்க, “இங்கே எதற்கு வந்தாய்?” என்று கிட்டத்தட்ட உறுமினான்.
கையிலிருந்த மாலைகளை அங்கிருந்த மேசையில் வைத்துவிட்டு, “வேறு எங்கே போவது?” என்று எதிர்க்கேள்வி கேட்டாள் அவள்.
அவளின் நிதானம் அவனை இன்னும் சினம் கொள்ள வைக்க, “பக்கத்தில் இருக்கும் எந்த அறையிலாவது தங்கிக்கொள். இங்கே நீ வரக்கூடாது! இது என் அறை!” என்றான் முகத்தில் அடித்தாற்போல்.
முகம் கன்றிப்போனது சித்ராவுக்கு. அவள் இந்த வீட்டுக்கும் அவனுக்கும் அழையா விருந்தாளி அல்லவா. அதுதான் இவ்வளவு உதாசீனம்.
இதெல்லாம் அவள் எதிர்பார்த்ததுதான். ஆனால், அது இந்தளவுக்கு வலிக்கும் என்பதை எதிர்பார்க்கவில்லை.
ஆனாலும் நிமிர்ந்து, “இந்த வீடு கூடத்தான் உங்கள் வீடு. இங்கே எதற்கு என்னை அழைத்து வந்தீர்கள்? உங்கள் மனைவி என்பதால் தானே. உங்கள் மனைவி உங்கள் அறையில் இருக்காமல் வேறு எங்கே இருப்பது. நான் இங்கே தான் இருப்பேன்!” என்று அதிகாரமாகச் சொன்னவள், சட்டமாக அவன் கட்டிலில் அமர்ந்துகொண்டாள்.
அவளின் பேச்சும் செயலும் ஆத்திரமூட்ட, “ஆமாமாம்! இன்றுமுதல் நீ என் மனைவி இல்லையா! அதுவும் எதற்கும் துணிந்து, என்னென்னவோ திருகுதாளம் எல்லாம் செய்து, எந்தளவு தூரத்துக்கும் இறங்குவேன் என்று என்னை மிரட்டிய மனைவி அல்லவா நீ!” என்றான் நக்கலாக.
அவன் பேச்சு வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சுவது போன்றிருந்தாலும், விட்டால் சொல்லிக்கொண்டே போவான் என்று ஆத்திரம் கிளம்ப, “நீங்கள் மட்டும் என்ன திறமா? காதலிக்க ஒருத்தியையும் கட்டிக்கொள்ள இன்னொருத்தியையும் தெரிவு செய்த மகா நல்லவர் தானே. உங்களுக்கு ஏற்ற மனைவிதான் நான்!” என்றாள் அவளும்.
ஒருநிமிடம் முகம் கன்றியபோதும், “ஓ..! நான் என்ன செய்தாலும், அதற்கு மாறாக நீயும் எதையாவது திருப்பிச் செய்வாய் போல.. ஏட்டிக்குப் போட்டியாக. அப்படித்தானே? இனியும் பார்க்கலாம் நீ என்னத்தைக் கிழிக்கிறாய் என்று.” என்று கடினப்பட்ட குரலில் சொன்னவன், “இனிமேல் என் அறையைச் சுத்தம் செய்வது, என் துணிமணிகளை கழுவி வைப்பது, அயர்ன் பண்ணுவது எல்லாமே நீதான் செய்கிறாய்!” என்றான் உத்தரவாக!
அவளை மனைவி என்கிற பெயரில் வந்திருக்கும் வேலைக்காரி என்று அவன் சொல்லாமல் சொல்வது புரிந்தாலும், “நிச்சயமாக ரஞ்சன். நீங்கள் சொல்லாவிட்டாலும் நான்தான் அதையெல்லாம் செய்வேன். என் புருஷனுக்கு இதைக்கூடச் செய்யமாட்டேனா..” என்றபடி கட்டிலில் இருந்து எழுந்தாள் சித்ரா.
“அதுதானே! என் தங்கையின் வாழ்க்கையை அழித்துவிடுவேன் என்று மிரட்டி என்னைக் கட்டிக் கொண்டவள் ஆயிற்றே நீ. அன்று நமக்குள் நடந்த பிசகால் குழந்தை உண்டாகியிருக்க அதையும் காட்டி என்னை மிரட்டியிருப்பாய்..” என்றவனின் வார்த்தைகளில் அடிபட்ட வலியோடு பார்த்தாள் அவள்.
அவள் விழிகளில் தெரிந்த வலியில் திகைத்து ஒருநொடி பேச்சை நிறுத்தி, ஏன் இப்படிப் பார்க்கிறாள் என்பதாக அவன் புருவங்களைச் சுருக்க, கலங்கிய விழிகளை அவனுக்குக் காட்டாது திருப்பிக் கொண்டாள் சித்ரா.
ஒன்றும் புரியாமல் பேச்சைத் தொடர்ந்தான் ரஞ்சன். “நல்லகாலம் அப்படி எதுவும் நடக்கவில்லை. இல்லாவிட்டால் அதையும் விட்டுவைத்திருக்க மாட்டாய்!” என்று அவன் குத்திக்காட்ட, இந்தமுறை சித்ராவால் வாயைத் திறக்கவே மடியவில்லை.
எவ்வளவுதான் திடமாகக் காட்ட முயன்றாலும் அம்புகலெனப் பாயும் அவன் பேச்சில் அவள் மனம் காயப்பட்டுக்கொண்டே இருந்தது.
உன்னால் என் குழந்தையை பறிகொடுத்துவிட்டுத்தான் நிற்கிறேன் என்று கத்தவேண்டும் போலிருந்தது.
தவறை அவன் செய்ய குழந்தையையும் இழந்துவிட்டுக் குற்றவாளிக் கூண்டில் அவள் நிற்கிறாளே. அது ஏன்?
பதில் தெரியவில்லை அவளுக்கு. ஆனாலும் அவனை விடக்கூடாது என்கிற ஆவேசம் எழ, “அப்படி என்னோடு இருந்தபிறகும் என்னைக் கழட்டிவிட நினைத்தவர் தானே நீங்கள். அதனால் என்னைக் குத்திக்காட்டும் அருகதை உங்களுக்குக் கிடையாது.” என்று அவனுக்குத் திருப்பியடித்தவள், அவனது உடைகள் இருக்கும் கப்போர்ட்டைத் திறந்தாள்.
அவளின் பேச்சுக்குப் பதில் சொல்ல முடியாமல் போன எரிச்சலில், “அதில் என்ன செய்கிறாய்?” என்று எரிந்து விழுந்தான் ரஞ்சன்.
“ம்.. நீங்கள் மட்டும் உடை மாற்றினால் சரியா? பட்டுச் சாரியைச் சுற்றியபடி எவ்வளவு நேரம்தான் நான் நிற்பது. அதுதான் மாற்றுவதற்கு உடை பார்க்கிறேன்..” என்றாள் கப்போர்ட்டுக்குள் தலையை விட்டபடி.
ஒருநிமிடம் செய்வதறியாது நின்றான் ரஞ்சன். அவன் உடைகளுக்குள் அவள் எதைத் தேடுகிறாள். எதை உடுத்திக்கொள்ள முடியும் என்று அவன் பார்த்திருக்க, அவனது சாரம்(கைலி) ஒன்றையும் டி-ஷர்ட் ஒன்றையும் எடுத்துக் கட்டிலில் போட்டாள் அவள். “கொஞ்சம் வெளியே போங்கள். நான் உடை மாற்றவேண்டும்.” என்றாள் சர்வ சாதரணமாக.
“ஏய்! லூசாடி நீ. என் சாரத்தை எப்படிக் கட்டிக்கொண்டு நிற்பாய்?” என்று பாய்ந்தான் ரஞ்சன்.
“எனக்கு வேறு உடை இருந்தால் நான் ஏன் இதைக் கட்டப் போகிறேன். நீங்கள்தானே சொன்னீர்கள் ‘உன் வீட்டில் இருந்து ஒரு உப்புக் கட்டி கூட என் வீட்டுக்கு வரக்கூடாது’ என்று. பிறகு, உடைக்கு நானெங்கே போவது?” என்று சளைக்காது பதிலடி கொடுத்தவள், அவளின் பேச்சில் அதிர்ந்து நின்றவனைப் பார்த்து, “ம்! போங்கள் வெளியே!” என்றாள் அதிகாரமாக.
அனலைக் கக்கும் விழிகளால் அவளை முறைத்தவன், வேகமாக அவளருகே வந்து அவள் கையிலிருந்த தன் ஆடைகளைப் பிடுங்கிக் கப்போர்ட்டுக்குள் எறிந்துவிட்டு அதே வேகத்தில் அறையை விட்டு வெளியே நடந்தான்.
எங்கே போகிறான் என்று யோசித்தபடி, கட்டிலில் அமர்ந்து போட்டிருந்த அதிகப்படியான நகைகளைக் கழட்டினாள் சித்ரா.
அப்போது உள்ளே வந்த ரஞ்சன், “இந்தா!” என்றபடி ஒரு ‘நைட்டி’யை அவளருகில் எறிந்தான்.
அதை எடுத்துப் பார்த்துவிட்டு, புருவங்களைச் சுருக்கிக் கேள்வியாகச் சித்ரா பார்க்க அதற்குப் பதிலேதும் சொல்லாமல் வேகமாக வெளியேறினான் அவன்.
அவனது வண்டியின் சத்தமே அவன் வெளியே செல்வதைச் சொல்ல, அதுவரை திடமாக இருந்தவளின் மேனி தொய்ந்தது.
விழிகளிலும் உள்ளத்திலும் பெரும் கலக்கம்.
அவள் நினைத்தபடி அவனை இக்கட்டான ஒரு நிலையில் நிறுத்தித் திருமணமும் முடித்து, அவனது வீட்டுக்கும் வந்தாயிற்று!
ஆனாலும், மனதில் மகிழ்ச்சி என்பதே துளியளவும் இல்லையே!
இதென்ன போட்டியா ஜெயித்துவிட்டேன் என்று சந்தோசப் படுவதற்கு? காதலைக் காதலர்கள் போராடி வென்றிருந்தால் சந்தோசப் பட்டிருக்கலாம்.
இங்கே அவள் காதல் இறந்துவிட, அதைக் கொன்றவனைத் துரத்தி அல்லவா கைப்பிடித்திருக்கிறாள். பிறகு எங்கிருந்து வரும் மகிழ்ச்சியும் சந்தோசமும்?
என்ன இருந்தாலும் அவளை வேண்டாம் என்றவன் தானே அவன்!
அவளை விட்டு இன்னொருத்தியைக் கட்டத் துணிந்தவன் தானே!
அதை நினைக்கையிலேயே நெஞ்சு வெடிக்கும் போலிருந்தது.
இந்த வீட்டுக்கு வந்து ஒரு மணித்தியாலம் கூட ஆகவில்லை. இப்போதே இதையெல்லாம் தாங்க முடியவில்லையே என்று தவித்தவளுக்கு, கையில் கிடந்த நைட்டி வேறு அவளைப் பார்த்து ஏளனமாகச் சிரிப்பது போலிருந்தது.
அதுவரை காலமும் இப்படி இன்னொருவரின் உடையை அணிந்தறியாதவளுக்கு அதை உடுத்திக்கொள்ளவே பிடிக்கவில்லை.
தந்தையிடம் ஒருவார்த்தை சொன்னால் போதும். ஒன்றென்ன ஓராயிரம் உடைகளைக் கொண்டுவந்து குவிப்பார். ஆனால், அதுவல்லவே அவளுக்குத் தேவையானது.
இதையெல்லாம் பெரிதாக எடுக்கக் கூடாது என்று தன்னையே தேற்றியபடி அதை அணிந்துகொண்டாலும் மனதில் ஒரு ஓரத்தில் வலித்தது. இப்படி அடுத்தவரின் உடையைப் போடும் நிலைக்கு வந்துவிட்டோமே என்று.
ஆனாலும், இதற்கே வேதனைப் பட்டால் எப்படி? போராடவேண்டியது இன்னும் எவ்வளவோ இருக்கிறது.. என்று எண்ணியவள், அவனது அறையைச் சுற்றிப் பார்த்தாள்.
விசாலமாக நீள் சதுர வடிவில் இருந்த அறையில் ஒரு பக்கம் கப்போர்ட் போடப்பட்டு, நடுவில் கட்டிலும் மறுபக்கம் ஒரு மேசையும் என்று பார்க்கக் கனகச்சிதமாக இருந்தது.
ஆன்ட்டியும் நித்தியும் எங்கே என்கிற யோசனை எழுந்தாலும் ரஞ்சன் இல்லாமல் அவர்களைத் தேடிப்போக விரும்பாமல், அந்தக் கட்டிலிலேயே சாய்ந்து அமர்ந்துகொண்டாள்.
கடந்த பத்து நாட்களில் அவள் வாழ்க்கையில் நடந்த பெரும் மாற்றங்களை எண்ணியபடி இருந்தவளின் விழிகள் அவளை அறியாமலேயே மூடிக்கொண்டன.