தூங்கிவிட்ட போதும் அயர்ந்து உறங்காத சித்ராவின் செவிகளில் பேச்சுக் குரல்கள் கேட்க, துயில் கலைந்து விழிகளைச் சுழற்றினாள்.
இருக்கும் இடம் பிடிபட, எழுந்து அமர்ந்தவளுக்கு கீழேயிருந்து வந்த பேச்சுக் குரல்கள் இராசமணியினதும் நித்தியினதும் என்று இனங்காண முடிந்தது. அதற்கு மேலும் அறையினுள் இருப்பது மரியாதை இல்லை என்று எண்ணியவள் முகம் கழுவித் தலைவாரிக்கொண்டு மெதுவாக அந்த அறையின் வாசலுக்குச் சென்றாள்.
தொலைக்காட்சியில் மூழ்கியிருந்த நித்தி, ஏதோ உள்ளுணர்வு உந்த மாடியைத் திரும்பிப் பார்த்தாள். அங்கு தமையனின் அறையின் கதவுநிலையில் சாய்ந்தபடி நின்ற சித்ராவைக் கண்டதும் முதலில் அதிர்ந்து பின் ஆத்திரத்துடன் அவளை முறைத்துவிட்டு, உச்சக்கட்டக் கோபத்தில், “அம்மா..!!” என்று பெருங்குரல் எடுத்துக் கத்தினாள்.
“என்ன நித்தி! ஏன் கத்துகிறாய்?” என்றபடி, பதறியடித்து ஓடிவந்தார் இராசமணி. அந்தளவுக்கு இருந்தது நித்தியின் அலறல்!
மாமியாரைக் கண்டுவிட்டுச் சித்ரா படியிறங்க, அவளைக் காட்டி, “அங்கே பாருங்கள்!” என்றாள் நித்யா.
மகள் காட்டிய திசையில் பார்த்த இராசமணியின் முகமும் ஆத்திரத்தில் கடுத்தது.
திருமணம் முடிந்ததும் இங்கேதான் வருவார்கள் என்பதை ஊகித்து, அவர்கள் வரும்போது தான் வீட்டில் இருக்கக் கூடாது என்று திட்டம் போட்டே மகளுடன் வெளியே சென்றுவிட்டு வந்தவருக்கு அவளைக் கண்டதும் கோபம் வந்தது.
கணவனின் ஆசைகளைக் குழி தோண்டிப் புதைத்தவளாகவே அவர் கண்ணுக்குச் சித்ரா தெரிந்தாள்.
“எவ்வளவு தைரியம் இருந்தால் என் முன்னால் வந்து நிற்பாய். நினைத்தபடி என் பிள்ளையின் கையால் தாலி வாங்கிவிட்ட திமிரா? என் குடும்பத்தை உருக்குலைக்க வந்த நீ நன்றாகவே இருக்கமாட்டாய். போ என் கண் முன்னால் நிற்காமல்!” என்றார் வெறுப்போடு.
மகன் தன் அறையை விட்டு வெளியே போ என்றான். அவன் தாயோ அவரின் கண்முன்னால் நிற்காதே என்கிறார். அப்படி எல்லோரும் உதாசீனம் செய்யும் அளவுக்குத் தான் இறங்கிவிட்டோமா என்று நினைக்கையிலேயே கண்ணைக் கரித்தது.
திருமணமான அன்றே ‘நீ நன்றாக இருக்கமாட்டாய்’ என்று சாபம் வழங்கிய மாமியாரை எதிர்த்துக் கதைக்கத் துடித்த உதடுகளை அழுந்த மூடிக்கொண்டு அப்படியே நின்றாள் சித்ரா.
இராசமணிக்கோ தான் சொன்னதற்குப் பதில் ஏதும் சொல்லாமல், துணிந்து தன் முன்னால் நின்றவளைப் பார்க்க அவளைக் கடித்துக் குதறும் ஆத்திரம் வந்தது. “உன் அப்பாவும் அம்மாவும் சனியன் தொலைந்தது என்று உன்னைத் துரத்திவிட்டு நிம்மதியாக இருக்கிறார்கள் போல. அந்தச் சனியன் இங்கே வந்து நிற்கிறது. ஆனால் கண்டவளும் வந்து தங்க இது ஒன்றும் சத்திரம் இல்லை. உன் வீட்டுக்கே போ!” என்றார் ஆங்காரமும் அதிகாரமுமாக.
பெற்றவர்களைப் பற்றிய அவரின் பேச்சில் அவளின் வாய்ப்பூட்டுத் தானாகக் கழன்றது. ஒழுக்கம் அற்ற மகனைப் பெற்றுவிட்டு இவ்வளவு திமிரா என்று வெகுண்டபோதும், “நான் எதற்கு வெளியே போகவேண்டும்? இது என் கணவனின் வீடு. இங்கிருந்து என்னை வெளியே போகச் சொல்ல யாருக்கும் உரிமை கிடையாது! சொன்னாலும் நான் போகமாட்டேன்!” என்றாள் நிமிர்ந்து.
அவளின் அழுத்தமான பேச்சு அவரை உசுப்பிவிட்டது. “என்னது? யாருக்கும் உரிமை இல்லையா? விட்டால் இந்த வீடே உன் வீடு என்று சொல்வாய் போலவே. இது என் கணவர் கட்டிய வீடு. இங்கே நான் வைத்ததுதான் சட்டம். நீ இங்கே இருக்கக் கூடாது. போ வெளியே!” என்று அவளை வெளியேற்றுவதிலேயே குறியாக நின்றார் அவர்.
“என்னை இங்கு அழைத்து வந்தது உங்கள் மகன். என்ன கதைப்பதாக இருந்தாலும் அவரோடு கதையுங்கள். ஆனால் ஒன்று, நான் வெளியே போவதாக இருந்தால் அவரையும் கூட்டிக்கொண்டுதான் போவேன். பரவாயில்லையா?”
அவருக்கு மரியாதை கொடுக்கத்தான் எண்ணினாள். ஆனால், அவளது அருமைப் பெற்றவர்களை அவமதிக்கும் விதமாக இருந்த அவரின் பேச்சு அவளின் நாவடக்கத்தைப் பறக்கச் செய்தது.
“என்ன, பயம் காட்டுகிறாயா? உனக்குத்தான் இப்படி ஆட்களை மிரட்டுவது, பயம் காட்டுவது எல்லாம் கைவந்த கலையாயிற்றே! என் மகனோடு ஊரைச் சுற்றிவிட்டு, அவனோடு சேர்ந்து எடுத்த போட்டோக்களை ஊருக்கே காட்டி, அவன் விரும்பிய பெண்ணை மணக்க விடாமல் செய்தவள் தானே நீ. பெண்ணை மிக லட்சணமாகத்தான் வளர்த்திருக்கிறாள் உன் அம்மா. ஊர் மேய்வதற்கு என்றே உன்னைப் பெற்று வளர்த்தாளோ?” என்று வார்த்தைகளை அளவில்லாமல் கொட்டினார்.
அதைக் கேட்டதும் எவ்வளவுதான் அடக்க முயன்றும் முடியாமல் சித்ராவின் கண்கள் கண்ணீரைப் பொழிந்தன.
அவர் மகனைக் கட்டிக்கொண்டு வந்தது அவள். அதற்கு எதற்கு அவளுடைய அம்மாவை இப்படிக் கேவலமாகக் கதைக்கவேண்டும்? அப்படி அவர் கதைக்கும் அளவுக்கு வைத்தது அவள்தானே என்று நெஞ்சு வெடித்த போதும், கன்னத்தில் வழிந்த கண்ணீரைத் துடைக்கவும் மறந்து, “என் அம்மாவைப் பற்றி எதுவும் கதைக்காதீர்கள். அவர் நன்றாகத்தான் என்னை வளர்த்தார். நான் தான் நல்லவன் யார் கெட்டவன் யார் என்று தெரியாமல் உங்கள் மகனைக் காதலித்தேன். ஏமாற்றுக்காரனைப் பெற்ற உங்களுக்கு என் அம்மாவைப் பற்றிக் கதைக்கத் தகுதியில்லை.” என்றாள் ஆத்திரத்தில் குரல் நடுங்க.
அவளின் ‘உங்களுக்குத் தகுதியில்லை’ என்ற வார்த்தை அவரை வெகுவாகவே உசுப்பிவிட, “என் வீட்டிலேயே நின்றுகொண்டு என் மகனைப் பற்றி என்னிடமே குறை சொல்வாயா? எனக்குத் தகுதி இல்லை என்று சொல்ல உனக்கு எவ்வளவு தைரியம். இனி நீ இந்த வீட்டில் இருக்கக் கூடாது. போடி வெளியே!” என்றபடி, சித்ராவை வீட்டை விட்டு வெளியே தள்ளும் எண்ணத்துடன் அவளை நெருங்கினார் இராசமணி.
அதுவரை சித்ராவைத் தாய் திட்டுவதைக் கேட்டபடி நின்ற நித்யா, “அம்மா, முதலில் என் நைட்டியைக் கழட்டச் சொல்லுங்கள். கண்டவளும் அதைப் போட்டுக்கொண்டு இருப்பது எனக்குப் பிடிக்கவில்லை. என் நைட்டி எனக்கு வேண்டும்!” என்றாள் பிடிவாதமாக.
ஏற்கனவே மாமியாரின் பேச்சினால் துடித்துப்போயிருந்த சித்ராவுக்கு நித்தியின் பேச்சைக் கேட்டதும் வெறுத்தே போனது. ஒரு நைட்டிக்கு இந்தப் பாடா?
அதை அணிந்திருக்கும் உடல் முழுவதுமே கூசிப் போனது.
அதை உடனேயே கழட்டிவிட்டு சேலையை அணிந்துகொள்வோம் என்று எண்ணியவள் ரஞ்சனின் அறைக்குச் செல்லத் திரும்ப, “அங்கே எங்கே போகிறாய். வாசல் இந்தப் பக்கம்! இனி ஒரு நிமிடம் கூட நீ இந்த வீட்டில் இருக்கக் கூடாது!” என்று ஆங்காரமாகக் கத்தியவர், அவளின் கையைப் பிடித்து இழுத்தார்.
அப்போது வீட்டுக்குள் நுழைந்த ரஞ்சனின் காதுகளில் தாயினதும் தங்கையினதும் பேச்சு மிக நன்றாகவே விழுந்தது.
அதோடு தாயின் செயலும் கண்ணில் பட, “அம்மா! என்ன வேலை பார்க்கிறீர்கள்?!” என்று ஆத்திரத்தோடு உறுமியவன், வேகமாக வந்து சித்ராவை தாயிடம் இருந்து விடுவித்துத் தன்னருகில் நிறுத்திக் கொண்டான்.
மனைவிக்காகப் பரிந்துவந்த மகனின் செயலில் ஆவேசம் கொண்டவர், “என்னடா? இன்றைக்கு வந்தவளுக்காக அம்மாவையே அதட்டுவாயா? அவளோடு கதைக்கும் தகுதி எனக்கில்லை என்கிறாள் அவள். இந்த வீட்டில் இருக்கும் தகுதி அவளுக்குத்தான் இல்லை. நீ கூட்டிக்கொண்டு வரும் கண்டவளும் இங்கே தங்க முடியாது. அவளை முதலில் வெளியே தள்ளு!” என்றார் ஆக்ரோசமாக.
“அவள் ஒன்றும் கண்டவள் இல்லை. என் பெண்டாட்டி! அதை முதலில் மிக நன்றாக நினைவில் வைத்திருங்கள். என் மனைவி என் வீட்டில்தான் இருப்பாள்!” என்று அழுத்தமான குரலில் சொன்னவனை, அவன் தாயும் தாரமும் அதிர்ந்துபோய்ப் பார்த்தனர்.
அவளைப் பிடிக்காமல் அவளின் வற்புறுத்தலினால் திருமணம் செய்திருக்கிறான் என்று எண்ணியிருந்த இராசமணிக்கு, திருமணம் ஆகி ஒருநாள் முடிய முதலே அவளுக்காகத் தன்னையே எதிர்க்கிறானே மகன் என்கிற அதிர்ச்சி என்றால், ‘மனைவியாக என் வீட்டுக்கு வா. என்னை ஏன்டா கட்டினோம் என்று நினைக்க வைப்பேன்’ என்று சூளுரைத்த கணவன் அவளுக்காகப் பேசியதில் அதிர்ந்து நின்றாள் சித்ரா.
ஆனாலும், அவனது தாயும் தங்கையும் இப்படி அவளை அலட்சியமாகக் பேசும் அளவுக்கு வைத்தவனும் அவன்தானே என்று எண்ணியதும் அந்த மகிழ்ச்சி முற்றாக மறைய ஆத்திரமே மேலோங்கி நின்றது.
ரஞ்சனுக்கோ கண்கள் கலங்கி, கன்னத்தில் வழிந்தோடிய கண்ணீரின் கறை காயாமல் நின்றவளைப் பார்க்க மனதுக்குள் எதுவோ பிசைந்தது.
சட்டெனக் கண்ணீர் வடிப்பது அவள் இயல்பு இல்லையே!
ஏன்,அன்று அவன் கடைக்கு வந்து ‘உன்னைக் கட்டிக் காட்டுகிறேன்’என்று சண்டையிட்ட போதும் அவள் அழவில்லையே! ஆத்திரமும் ஆவேசமும் தானே பட்டாள்.
அப்படியானவளையே அழ வைத்த தாய் தங்கையின் மீதுதான் அவன் கோபம் வலுத்தது.
தங்கையின் புறம் திரும்பி அவளை உறுத்து விழித்தவன், “அம்மாக்குத்தான் அறிவில்லை என்றால் உனக்கும் இல்லையா? அண்ணியை இனி நீ மரியாதை இல்லாமல் கதைத்தாய் என்றால் தொலைத்துக் கட்டிவிடுவேன்!” என்றான் உறுமலாக.
அவன் காட்டிய அந்தக் கோபத்தில் அன்று கன்னத்தில் விழுந்த அறை நினைவில் வர, பயத்துடன் தாயின் பின்னால் ஒண்டினாள் நித்யா.
“அவளுக்கு என்னடா மரியாதை வேண்டிக் கிடக்கிறது? ஒழுங்கான முறையில் இந்த வீட்டுக்கு மருமகளாக வந்திருக்க கிடைக்கவேண்டிய மரியாதை தானாகக் கிடைத்திருக்கும். இப்படி மரியாதையைக் கொடு என்று வாய்விட்டுக் கேட்கவேண்டிய நிலை வந்திருக்காது. இவளானால் குறுக்கு வழியில் வந்தவள் தானே. நீயும் பெற்ற தாயின் பேச்சை மதிக்காது, தாயின் ஆசிர்வாதமும் தங்கையின் வாழ்த்தும் இல்லாமல் அவளைக் கட்டியவன் தானே. பிறகு எப்படி மரியாதை கிடைக்கும்? எந்த முகத்தை வைத்துக்கொண்டு அவளை இங்கே கூட்டிக்கொண்டு வந்தாய்?” என்றார் அவன் தாயார்.
அதைக் கேட்டதும் சட்டென ரஞ்சனினதும் சித்ராவினதும் விழிகள் நான்கும் சந்தித்துக் கொண்டன.
கலங்கிவிட்ட சித்ராவின் விழிகளோ இதற்கெல்லாம் நீதான் காரணம் என்று அவனைக் குற்றம் சாட்டின.
தாயின் புறமாகத் திரும்பித் தீர்க்கமாகப் பார்த்தான் ரஞ்சன். “முறைப்படி இல்லாமல் வேறு எப்படி வந்தாள் என்கிறீர்கள்? கோணேஸ்வரர் கோவிலில் வைத்து முறையாகத்தான் எங்கள் திருமணம் நடந்தது. அதனால் மரியாதை இல்லாமல் போக ஒன்றும் இல்லை. அதோடு உங்களை வரும்படி அழைத்தும் வராமல் நின்றது நீங்கள் தான். அதற்கு அவள் பொறுப்பில்லை. என் பெண்டாட்டி இங்கேதான் இருப்பாள். தேவை இல்லாமல் கதைத்து உங்கள் மரியாதையைக் கெடுத்துக் கொள்ளாதீர்கள். அவளை யாரும் ஒருவார்த்தை சொல்லக் கூடாது சொல்லிவிட்டேன்!” என்றான் அழுத்தம் திருத்தமான குரலில்.
அந்தக் குரலே அவன் தாயின் வாயை அடைத்தது. அவர் அப்படியே நிற்க சித்ராவிடம் திரும்பி, “நீ நம்முடைய அறைக்குப் போ. நான் இதோ வருகிறேன்.” என்றான் ரஞ்சன்.
அவள் தயங்கி நிற்க, தாயையும் தங்கையையும் ஒரு பார்வை பார்த்துவிட்டு, “நீ போ. இனி யாரும் உன்னை ஒன்றும் சொல்ல மாட்டார்கள்!” என்று அழுத்தமான குரலில் சொல்லிவிட்டு வெளியே நடந்தான்.
அதற்கு மேலும் அங்கே நிற்காமல் படியேறிச் சென்றவளுக்கு கணவன் தனக்கு ஆதரவாக நின்றதை எண்ணி மகிழவே முடியவில்லை. ஒரு நாளிலேயே இவ்வளவு போராட்டமா என்றிருந்தது.
அவனை மிரட்டித் திருமணம் செய்துகொண்டதையே ஆளாளுக்குச் சொல்லிச்சொல்லிக் காட்டுகிறார்களே.. அந்தப் பெயர் அவளது வாழ் நாள் முழுக்க அவளைத் துரத்துமோ என்று பயமாக இருந்தது
வாழ்க்கையும் வேண்டாம் ஒரு மண்ணும் வேண்டாம் என்று அப்பாவிடம் ஓடிவிட வேண்டும் போலிருந்தது. கடைசிவரை கண்ணுக்குள் அவளைப் பொத்திப் பாதுகாக்கும் தாய் தந்தையர் இருந்தும் தனக்கேன் இந்த நிலை?
காதல் என்கிற பெயரில் கெட்டுச் சீரழிந்ததால் வந்தது அல்லவா இதெல்லாம். உப்பைத் தின்றவன் தண்ணீரைக் குடித்துத்தான் ஆகவேண்டும்! தப்பைச் செய்தவள் தண்டனையை அனுபவிக்கத்தான் வேண்டும்!
ஆனால் எத்தனை நாளைக்கு?
விடை தெரியாக் கேள்வியைச் சுமந்தபடி, ரஞ்சனின் அறையின் ஜன்னல் வழியாகத் தெரிந்த வான்வெளியை வெறித்தபடி நின்றிருந்தாள் சித்ரா.
சிறிது நேரத்தில் திரும்பி வந்த ரஞ்சனின் கையில் சில பைகள் இருந்தது.
ஜன்னலோரம் சாய்ந்தபடி நின்றவள் மறுபடியும் சேலையை அணிந்திருப்பதைக் கண்டவன், ஒருமுறை விழிகளை மூடித் திறந்துவிட்டு, “இந்தா..” என்றபடி, பைகளைக் கட்டிலின் மீது போட்டான்.
அந்தப் பைகளில் பொறிக்கப் பட்டிருந்த பெயர்களே உள்ளே இருப்பது ஆடைகள் என்பதைச் சொல்ல பேசாமல் நின்றாள் சித்ரா.
அவள் ஏதும் சொல்வாள், அல்லது பைகளை எடுத்துப் பார்ப்பாள் என்று அவன் எதிர்பார்க்க அவளோ நின்ற இடத்திலிருந்து அசையவே இல்லை.
அவளுக்காக அவன் ஒன்றைச் செய்தபோதும், அதற்கும் எனக்கும் எந்தச் சம்மந்தமும் இல்லை என்பதாக நின்றவளின் செயலில் உண்டான சினத்தில், “அம்மாவிடம் உனக்காகப் பேசியதால் உன் மீது இருக்கும் கோபம் போய்விட்டது என்றோ, உன்னைக் காதலிக்கிறேன் என்றோ நினைத்துவிடாதே. இப்போதும் உன்னை எனக்குப் பிடிக்கவில்லைதான். அதற்காக அம்மாவோ நித்தியோ உன்னை மரியாதை இல்லாமல் நடத்த விடமாட்டேன். இனி அவர்கள் அப்படி நடக்க மாட்டார்கள். அதேபோல நீயும் கொஞ்சம் உன் நாவை அடக்கப் பழகு! வயதில் மூத்தவர்களிடம் மரியாதையாகப் பேசு!” என்றவனின் குரல் கடைசி வரிகளைச் சொல்கையில் கடுமையாக மாறியிருந்தது.
எதற்காக அப்படிச் சொல்கிறான் என்பதைப் புரிந்துகொண்டவள் ஆத்திரத்தோடு அவனை முறைத்தாள். “முதலில் உங்கள் அம்மாவை வயதுக்கு ஏற்ற மாதிரி நடக்கச் சொல்லுங்கள். என் அம்மா என்னைப் பெற்று ஊர் மேய விட்டிருக்கிறார்களாம். அதுதான் ஒழுக்க சீலரான உங்களை நான் பிடித்தேனாம். என் அம்மா அப்படியா என்னை வளர்த்தார்கள்? நான் ஊர் மேய்ந்ததை அவர் கண்டாரா? என்னைச் ச..னியன் என்கிறார். நான் சனியனா?” என்று ஆத்திரத்தோடு தொடங்கியவளின் குரல் முடிக்கையில் அடைத்தது.
இந்த அழுகை வேறு என்று வெறுப்போடு நினைத்தவள், அதை அவனுக்குக் காட்டப் பிடிக்காது முகத்தைத் திருப்பிக் கொண்டாள்.
ரஞ்சனுக்கோ, நடந்ததை அறியாமல் தான் வாய் விட்டுவிட்டோமோ என்றிருந்தது.
லக்ஷ்மி அம்மாளைப் பற்றியும் அவர் மகள் மேல் வைத்திருக்கும் பாசம் பற்றியும் அவன் அறிவானே. அவரை ஒருகுறை சொல்ல முடியுமா? அதோடு அவளைப்போய் அப்படிச் சொல்வதா?
ச்சே! இந்த அம்மாவை என்னதான் செய்வது என்றிருந்தது அவனுக்கு.
அழுகையில் துடித்த இதழ்களையும், கண்ணீரைக் கொட்டத் தயாராக நின்ற விழிகளையும் கட்டுப் படுத்தியபடி நின்றவளைப் பார்த்து, “சாரி!” என்றான் அவன் ஆழ்ந்த குரலில்.
அந்தக் குரல் அவளை என்னவோ செய்தபோதும், “ஆனால், இதற்கு நான் நன்றி சொல்லமாட்டேன்.” என்றாள் கட்டிலில் இருந்த பைகளைக் காட்டி.
“ஒரு உப்புக்கட்டியும் உன் வீட்டில் இருந்து கொண்டுவரக் கூடாது என்று பெரிதாகச் சொன்னவர், இதை முதலே செய்திருக்க வேண்டும். செய்யாமல் விட்டது உங்கள் தவறு. ஆனால், அதற்கான தண்டனை எனக்கு.” என்றவள், “எப்போதும் நீங்கள் செய்யும் தவறுகளுக்குத் தண்டனை அனுபவிப்பது மட்டும் நான்!” என்றாள் வறண்ட குரலில்.
அதைக்கேட்டுப் பேச்சற்று நின்றான் ரஞ்சன்.
உண்மைதானே என்று அவன் நெஞ்சே அவனைச் சுட்டது!
அவள் முன் நிற்காமல் திரும்பியவனின் பார்வையில் மேசையில் இருந்த அவர்களது திருமண மாலைகளும் அதன் அருகே இருந்த சித்ராவின் நகைகளும் பட்டன.
திருமணத்தின் போது அவளை முழுதாகக் கவனிக்காதவனுக்கு அவள் போட்டிருந்த நகைகள் கண்ணில் படவே இல்லை. இப்போது அவற்றைக் கண்டதும் சினம் துளிர்க்க, “நான் சொன்னபடியே ஒன்றும் கொண்டுவராதவள் போல் கதைத்தாய். இதையெல்லாம் எதற்குக் கொண்டுவந்தாய்.” என்று மேசையிலிருந்த நகைகளைக் காட்டிக் கேட்டான்.
“அது அம்மா போட்டுவிட்டது. எப்படியெப்படி எல்லாமோ என் திருமணத்தைச் செய்ய நினைத்தவர்கள் என் பெற்றவர்கள். அதற்குத்தான் வழியில்லை. இதையாவது போட்டுக்கொள் என்று அவர் சொல்லும்போது என்னால் மறுக்க முடியாது. இனியும் என்னால் அவர்கள் மனதை நோகடிக்க முடியாது.” என்று அவனை நிமிர்ந்து பார்த்துச் சொன்னவள், “உங்கள் கைபேசியைத் தாருங்கள்.” என்று கேட்டாள் அவனிடம்.
பாக்கெட்டில் இருந்து அதை எடுத்து அவளிடம் நீட்டியபோதும், “ஏன், உன்னது எங்கே?” என்று கேட்டான் ரஞ்சன்.
“வீட்டில் விட்டுவிட்டேன்..” என்றாள் அதை வாங்கியபடி.
“ஓ.. சரி, நாளைக்கு ஒன்று வாங்கித் தருகிறேன்.” என்று அவன் சொல்லவும், “ம்.. ஐபோன் ஆறு வாங்குங்கள்!” என்றாள் அவள்.
‘இவளுக்கு இருக்கும் கொழுப்புக்கு ஐபோன் ஆறு கேட்கிறதா..’ என்று நினைத்தபடி அவன் அவளைப் பார்க்க அவளோ அவனைப் பாராது அவன் கைபேசியில் ஏதோ இலக்கங்களை அழுத்திக் கொண்டிருந்தாள்.
“அதெல்லாம் வாங்கும் அளவுக்கு அவ்வளவு பணம் என்னிடம் இல்லை!” என்றான் அவன் வேண்டும் என்றே!
ஒருநொடி இலக்கங்களைத் தட்டுவதை விட்டுவிட்டு அவனை நிமிர்ந்து பார்த்தவள், “ஓ..! அப்போ ஐபோன் ஐந்து வாங்குங்கள்.” என்றாள் அப்போதும் சாதரணமாக.
“அதற்கும் பணமில்லை.”
“ஐபோன் நாலு?”
“ம்கூம்..!” உதட்டைப் பிதுக்கினான் ரஞ்சன்.
“மூன்று?”
அவன் உதடுகள் மட்டுமே பிதுங்கியது.
“சரி. அப்போ நான் அப்பாவிடமே கேட்கிறேன்.” என்றவளை, இப்போது முறைத்தான் ரஞ்சன்.
“அதை வாங்கிக்கொண்டு அப்படியே அவரிடமே போய்விடு!” என்றான் நக்கலும் கோபமாக.
“அப்படியானால் நீங்களே ஐபோன் ஆறே வாங்கித் தாருங்கள். நான் என்ன கேட்டாலும் என் அப்பா வாங்கித்தருவார். அதற்கு நம் திருமணமே சாட்சி.” என்றவளை முறைத்தான் அவன்.
அவளோ நீ முறைத்தால் எனக்கென்ன என்பதாக பார்வையை வெட்ட, “சரி! வாங்கித் தந்து தொலைக்கிறேன்!” என்றான் பல்லைக் கடித்தபடி.
‘அது!’ என்பதாக ஒரு பார்வை பார்த்தாள் சித்ரா.