சித்ரா இன்றி வெறிச்சோடிப்போய்க் கிடந்தது சந்தானத்தின் வீடு. வாடிப்போய் சோம்பியிருந்த மனைவியின் முகத்தையும் பார்க்கமுடியாமல் காலையிலேயே கடைக்கு வந்திருந்தார் சந்தானம்.
அங்கும் மகளின் நினைவே!
புகுந்த வீட்டில் என்ன செய்கிறாளோ.. எப்படி இருக்கிறாளோ என்று எண்ணியபடி இருந்தவர், ரஞ்சனின் கைபேசிக்கு அழைப்போமா வேண்டாமா என்று நினைத்து நினைத்தே ஓய்ந்து போனார்.
இந்தப் பெண் தன் கைபேசியையாவது கொண்டு போயிருக்கலாம். அதை அவர் சொன்னதற்கு ஒன்றுமே வேண்டாம் என்றுவிட்டாளே. ஏன் அவளுக்கு இவ்வளவு பிடிவாதம்?
கைப்பையைக் கூடக் கொண்டுபோகவில்லையே என்று எண்ணியபடி நிமிர்ந்தவர் தன் முன்னால் நின்ற மகளைக் கண்டதும் ஆனந்தமாக அதிர்ந்துபோனார்.
அதுவும் ஒரு நொடிதான்.
அடுத்த நொடியே ஏதும் பிரச்சினையோ என்று நினைத்த மாத்திரத்தில் பதற்றம் தொற்றிக்கொள்ள வேகமாக எழுந்து மகளருகில் வந்தவர், “சித்து..! என்னடா? ஏன் இங்கே வந்தாய்? எங்கே ரஞ்சன்? ஏதாவது பிரச்சினையா?” என்றவரின் விழிகள் மகளைக் கடந்து மருமகனாகிவிட்டவனைத் தேடியது.
தந்தையின் பதட்டமும், அது ஏன் அவருக்கு உண்டானது என்பதும் புரிந்தபோதும் செல்லமாக முறைத்தாள் மகள்.
“என்னப்பா இது, என்னைக் கண்டதும் சந்தோசப் படுவீர்கள் என்று பார்த்தால் ஏன் வந்தாய் என்று கேட்கிறீர்கள்? என்னை எப்போதடா துரத்தலாம் என்று காத்திருந்தீர்களா? இப்போதுதானே உங்கள் திட்டம் எல்லாம் தெரிகிறது.”
மகளின் விளையாட்டில் இணைந்துகொள்ளாமல், “விளையாடாமல் சொல்லு சித்து. எங்கே ரஞ்சன்? ஏதாவது பிரச்சினையா?” என்று மீண்டும் பதட்டத்தோடு கேட்டார்.
பின்னே, முதல் நாள் கல்யானமாகிச் சென்ற பெண் மறுநாளே தனியாக வந்து நின்றால் அவரும் என்னதான் செய்வார். இதில் அவர்கள் திருமணம் நடந்த லட்சணம் வேறு அப்படி!
தந்தையின் மனம் புரிய உள்ளே வலித்தது அவளுக்கு. அவளைக் கட்டிக் கொடுத்துவிட்டு ஒருநிமிடவாவது அவர்கள் இருவரும் நிம்மதியாக இருந்திருக்க மாட்டார்கள் என்பது தெள்ளத் தெளிவாகப் புரிந்தது.
“அப்பா! கொஞ்சம் அமைதியாக இருங்கள். ஒரு பிரச்சினையும் இல்லை. ரஞ்சன் தன் கடைக்கு வந்தார். அங்கே வீட்டில் இருந்து நான் என்ன செய்ய? அதுதான் இங்கே வந்தேன். இன்று மட்டுமில்லை, இனித் தினமும் நான் வருவேன்.” என்றாள், பரிவான குரலில்.
“ஓ.. அதுதானா!” என்று ஆறுதலாக மூச்சை இழுத்துவிட்டவர் ஓய்ந்து மீண்டும் கதிரையில் அமர்ந்தார். “நீ இங்கே வந்ததற்கு ரஞ்சன் ஒன்றும் சொல்லவில்லையா? உங்களுக்குள் ஒரு சண்டையும் இல்லையே?” என்று மீண்டும் உறுதிப் படுத்திக்கொள்ளும் முகமாகக் கேட்டார்.
ஒருவினாடி அமைதி காத்தவள், “இல்லையேப்பா. அவர் ஒன்றும் சொல்லவில்லை. அப்படிச் சொல்வதற்கும் என்ன இருக்கிறது?” என்றாள், தந்தையிடம் எதையும் காட்டிக் கொள்ளாது.
ஆனால், அவர் அவளையே பெற்றவர் இல்லையா!
மகளின் நொடிநேர மௌனத்தைக் கவனித்தவர், “சரிடாம்மா நீ இரு. நான் கண்ணனிடம் ஒன்று சொல்லவேண்டும். சொல்லிவிட்டு வருகிறேன்.” என்றபடி எழுந்தார்.
“சரிப்பா..” என்றவள், அவரின் கதிரையில் அமர்ந்து கடையின் வேலைகளைப் பார்க்க, அந்த அறையிலிருந்து வெளியே வந்த சந்தானம் கடையின் உட்பக்கமாகச் சென்று ரஞ்சனுக்கு அழைத்தார்.
“ஹலோ அங்கிள்..”
“ரஞ்சன், சித்ரா இங்கே வந்திருக்கிறாளே. உங்களுக்குள் ஏதும் பிரச்சினையா?” என்று மெல்லிய தயக்கத்தோடு கேட்டார்.
என்றும் தன் கம்பீரம் குன்றாது அனைவரையும் உரிமையோடு அரவணைத்துப் போகும் மனிதர் இன்று அவனிடம் தயங்கிப் பேசியது ரஞ்சனைத் தாக்கியது.
அதற்குக் காரணம் அன்று என் மகளைக் கட்டிக்கொள்கிறாயா என்று அவர் கேட்டபோது அவன் அலட்சியமாகப் பேசியதே!
அதுவே அதிகப்படி என்று குன்றிக் கொண்டிருந்தவனால், சித்ராவின் மீதிருந்த கோபத்தில் அவரிடம் கடுமையைக் காட்டவோ அவரை மேலும் அலட்சியப் படுத்தவோ முடியவில்லை.
“அங்கிள்! நான்தான் சித்ராவை அங்கே கொண்டுவந்து இறக்கிவிட்டேன். இதிலே எனக்கு என்ன கோபம்?” என்றான் தன்னை மீறியே!
சற்று முன், தன் அறையில் வைத்து சித்ராவிடம் சொன்னதென்ன இங்கே அவரிடம் சொல்வதென்ன என்று எண்ணியவனுக்கு முகம் கன்றியது.
ஆனால் சந்தானம் மகிழ்ந்து போனார்.
“இப்போதான் நிம்மதியாக இருக்கிறது ரஞ்சன். அவள் திடீரென்று என் முன்னால் வந்து நிற்கவும் பயந்தே போனேன். எங்களுக்கும் உங்கள் இருவரையும் விட்டால் வேறு யார்தான் இருக்கிறார்கள் சொல்லு? இனி நீயும் எங்களுக்கு ஒரு பிள்ளைதான். அதனால், முடிந்தால் தினமும் கொஞ்ச நேரம் இரண்டுபேரும் இங்கே வந்துவிட்டுப் போகிறீர்களா?” என்று தன்மையாகவே கேட்டவர், தன் பேச்சாலேயே அவனைக் கட்டிப் போட்டார்.
இனித் தினமும் இங்கே வருவேன் என்று மகள் சொன்னதை வைத்து, அவளின் பிடிவாதக் குணத்தையும் மிக நன்றாக அறிந்தவர், அதைத் தன் விருப்பமாக மாற்றி மருமகனிடம் கேட்டார்.
இல்லாவிட்டால், அவர்களுக்காக அவள் கணவனோடு சண்டை பிடித்து அங்கே வர, அதனால் கோபம் கொண்டு ரஞ்சன் எதையாவது செய்துவிட்டால் மகளின் வாழ்க்கை அல்லவா பாதித்துவிடும்!
தினமும் மகளைக் காணும் ஏக்கம் மனதில் நிறையவே இருந்தாலும் அவளின் வாழ்க்கையில் இனியும் எந்தப் பிரச்சினையும் வரக்கூடாது என்பதில் மிகக் கவனமாக இருந்தார் அவர்.
ரஞ்சனுக்கோ மனம் முரண்டியபோதும் மறுக்க முடியவில்லை.
பின்னே, அவர்களுக்கு அவன் செய்தவைகள் எல்லாம் அநியாயமே. அப்படியிருந்தும் அவனையும் தங்கள் பிள்ளை என்கிறார் அந்தப் பெரிய மனிதர்.
அவர் நினைத்தால் எதையும் செய்யமுடியும்! அதை மிக நன்றாகவே அறிவான் அவன்!
அப்படியிருந்தும் அவரின் தன்மையான பேச்சில் பதில் சொல்லமுடியாமல் அவன் நிற்க, “ரஞ்சன், உன் அப்பாவைப் போலத்தான் நான். எனக்காக இதைச் செய்யமாட்டாயா? வயது போன காலத்தில் மகளையும் பிரிந்து இருப்பது மிகவுமே கஷ்டமாக இருக்கிறது. ” என்றவரின் குரல் கரகரப்போடு வந்தபோது மொத்தமாக உடைந்துபோனான் ரஞ்சன்.
“அங்கிள், ஏன் இப்படியெல்லாம் கேட்கிறீர்கள். இனித் தினமும் நான் இங்கே வரும்போது அவளையும் கூட்டிக்கொண்டு வருகிறேன். எனக்கு அதில் ஒன்றும் இல்லை. நீங்கள் ஒன்றுக்கும் யோசிக்க வேண்டாம். வேறு ஏதும் என்றாலும் தயங்காது சொல்லுங்கள், நிச்சயம் செய்கிறேன்.” என்றான் உள்ளத்தில் இருந்து.
“சரிப்பா. மிகவும் சந்தோசம். லக்ஷ்மிக்கு இது தெரிந்தால் இன்னும் சந்தோசப் படுவாள். அதோடு சித்து மட்டுமில்லை நீயும் வா. சொன்னேனே நீயும் எங்கள் பிள்ளைதான்.” என்றார் மகிழ்ச்சியோடு.
சற்றுத் தயங்கியபோதும், “சரியங்கிள்!” என்று சொல்லவும் தவறவில்லை அவன்.
அவனோடு பேசிவிட்டு வைத்தவர் இலேசான மனதோடு மனைவிக்கு அழைத்து மகள் வந்திருப்பதைச் சொல்லவும், பத்து நிமிடத்தில் அங்கிருந்தார் லக்ஷ்மி.
“சித்தூ..!” என்றபடி, மகளிடம் விரைந்தவரின் கண்களில் கண்ணீர்.
மகளை நெடுநாள் பிரிந்தவர் போன்று அவர் கட்டிக்கொள்ளவும், சித்ராவுக்கும் கண்களில் மெலிதாகக் கண்ணீர் கசிந்தது.
அதுவரை குழந்தையை அழித்ததில் தாய் மேல் கோபமாக இருந்தவள் எல்லாவற்றையும் மறந்து அவரைத் தானும் கட்டிக்கொண்டாள்.
அவளின் கன்னங்களை வருடி, “காலையில் சாப்பிட்டாயா சித்து. உனக்கு இட்டலி கொண்டுவந்தேன். கொஞ்சமாகச் சாப்பிடுகிறாயா?” என்று அவர் கேட்டதும், அவளுக்கு இன்னும் கண்ணைக் கரித்தது.
தந்தை அவள் வாழ்க்கையை கவனித்தால் தாயோ அவள் வயிற்ரை கவனிக்கிறார்.
இதுதானே தாய் தந்தை பாசம்!
“தாங்கம்மா சாப்பிடுகிறேன்..” என்றவள், காலையில் சாப்பிட்டாயா என்று அவர் கேட்ட கேள்விக்குக் கவனமாகப் பதில் சொல்லாமல் தவிர்த்தாள்.
வீட்டிலிருந்து கொண்டுவந்த உணவைத் தட்டில் இட்டபடி, புகுந்த வீட்டு விபரங்களைச் சேகரித்தார் லக்ஷ்மி. அவரின் மனம் நோகாதபடிக்குத் தேவையானவைகளை மட்டும் சொன்னவளுக்கு, இட்டலியில் இருந்து ஒரு துண்டைப் பிய்த்து வாயில் வைக்கையிலே ரஞ்சனின் நினைவு தானாக ஓடிவந்தது.
அவனும் தானே காலையில் சாப்பிடாமல் வந்தான். அவளைக் கவனித்துக்கொள்ள இங்கே அம்மாவும் அப்பாவும் இருக்கிறார்கள். அங்கே அவனுக்கு?
யாருமில்லையே நினைத்த மாத்திரத்தில் நெஞ்சடைத்தது அவளுக்கு.
அடுத்த வாயை எடுத்து வைக்கமுடியாமல் அவள் இருக்க, “ஏன் சாப்பிடாமல் இருக்கிறாய். சாப்பிடு சித்து..” என்றார் அவள் அருகில் நின்ற அன்னை.
தாயை நிமிர்ந்து பார்த்தவள், “அம்மா அது.. அவர்.. ரஞ்சன் சாப்பிட்டாரா தெரியவில்லை..” என்று தயக்கத்தோடு சொன்னவளின் பேச்சில் தாயின் முகம் மலர்ந்தது.
கணவனின் மேல் அக்கறை வந்துவிட்டாலே அது அன்பாக மாறிவிடுமே! அப்படியே மகளின் வாழ்வும் மலர்ந்துவிடுமே என்று எண்ணியவர், “அவருக்கு அழைத்துக் கேளேன் சித்து..” என்றார் கனிவான குரலில்.
“சரிம்மா..” என்றவள், அங்குவந்த தந்தையிடம் கைபேசியை வாங்கி ரஞ்சனுக்கு அழைத்தாள்.