மோட்டார் வண்டியில் சென்று கொண்டிருந்த ரஞ்சனின் மனம் குமுறிக் கொண்டிருந்தது. அப்படி என்ன பிழை செய்தான் என்று தகப்பனும் மகளுமாகச் சேர்ந்து அவனைத் தண்டித்தார்கள்? எவ்வளவு கேவலம்!
இதற்குக் காரணம் என்ன? அவர்களிடம் இருக்கும் பணபலமா? நம்மிடம் வேலை செய்பவன் தானே என்கிற இளக்காரமா? நாம் என்ன செய்தாலும் அவனால் நம்மை ஒன்றும் செய்ய முடியாது என்கிற அவனது தாழ்ந்த நிலையா? அவனைத் துச்சமாக நினைத்து நொடியில் தூக்கி எறிய வைத்தது எது?
அப்படி அவர்கள் தூக்கி எறிந்தும், அவன் வாய்மூடி நின்றதற்குக் காரணம் என்ன? அவனிடம் பணம் இல்லை, வசதி இல்லை என்பதுதானே? என்று நினைத்தவனின் மனம் எரிமலையாய்க் கொதித்துக் கொண்டிருந்தது.
அவளை அறையாமல் வந்துவிட்டோமே என்றிருந்தது. அதுதான் வேலையை விட்டே தூக்கிவிட்டார்களே. இனி எதற்காக கோபத்தை அடக்கவேண்டும். எதற்குப் பொறுமை காக்கவேண்டும்?
திரும்பிப் போய் அவளை அறைந்துவிட்டு வந்தால் என்ன என்றுகூடத் தோன்றியது. ஆனால், அதற்காகத் தன்னும் அந்தக் கடையை மிதிக்க அவனுக்குப் பிடிக்கவில்லை.
பார்க்கலாம், என்றாவது ஒருநாள் என்னிடம் வசமாக மாட்டுவாள் தானே! அப்போது ஒரு அறை என்ன, பல அறையே கொடுக்கிறேன் என்று கருவியது மனம்.
மனதில் இருந்த கொதிப்போடு வீட்டுக்குச் செல்லப் பிடிக்கவில்லை. அங்கே அவனைக் கண்டதும் அம்மாவின் முகத்தில் உண்டாகும் கேள்வி, குழப்பம், கலக்கம், வேலை போய்விட்டது என்று சொன்னதும் அவரிடம் உண்டாகும் கவலை இதையெல்லாம் பார்க்கும் நிலையில் இப்போது அவன் இல்லை.
அதோடு அவரிடம் என்னவென்று சொல்வது? எதைச் சொல்வது?
எனவே தன்னுடைய நண்பர்கள் வேலை செய்யும் ‘வொர்க் ஷாப்’க்கு வண்டியை விட்டான்.
அப்போதுதான் சந்தானத்திடமிருந்து அழைப்பு வந்தது. அதைப் பார்த்தவன் பொங்கிய கோபத்தோடு எடுக்காமல் விட்டுவிட்டான்.
கண்ணன் அழைத்தபோதும் எடுக்கவில்லை. என்ன, அவனுக்கு ஆறுதல் சொல்ல அழைத்திருப்பார். அதையெல்லாம் கேட்கும் மனநிலையிலும் அவன் இல்லை.
இவனைக் கண்டதும் ஜீவனும் சுகந்தனும் ஆச்சரியமாகப் பார்த்தனர்.
“என்னடா இந்த நேரத்தில் வந்திருக்கிறாய்? வேலை இல்லையா..?” என்று கேட்டான் ஜீவன்.
வண்டியை நிறுத்திவிட்டு, “ப்ச்!” என்ற சலிப்புடன், அங்கிருந்த பழைய டயர் ஒன்றில் அமர்ந்துகொண்டான் ரஞ்சன்.
அவன் முகத்தைப் பார்த்தே ஏதோ பிரச்சினை என்பதை ஊகித்த ஜீவன், “மூன்று பேருக்கும் டீ வாங்கிவாடா..” என்று சுகந்தனை அனுப்பிவிட்டு, கிரீஸ் அப்பியிருந்த கையைத் தன்னுடைய அழுக்கேறிய சட்டையிலேயே துடைத்தபடி இன்னொரு டயரில் அமர்ந்தான். “என்ன மச்சான் பிரச்சினை?”
பதில் சொல்ல முடியாமல் முகம் இறுகி நின்றவனிடம், “ஏதாவது பணம் தேவையாடா?” என்று கேட்டான் ஜீவன்.
முழங்கைகளைக் கால்களில் ஊன்றி, நெற்றியை இரண்டு கைகளிலும் தாங்கியபடி குனிந்திருந்தவனின் தலை மட்டும் இல்லை என்பதாக ஆடியது.
“அம்மாவுக்கு ஏதும்..? நித்திக்கு..”
“அவர்களுக்கு ஒன்றும் இல்லையடா..” என்றான் அலுபுற்ற குரலில்.
“பிறகு என்னடா?” என்ற கேள்விக்கும் பதிலில்லை. அவனின் பார்வை மட்டும் எங்கோ இலக்கின்றி வெறித்தது.
அதற்கு மேல் எதுவும் கேட்கவில்லை ஜீவன். ரஞ்சனை யோசனையோடு பார்த்தான்.
சின்ன வயதில் இருந்தே அவர்கள் மூவரும் நல்ல நண்பர்கள். ஜீவனுக்கும் சுகந்தனுக்கும் படிப்பு ஏறவில்லை. சாதாரண தரத்தைத்(பிளஸ் வன்) தாண்டுவதே பெரும் பாடாக இருந்தது. அதோடே படிப்பை நிறுத்திவிட்டு ‘வொர்க் ஷாப்’பில் வேலைக்குச் சேர்ந்துவிட்டார்கள்.
அதே நிலை ரஞ்சனுக்கும் வந்தபோது, வேதனைப் பட மட்டுமே முடிந்தது அவர்களால். அவர்களுக்காவது படிப்பும் வரவில்லை. படிக்கவும் வசதியில்லை. ஆனால் ரஞ்சனுக்கு?
படிப்புத்தான் போனது என்றால், ஒரு பார்மசியில் கூட அவனுக்கு வேலை கிடைக்கவில்லையே! காரணம் என்ன?
தலைவிதி என்பதா?
அல்லது கடவுளால் அவனுக்கு வழங்கப்பட்ட தீர்ப்பு என்பதா?
எதுவோ ஒன்று! ஆனால், அவன் மனதளவில் பெரும் போராட்டத்துக்கு மத்தியில் தான் செருப்புக் கடையில் வேலை செய்கிறான் என்பது மட்டும் ஜீவனுக்குத் தெள்ளத்தெளிவு.
ஆனால் இதெல்லாம் நடந்து மூன்று வருடங்கள் ஆகிவிட்டதே. இன்று இவனுக்கு என்ன ஆகிற்று?
இறுகிச் சிவந்து, கோபத்தில் தணல் போல் ஜொலிக்கும் அவன் முகத்தைப் பார்க்க விஷயம் பெரிது என்று மட்டும் புரிந்தது.
மற்றும்படி இந்த மூன்று வருடத்தில் உணர்வுகளைக் காட்டாமல் கல்லாகச் சமைந்து இருப்பதே ரஞ்சனின் வழமை என்றாகிவிட்ட நிலையில் இன்றைய அவனது கோபம்?
அவனாகச் சொல்லட்டும் என்று அமைதியாகி விட்டான் ஜீவன்.
இருவரும் அவரவர் நினைவில் இருக்க, “இந்தாங்கடா..” என்றபடி டீயை நீட்டினான் சுகந்தன்.
டீயோடு சேர்த்து ஒரு சிகரட்டையும் தீமூட்டி வாயில் பொருத்தினான் ஜீவன்.
அதைப் பார்த்த ரஞ்சன், “எனக்கும் ஒன்றைத் தாடா..?” என்றான் கையை நீட்டியபடி.
“என்னது?” அதிர்ச்சியோடு கேட்ட ஜீவனின் வாயில் இருந்த சிகரெட் நழுவிக் கீழே விழுந்தது.
பின்னே, அவர்கள் புகைப்பதற்கே திட்டும் அவன் இப்படிக் கேட்டால்?
தன்னைச் சமாளித்து, “உனக்குத்தான் இதெல்லாம் பிடிக்காதேடா..” என்றான்.
“எல்லாம் எனக்குப் பிடித்தா நடக்கிறது? தாடா நீ..” என்று சலித்தவனின் குரலில் இப்போது பிடிவாதம் வந்திருந்தது.
அதைக்கேட்டு சட்டென்று ஜீவனின் பார்வை சுகந்தனைப் பார்க்க, ‘குடு’ என்பதாகத் தலையை அசைத்த சுகந்தன், யோசனையோடு ரஞ்சனைப் பார்த்தான்.
ஜீவன் நீட்டிய சிகரட்டை வாங்கி வாயில் வைத்துத் தீமூட்டிப் புகையை இழுத்தான் ரஞ்சன். அதுவோ தலையின் மூலை முடுக்கெல்லாம் பரவியது போன்று சுவாசிக்கவே முடியாமல் பலமாக இருமியது அவனுக்கு. கண்கள் கலங்கத் தொடர்ந்து விடாமல் இருமியவனின் தலையில் தட்டினான் ஜீவன்.
“அது புதிதுக்கு அப்படித்தான்டா இருக்கும்..”
ஒரு வழியாக இருமி முடித்தவன், “இந்தக் கருமத்தையாடா இப்படிப் புகைத்துத் தள்ளுகிறீர்கள்?” என்றபடி அதனை எறியப் பார்த்தான்.
எறியவிடாது அதைப் பாய்ந்து பறித்தான் சுகந்தன். “விசரனாடா(லூசாடா) நீ? சிகரெட் விற்கிற விலைக்கு ஒரு முழு சிகரெட்டையே எறியப் பார்த்தாயே..” என்றவன், அதைத் தன் வாயில் வைத்துப் புகையை இழுத்தான்.
அவனை முறைத்தான் ரஞ்சன். “உடம்பையும் கெடுத்து, காசையும் கொடுத்து இதைக் கட்டாயம் புகைக்கத்தான் வேண்டுமாடா?”
“நாங்கள் அனுபவிக்கும் சந்தோசம் இது மட்டும்தான். இதையும் விட்டால் வாழ்க்கையே வெறுத்துவிடும்.” என்றான் சுகந்தன் புகையை இழுத்தபடி.
“இதெல்லாம் சந்தோசமான விசயமாடா? நோய்நொடி வந்து கஷ்டப் படும்போது தெரியும்”
“விடுடா! உடம்பைப் பாதுகாத்து மட்டும் என்ன குடும்பம் குட்டி என்று சந்தோசமாகவா வாழப் போகிறோம்? சாகும் வரைக்கும் இப்படி எவனோ ஒருத்தன் ஏவும் வேலைகளைச் செய்து செய்தே ஓடாய்த் தேயப் போகிறோம். அதற்கு எதற்கு உடம்பைப் பாதுகாத்து.” என்றான் சுகந்தன் விரக்தியோடு.
இவனுக்கு என்ன ஆகிற்று என்று கேள்வியாக அவனைப் பார்த்தான் ரஞ்சன். இவர்களோடு கதைத்தால் மனதுக்குக் கொஞ்சம் ஆறுதலாக இருக்கும் என்றுதான் அவன் இங்கு வந்ததே! சுகந்தனோ இப்படிச் சொல்கிறான்.
“என்னடா..? ஏன் இப்படி எல்லாம் சொல்கிறாய்?”
“பிறகு என்ன மச்சான்? எங்கள் கோலத்தைப் பார். உடம்பில் அழுக்கு. உடுத்தியிருக்கும் உடையில் அழுக்கு. இங்கு இருக்கும் அழுக்கோடு ஒரு அழுக்காகத்தான்டா கிடக்கிறோம். யாருமே ஒரு பொருட்டாக நம்மை மதிப்பதே இல்லை. ஒரு பெண் கூட நம்மை நிமிர்ந்தும் பார்ப்பதில்லை. ஏன்டா, இந்த வேலை செய்தால் நாங்கள் மனிதர்கள் இல்லையா? எங்களுக்கு மனது இல்லையா? அல்லது அதில் ஆசைதான் வராதா? போ மச்சான். எல்லாமே வெறுப்பா இருக்கடா. படிச்ச பெண்கள் எங்களைத் திரும்பியே பார்க்கமாட்டார்கள். படிக்காதவள் ஒரு பொருட்டாகவே நினைக்க மாட்டாள். பிறகு எங்கேடா சந்தோசமாக வாழ்வது. கனவில் மட்டும் தான்டா நாங்கள் வாழ்வது. இந்த டயர், டியூப், சைக்கிள், வண்டி என்று இதுகளோடு நம் வாழ்க்கை கழியப் போகிறது. இதில் உடம்பைக் காத்து எதைக் கிழிக்கப் போகிறோம்?” என்றான் சுகந்தன் வெறுத்த குரலில்.
ரஞ்சனின் பார்வை மெல்லிய அதிர்ச்சியோடு ஜீவனைப் பார்த்தது. அவனும் எங்கேயோ வெறித்தபடி டீயை உறிஞ்சிக் கொண்டிருந்தான். அந்தப் பாவனையே அவனும் அதைத்தான் நினைக்கிறான் என்று காட்டியது.
சுகந்தனிடமே மீண்டும் திரும்பி, “ஏதும் பிரச்சினையாடா? திடீரென்று எதற்கு இப்படிக் கதைக்கிறாய்?” என்று கேட்டான்.
“திடீரென்று எல்லாம் ஒன்றும் இல்லையடா. பார், எங்களுடைய பதினாறு வயதில் இங்கே வேலைக்கு வந்தோம். கிட்டத்தட்ட ஏழு வருஷமாக வேலை செய்கிறோம். ஏதாவது முன்னேற்றம் இருக்காடா வாழ்க்கையில்? ஒன்றுமே இல்லை. இப்படியே நாள் போகுது மச்சான். வயதும் போகுது. இன்னும் எத்தனை நாளைக்குடா?” விரக்தியும் சலிப்பும் கலந்து கிடந்தது அவன் குரலில்.
“என்றாவது ஒருநாள் விடிவு வரும் என்று தெரிந்தாலாவது அந்த நம்பிக்கையில் வாழலாம். இது ச்சு!”
அதற்குமேல் எதையும் கேட்க ரஞ்சனாலும் முடியவில்லை. மூன்று வருடங்கள் வேலை செய்தே மூச்சு முட்டிப் போய் நிற்கிறான் அவன். அப்படியானால் அவர்களின் நிலை?
அதுவரை தற்காலிகமாக தன் பிரச்சினையை மறந்திருந்தவனின் நினைவுகள் காலை நடந்தவைகளை மீண்டும் அசைபோட கண்கள் சிவந்தது. அவனின் தன்மானத்தை அல்லவா சீண்டிப் பார்த்துவிட்டாள் அவள்!
அவன் முகத்தையே பார்த்திருந்த சுகந்தன், “என்னடா..?” என்று இப்போது அவனிடம் கேட்டான்.
என்னவென்று சொல்வான்? தலையை ஒன்றும் இல்லை என்பதாக அசைத்தான்.
இப்போது ஜீவனின் பார்வையும் அவனைக் கேள்வியாக ஏறிட, “வேலையில் ஏதாவது பிரச்சினையாடா..?” என்று ஊகித்துக் கேட்டான் சுகந்தன்.
“ம்.. வேலை போய்விட்டது”
“என்னது? ஏன்டா? ஆனால் நீ வேலையை விடமாட்டாயே?” என்று நண்பனைப் பற்றி முழுதாக அறிந்திருந்த ஜீவன் கேட்டான்.
கோபமாக நிமிர்ந்து, “நான் எங்கேடா விட்டேன். அவர்களாக என்னை வேலையில் இருந்து தூக்கிவிட்டார்கள்.” என்றான் ஆத்திரத்துடன்.
“அப்படி என்ன நடந்தது? நீ எந்தப் பிழையும் செய்திருக்க மாட்டாயே.”
“அது உனக்குத் தெரிகிறது. ஆனால் அந்த அப்பனுக்கும் மகளுக்கும் தெரியவில்லையேடா.” என்றான் குமுறலாக.
“மகளா? யாருடா அது?”
“திமிர்பிடித்தவள்!” என்று பல்லைக் கடித்தவன், கண்கள் சிவக்க அவமானத்தில் சிவந்த முகத்தோடு நடந்ததைச் சொன்னான்.
அதைக் கேட்டதும் பொங்கிவிட்டார்கள் அவன் உயிர் நண்பர்கள்.
“அவளைச் சும்மாவாடா விட்டாய்? கன்னம் பழுக்கத் திருப்பிக் கொடுக்காமல் வந்துவிட்டாயேடா..” என்றான் சுகந்தன் ஆத்திரத்தோடு.
“எழும்பு மச்சான். மூன்று பேரும் போய் அப்பனுக்கும் மகளுக்கும் நல்ல பாடம் கற்பித்துவிட்டு வரலாம்..” என்று எழுந்துவிட்டான் ஜீவன்.
இது எதற்கும் அசையாமல் இருந்த இடத்திலேயே அமர்ந்திருந்தான் ரஞ்சன்.
“என்னடா அப்படியே இருக்கிறாய். வாடா போகலாம்..” என்ற சுகந்தனை நிமிர்ந்து பார்த்து, “போய்?” என்று கேட்டான் ரஞ்சன்.
“போய் என்ன போய்? போய் அப்பனுக்கும் மகளுக்கும் நாலு போட்டுவிட்டு வரலாம்.”
“பிறகு?” அப்போதும் சுருக்கமாகக் கேட்டவனின் கேள்வியில் சுகந்தனுக்கு எரிச்சல் வந்தது.
“என்னடா கேள்வி கேட்கிறாய்? பிறகு என்ன பிறகு?”
“கேட்காமல்? இவ்வளவு நாட்களும் கூலிகளாகத்தான் இருந்தோம். இனி என்ன ரவுடிகளாக மாறவேண்டுமா?” என்று நிதானமாகக் கேட்டான் ரஞ்சன்.
“அதற்காக உன்னை அடித்தவளைச் சும்மா விடச் சொல்கிறாயா?”
அதற்கு எந்தப் பதிலும் சொல்லவில்லை அவன். அதற்கிடையில் அவன் கைபேசி சிணுங்கியது. எடுத்துப் பார்த்தால் அழைப்பது கண்ணன் என்று விழுந்தது. அழைப்பை ஏற்காமலேயே சட்டைப் பைக்குள் கைபேசியை மீண்டும் போட்டான்.
“யாருடா?” என்றான் ஜீவன்.
“கண்ணன் அண்ணா..”
“என்னவாம்?
“யாருக்குத் தெரியும்?” என்றான் தோளைக் குலுக்கி.
சற்று நேரம் அமைதியில் கழிய, “இனி என்ன செய்யப் போகிறாய்..?” என்று கேட்டான் ஜீவன்.
“வேறு வேலைதான் தேடவேண்டும்.” என்றான் மரத்த குரலில்.
அவன் வேதனை அவர்களுக்குப் புரிந்தது. இனி ஒவ்வொரு இடமாகச் சென்று வேலை கேட்கவேண்டுமே. கேட்டாலும் கிடைக்க வேண்டுமே! அப்படிக் கிடைத்தாலும் நல்ல சம்பளம் கிடைக்குமா?
இதை எல்லாம் யோசித்த ஜீவனுக்கு சித்தாராவின் மேல் ஆத்திரம் ஆத்திரமாக வந்தது. “அவளை என்னவாவது செய்ய வேண்டும் மச்சான். எவ்வளவு திமிர் இருந்தால் உன்னை அடிப்பாள். அவளை!” என்று பல்லைக் கடித்தான் அவன்.
அதற்கும் ரஞ்சன் அமைதியாக இருக்க, “ஏன்டா, எங்களுக்கே இவ்வளவு கோபம் வருகிறதே. நீ பிடித்து வைத்த பிள்ளையார் மாதிரி அசையாமல் இருக்கிறாயே. உனக்கு சூடு சுரணையே இல்லையா?” என்று கேட்டான் சுகந்தன்.
ஒரு சின்னச் சிரிப்பை விரக்தியோடு சிந்தியவன், “அவளை எப்போது வேண்டுமானாலும் என்னவும் செய்யலாம். ஆனால், எனக்கு இப்போது உடனடியாக வேலை வேண்டுமேடா..” என்றவனின் கைபேசி மீண்டும் அடித்தது.
எடுத்துப் பார்த்துவிட்டு மீண்டும் சட்டைப் பைக்குள் போட்டவனிடம், “கண்ணன் அண்ணாவா?” என்று கேட்டான் ஜீவன்.
“ம்..”
“என்னவென்று கேளேன்டா..”
“என்ன கேட்பது? ஏதாவது ஆறுதல் சொல்வார்..” என்றான் சலிப்புடன்.
“நீயாக ஒன்றை முடிவு செய்யாமல், என்ன சொல்கிறார் என்று கேள்.” என்றான் சுகந்தன்.
திரும்பவும் விடாமல் கைபேசி அடிக்க, நண்பர்களின் பேச்சை ஏற்று அதை ஆன் செய்து காதுக்குக் கொடுத்தான் ரஞ்சன்.
“ஏன்டா, ஒரு மனுஷன் கூப்பிட்டால் என்ன, ஏது என்று கேட்கமாட்டாயா? அவ்வளவு பெரிய மனிதனா நீ?” என்று, அவ்வளவு நேரமும் அவர் அழைக்க அழைக்க அவன் எடுக்காமல் இருந்த கோபத்தில் பொரிந்தார் கண்ணன்.
“சாரி அண்ணா.”
“சரி விடு. நீ இங்கே கடைக்கு வா!” என்றவரின் பேச்சில் அவன் உடல் இறுகியது.
மீண்டும் அவன் அந்தக் கடை வாசல் படியை மிதிப்பதா? பணம், வசதி, ஆள்பலம் தன இல்ல; அதற்காக அவனுக்கு ரோசம், மானம், மரியாதை எதுவுமே இல்லை என்று நினைத்துவிட்டாரா? என்று எண்ணியவன் சூடாகப் பதில் சொல்ல முதலே முந்திக் கொண்டார் கண்ணன். “சந்தானம் அண்ணாவுக்கு நடந்ததை எல்லாம் சொல்லிவிட்டேன் ரஞ்சன். அவர் மன்னிப்புக் கேட்டார். சித்ராவும் உன்னிடம் மன்னிப்புக் கேட்கிறேன் என்றாள். சந்தானம் அண்ணாதான் உன்னை வரச் சொன்னார்.”
அவருக்கு உண்மை தெரிந்தால் என்ன? அவர்கள் மன்னிப்புக் கேட்டால் என்ன? நடந்தது இல்லை என்றாகிவிடுமா? அவன் பட்ட அவமானம் மறைந்து விடுமா? அல்லது எல்லோர் முன்னிலையிலும் கூனிக் குறுகி நின்றானே. அது இல்லை என்றாகி விடுமா?
“இனி நான் அங்கு வரமாட்டேன்..” என்றான் உறுதியான குரலில்.
“அப்படிச் சொல்லாதே ரஞ்சன். சின்னப்பிள்ளை தானே அவள். தெரியாமல் செய்துவிட்டாள். அதுதான் மன்னிப்புக் கேட்கிறாளே. அவளுக்காக மட்டும் சொல்லவில்லை. உன் வீட்டு நிலையையும் யோசித்துப் பார். உனக்காக்கவும்தான் நான் இதைச் சொல்கிறேன்.” என்றவருக்கு, பதில் சொல்லாமல் இருந்தே தன்னுடைய மறுப்பைத் தெரிவித்தான் ரஞ்சன்.
அவன் வீட்டு நிலைதானே வாய்மூடி, அவளை அடிக்கத் துறுதுறுத்த கையை அடக்கி அவன் வெளியே வந்ததற்கே காரணம். அவனிடம் மிஞ்சி இருப்பது சுயகவுரவம் ஒன்றுதான். அதையும் இழக்க முடியுமா?
அவருக்கும் அது புரிந்தது. கைபேசியில் கதைத்து அவனைச் சமாதானப் படுத்த முடியாது என்று நினைத்தவர், “எங்கே நிற்கிறாய்? நான் உன்னுடன் நேரே கதைக்கவேண்டும்.” என்றார்.
“நான் இங்கே ஜீவன் சுகந்தனோடு இருக்கிறேன்..”
“நான் இப்போது அங்கே வர முடியாதேடா. நீ இங்கே வாயேன் ரஞ்சன்.” என்றார் மீண்டும்.
“இல்லை அண்ணா. என்னால் முடியாது.”
“ப்ச்! போடா. இவ்வளவு பிடிவாதம் கூடாது ரஞ்சன் உனக்கு. சரி, மதியம் நாம் வழமையாகச் சாப்பிடும் ஹோட்டலுக்கு வா. இல்லை என்காதே. நீ வருகிறாய். நான் பார்த்துக்கொண்டு இருப்பேன். இப்போது வைக்கிறேன்.” என்றவர் வைத்தும் விட்டிருந்தார்.
மதியம் வரை நண்பர்களுடேனேயே இருந்தான் ரஞ்சன். மதியம் ஒரு மணி ஆனதும், “வருகிறேன்டா..” என்றபடி எழுந்தான்.
“சரிடா..” என்ற ஜீவன், “நான் ஒன்று சொல்லவா ரஞ்சன்.” என்று கேட்டான்.
“என்ன, சொல்லுடா”
“மானத்துக்கும் ரோசத்துக்கும் நம்முடைய மூளையும் மனதும் வேண்டுமானால் அடங்கும் மச்சான். ஆனால் வயிறு அடங்காதுடா. எது என்றாலும் யோசித்துச் செய்.” என்றான்.
ஒரு நொடி அவனையே பார்த்த ரஞ்சன், ஒரு பெருமூச்சோடு தலையை மட்டும் அசைத்துவிட்டுக் கிளம்பினான். அங்கே ஹோட்டலுக்குள் நுழைந்து, கண்ணனுக்கு முன்னால் சென்று அமர்ந்தான்.
மதிய உணவை உண்டுகொண்டிருந்த கண்ணன் அவனை ஒரு பார்வை பார்த்துவிட்டு, “நீயும் எதையாவது ஆடர் பண்ணிச் சாப்பிடு.” என்றார்.
“இல்லை. எனக்கு வேண்டாம். நீங்கள் ஏன் வரச்சொன்னீர்கள்?” என்று இறுக்கமான குரலிலேயே கேட்டான்.
“சொல்கிறேன். முதலில் சாப்பிடு. பசியில் இருந்தால் கோபம்தான் வரும்.”
“எனக்குப் பசியில்லை.”
“பொய் சொல்லாதே ரஞ்சன். நீ வீட்டில் இருந்து கொண்டுவந்த உணவு அங்கே கடையில் இருக்கிறது. கொண்டு வரவேண்டும் என்று தான் நினைத்திருந்தேன். உன்னைச் சந்திக்க வந்த அவசரத்தில் மறந்துவிட்டேன். அதற்கு என்ன, இங்கே வாங்கிச் சாப்பிடு.”
அவனுக்கும் பசி வயிற்றைக் கிள்ளியதுதான். ஜீவன் சொன்னது போல் மனதின் வைராக்கியத்துக்கு அவன் வயிறு அடங்க மறுத்தது. ஆனால், இங்கே வாங்கிச் சாப்பிடவும் அவன் கையில் சுத்தமாகப் பணமும் இல்லையே. அன்று காலையில் தானே இருந்த பணம் மொத்தத்தையும் வழித்துத் தாயிடம் கொடுத்திருந்தான். அதைச் சொல்லி கண்ணனின் அனுதாபத்தையோ அல்லது அவரின் பணத்தில் உண்ணவோ பிடிக்காமல் கோபத்தைத் தனக்குத் துணைக்கழைத்தான்.
“இப்போது நீங்கள் சொல்லவேண்டியதைச் சொல்லாவிட்டால் நான் போகிறேன்..” என்றவன், கதிரையில்(நாற்காலி) இருந்து எழவும், அவன் கையைப் பிடித்து அமர்த்தினார் கண்ணன். “இந்தக் கோபத்துக்கும் ரோசத்துக்கும் மட்டும் குறைச்சல் இல்லை”
‘என்னிடம் எஞ்சியிருப்பது அது மட்டும்தானே..’ என்று எண்ணியது அவன் மனம். ஆனாலும் வெளியே அமைதியாக அவரையே பார்த்தான்.
“திரும்பவும் வேலைக்கு வாடா..” என்றார் அவர் நேரடியாக.
“என்னிடம் பணம்தான் இல்லை கண்ணன் அண்ணா. அதற்காக மானம், மரியாதையை, தன்மானமும் இல்லை என்று நினைத்தீர்களா?” என்று கேட்டான் கோபமாக.
“அதெல்லாம் உனக்கு அளவுக்கு அதிகமாகவே இருக்கிறது என்று எல்லோருக்கும் தெரியும். அவர்கள் தான் செய்த பிழைக்கு மன்னிப்புக் கேட்கத் தயாராக இருக்கிறார்களே, பிறகு என்னடா?” என்று கேட்டவரின் கேள்விக்கு அவன் பதிலே சொல்லவில்லை.
மேசையில் இருந்த தண்ணீர் கிளாசை அவன் கைகள் இரண்டும் சுற்றிக் கொண்டிருக்க பார்வையோ அதையே வெறித்துக் கொண்டிருந்தது.
“ரஞ்சன் நான் சொல்வதைக் கொஞ்சம் கேள். உன் மனநிலை எனக்கு விளங்காமல் இல்லை. ஆனால் என்ன செய்வது சொல்லு? நாமும் கொஞ்சம் சமாளித்துத்தான் போகவேண்டும். அவர்களைப் போல நம்மிடம் பணமா குவிந்து கிடக்கிறது. ஒரு வேலை போனால் இன்னொரு வேலை என்று அலட்சியமாக நினைக்க? உன் அம்மா தங்கையைப் பற்றி யோசி. இதை விட்டுவிட்டு அடுத்த வேலைக்கு என்ன செய்யப் போகிறாய்? இதே சம்பளத்தில் கிடைக்குமா? இப்போது நீயாகப் போகவில்லையே. அவர்களாகத் தானே உன்னைத் தேடி வருகிறாகள்..” என்றவரின் பேச்சை மட்டுமே கேட்டிருந்தான்.
பதில் எதுவுமே சொல்லாமல் இருந்தவனின் மனதில் என்ன இருக்கிறது? அல்லது என்ன நினைக்கிறான்? எதுவுமே புரியவில்லை கண்ணனுக்கு.
“என்னடா வேலைக்கு வருகிறாயா?” என்று கேட்டவருக்குப் பதில் சொல்லாமல் இருந்தவனின் தோளை ஒரு கரம் பற்றியது.