அந்தப் புறம் எடுத்தவன், “யாழி… உன்னோடு பிறகு கதைக்கிறேன்..” என்றுவிட்டு, அவளின் பதிலை எதிர்பாராது வைத்துவிட்டான்.
கைபேசியைத் தன் அருகிலேயே வைத்துவிட்டுக் கட்டிலில் சரிந்தவள் அவனுடைய அழைப்புக்காகக் காத்திருந்தாள். எவ்வளவு நேரம் சென்றதோ.. அதைப் பார்த்தபடியே அவள் விழிகள் மெல்ல மெல்ல மூடின.
நேரம் இரவு பதினொன்றைக் கடந்துகொண்டிருக்க சித்ராவின் வீட்டு அழைப்புமணி ஒலித்தது.
அன்றைய திருமணத்தில் நடந்த களோபரங்களைப் பற்றிப் பேசிக்கொண்டிருந்த சந்தானம் தம்பதியர் இந்த நேரத்தில் யார்.. ரஞ்சனாக இருக்குமோ என்று எண்ணியபடி வந்து கதவைத் திறக்க, அங்கே நின்றிருந்தான் ரஞ்சன்.
“சாரி அங்கிள், கொஞ்சம் பிந்திவிட்டது. உங்கள் தூக்கத்தைக் கெடுத்துவிட்டேனா?” என்றான் மன்னிப்புக் கோரும் குரலில்.
“நாங்கள் இன்னும் உறங்கவே இல்லை ரஞ்சன். நீ உள்ளே வா.” என்றவர், அவன் சிறு சங்கடத்துடன் வீட்டுக்குள் வந்ததும், அமர்ந்துகொள்ள இருக்கையைக் காட்டினார்.
அவன் அமர்ந்ததும், “லக்ஷ்மி, சாப்பாட்டை எடுத்து வை. அவன் பசியோடு இருப்பான்..” என்று மனைவியை ஏவினார்.
அவரும் வேகமாக உள்ளே செல்ல எத்தனிக்க, “இல்லை அங்கிள் எனக்கு வேண்டாம். நான் சாப்பிட்டுவிட்டேன்..” என்றவனின் பேச்சைக் காதில் வாங்காமல், “கொஞ்சமாகச் சாப்பிடுங்கள் தம்பி. சுடச்சுட தோசை கொண்டு வருகிறேன்..” என்று மருமகனைத் தானும் உபசரித்தார் லக்ஷ்மி.
திருமணம் ஆனபிறகு முதன் முதலாக அவர்கள் வீட்டுக்கு வந்திருக்கிறான் என்கிற பரபரப்பு அவர்களுக்கு இருந்தது.
அதை உணர்ந்தபோதும், “இப்போது எதுவும் வேண்டாம் ஆன்ட்டி. எனக்குப் பசியில்லை. காலையில் சாப்பிடுகிறேன்..” என்றவனிடம், “சரி, அப்படியானால் ஒரு கப் பாலாவது அருந்துங்கள்.” என்ற லக்ஷ்மி, அவன் பதிலை எதிர்பாராது வேகமாகச் சமையலறைக்குள் நுழைந்தார்.
ரஞ்சனின் விழிகளோ தூங்கியிருப்பாள் என்று தெரிந்தபோதும் அந்த வீட்டுக்குள் சித்ராவைத் தேடின.
அவன் தேடலின் பொருள் உணர்ந்து, “சித்து அவள் அறையில் இருக்கிறாள்.” என்றார் அவன் மாமனார்.
அவர் தன்னைக் கண்டுகொண்டதை உணர்ந்ததும் மெல்லிய சங்கடம் தோன்ற, “கடையிலேயே தூங்கலாம் என்றுதான் நினைத்தேன். யா.. சித்ரா கவலைப்படுவாள் என்றுதான் வந்தேன் அங்கிள்.” என்றான் அப்போதும் தயக்கத்துடன்.
“இதென்ன பேச்சு ரஞ்சன். உனக்கென்று வீடு இங்கே இருக்கையில் நீ ஏன் அங்கு தூங்கவேண்டும்.” என்று உரிமையோடு கடிந்துகொண்டார் சந்தானம்.
“அதுதானே தம்பி. சித்து கூட இவ்வளவு நேரமும் உங்களை எதிர்பார்த்துக் கொண்டே இருந்தாள். தூங்கிவிட்டாள் போல. இல்லாவிட்டால் உங்கள் குரல் கேட்டதும் கீழே வந்திருப்பாள்.” என்றபடி, கையில் பாலோடு வந்த லக்ஷ்மி அதை மருமகனிடம் நீட்டினார்.
நன்றி சொல்லி வாங்கிக் கொண்டவனிடம், “திருமண வேலைகள் எல்லாம் முடிந்ததா ரஞ்சன்?” என்று மேலோட்டமாக விசாரித்தார் சந்தானம்.
“ஆமாம் அங்கிள். வீட்டில் எல்லோரையும் விட்டுவிட்டு, எல்லா வேலைகளையும் முடித்துவிட்டேன். எங்கள் பொருட்கள் அங்கே அம்மா வீட்டில் இருந்தது. அதை எல்லாம் கடைக்கு மாற்றிவிட்டேன்.” என்றவனை அவர் கேள்வியாகப் பார்த்தார்.
“அங்கே பெரிய கடையின் மேல் தளம் ஸ்டோர் ஆகப் பாவிக்கலாம் என்றுதான் முதலில் எடுத்திருந்தேன். இப்போது அங்கேயே நாங்கள் தங்கிக் கொள்ளலாம் என்று பார்க்கிறேன் அங்கிள்.”
“என்ன ரஞ்சன் இது. வேற வீடு பார்க்கும் வரையிலாவது இங்கே இருப்பீர்கள் என்று நினைத்தேனே.. நீயானால் இப்போது இப்படிச் சொல்கிறாயே..” மனத்தாங்கலுடன் சொன்னார் சந்தானம்.
“அதனால் என்ன அங்கிள். தங்குவது மட்டும்தானே அங்கே. மற்றும்படி கடையில் வைத்து நாம் தினமும் பார்த்துக் கொள்ளத்தானே போகிறோம்.” என்று தன்மையாகச் சொன்னபோதும் அவன் குரலில் உறுதி இருந்தது.
அவனது தன்மானத்தைப் பற்றியும் சுயகெளரவத்தைப் பற்றியும் அறிந்தவர் ஆகையால் மனமில்லாத போதும் அதற்குச் சம்மதித்தார் சந்தானம்.
அருந்தி முடித்த பால் கப்பை மேசையில் வைத்தபடி, “நாளைக்கே அங்கே போய்விடலாம் என்று இருக்கிறேன் அங்கிள். இன்றே கொஞ்சம் வீட்டுக்குப் பொருட்களும் வாங்கிப் போட்டேன். அதுதான் இவ்வளவு நேரம் எடுத்துவிட்டது.” என்றான் ரஞ்சன்.
“இவ்வளவு அவசரமாக அதையெல்லாம் செய்யவேண்டுமா ரஞ்சன். இதற்கு நீ பேசாமல் இங்கேயே தங்கியிருக்கலாம். எங்களுக்கும் சந்தோசமாக இருந்திருக்கும்.” என்று அப்போதும் சலித்துக் கொண்டார் சந்தானம்.
அவன் சின்னப் புன்னகையுடன் பேசாமல் இருக்க, “மிகுதியை நாளைக்குப் பேசலாம். இப்போது தம்பியைத் தூங்க விடுங்கள். உங்களுக்குத்தான் வயதான காலத்தில் தூக்கம் வரவில்லை என்றால் அவரையுமா தடுத்து வைத்திருப்பீர்கள். நேரத்தைப் பாருங்கள் பன்னிரண்டாகிறது.” என்று கணவரைக் கடிந்துகொண்டார் லக்ஷ்மி.
“பார்த்தாயா ரஞ்சன். சந்தடி சாக்கில் என்னைக் கிழவன் ஆக்கிவிட்டாள் உன் மாமி. அவளுக்கு என்னவோ தான் பதினெட்டு வயதுக் குமரி என்று நினைப்பு. இந்தப் பெண்களே இப்படித்தான்..” என்று கேலி பேசியபோதும் மனைவியின் பேச்சைத் தட்டாத கணவனாக இருக்கையில் இருந்து எழுந்துகொண்டார் சந்தானம்.
லக்ஷ்மியோ, மருமகன் முன் கணவரை ஒன்றும் சொல்லமுடியாமல் வெறுமனே முறைத்தார்.
முகத்தில் பூத்த புன்னகையுடன் தானும் எழுந்துகொண்டவன், சித்ராவின் அறை எது என்று தெரியாமல் தயங்கினான். அந்த வீட்டுக்குப் பலமுறை வந்திருக்கிறான் தான். ஆனாலும் வராண்டாவைத் தண்டி உள்ளே வந்ததே இல்லை.
அவனின் தயக்கத்தைப் புரிந்துகொண்ட லக்ஷ்மி, “அங்கே மேலே வலப்பக்கம் கதவு கொஞ்சமாகத் திறந்திருக்கிறது பாருங்கள். அதுதான் சித்துவின் அறை.” என்று காட்டினார்.
அவர்கள் இருவருக்கும் ஒரு இரவு வணக்கத்தைச் சொல்லிவிட்டு அவன் படியேறத் துவங்க, “மாற்றுடை இருக்கிறதா ரஞ்சன், அல்லது நான் தரவா” என்று கேட்டார் சந்தானம்.
கையிலிருந்த பையைக் காட்டி, “கொண்டு வந்திருக்கிறேன் அங்கிள்.” என்றவன் மனைவியின் அறையை நாடிச் சென்றான்.
அன்று முழுவதுமே அலைந்த அலைச்சலும், நித்தியின் திருமணத்தினால் உண்டான வேலைப் பளுவும், போதாக்குறைக்கு தாய் தங்கையரின் பேச்சினால் உண்டான மனக்கவலையுமாக முற்றாக மனதளவிலும் உடலளவிலும் களைத்துச் சோர்ந்திருந்தான் ரஞ்சன்.
எப்போதடா தூங்கலாம் என்று எண்ணியபடி கதவைத் திறந்தவன் விடிவிளக்கின் மங்கிய வெளிச்சத்தில், மனைவி கட்டிலில் படுத்திருந்த கோலத்தைப் பார்த்து மயங்கியே போனான்.
ஒரு பக்கமாக ஒருக்களித்துப் படுத்திருந்தவள் இரண்டு கைகளையும் கன்னத்துக்குக் கீழே கொடுத்தபடி அயர்ந்து உறங்கிக் கொண்டிருந்தாள்.
மஞ்சத்தின் மேலே மலரொன்று மயங்கிக் கிடப்பது போலிருந்தது அவள் உறங்கும் காட்சி!
அருகிலேயே கைபேசியையும் கண்டவனுக்கு, அவனின் அழைப்புக்காக அவள் காத்திருந்திருக்கிறாள் என்பது புரிந்தது.
அதுவரை மனதையும் உடலையும் ஆக்கிரமித்து இருந்த சோர்வும் களைப்பும் பறந்தோட வேறு விதமான உணர்வுகள் அவனை மிக வேகமாக ஆக்கிரமிக்க ஆரம்பித்தன.
அறைக் கதவைச் சாத்திவிட்டு உடையை மாற்ற எண்ணி அந்த அறையை நோட்டம் விட்டவனுக்கு, மற்றொரு பக்கத்தில் இருந்த இன்னொரு கதவு தென்படவும் சத்தமில்லாமல் சென்று அதைத் திறந்துபார்த்தான்.
அது குளியலறை என்று கண்டதும், உடம்பின் கசகசப்புப் போக சின்னதாய் ஒரு குளியலைப் போட்டான். மனையாளின் சோப்பையே போட்டு அவளின் பூந்துவாலையாலேயே துடைத்தும் கொண்டான்.
அதைச் செய்கையில் அவன் மனதிலும் உடலிலும் ஒருவிதப் பரவசம்!
அதுநாள் வரை அவனைக் கட்டியிருந்த கட்டுக்கள் அனைத்தும் விலகியது போல், அவர்கள் இருவருக்குமிடையில் தடையாக எதுவுமே இல்லாததுபோல் சுதந்திரமாக உணர்ந்தவனின் மனதும் உடலும், அன்றொருநாள் அறிந்துகொண்ட மனைவியின் அருகாமையை மீண்டும் அனுபவிக்க வெகுவாகவே ஏங்கியது!
நடுச்சாமத்தைக் கடந்துவிட்ட அந்த நேரத்திலும் உற்சாகம் நிரம்பி வழியும் மனதுடன் சென்று கட்டிலின் மறுபக்கத்தில் அமர்ந்துகொண்டான்.
ஆசையோடு அவளைப் பார்த்தவனின் மனக்கட்டுப்பாட்டை அவளின் அழகும் அருகாமையும் வெற்றிகரமாகத் தோற்கடித்துக் கொண்டிருந்தது. அன்றைய இக்கட்டில் தன் துன்பங்களுக்குத் துணையாக இருந்தவள் மீது மனதளவில் நெருக்கமும் உருவாகியிருந்தது.
அதுவும், அவளின் கையில்லாத முழங்கால் வரையிலான நைட்டியைப் பார்த்தவனுக்குத் தான் வருவேன் என்று தெரிந்திருந்தால் அவள் இப்படி அணிந்திருப்பாளா என்று நினைக்கையிலேயே அவன் இதழ்களில் ரகசியப் புன்னகை மலர்ந்தது.
அவளருகில் சரிந்தவன், அவளின் வெண்பட்டுக் கன்னத்தை ஆசையோடு தடவினான்.
அப்போதுதான் குளித்ததனால் சில்லிட்டிருந்த அவன் விரல்கள் உண்டாக்கிய சிலிர்ப்பில் தூக்கத்திலேயே புருவங்களைச் சுருக்கி, இதழ்களைச் சுளித்து, “ரஞ்..சன்..” என்று சிணுங்கியவள், அவன் கரத்தின் மேல் தன் கரத்தை வைத்துக் கன்னத்தோடு அழுத்திக் கொண்டாள்.
அவனோ இனிதாக அதிர்ந்தான். பின்னே, நல்ல தூக்கத்தில் இருந்தபோதும் அவனை அல்லவோ அவள் நினைவுகள் சுமந்திருக்கின்றன!
அதற்கு மேலும் தன் ஆவலை அடக்க முடியாது, அவளை இழுத்துத் தன் மேல் போட்டுக் கொண்டவன், “தூங்கவில்லையா நீ…” என்று கேட்டான்.
அவன் இழுத்ததில் தூக்கம் கலைந்து விழிகளைத் திறந்து சோம்பலாக அவனைப் பார்த்தவள், அவன் கேள்விக்குப் பதிலைச் சொல்லாது, “வந்துவிட்டீர்களா..” என்று கேட்டுவிட்டுத் தானும் அவனோடு இன்னும் நன்றாக ஒண்டிக் கொண்டாள்.
“ம்ம்..” என்றவனது ஒருகரம் மனைவியின் இடையில் வேகமாக விழுந்து அவளைத் தன்னோடு இன்னும் இறுக்கிக் கொள்ள மறுகரம் அவள் கன்னத்தை ஆசையோடு தடவிக் கொடுத்தது.
நித்ராதேவியிடம் இருந்து விடுபட விரும்பாமல்,“ரஞ்..சன்..” என்றவளின் அசையும் இதழ்களையே தாபத்துடன் பார்த்தவனின் விரல்கள் இப்போது அந்தப் பட்டிதழ்களை வருடிக் கொடுக்க, “ரஞ்சனுக்கு என்னடி?” என்றான் சரசமாக.
“ஏன் லேட்?”
“கொஞ்சம் வேலைமா..” என்றவனின் உதடுகள் மெலிதாக அவள் நெற்றியிலே பதிந்தது.
மீண்டும் கண்ணயரத் தொடங்கியவளின் தூக்கத்தை அது கெடுத்தது போலும், “ம்ம்..ரஞ்சன்” என்று சிணுங்கியவள், அவன் நெஞ்சிலேயே மறுபுறம் முகத்தைத் திருப்பிக்கொண்டு படுத்தாள்.
அப்படி அவள் தலையைத் திருப்பியதில், அதுவரை அவள் கழுத்துக்குள் சிக்கிக் கிடந்த தாலி அவன் நெஞ்சில் வந்து விழுந்தது.
அந்தத் தாலியே அவனது நெஞ்சின் உணர்வுகளை மிக வேகமாகக் கிளறிவிட்டன!
அதற்கு மேலும் மனதினதும் உடலினதும் தவிப்பைத் தாங்க முடியாதவனாய், அவளின் கன்னத்தில் தன்னுடைய சூடான இதழ்களை அழுந்தப் பதித்தான்.
முற்றாகத் தூக்கம் கலைய, “ரஞ்..சன்..” என்று சிணுங்கியவள், மீண்டும் மறுபக்கம் திரும்பிப் படுக்க எண்ணித் தலையைத் தூக்கினாள்.
எப்போதும் தன் பெயரையே மந்திரமாய் உச்சரிக்கும் மங்கையின் கன்னங்களைச் சட்டெனத் தன் இரு கைகளாலும் தாங்கிப் பிடித்தவன், பேயாட்டம் போட்ட தன் உணர்வுகளைக் கட்டுப்படுத்த முடியாமல், தன் இதழ்களை அவள் இதழ்களில் அழுந்தப் பொருத்தினான்.
அதுவரை தூக்கமா, மயக்கமா, கனவா என்று பிரித்தறிய முடியாத ஒருவிதமான சுகமயக்கத்தில் திளைத்திருந்தவள் பட்டென விழிகளை விரித்துப் பார்த்தாள்.
அவன் இதழ்கள் செய்த மாயத்தில் மயங்கத் தொடங்கிய மனதை அடக்கியபடி, அவனிடம் இருந்து தன்னை மீட்டவள், “எப்போது வந்தீர்கள்?” என்று கேட்டாள்.
அவளின் இதழ்களை ருசி பார்த்தவனோ அந்த மயக்கத்தில் இருந்து மீளாமலே அவள் கழுத்து வளைவில் தன் இதழ்களைப் புதைத்தபடி, “இப்போதான்டா..” என்றான் கிசுகிசுப்பாக.
அதை அவன் சொல்கையில் அசைந்த உதடுகளும் உராய்ந்த மீசையும் உண்டுபண்ணிய குறுகுறுப்பில், தன்னிச்சையாக விழிகளை மூடிக் கிறங்கிக் கழுத்தை அவள் மறுபுறம் வளைக்க அவனோ அவள் கழுத்து வளைவுக்குள் வசதியாகப் புகுந்துகொண்டான்.
தன் உதடுகள் கொண்டு அவன் செய்த லீலைகளால் தகித்த மேனியின் தவிப்பை அடக்க முயன்றபடி, “ஏன் லேட்?” என்று கேட்டாள் அவள்.
“ஒரே கேள்வியை எத்தனை தடவி கேட்பாய்..” என்று கேட்டவனின் கைகளும் இப்போது கட்டவிழ்ந்த கன்றுகளாய் அவள் மேனிக்குள் மேயத் தொடங்கின.
அவற்றைத் தன் கரங்களால் தடுக்க முயன்றபடி, “ஓ.. முதலும் கேட்டேனா..” என்று கேட்டாள் அவள்.
“ம்ம்..”
“அது கனவில் என்று நினைத்தேன்…” என்று அவள் முணுமுணுக்க, அவனோ தன் வேலையில் மிகக் கவனமாக இருந்தான்.
அவன் மூச்சுக் காற்றின் வெம்மையாலும், சூடான இதழ்கள் பதித்த முத்தங்களாலும், அவன் கரங்கள் அவள் மேனியில் விளையாடிய வேகத்திலும் அவளது பூமேனி நெகிழ்ந்த போதும் மனமோ முழுதாய் அவனோடு கரைய மறுத்து முரண்டியது.
அவன் ஆக்கிரமிப்பில் பனிக்கட்டியெனக் கரைந்த மேனியைக் கட்டுப்படுத்த இயலாமல் பெரும் பிரயாசையுடன் , “ரஞ்சன் ப்ளீஸ்..” பலகீனமாகக் கெஞ்சின அவள் இதழ்கள்.
அன்று முழுவதும் அவனுடைய அருகாமைக்கும் அணைப்புக்கும் அவள் மனதும் உடலும் ஏங்கியதாலோ என்னவோ அவளாலும் அவனிடம் முழுமையான மறுப்பையோ எதிர்ப்பையோ காட்ட முடியவில்லை.
முழுமையாக ஒன்றவும் முடியவில்லை.
மனம் அவனைத் தவிர்க்க நினைக்க உடலோ அவனோடு இன்னும் ஒட்டிக்கொள்ளத் துடித்தது.
இனித் தன் வாழ்வில் மனைவி மட்டுமே என்று எண்ணியவனுக்கோ, அவளை விட்டு விலகும் எண்ணம் சிறிதும் இல்லை.
நடந்தவைகள் அனைத்தும் அவன் மனதிலிருந்து வெகுதூரம் சென்றிருக்க, அதற்குமேலும் ஒருநிமிடம் தன்னும் மனைவியிடம் இருந்து பிரிந்திருக்க முடியாமல், “யாழி ப்ளீஸ்.. ஏதும் சொல்லாதே..” என்றான் அவளை வேகமாக ஆக்கிரமித்தபடி!
அன்றுபோல் இன்றும் அவனின் ‘ப்ளீஸ்’ அவளைக் கரைத்தபோதும், “ஆனால் நமக்குள்..” என்று ஆரம்பித்தவளின் இதழ்களை அவன் இதழ்கள் வேகமாக முற்றுகையிட, அவளோ இந்த உலகத்தையே மறந்து அவனுக்குள் கரைந்தே போனாள்!!


