அவர்களின் புது வீட்டுக்கு ரஞ்சன் வாங்கியது தவிர்த்து, பாத்திர பண்டங்கள் முதல் திரைச்சீலை வரை தேவையான மீதிப் பொருட்களை இருவருமாகச் சென்று வாங்கி வந்தனர்.
வாங்கிவந்த தொலைக்காட்சிப் பெட்டியை சரியான இடம் பார்த்து வைத்துக் கொண்டிருந்தான் ரஞ்சன்.
“மாரியாத்தா மற்றும் திருவாளர் மாரியாத்தா, புது வீட்டுக்குக் குடி வந்து இருக்கிறீர்கள். கூடப் பிறவாத அண்ணன்கள், உற்ற நண்பர்கள் என்றிருக்கும் எங்களிடம் ஒரு வார்த்தை சொன்னீர்களா?” என்று கலகலத்தபடி ஜீவன் வர, புன்னகையுடன் வந்தான் சுகந்தன்.
ரஞ்சனுக்கு முதலே அவன் தாய் தங்கையரைப் பற்றி அறிந்திருந்த அவர்களுக்கு, ரஞ்சன் சித்ராவுடன் தனியாக வந்ததில் மிகுந்த மகிழ்ச்சி.
“ஜீவன் அண்ணா, சுகந்தன் அண்ணா வாருங்கள் வாருங்கள்..” என்று உற்சாகமாக வரவேற்றாள் சித்ரா.
“என்ன வாருங்கள் மோருங்கள்.. புது வீட்டுக்குக் குடிவந்திருக்கிறாய். ஒரு அழைப்பு வைத்தாயா? ஆசையாகத்தான் கூப்பிட்டாயா? அல்லது வீடு தேடி வந்தவர்களுக்குக் குடிக்கத் தண்ணீர்தான் தந்தாயா? எந்த முகத்தை வைத்துக்கொண்டு கூப்பிடுகிறாய் நீ?” என்று சிவாஜியின் பாணியில் ஜீவன் கோபமாகக் கேட்க, நீண்ட நாட்களுக்குப் பிறகு கலகலத்துச் சிரித்தாள் சித்ரா.
தொலைக்காட்சிப் பெட்டிக்கு வயர்களை இணைத்துக் கொண்டிருந்த ரஞ்சன், மலர்ந்து சிரிக்கும் மனைவியைச் சட்டென திரும்பிப் பார்த்தான். அவன் விழிகள் அவளை ஆசையோடு விழுங்கின.
“பார்ரா பார்ரா பார்ரா பார்வையைப் பார்ரா!” என்றான் ஜீவன்.
ரஞ்சன் அவனை முறைக்க, “சும்மா இருடா..” என்று ஜீவனை அதட்டிய சுகந்தன், “இன்னும் என்ன வேலைகள் இருக்கிறது ரஞ்சன். சொல்லு ஆளுக்கொன்றாகப் பார்க்கலாம்..” என்று நண்பனுக்கு உதவ முன்வந்தான்.
“ஒன்றும் செய்யத் தேவையில்லை.”
பட்டெனச் சொன்ன நண்பனை வேதனையோடு பார்த்தனர் சுகந்தனும் ஜீவனும்.
அவர்களைப் பார்க்கச் சித்ராவுக்குக் கவலையாக இருந்தது. “குடிக்க என்ன தரட்டும் சுகந்தன் அண்ணா? டீயா குளிர்பானமா? உண்பதற்கு மட்டும் எதுவும் கேட்டு விடாதீர்கள். ஒன்றுமில்லை.” என்று சிரித்தாள்.
கணவன் காட்டிய கோபமுகத்தைச் சரிசெய்ய முயன்றவளைப் பாசத்தோடு பார்த்தனர் நண்பர்கள்.
அவளுக்காக நண்பனின் கோபத்தைத் தாங்கலாம் என்று நினைத்த ஜீவன், “அப்படியே உண்பதற்கு எதுவும் இருந்தாலும் நீ சமைத்ததாக இருந்தால் எங்களுக்கு வேண்டாம். பச்சை தண்ணியையே குடு. அது போதும்!” என்றான், தன் பாணிக்குத் திரும்பி.
சித்ரா அவனை முறைக்கவும் தன் சட்டைக் கையில் இல்லாத தூசியைத் தட்டிவிட்டான் ஜீவன்.
இப்படியே கலகலப்பாக நேரம் செல்ல, கீழே கடையில் ஆட்கள் நிறைய வந்திருக்கிறார்கள் என்று ரஞ்சனை அழைத்தான் நகுலன்.
அவன் கீழே செல்லத் தொடங்கவும், “நீ இருடா. நாங்கள் பார்த்துக் கொள்கிறோம்.” என்றுவிட்டு, அவனின் பதிலை எதிர்பாராது நண்பர்கள் இருவரும் கீழே விரைந்தனர்.
செல்லும் அவர்களையே பார்த்துக்கொண்டு நின்ற ரஞ்சனிடம், “அவர்கள் மேல் உங்களுக்கு இன்னும் என்ன கோபம்?” என்று கேட்டாள் சித்ரா.
“கோபம் என்றில்லை. அவர்கள் கூட என்னைப் புரிந்து கொள்ளவில்லையே என்கிற வருத்தம் தான்.”
அவன் குரலில் இருந்த வலியை உணர்ந்தவளுக்கும் உள்ளே வலித்தது.
அவர்கள் கூட என்றால் வேறு யார் அவனைப் புரிந்துகொள்ளவில்லை? அவளா?
கேள்விகள் பல எழுந்தபோதும், அதையெல்லாம் அப்போதைக்கு ஒதுக்கிவிட்டு, “அவர்கள் எனக்காகத்தானே கடையை விட்டு வெளியேறுகிறோம் என்றார்கள். நான் உங்களைக் காதலித்தது அவர்களுக்கும் தெரியும் தானே. அதனால்தான் அப்படி நடந்து கொண்டிருப்பார்கள்.” என்று, உடன்பிறவாச் சகோதரர்களுக்காகப் பேசினாள் அவள்.
பொருள் விளங்காப் பார்வை ஒன்றை அவள் புறம் வீசியவன், “நான் உன்னைக் காதலித்ததும் அவர்களுக்குத் தெரியும்.” என்றான் வறண்ட குரலில்.
என்னது? அவனும் அவளைக் காதலித்தானா? இதென்ன புதுக்கதை என்பதாக நம்ப முடியாமல் பார்த்தாள்.
ரஞ்சனின் உதடுகளில் வருத்தப் புன்னகை ஒன்று மெல்ல ஜனித்து பின் மரணித்தது.
“அதேபோல நான் எடுத்த முடிவுகளும் எதற்காக என்பதும் அவர்களுக்குத் தெரியும். அப்படியிருந்தும் அவர்கள் என்னைப் புரிந்துகொள்ளவில்லை என்றால், அங்கே நட்பு எங்கே இருக்கிறது?”
“உண்மையான நட்பு இருக்கப் போய்த்தானே உங்களைக் கண்டித்து இருக்கிறார்கள். நண்பர்கள் என்றால் யார் ரஞ்சன். நீங்கள் எதைச் செய்தாலும் அதற்குத் தலையாட்டுபவர்களா? பிழை என்று பட்டால் சுட்டிக் காட்டுவது தானே நட்பு. அதைத்தானே அவர்கள் செய்தார்கள். கடையை விட்டு வெளியேறுவதாகச் சொன்னார்களே தவிர, செய்தார்களா? அதேபோல, அவர்கள் சொன்னது பிழை என்றால் அதை அவர்களுக்குப் புரிய வைப்பதை விட்டுவிட்டு இப்படிச் சிறு பிள்ளை போல் முகத்தைத் திருப்புகிறீர்களே.” என்று அவள் கேட்டபோது, அமைதியாகவே நின்றான் ரஞ்சன்.
“அன்று நான் உங்களை அடித்தேன் என்பதற்காக என்னை அடிக்கத் தயாரானவர்கள் தானே அவர்கள். அப்போது மட்டும் நல்ல நண்பர்களாகத் தெரிந்தவர்கள் உங்கள் பிழையைச் சுட்டிக் காட்டினால் மட்டும் தப்பானவர்களா?” என்றவளை வியப்போடு பார்த்தான் ரஞ்சன்.
“உனக்கு எப்படி அது தெரியும்?”
“எல்லாம் உங்கள் அருமை நண்பர் ஜீவன் அண்ணாவின் உபயம்தான்..”
“அதற்காக அவர்களைக் கோபிக்காதே. என்மேல் இருந்த அன்பில் தான் அப்படி ஆத்திரப்பட்டார்கள். மற்றும்படி நல்லவர்கள். விட்டால் இப்போது உனக்காக என்னைத்தான் தூக்கிப்போட்டு மிதிப்பார்கள்.” என்றவனைப் புன்னகையுடன் பார்த்தாள் சித்ரா.
“அவர்கள் மேல் இவ்வளவு அன்பு இருக்கிறது. பிறகும் எதற்கு வீம்புக்கு கதைக்காமல் இருக்கிறீர்கள்?”
“அன்பு.. அது அவர்கள் மேல் நிறையவே இருக்கிறது. ஆனால் நீ சொன்னதுபோல, நான் செய்வது பிழையாக இருந்தால் அதை எனக்குப் புரிய வைப்பதை விட்டுவிட்டு என்னை விட்டு விலக நினைத்தார்களே என்கிற வருத்தம் தான். வேறொன்றுமில்லை.” என்றவனைப் பாய்ந்துவந்து கட்டிக் கொண்டனர் நண்பர்கள் இருவரும்.
“சாரி மச்சான்..”
“சாரிடா..”
கீழே வேலைகளை முடித்துக்கொண்டு மேலே வந்தவர்களுக்கு ரஞ்சனும் சித்ராவும் பேசிக்கொண்டது காதில் விழுந்ததில், தங்களின் பிழையும் அவனின் கோபத்துக்கான காரணமும் புரிந்தது.
“டேய் முதலில் விடுங்கடா என்னை. மூச்சு முட்டுகிறது..” என்று அவர்களிடம் விடுபடப் போராடினான் ரஞ்சன்.
ஒருவரை ஒருவர் கட்டிக்கொண்டு நின்ற நண்பர்கள் மூவரையும் பார்க்கச் சித்ராவின் மனம் நிறைந்துபோனது.
“இவ்வளவு நாட்களும் பெரிய கோபக்காரன் போல் நடித்தாயேடா..” என்றபடி, சுகந்தனும் ஜீவனும் ரஞ்சனின் வயிற்றில் விளையாட்டுக்குக் குத்தினர்.
“டேய் விடுங்கடா.. வலிக்குது..” முகம் முழுவதும் நிறைந்த சிரிப்புடன் அவர்களிடம் இருந்து பொய்யாக விடுபடப் போராடிய கணவனைப் பார்க்கப் பார்க்கத் தெவிட்டவில்லை சித்ராவுக்கு.
ரஞ்சனை அவளுக்குக் கிட்டத்தட்ட நான்கு வருடங்களுக்கும் மேலாகத் தெரியும். அவ்வளவு நாட்களில் இன்றுதான் அவனை அவள் இப்படிப் பார்க்கிறாள்.
நீண்ட நாட்களுக்குப் பிறகு நண்பன் பேசிவிட்ட குதூகலத்தில் அவனைப் போட்டுப் பிரட்டி எடுத்தவர்களைப் பொய்யாக முறைத்து, “போதும் போதும் நிறுத்துங்கள்! விட்டால் என் புருஷனை ஒரு வழி பண்ணிவிடுவீர்கள் போலவே! தள்ளுங்கள்!” என்ற சித்ராவின் அதட்டலில் சட்டென விலகினர் சுகந்தனும் ஜீவனும்.
“அது! அந்தப் பயம் எப்போதும் இருக்கவேண்டும். இல்லையானால் உங்கள் இருவரையும் மாடியிலிருந்து தள்ளிவிடுவேன்!”
ரஞ்சன் அவளின் பேச்சை ரசித்துச் சிரிக்க, நண்பர்களோ அவனை முறைத்தனர்.
“எங்கேருந்துடா இப்படி ஒரு தீவிரவாதியைப் பிடித்தாய். அன்றானால் கத்தியால் குத்திக் குடலை உருவிவிடுவேன் என்கிறாள் இன்றானால் மாடியிலிருந்து தள்ளிவிடுவேன் என்கிறாள். எங்கள் உயிருக்கு இங்கே பாதுகாப்பு இல்லை. டேய் சுகந்தா, முதல் வேலையாக யானைப்படை பூனைப்படை எல்லாவற்றையும் எங்களுக்குப் பாதுகாப்பாகப் போடவேண்டும்.” என்று கொஞ்ச நேரம் சலசலத்துவிட்டு விடைபெற்றனர் நண்பர்கள்.
மதியமாகிவிட்டதில் சந்தானம் தன் கடைக்குச் சாப்பிட வரும்படி அழைத்தார்.
“இன்று வருவது சிரமம் மாமா. கொஞ்சம் வேலைகள் இருக்கிறது. நான் நகுலனை அனுப்புகிறேன். உணவைக் கொடுத்துவிடுங்கள்.” என்ற ரஞ்சன், நகுலனை அழைத்து, “அங்கே மாமாவின் கடைக்குப்போய் உணவை எடுத்துவந்து கீழே என் அறையில் வைத்துவிடு. நாங்கள் வருகிறோம்.” என்றான்.
“சரி அண்ணா..” என்றபடி அவன் செல்லவும் வீட்டுக் கதவை அடைத்தான் ரஞ்சன்.
“ஏன் கீழே உணவை வைக்கச் சொன்னீர்கள்?” என்று கேட்டவளிடம்,
“எல்லாம் காரணமாகத்தான்..” என்றவன், கணவன் பார்வையுடன் மனைவியை நெருங்கினான்.
முகம் சிவக்கத் தடுமாற்றத்துடன் பின்னால் நகர்ந்தவள், “இ..இது கடை…” என்று மெல்ல முணுமுணுத்தாள்.
“கடை கீழே இருக்கிறது. இது வீடு.” என்றவன் மேலும் முன்னேறினான்.
“யா..ராவது..”
“வரமாட்டார்கள்..” என்று முடித்துவைத்தவன், அவளையும் தன் கைவளைவுக்குள் கொண்டுவந்தான்.
“சாப்பாடு வந்துவிடும்..”
“வரட்டும்..”
“சூடு ஆறிவிடப் போகிறது..” எதையாவது சொல்லிச் சமாளிக்க எண்ணி அவள் வாயை விட,
“அது ஆறினால் திரும்பச் சூடாக்கிக் கொள்ளலாம்..” என்றவன், அவளைத் தன் வசமாக்கிக் கொண்டான்.
அதன் பிறகான நாட்கள் எப்படிக் கடந்தன என்று தெரியாமலேயே கடந்தன. அந்தளவுக்கு சித்ராவுக்குச் சொர்க்கத்தையே காட்டினான் அவள் கணவன்!
கொஞ்சினான், கூடினான், குலாவினான், கட்டியணைத்தான். இந்த உலகையே அவளை மறக்க வைத்தான். அவனையே முழுவதுமாக அவள் சிந்தனையில் நிரப்ப வைத்தான். அவர்கள் மட்டுமே தனித்திருக்கும் ஒவ்வொரு தருணத்திலும் சற்றும் அவளை விட்டு விலகாது அவளைச் சுற்றிச் சுற்றியே வந்தான்.
என்னதான் அவன் உருகினாலும் அவள் மேல் உயிரையே வைத்திருப்பதாகக் காட்டினாலும் அவனுடைய அன்பில் லயிக்கவோ முற்றாக உருகவோ அவளால் முடியவில்லை.
மனதில் ஒரு பாரம், அழுத்தம் அவள் நெஞ்சை அடைத்துக்கொண்டே இருந்தது. அவள் ஒற்றைக் காலில் நின்று கட்டியிராவிட்டால் இதே வாழ்க்கையை அவன் இன்னொரு பெண்ணுடன் வாழ்ந்திருப்பானே! முதலே அவளை அவன் திருமணம் செய்திருக்க குழந்தை அவளை விட்டுப் போயிருக்காதே!
இன்று இவ்வளவு நேசம் காட்டுபவன் அன்று அவளை ஒதுக்கத்தானே நினைத்தான் என்கிற நினைவுகளை அவளால் ஒதுக்கவே முடியவில்லை.
அதையெல்லாம் மறந்துவிட்டு அவனுடன் உயிராக ஒன்றத்தான் அவளுமே பிரியப்பட்டாள். ஆனால், அது முடியாமல் நெஞ்சுக்குள் செல்லரிப்பது போன்று பானகத் துரும்பாய் இந்த நினைவுகள் அவளை அரித்துக் கொண்டிருந்தன.
சிலவேளைகளில், தன் வாழ்க்கையைப் பற்றிய சுயபரிசோதனையில் ஆழ்ந்திருப்பவளின் சுளித்திருக்கும் புருவங்களை நீவியபடி, “என்னமா?” என்று அவன் உருகிப்போய்க் கேட்கையில் அவளால் அவன் நெஞ்சுக் கூட்டுக்குள் ஒன்றத்தான் முடிந்ததே தவிர, மனதில் உள்ளதைச் சொல்ல முடிந்ததே இல்லை.
“இங்கே பார் யாழி. நடந்ததை எல்லாம் முடிந்தவை என்று நினைத்து ஒதுக்கப் பழகு. இப்போது நாம் வாழும் வாழ்க்கைதான் நிஜம். அதை சந்தோசமாக வாழலாம். நாம் இருவருமே நிறையப் பட்டுவிட்டோம். அதுவே போதும்டா…” அவள் நடந்தவைகளை நினைத்து வருந்துகிறாளோ என்று எண்ணிச் சொன்னவன், தானும் அப்படியே நடந்துகொண்டான்.
அவன் இருக்கையில் அடங்கியிருக்கும் நினைவுகள் அனைத்தும் அவன் விலகிய நொடியில் விஸ்வரூபம் எடுத்து வந்து அவளை மிரட்டின!
ஆனாலும், அவன் ஆசையாக வந்து அணைக்கையில் அவளும் அவனுக்குள் கரைந்துதான் போனாள். அவனைத் தவிர்க்கவோ தடுக்கவோ அவளால் முடிந்ததே இல்லை.
சில நாட்களில் அவளுடன் கூடிவிட்டு அவன் பிரிகையில் இதற்காக மட்டுமா திருமணம் செய்துகொண்டோம் என்கிற வெறுப்புத் தோன்றிற்று!
சற்றும் உரிமை இல்லாத அன்று இணைகையில் சற்றேனும் முணுமுணுக்காத மனதோ இன்று அனைத்து உரிமைகள் இருந்து இணைந்தபோதும் தவியாய்த் தவித்தது.
அவனை விட்டு விலகவும் முடியாமல் அவனோடு முழுமனதாய் ஒன்றவும் முடியாமல் தன் மனதை அவனிடம் சொல்லி அவன் சந்தோசத்தைக் கெடுக்கவும் விரும்பாமல் தன்னோடு தானே போராடிப் போராடியே களைத்துப் போனாள் சித்ரா.
என்னதான் மனதில் சலிப்பு, வெறுப்பு, ஒட்டாமை, குறுகுறுப்பு இருந்தாலும் அவை எதையும் அவனிடம் காட்டவில்லை. காட்ட முடியவில்லை என்பதுதான் உண்மை!
அந்தளவுக்கு அவளையும் சந்தோசமாக வைத்துத் தானும் சந்தோசமாக இருந்தான் ரஞ்சன்.
இவ்வளவு நாட்களும் வேலை, வாழ்க்கையில் முன்னேறவேண்டும், கடமை என்று ஓடிய கணவன் இனியாவது மகிழ்ச்சியாக இருக்கட்டும் என்று எண்ணியவள், தன் உள்ளக் குமுறல்களை மறைத்துக் கொண்டாள்.
ஆனாலும், சிலவேளைகளில் அவன் அவளைக் கொஞ்சுகையில் இவன் நடிக்கிறானா அல்லது உண்மையாகப் பாசம் காட்டுகிறானா என்கிற எரிச்சலும் தோன்றியது.
அன்று கணவனும் மனைவியும் மதிய உணவை முடித்தவர்கள் சோபாவில் ஓய்வாக அமர்ந்திருந்தார்கள். ரஞ்சன் தொலைக்காட்சியில் மூழ்கியிருக்க, சித்ரா கணவனுக்காக ஆப்பிளைச் சிறுசிறு துண்டங்களாக வெட்டிக் கொண்டிருந்தாள்.
முழுக் கவனமும் அதில் இல்லாமல் தொலைக்காட்சியிலும் பார்வையைப் பதித்தபடி வெட்டிக் கொண்டிருந்தவளின் கையில் கத்தி இலேசாகக் கீறிவிடவே, “ஸ்ஸ்ஸ்..” என்றபடி கையை உதறினாள் சித்ரா.
“என்ன.. என்ன யாழி?” என்று பதறித் திரும்பியவனுக்கு, அவள் கையிலிருந்து கசிந்த இரத்தத்தைக் கண்டதும் கோபம் வந்தது.
“உன்னை யாருடி ஆப்பிளை வெட்டச் சொன்னது. நான் என்ன பல்லில்லாத கிழவனா? அப்படியே தந்திருக்கக் கடித்துச் சாப்பிட்டு இருப்பேனே..” அவளைக் கடிந்தவன், வெட்டுப்பட்ட அவள் விரலை சட்டென வாயில் வைத்து உறிஞ்சினான்.
சில நாட்களாகவே இனம் தெரியா உணர்வுகளால் மனதளவில் அலைக்கழிந்து கொண்டிருந்தவள், அவன் காட்டிய அக்கறையிலும் பாசத்திலும் திடீரென வெடித்தாள்.
தன் விரலை அவன் வாயிலிருந்து இழுத்துக் கொண்டு, “விடுங்கள்! போதும் உங்கள் நடிப்பு! இன்னும் எத்தனை நாட்களுக்குப் பாசம் காட்டுவதுபோல் நடிக்கப் போகிறீர்கள்?” என்று சீறிப் பாய்ந்தாள் சித்ரா.
முதலில் அதிர்ந்துபோய்ப் பார்த்த ரஞ்சனுக்கு அவள் சொன்னவை புரிய நெஞ்சுக்குள் வலித்தது.
“நடிப்பா? நானா? என்ன சொல்கிறாய் யாழி?”
“சும்மா சும்மா யாழி என்று கூப்பிடாதீர்கள். முதலும் இப்படிக் கூப்பிட்டுக் கூப்பிட்டுத்தானே என்னைக் காதலிப்பதுபோல் நடித்து ஏமாற்றினீர்கள். நானும் உங்களை நம்பினேனே. இப்போது எதற்கு பெரிய காதல் கணவன் போல் வேஷம் போடுகிறீர்கள்?”
நீண்ட நாள் மனக்குமுறலை அவள் கொட்டியபோது, ரஞ்சனோ பேசுவது அவள்தானா என்று நம்ப முடியாமல் அவளை வெறித்தான்.
சட்டென எழுந்தவன் ஒரு பிளாஸ்டரை எடுத்துவந்து அதை ஓட்டுவதற்காக அவள் கரத்தைப் பற்ற, “தேவையில்லை! என்னைப் பார்த்துக்கொள்ள எனக்குத் தெரியும்!” என்றாள் சித்ரா.
கோபத்தோடு ரஞ்சன் அவளை முறைக்கவும் அவள் கை தானாக நீண்டது. எதுவும் சொல்லாமல் விரலில் பிளாஸ்டரை ஒட்டி விட்டவனின் முகமோ பாறையென இறுகிப் போயிருந்தது.
அவளுக்கு எதிர் சோபாவில் அமர்ந்து, “சொல்லு, நீ இப்படிக் கோபப் படும் அளவுக்கு நான் என்ன செய்தேன்?” என்று கேட்டான்.
“ஏன்? நீங்கள் ஒன்றுமே செய்ததே இல்லையா? அவ்வளவு நல்லவரா?” என்று இடக்காகக் கேட்டாள்.
ஒருமுறை விழிகளை இறுக மூடித்திறந்தான் ரஞ்சன்.
“அதெல்லாம் முடிந்த கதை, பழையது என்று அன்று சொன்னேனே..”
“நீங்கள் சொன்னால் சரியா? உங்கள் துரோகத்தால் பாதிக்கப்பட்டவள் நான். என்னால் எப்படி அதையெல்லாம் ஒதுக்க முடியும்? அல்லது இலகுவாக ஒதுக்கும் எதையுமா நீங்கள் செய்தீர்கள்?”
“அப்போ.. அதையெல்லாம் மனதில் வைத்துக்கொண்டுதான் நீ இவ்வளவு நாளும் என்னுடன் வாழ்ந்திருக்கிறாய். அதாவது நடித்திருக்கிறாய்.” என்று அவன் சொன்னபோது, சித்ரா வெகுண்டு எழுந்துவிட்டாள்.
“யாரைப் பார்த்து நடிக்கிறேன் என்கிறீர்கள்? என்னையா? அப்படிச் சொல்ல உங்களுக்கே நா கூசவில்லையா? நீங்கள்தான் நடிப்பவர். அன்று காதலனாக நடித்துவிட்டு என்னைக் கைகழுவ நினைத்தவர் இன்று கணவனாக வாழ்ந்துவிட்டு என்னை விட்டு ஓடமாட்டீர்கள் என்று என்ன நிச்சயம்?” என்று ஆவேசத்தோடு கேட்டவளை அதிர்ச்சியோடு பார்த்தான் ரஞ்சன்.


