மனைவியை அதிர்ந்துபோய் பார்த்தான் ரஞ்சன். அவளின் கேள்விகள் சாட்டைகளாய் மாறி நெஞ்சில் கோடிழுத்தன.
இன்று இப்படிக் கேட்பவள் இவ்வளவு நாளும் அவன் அணைக்கையில் உருகியதும் மார்போடு ஒன்றியதும் பொய்யா? அவனைப் பார்த்துப் பார்த்துக் கவனித்துக்கொண்டாளே.. அதெல்லாம்…?
இல்லையே.. அதெல்லாம் பொய்யில்லையே!
அவள் விழிகளில் கசிந்த காதல், அவனைக் கவனித்துக் கொள்வதில் காட்டிய கருணை, அவன் மீது அவள் கொண்ட அக்கறை, நேசம், பாசம் இப்படி எதுவும் பொய்யில்லையே!
பிறகும் ஏன் இப்படிப் பேசுகிறாள்?
அதுவும், ‘கணவனாக வாழ்ந்துவிட்டு என்னை விட்டு ஓடமாட்டீர்கள் என்று என்ன நிச்சயம்?’ என்று அவள் கேட்டதை அவனால் ஜீரணிக்கவே முடியவில்லை.
காதலித்துவிட்டு சந்தர்ப்ப சூழ்நிலைகளால் பிரிவதும் கட்டிய மனைவியைக் கைவிடுவதும் ஒன்றா?
இவ்வளவு நாளும் அவன்மீது நம்பிக்கை இல்லாமல், எப்போது என்னைக் கைவிட்டு விடுவானோ என்கிற பயத்துடன்தான் அவனோடு குடும்பம் நடத்தினாளா?
அவன் மனவோட்டம் அறியாமல் தன் மனதில் இருந்த அத்தனை ஆத்திரங்களையும் குமுறல்களையும் சீறிப்பாயும் எரிமலையெனக் கொட்டிக் கொண்டிருந்தாள் சித்ரா.
“உங்களை மலைபோல நம்பினேனே, என் நம்பிக்கையைக் கொன்ற துரோகி நீங்கள்! உயிராய் உங்களைக் காதலித்தவளை ஏமாற்ற நினைத்த ஏமாற்றுக்காரர்! செய்வதை எல்லாம் செய்துவிட்டு இன்று வந்து நல்லபிள்ளைக்கு நடிக்கும் உங்களுக்கு என்னைப் பார்த்து நடிக்கிறாயா என்று கேட்க எவ்வளவு தைரியம் இருக்கவேண்டும்?”
அவள் கேட்ட ஒவ்வொரு கேள்வியும் கூர் ஈட்டிகளாய் வந்து அவன் நெஞ்சைப் பதம் பார்த்தன.
தாய் பொறுப்பில்லாதவன், சுயநலக்காரன், பேராசைக்காரன் என்கிற பட்டங்களை வழங்கினார் என்றால் தாரம் நம்பிக்கைத் துரோகி, ஏமாற்றுக்காரன், நடிப்பவன் என்கிற பட்டங்களை வழங்குகிறாள்.
இன்னும் என்னவெல்லாம் அவனுக்காகக் காத்திருக்கிறது?
“உன்னை நான் வருத்தியிருக்கிறேன் தான். ஆனால், அதெல்லாம் நம் திருமணத்துக்கு முதல் நடந்தவைகள். இப்போது உனக்கு என்ன குறை வைத்தேன்? இந்த மூன்று மாதங்களாக நாம் மகிழ்ச்சியாக வாழவில்லையா? அதை எப்படி உன்னால் நடிப்பு என்று சொல்ல முடிந்தது.” வறண்ட குரலில் தவிப்போடு கேட்டான் ரஞ்சன்.
உண்மைதானே என்று தோன்றினாலும் அதை அவனிடம் ஒத்துக்கொள்ள மனம் வரவில்லை அவளுக்கு.
“உங்களோடு போராடி உங்களை நான் திருமணம் செய்துகொண்டதால் தானே இந்த வாழ்க்கை எனக்குக் கிடைத்தது. இல்லையானால் என் கதி என்ன? மானம் மரியாதையை இழந்து நின்றிருப்பேனே. ஆனால் நீங்கள்? இன்னொருத்தியைக் கட்டி அவளுடன் சந்தோசமாக இதே வாழ்க்கையை வாழ்ந்துதானே இருப்பீர்கள்?” என்று குமுறியவளை இயலாமையுடன் பார்த்தான் ரஞ்சன்.
சந்தோசமாக வாழ்ந்திருப்பனா என்றால் நிச்சயமாக இல்லைதான். ஆனால் இன்னொருத்தியை நிச்சயம் கட்டித்தானே இருப்பான். அவன் மனதே அவனைச் சுட்டது.
“இல்லை சித்ரா…
“என்ன இல்லை? எங்கே என் முகத்தைப் பார்த்துச் சொல்லுங்கள், இன்னொருத்தியைக் கட்டியிருக்க மாட்டேன். உன்னிடத்தில் வேறு ஒருத்தியை நிறுத்தியிருக்க மாட்டேன் என்று.”
அவனைப் பேசவிடாது ஆணித்தரமாய் அவள் கேட்டபோது, அதிலிருந்த உண்மை அவன் வாயை அடைத்தது.
“சொல்ல முடியாது இல்லையா? இப்போது புரிகிறதா, நீங்கள் எவளையும் உங்கள் மனைவியாக்கி இருப்பீர்கள். அவளுடன் வாழ்ந்தும் இருப்பீர்கள். ஆனால் நான்.. எனக்கு? நீங்கள் மட்டும் தான். உங்களைத் தவிர வேறு எவனையும் உங்கள் இடத்தில் வைத்துப் பார்க்க என்னால் முடியாது! உங்களைக் கட்டியிராவிட்டால் வாழ்க்கையை இழந்து நின்றிருப்பேனே.”
“அப்படி உன் வாழ்க்கையை இழப்பாய் என்று நான் நினைக்கவில்லை. இந்தக் காலத்துப் பெண்ணான நீ சிறிது நாட்களில் என்னை மறந்து இன்னொரு வாழ்க்கையைத் தேடிக்கொள்வாய் என்றுதான் நினைத்தேன்.”
“அதென்ன இந்தக் காலத்துப் பெண்? எந்தக் காலத்துப் பெண்ணாக இருந்தாலும் அவள் மனது என்றுமே ஒன்றுதான்.” என்று சிடுசிடுத்தவள்,
“உங்களைப் போல, ஒருத்தி இல்லாவிட்டால் இன்னொருத்தி என்று ஆட்களை மாற்றிக்கொண்டே இருப்பேன் என்று நினைத்தீர்களா?” என்று சீறினாள்.
“நானும் அப்படியானவன் அல்ல. உன்னையும் அப்படி நினைக்கவில்லை!” என்றான் அவன் அழுத்தமான குரலில்.
இதழ்கள் ஏளனமாக வளைய சித்ரா அவனைப் பார்க்க, “என்னைத் தூக்கி எறிந்துவிட்டு இன்னொருவனைக் கட்டி எனக்கு முன்னால் வாழ்ந்து காட்டுவாய் என்றுதான் நினைத்தேன். அதோடு, ஒரு காதல் தோல்வியாலேயே யாரினதும் வாழ்க்கை அழிந்து விடுவதில்லை.” என்றான் கணவன்.
“அதனால்தான் என்னைக் காதலிப்பதாகப் பொய் சொன்னீர்களா? அதாவது நீங்கள் ஏமாற்றினாலும் என் வாழ்க்கை அழிந்துவிடாது என்று தெரிந்ததால் அப்படிச் செய்தீர்கள் போல.” இகழ்ச்சியோடு கேட்டாள் சித்ரா.
“திரும்பத் திரும்ப அதையே சொல்லி எத்தனை தடவைதான் குத்திக் காட்டுவாய் யாழி?”
“நானென்ன பொய்யா சொல்கிறேன். நீங்கள் செய்ததைத் தானே சொல்கிறேன். அதற்கே உங்களுக்கு வலிக்கிறதே, அன்று கடையில் வைத்து எவ்வளவு உதாசீனமாகப் பேசினீர்கள். எவ்வளவு அலட்சியம் காட்டினீர்கள். அப்போது எனக்கு எப்படி இருந்திருக்கும். அன்றிலிருந்து இன்றுவரை அதையெல்லாம் மறக்கவும் முடியாமல் உங்களை வெறுக்கவும் முடியாமல் மனதுக்குள் வைத்துக்கொண்டு மருகுகிறேனே, எனக்கு ஏன் இந்த நிலை? எல்லாம் உங்களால் தானே.”
உண்மைதானே! பூவைப்போல இருந்தவளை புயலாக மாற்றிய பெருமை அவனைத்தானே சேரும்!
“என்னால் தான் நீ இவ்வளவு கஷ்டங்களையும் அனுபவித்தாய். நான் பேசியது நடந்துகொண்டது எல்லாமே பிழைதான். நீ சொன்னதுபோல நிச்சயம் நான் இன்னொருத்தியைக் கட்டியிருப்பேன் தான். ஆனால், உன்னோடு வாழ்வது போல என்னால் ஒன்றி வாழ்ந்திருக்கவே முடியாது. அதை நினைக்கவே கசக்கிறது. நீ இல்லாவிட்டால் என் வாழ்க்கையே நரகமாகியிருக்கும்.” உணர்ந்து சொன்னான் ரஞ்சன்.
அதைக் கேட்டவளின் விழிகள் கலங்கின.
“இன்று வந்து நீயில்லாவிட்டால் என் வாழ்க்கை நரகம் என்று சொல்கிறீர்களே, இதனால் இனி என்ன பயன்? நடந்தவைகளை மாற்றத்தான் முடியுமா அல்லது நான் இழந்தவைகளை உங்களால் திருப்பித் தரத்தான் முடியுமா?” என்று வலியும் வேதனையும் நிறைந்த குரலில் சொன்னவளைப் புரியாமல் பார்த்தான் ரஞ்சன்.
ஏன் இவள் இப்படிச் சொல்கிறாள்? திருமணத்துக்கு முதலே தவறிழைத்தார்கள் என்றாலும் அதை அவனும் அவளும்தானே செய்தார்கள்.
அவளின் பூடகப் பேச்சின் பொருள் புரியாமல், “அப்படி எதைத்தான் இழந்தாய் நீ?” என்று கேட்டான் ரஞ்சன்.
“சொன்னால் மட்டும் திருப்பித் தரவா போகிறீர்கள்? அல்லது உங்களால் அதை மீட்டுத்தான் தரமுடியுமா?” ஆத்திரத்துடன் அழுகையும் வந்தது அவளுக்கு.
என்னவென்று சொல்லாமல் ஆத்திரப்பட்டால் அவன் என்னதான் செய்ய முடியும் என்று கோபம் வந்தாலும், அவள் அழுவது மனதைப் பிசைய, “ப்ச் யாழி! இப்போது எதற்கு அழுகிறாய்? என் மீது கோபம் என்றால் என்னோடு சண்டையைப் பிடி. இரண்டு அடி வேண்டுமானாலும் அடி. அதைவிட்டுவிட்டு இப்படி அழாதே!” என்றான் மனைவியைத் தேற்றும் விதமாக.
“நீங்கள் ஒன்றும் பாசம் உள்ளவர்போல் நடிக்கத் தேவையில்லை.”
திரும்பவும் அதே பேச்சா, இதை விடவே மாட்டாளா என்றிருந்தது அவனுக்கு.
அவள் மனதில் ஏதோ நெருடல் இருக்கிறது என்பதை அவன் முதலே அறிவான் தான். ஆனால், இவ்வளவு விசயங்களை மனதுக்குள் வைத்துக் குடைந்திருக்கிறாள் என்பது அவன் எதிர்பாராதது.
இல்லறத்தின் அடிப்படையே ஒருவர் மீது மற்றவர் வைக்கும் நம்பிக்கை தானே. அந்த நம்பிக்கை இன்றி, மனதில் இவ்வளவு குமுறல்களையும் சுமந்துகொண்டு நிம்மதியற்ற வாழ்க்கையை அவனுடன் வாழ்ந்திருக்கிறாள் என்கிற எண்ணமே அவனைக் கொன்றது.
இனி வெளிப்படையாகப் பேசாமல் எதுவும் தீராது என்று எண்ணியவன் தன்னை மனைவிக்கு விளக்க முயன்றான்.
“ஆமாம்! நீ சொன்னதுபோல நம் திருமணத்துக்கு முதல் உன் நம்பிக்கைக்குப் பாத்திரமாக நான் நடந்து கொள்ளவில்லைதான்.” என்று ஆரம்பித்தான் ரஞ்சன்.
கணவன் அதை ஒத்துக்கொள்வான் என்று எதிர்பாராதவள் அதிர்ந்துபோய்ப் பார்த்தாள்.
அவன் முகத்தில் வருத்தமான ஒரு புன்னகை வந்துபோனது.
“அதேபோல சாதனாவின் முகத்தில் கரியைப் பூசவே உன்னைக் காதலிப்பதாகவும் பொய் சொன்னேன்..”
வலியைச் சுமந்து நின்ற விழிகளைப் பார்க்கமுடியாமல் பார்வையைத் திருப்பிக் கொண்டான் ரஞ்சன்.
“நீ தாங்கமாட்டாய் என்று தெரிந்துதான் இதையெல்லாம் உன்னிடம் சொல்லாமல் இருந்தேன். என் அன்பில், நான் காட்டும் பாசத்தில் நடந்தவைகளை எல்லாம் மறந்துவிடுவாய் என்று எதிர்பார்த்தேன். ஆனால்..” என்று இழுத்தவன், “எல்லாவற்றிலுமே நான் தோற்றுத்தான் போனேன்.” என்றான் வறண்ட குரலில்.
நான் மட்டும் எதில் வென்றேன்? எல்லாவற்றிலும்தான் தோற்றுப் போனேன் என்று எண்ணியவளின் முகத்தில் விரக்தியின் சாயல் படர்ந்தது.
“அவரவர்க்கு அவரவர் நியாயம். அப்படித்தான் என் விசயமும். எனக்கு என் அப்பாவும் அவர் ஆசைகளும் முக்கியமாகப் பட்டது. அவர் உயிருடன் இருந்திருந்தால் கூட அவரின் பேச்சுக்கு இவ்வளவு மதிப்புக் கொடுத்திருப்பேனா தெரியாது. அவர் இல்லாததாலேயே அவரின் ஆசைகளை எப்பாடு பட்டாவது நிறைவேற்ற வேண்டும் என்று நினைத்தேன். அதனால் மற்றவைகளைப் பற்றி, ஏன் என் மனதைப் பற்றிக்கூட நான் யோசித்தது இல்லை. அவரைப் பற்றி உனக்குத் தெரியாது சித்ரா. அவ்வளவு அன்பான மனிதர். அன்பு மட்டுமில்லை பண்பு பாசம் என்று.. உறவுகளை உயிராய் மதிக்கும் மனிதர்.” என்றவனின் விழிகள் ஜன்னல் வழியாகத் தெரிந்த வானை வெறித்தன.
முதன் முறையாகத் தன்னிடம் மனம் திறக்கும் கணவனை விழி விரியப் பார்த்தாள் சித்ரா.
ரஞ்சனுக்கும் அதுநாள் வரை மனதில் பூட்டிவைத்திருந்த சுமைகளை, ஏக்கங்களைச் சொல்ல ஒரு இடம் கிடைத்ததுபோன்று அனைத்தையும் கொட்டத் துவங்கினான்.
“எல்லோருக்கும் அவர்களது அப்பாதான் முதல் ஹீரோ. எனக்கும் அப்படித்தான். அவரை அவ்வளவு பிடிக்கும். மோட்டார் வண்டி ஓட்டக் கற்றுக் கொண்டது, வைத்தியராக ஆசைப்பட்டது, ஏழைகளுக்கு உதவ நினைத்தது, அம்மா தங்கையை நல்ல நிலையில் வைக்க ஆசைப்பட்டது, அவர் சொந்தங்களை என்றும் எங்களுடனேயே வைத்திருக்க நினைத்தது, நித்தியின் திருமணம், என் திருமணம் என்று எல்லாமே அவர் விருப்பம் தான். ஆனால்.. இதில் நித்தியின் திருமணத்தைத் தவிர எதையுமே என்னால் செய்ய முடியவே இல்லை.” என்றவனின் விழிகள் பனித்திருந்தனவோ..
அவன் மனது புரிந்தாலும், இன்னும் சதனாவை மணக்காததை எண்ணி வருந்துகிறானோ என்று நினைத்த மாத்திரத்தில் அவள் இதயத்தை கூர் ஈட்டியொன்று சுருக்கென்று தைத்தது.
“உங்கள் அப்பாவின்மேல் இவ்வளவு பாசமும் மரியாதையும் வைத்திருப்பவர் என்னை விரும்புவதாகப் பொய் சொல்லியிருக்கக் கூடாது. என்னுடன் பொய்யாகப் பழகியிருக்கக் கூடாது. அதெல்லாம் நீங்கள் செய்த தவறுகள். அதனால்தான் இன்று அவர் ஆசைப்பட்ட எதையும் உங்களால் செய்யமுடியாமல் போனது.”
மனைவியின் பேச்சில் இருந்த நியாயத்தைப் புரிந்துகொண்டான் போலும், சிலநொடிகள் அமைதியாக இருந்தான் ரஞ்சன்.
“நீ சொல்வது உண்மைதான். ஆனால், மனதும் மூளையும் என்றுமே ஒன்றோடு ஒன்று பொருந்திப் போவதே இல்லை. அவையிரண்டும் மிகப் பெரிய எதிரிகள். மனம் ஒன்றைக் கேட்கும் மூளை ஒன்றைச் சொல்லும். இரண்டுக்கும் இடையில் சிக்கித் தவிப்பது இருக்கிறதே…” என்றவன் நெடிய மூச்சு ஒன்றை இழுத்துவிட்டான்.
அவன் மூளை சாதனாவைக் கேட்க மனம் சித்ராவைக் கேட்டதாமா என்று அவள் குழம்ப, கணவனோ விட்ட இடத்தில் இருந்து தன் பேச்சைத் தொடர்ந்தான்.
“அப்பா இறக்கும்வரை அவர்தான் அந்தக் குடும்பத்தையே கட்டிக் காத்துவந்தார். அதேபோல அந்தக் குடும்பத்தின் அடுத்த தலைமுறையில் முதல் பிறந்தவன் நான். அவர் காலத்துக்குப் பிறகும் உறவுகள் பிரியாமல் இருக்கவேண்டும் என்பதற்காக, ‘எனக்குப் பிறகு இந்தக் கூட்டுக் குடும்பம் குலைந்து விடாமல் நீதான் கட்டிக்காக்க வேண்டும். அது உன் பொறுப்பு…’ என்று என்னிடம் சொல்லிச் சொல்லியே வளர்த்தார். அதேபோலத்தான் எனக்கு சாதனா நித்திக்கு நவீன் என்பதும். சிறு வயதில் இருந்து அதைக் கேட்டுக்கேட்டு வளர்ந்ததாலோ என்னவோ பசுமரத்தாணியாக என் மனதில் ஆழப்பதிந்த விஷயங்கள் அவை. ஆனால் அவர் இறந்ததுமே எல்லாமே தலைகீழாக மாறிப்போனது.” என்றவன் சற்று நேரம் அமைதியானான்.
“உன்னால் என்னைப் புரிந்துகொள்ள முடியுமா தெரியவில்லை. பிறந்ததில் இருந்து இன்றுவரை உன்னைச் சீராட்டிப் பாராட்டி வளர்க்க உன் அம்மா அப்பா இருக்கிறார்கள். உனக்கு ஒரு அநீதி நடந்தபோது, அதைத் தட்டிக் கேட்கவும், உனக்குத் துணையாக நான் இருக்கிறேன் என்று சொல்வதற்கும் உன் அப்பா இருந்தார். ஆனால் எனக்கு?
“பதினெட்டு வயதுவரை நானும் உன்னைப் போலத்தான். நான்தான் மொத்தக் குடும்பத்தின் இளவரசன். ஆனால் அதன் பிறகு? திடீரென்று எல்லாமே என் தலையில் விழுந்தது போலிருந்தது. சொந்தம் என்று நம்பியவர்கள் எலோரும் அந்நியமாகிப் போனார்கள். அவர்கள் எனக்குச் செய்தது அனைத்தும் நம்பிக்கைத் துரோகம். அதோடு, அதுநாள் வரை என்னையே சுற்றிச் சுற்றி வந்த ஒருத்தி என்னைத் தூக்கி எறிந்தது என் சுயமரியாதைக்கும், தன்மானத்துக்கும விழுந்த பெரிய அடி. என்னை அவமானப் படுத்தியவளைக் கட்டியே தீரவேண்டும், என்னைத் தூக்கி எறிந்தவர்களை மீண்டும் என்னிடம் வரவைக்கவேண்டும் என்று அப்போதே முடிவு செய்தேன். அப்படி அவர்களை என்னிடம் வரவைக்க வேண்டுமானால் நான் முன்னேறவேண்டும். ” என்றவனின் முகம், அன்றைய நினைவுகளில் பாறையாக இறுகிப் போயிருந்தது.
“அப்படி முன்னேற என்ன செய்வது? ஒன்றுமே தெரியவில்லை. வழி காட்டவோ ஆலோசனை சொல்லவோ யாருமின்றி, ஏன் என் மனதில் உள்ளதைப் பகிரக்கூட எவருமின்றித் தவித்திருக்கிறேன். எல்லாவற்றையும் முட்டிமோதி நானாக வெளிவரவேண்டிய கட்டாயம். ஆசையாசையாக எடுத்துப் படித்த படிப்பைக் கூட விட்டேன். படிக்கத்தான் முடியவில்லை என்றால் ஒரு கௌரவமான வேலைகூட கிடைக்கவில்லை. ஒரு செருப்புக்கடையில் இன்னொருவரின் காலைப் பிடித்து செருப்பை மாட்டும்போது, கண்டவர்களினதும் காலைப் பிடிக்கும் அளவுக்குக் கேவலமாகப் போனோமா என்று மனதளவில் வெட்கி, வேதனைப்பட்டு கருகியே போனேன். செத்துவிடலாம் போல இருக்கும். அம்மாவையும் நித்தியையும் நினைத்துத்தான் எல்லாவற்றையும் அடக்கிக் கொண்டேன். எந்த வேலையானாலும் குறைந்தது இல்லைதான். ஆனால் அந்தப் பக்குவம் அப்போது இருக்கவில்லை. அவமானமாக இருந்தது. நான் மிகவும் கீழ்த்தரமாகப் போய்விட்டது போல் அசிங்கமாக இருந்தது. என்னோடு படித்த நண்பர்களின் முகத்தைக்கூடப் பார்க்க முடியாத அளவுக்குக் கேவலமாக உணர்ந்தேன். சிரிக்க மறந்து, பேச மறந்து, மற்றவர்களைப் போன்ற இயல்பான வாழ்க்கையை இழந்து மனதாலும் உடலாலும் இறுகிப்போய் இருந்தேன். அப்போதான் நீ எல்லோர் முன்னிலையிலும் என்னை அறைந்தாய்.” என்றவனை அதிர்ச்சியோடு பார்த்தாள் சித்ரா.
காரணம், அதுவரை நேரமும் வருத்தத்தோடு சொல்லிக்கொண்டு இருந்தவனின் முகம் இப்போது கோபத்தில் ஜொலித்தது. அந்தக் கோபம் அவள் மீதா?
“அப்படி நீ என்னை அடிப்பதற்குக் காரணம் என்ன? என்னுடைய ஏழ்மை தானே? உன் கடையில் நான் கூலிக்கு வேலை செய்பவன் என்கிற இளக்காரம் தானே? சாதனா என்னை ஒதுக்கக் காரணம் என்ன? இவனொரு பிச்சைக்காரப் பயல் என்கிற எண்ணம் தானே? என்னைப் பெற்ற அம்மா கூட என்னை நம்பவில்லை. அவரும் தன் கணவர், அவர் வீடு என்று சுயநலமாகத்தானே சிந்தித்தார். அப்படி இந்த உலகம் எனக்குக் கற்றுத் தந்ததே சுயநலத்தை மட்டும்தான். ஏழையாக இருந்தால் ஏறி நின்று மிதிப்போம் என்பதைத்தான்! அதனால் எனக்குள்ளேயே ஒரு வெறி. எப்படியாவது முன்னேறிக் காட்டவேண்டும் என்கிற வெறி. என் இலக்கை நோக்கி நான் ஓடத் தொடங்கியபோது, அதற்குத் தடையாக வரும் யாரையும், எதையும் தூக்கியெறியத் தயாராகத்தான் இருந்தேன். எனக்கு எதைப் பற்றியும் கவலையில்லை. யாராவது என்னைப் பற்றி என் மனதைப் பற்றி யோசித்தார்களா? நான் கஷ்டப் பட்டபோது உதவினார்களா? இல்லையே! பிறகு எதற்கு நான் யாரைப் பற்றியும் யோசிக்கவேண்டும் என்கிற கோபம்!” என்று ஆணித்தரமாகத் தன் பக்க நியாயத்தைச் சொன்னவனை அசந்துபோய்ப் பார்த்தாள் சித்ரா.
வாழ்க்கைப் போராட்டத்தில் வெற்றி பெறவேண்டும் என்கிற துடிப்போடு போராடும் ஒரு வேங்கையாகவே அவள் கண்ணுக்குக் தெரிந்தான் அவன்.
“என்னை அவமதித்த அத்தனை போரையும், உன்னையும் சேர்த்துப் பழிவாங்க வேண்டும் என்கிற வன்மமே என் மனதில் எழுந்தது.” என்று நிமிர்ந்தே சொன்னவனை, அதிர்ச்சியில் விழிவிரியப் பார்த்தாள் சித்ரா.
“அப்போதுதான் கண்ணன் அண்ணா மூலம் அந்தக் கடை வந்தது. எனக்கு முன்னேறக் கிடைத்த ஒருவழியாக அதை எண்ணி, உன் அ..அப்பாவின் கடையில் கிட்டத்தட்டக் காசைக் க..களவெடுத்தேன்..” என்று சொல்லி முடிக்க முதலே அந்தக் கம்பீரமான ஆண்மகனின் தேகம் கூனிக்குறுகிப் போனது.
அவள் முகத்தைப் பார்க்கவே வெட்கி முகத்தைத் திருப்பிக் கொண்டான். விறைத்த தேகமும் இறுகிய கைகளும் அவன் அவமானக் குன்றலில் இருந்து தன்னைக் கட்டுப்படுத்தப் போராடுவது புரிந்தது.
அதுவரை தன் பக்க நியாயத்தை நிமிர்ந்து நின்றே சொன்னவனின் மனம் இப்போது என்ன பாடுபடும் என்பதை உணர்ந்தவள், “ரஞ்சன்..?” என்று அவன் பெயரை உச்சரித்தாள்.
அவளின் அனுதாபத்தையோ, இரக்கத்தையோ விரும்பாதவனின் தேகம் மீண்டும் நிமிர்ந்தது.
“ஆனால், எடுத்த பணத்தை அப்படியே திருப்பியும் போட்டேன். அதற்கான வட்டியை மா.. உன் அப்பாவிடம் கொடுக்க முடியாது என்பதால் தான் உனக்கு நகைகள் வாங்கித்தந்தேன். நீ மறுத்தாய்..” என்றவனிடம்,
“அது தெரிந்ததால்தான் நான் மறுத்தேன்.” என்றாள் சித்ரா.
அதிர்ச்சியோடு அவளைத் திரும்பிப் பார்த்தான் ரஞ்சன்.