அந்தப் பக்கம் இருந்தவனின் நாடி நரம்பெங்கும் ஊடுருவி அவன் தேகம் முழுவதையுமே சிலிர்க்க வைத்தது அந்த அழைப்பு. விழிகளை மூடி அவன் செவியில் வந்து மோதிய அழைப்பை அணுவணுவாக ரசித்தான்!
இந்த மூன்று மாதத்தில் இதயன் என்று அழைக்கமாட்டாளா என்று எத்தனை நாட்கள் ஏங்கியிருப்பான். அதை அவளிடம் வாய் விட்டுக் கேட்கமுடியாமல் மனதுக்குள்ளேயே தவித்துக் கொண்டிருந்தவன், இன்று அவள் அழைத்ததில், அதில் தெரிந்த காதலில், பரவசத்தில் உருகியே போனான்.
“இதயன்…” மீண்டும் அவள் அழைக்க தன்னுணர்வு பெற்றவன், “உன் இதயன் தான்டி. இப்போதுதான் என்னை இப்படிக் கூப்பிட வேண்டும் என்று உனக்குத் தோன்றியதா? எத்தனை நாட்களாக இதற்கு ஏங்கியிருக்கிறேன் தெரியுமா..” என்றான்.
அவனின் ஏக்கமும் மனத்தாங்கலும் அவளுக்கு மிக நன்றாகவே புரிந்தது.
அவன் கையால் தாலியை வாங்கி, தனிவீட்டில் அவனோடு வாழத் தொடங்கிவிட்டவளுக்கு அந்தப் பெயரைச் சொல்லி அழைப்பதில் பெரிதாக ஒன்றும் இல்லைதான். ஆனாலும், அவளது தூய உள்ளத்தில் இருந்து வெள்ளமெனப் பாய்ந்த நேசத்தின் வெளிப்பாடாக, அவளது இதயன் என்று நினைத்து அழைத்தவளால் ஏனோ அதன்பிறகு அப்படிக் கூப்பிடவே முடிந்ததில்லை.
ஆனால் இன்றோ.. மீண்டும் தான் தாய்மை அடைந்திருப்பதை அறிந்துகொண்டவளுக்கு அதை அவளுக்குப் பரிசளித்த கணவனின் மேல் காதல் பொங்கி வழிந்தது.
தாய்மை அடைந்திருக்கிறாள் என்பதை விட ஒன்றுக்கு இரண்டாகக் குழந்தைகள் கிடைத்ததில், கணவனோடு மனம் திறந்து பேசிய பிறகும் அவள் மனதில் கொஞ்சமாக ஒட்டிக்கொண்டிருந்த உறுத்தல்கள், சஞ்சலங்கள், மனக்குமுறல்கள் அனைத்துமே இருந்த இடம் தெரியாமல் மாயமாக மறைந்து போயின!
அந்த நிமிடத்தில் அவள் நெஞ்சில் முற்றாக நிறைந்தவர்கள் அவளது இரு குழந்தைகளும் அதைப் பரிசளித்த கணவனுமே!!
இதையெல்லாம் கைபேசி வாயிலாகச் சொல்லமுடியாமல், “நீங்கள் எங்கே நிற்கிறீர்கள் இதயன்? நம் கடையில் தானே..” என்று கேட்டாள் சித்ரா.
“ஆமாம், ஏன் கேட்கிறாய்?”
“அங்கேயே நில்லுங்கள். இதோ வருகிறேன்..” என்றவள், அவன் பதிலை எதிர்பாராது கைபேசியை அணைத்தாள்.
இவளுக்கு என்னதான் ஆயிற்று? நேற்று மாலையில் இருந்தே புதிராகவே நடந்து கொள்கிறாளே என்று சிந்தித்தபடி, வேலைகளைப் பார்த்துக் கொண்டிருந்தவனின் முன்னால் சிறிது நேரத்திலேயே வந்து நின்றாள் சித்ரா.
மலர்ந்து பிரகாசித்த விழிகளில் காதல் மின்ன, அவள் இதழ்கள் அழகாய் வளைந்து எழில்கொஞ்சும் புன்னகையைச் சிந்த, “இதயன்..” என்று பரவசத்தோடு அழைத்தவளின் அழைப்பில் மீண்டும் மீண்டும் உருகிப்போனான் ரஞ்சன்.
“மேலே வாருங்கள்.” என்றவளிடம்,
“நீ போ. இதை முடித்துவிட்டு வருகிறேன்..” என்றான் ரஞ்சன், கையிலிருந்த ஏதோ பேப்பர்களை அடுக்கிக்கொண்டே.
“ப்ச்! வரச்சொன்னால் வாருங்கள்!” என்றவள், நாற்காலியில் அமர்ந்திருந்தவனின் அருகில் சென்று அவன் கரத்தைப் பற்றி இழுத்தாள்.
மலர்ந்த புன்சிரிப்புடன், “அடம் பிடிக்க என்றே பிறந்தாயாடி..” என்று கேட்டவனும் அவள் இழுப்புக்குச் செல்லத் தவறவில்லை.
“நான் ஒன்று சொன்னால் செய்யவேண்டும். இல்லையானால் இப்படித்தான்!” என்றவள் அவனோடு மாடியேறினாள்.
வீட்டுக்குள் சென்றதும் கதவை அடைத்தவள் பாய்ந்து கணவனைக் கட்டிக்கொண்டு அவன் முகம் முழுவதும் ஒருவித ஆவேசத்தோடு முத்தமழை பொழியத் தொடங்கினாள்.
முதலில் திகைத்தவனுக்குப் பிறகு சிரிப்புத்தான் வந்தது. உள்ளம் நெகிழ்ந்த சிரிப்பு.
அவளது முத்தமழையில் நனைந்தபடி “என் யாழிம்மாக்கு என்ன நடந்தது? இவ்வளவு சந்தோசமாக இருக்கிறாளே?” என்று கேட்டவன், அவளது இடையைத் தன்னோடு சேர்த்து வளைத்தான்.
அவன் இதழ்களில் தன்னால் முடிந்தவரையில் ஒரு அழுத்தமான முத்தத்தைப் பதித்தவள், இடையில் பதிந்திருந்த அவன் கரத்தைப் பற்றித் தன் வயிற்றில் வைத்தாள்.
முதலில் ஒன்றும் புரியாமல் புருவங்களைச் சுருக்கியவனுக்கு விஷயம் மெல்லப் புரியவே, “யாழி!! உண்மையாகவா?” என்று கூவியவன், அவளை இறுக்கி அணைத்துக்கொண்டான்.
அவனால் நம்பவே முடியவில்லை.
அப்பா!
அந்த உன்னதமான பதவி அவனுக்குக் கிடைத்திருக்கிறது!
அதைத் தந்த மனைவியை நேசத்தோடு கட்டிக்கொண்டவனின் நெஞ்சமோ கர்வம் கொண்டு விம்மியது!
அத்தியாயம்-37
சட்டென அவளைத் தன்னிடமிருந்து பிரித்து அவள் தோள்களைப் பற்றியவன், “உனக்கு நன்றாகத் தெரியும்தானே. அல்லது.. வா எதற்கும் வைத்தியரிடம் போகலாம்..” என்று பரபரத்தான்.
“இப்போதுதான் போய் செக் பண்ணிக்கொண்டு வந்தேன். அதோடு..” என்றவளை, திடீரென்று ஒருவித வெட்கம் வந்து சூழ்ந்தது.
அவளையே ஆர்வமாகப் பார்த்தபடி, “அதோடு?” என்று அவனும் கேட்டான்.
“அதோடு.. ந..மக்கு இரட்டைக் குழந்தைகள் பிறக்கப் போகிறது..” என்றவள், வெட்கம் தாளாது அவன் நெஞ்சிலேயே தன் முகத்தைப் புதைத்துக் கொண்டாள்.
ரஞ்சனுக்கோ ஆனந்த அதிர்ச்சியில் ஒருநிமிடம் என்ன சொல்வது, என்ன செய்வது என்றே தெரியவில்லை. அடுத்த நிமிடமே, “என் யாழி..” என்று உருகியவன், இப்போது அவள் முகமெங்கும் அவன் முத்தமழை பொழிந்தான்.
சட்டென முழங்கால் இட்டவன், அவள் வயிற்றை மறைத்த சேலையை விலக்கிவிட்டு, அங்கே வீற்றிருக்கும் தன் செல்வங்களுக்கும் முத்தங்களை வாரி வழங்கினான்.
ஏதோ தோன்றவும் அவளை அண்ணாந்து பார்த்து, “என் பிள்ளைகளுக்கு மீசை குத்தாதா?” என்றான்.
சித்ராவின் இதழ்களில் புன்னகை மின்னியது.
அவன் தலையைக் கோதியபடி, “இல்லை. குத்தாது..” என்றாள்.
“எதற்கும் நான் மீசையை எடுத்துவிடவா? அடிக்கடி கொஞ்சுவேனே.. அபோதெல்லாம் வலிக்காதா..” என்று கேட்டவனும் இப்போது அவள் கண்களுக்கு ஒரு குழந்தையாகத்தான் தெரிந்தான்.
“ம்கூம்! வேண்டுமானால் கொஞ்சம் ஒட்டி வெட்டிக் கொள்ளுங்கள்.”
சம்மதமாகத் தலையை அசைத்தவன், மீண்டும் தன் குழந்தைகளுக்குப் பரிசுகளை வழங்கத் தொடங்கினான்.
சித்ராவுக்குத்தான் அவன் செய்கைகளால் மேனி சிலிர்த்தது.
இந்தளவுக்கு அவனும் உணர்ச்சிவசப்படுவான் என்பது அவள் எதிர்பாராதது!
“இதனால்தான் நேற்று ஒருமாதிரி இருந்தாயா? என்னிடம் ஏன் நீ நேற்றே சொல்லவில்லை..” மனைவியை அணைத்தபடி கட்டிலில் அமர்ந்திருந்தவன் கேட்டான்.
“உறுதியாகத் தெரியாமல் சொல்லப் பயமாக இருந்தது..”
“ம்ம்.. நாம் அம்மா அப்பா ஆகிவிட்டோம் என்று நினைத்தாலே, ஏதோ கனவு மாதிரி இருக்கிறது சித்து. அதுவும் நமக்கு இரண்டு குழந்தைகள் வரப்போகிறார்கள். எனக்கு ரெண்டுமே பெண் குழந்தைகள் தான் வேண்டும். அதுவும் உன்னைப் போலவே..” என்றவன், “உனக்கு?” என்று மனைவியையும் ஆர்வத்தோடு கேட்டான்.
“எனக்கு.. எந்தக் குழந்தைகள் என்றாலும் சந்தோசம் தான். இவர்களையாவது நான் நல்லபடியாகப் பெற்றெடுத்து என் மடியில் போட்டு ஆசையாகக் கொஞ்சவேண்டும்.” என்றாள் முதல் குழந்தையின் நினைவில்.
“ம்ம்..” என்று கேட்டுக் கொண்டவன், அவள் சொன்னதன் முழு அர்த்தமும் புரிய, அதிர்ந்து, “அதென்ன இவர்களையாவது என்கிறாய்?” என்று கேட்டான்.
அதுவரை இதமாக அவன் நெஞ்சில் சாய்ந்து இருந்தவள் அதிர்ச்சியோடு எழுந்து அமர்ந்தாள். இலகுவாக இருக்க முடியாமல் தடுமாறினாள். உள்ளே படபடத்தது. காரணமில்லாப் பயத்தில் வியர்த்துக் கொட்டியது.
திடீரென மனைவியிடம் தெரிந்த தடுமாற்றத்தில் அவன் விழிகள் கூர்மை பெற்றன.
அவன் பார்வையை எதிர்கொள்ள முடியாமல் விழிகளை அவள் தழைத்துக் கொள்ளவும், அவள் சொன்னதில் என்னவோ இருக்கிறது என்பது உறுதியானது அவனுக்கு.
அப்படி எதை அவனிடம் மறைக்கிறாள்?
“சொல்லு! நீ சொன்னதன் அர்த்தம் என்ன?” என்று அழுத்தமான குரலில் திரும்பக் கேட்டான் ரஞ்சன்.
அதுநாள் வரை முதல் குழந்தையை அவள் இழக்க அவனே காரணம் என்று உறுதியாக நம்பியவளால் இன்று ஏனோ அவன் விழிகளைப் பார்த்து அதைச் சொல்ல முடியவில்லை.
சித்ரா அப்போதும் அமைதியாக இருக்க, முதல் நாள் அவள் பூடகமாகப் பேசியவை அனைத்தும் ரஞ்சனின் காதுகளுக்குள் திரும்பவும் எதிரொலித்தன!
“சொல்லு சித்ரா! என்ன அர்த்தத்தில் அப்படிச் சொன்னாய்? நேற்றும் எதையோ இழந்ததாகச் சொன்னாயே, அது என்ன?” புயலை உள்ளடக்கிய குரலில் கேட்டான் அவன்.
கேள்விகளைக் கணைகளாகத் தொடுத்த கணவனின் விழிகளைப் பார்க்க முடியாமல் தலையைக் குனிந்தவள், தான் தாய்மை அடைந்தது முதல் தாய் அவளுக்குத் தெரியாமல் அதை அழித்தது வரை அனைத்தையும் நெஞ்சம் நடுங்கச் சொல்லிமுடித்தாள்.
அவனிடமிருந்து எந்தவிதமான சத்தத்தையோ அசைவையோ காணவில்லையே என்று தயங்கித்தயங்கி நிமிர்ந்து பார்க்க, அவளைப் பார்க்கவே பிடிக்காதவன் போன்று சட்டென எழுந்த ரஞ்சன் அவளிடமிருந்து தள்ளிப்போய் நின்றான்.
அவள் சொன்னதை ஜீரணிக்கவும் முடியாமல், ஆத்திரத்தில் வார்த்தைகளை விடவும் பிடிக்காமல் தன்னைக் கட்டுப்படுத்தப் போராடினான். அவளை இழுத்து நன்கு சாத்துச் சாத்தினாள் என்ன என்றுகூட ஆத்திரம் வந்தது.
இரும்பென விறைத்த தேகமும், பாறையென இறுகிப் போயிருந்த முகமும், சிவப்பேறிய விழிகளுமாக கோபத்தைக் கட்டுப்படுத்தப் போராடுபவனைப் பார்க்கவே நடுங்கியது சித்ராவுக்கு.
“இதயன்?” குரல் நடுங்க மெல்ல அழைத்தாள் சித்ரா.
சரேலெனத் திரும்பியவனின் இடுங்கிய விழிகளில் தெரிந்த ஆக்ரோசத்தில் சித்ராவுக்கு உள்ளே குளிர் பிறந்தது.
ஆத்திரத்தோடு அவளை வேகமாக நெருங்கி, அவள் தாடையை இறுகப் பற்றியவன், “என் குழந்தையை அழிக்க உன் அம்மாவுக்கு எவ்வளவு தைரியம்டி?” என்று உக்கிரமாக இரைந்தபோது பயத்தில் அவள் மேனி வெளிப்படையாகவே நடுங்கியது.
“என்னிடம் ஒரு வார்த்தை சொன்னீர்களாடி? சொல்லியிருக்க என் குழந்தை பிழைத்திருக்குமே. எந்தப் பிரச்சினையும் வந்திருக்காதே. மொத்தக் குடும்பமுமே என்னை முழுக் கெட்டவனாக, கொடுமைக்காரனாக நினைத்து என் குழந்தையை அழித்தீர்கள் என்றால் பிறகு என்ன தேவைக்கு இந்தத் திருமணத்தை நடத்தினீர்கள்?” அந்த எரிமலைச் சீற்றத்தில் அவள் கைகால்கள் எல்லாம் நடுங்கின. அந்தளவுக்குப் பயங்கரமாக இருந்தது அவன் முகம்.
“உன் அம்மாவும் ஒரு பெண்தானே. உன் அப்பா.. அந்தப் பெரிய மனிதருக்குக் கூடவா என்னிடம் சொல்லத் தோன்றவில்லை. அல்லது இந்தப் பிச்சைக்காரப் பயலின் குழந்தை எதற்கு என்று அவரும் நினைத்தாரா?”
“நடந்தது எதுவும் அப்பாவுக்கும் தெரியாது ரஞ்சன்..” என்றாள் சித்ரா நடுங்கும் குரலில்.
நடந்தது பெரும் தவறுதான் என்றாலும், அதை யாருமே திட்டமிட்டுச் செய்யவில்லையே!
அம்மா, தன் மகளின் வாழ்க்கைக்காக அப்படிச் செய்தார் என்று சொல்லியும் இப்படிக் கேட்பவனிடம் எதைச் சொல்லிப் புரியவைப்பது என்று தெரியாமல் நின்றாள் அவள்.
“என்னடி அவருக்குத் தெரியாது? அன்று எனக்கு எடுத்துத் தன் மகளைப் பற்றிச் சொன்ன உன் அப்பா என் பிள்ளையைப் பற்றி என்னிடம் சொல்லவில்லையே, ஏன்? அவருக்கு அவர் பிள்ளை முக்கியம் என்றால் எனக்கு என் பிள்ளை முக்கியம் இல்லையா?”
“அப்பா சொல்வதைக் கேட்காமல் வைத்தது நீங்கள். பிறகு உங்களைப் பார்க்க வந்தவரைப் பார்க்காமல் திருப்பி அனுப்பியதும் நீங்கள்தான் ரஞ்சன்.” மெல்லிய குரலில் என்றாலும் தந்தையின் நிலையை அவனுக்குப் புரியவைக்க முயன்றாள் சித்ரா.
“அப்படி நான் அவரைப் பார்க்க மறுத்தால் அப்படியே விட்டுவிடுவாரா உன் அப்பா? உன்னைக் கட்டவும் தான் மறுத்தேன். அப்பாவும் மகளுமாகச் சேர்ந்து என்னை மிரட்டி திருமணத்தையே நடத்தவில்லையா? குழந்தையைப் பற்றிச் சொல்லியிருக்க தானாகவே இந்தத் திருமணம் நடந்திருக்குமே. அதை விட்டுவிட்டு என் குழந்தையை அநியாயமாகக் கொன்றுவிட்டீர்களே.” என்றவன், மனம் வெறுத்துத் தொய்ந்துபோய் கட்டிலில் தொப்பென்று அமர்ந்தான்.
தலையைத் தன் இரு கைகளாலும் தாங்கியவனுக்கோ எல்லாமே வெறுத்துப் போனதுபோல் இருந்தது.
அவன் குழந்தை! அவன் உயிர்! அவன் பெயரைச் சொல்ல வந்த முதல் மகவு! அவனுடைய முட்டாள் தனத்தினால் இன்று இழந்து நிற்கிறான்.
அவன்தான் முழு முட்டாளாய் என்னென்னவோ செய்தான் என்றால் இவர்கள் அதற்கும் மேலே சென்று அவன் குழந்தையை அல்லவா அழித்துவிட்டார்கள்!
வேதனையில் துடித்த ரஞ்சனைப் பார்க்கப் பார்க்க சித்ராவின் விழிகளும் கண்ணீரைச் சொரிந்தன.