இதேயளவு வேதனையை, சொல்லப் போனால் இன்னும் அதிகமாக அதுநாள் வரை அனுபவித்தவள் அல்லவா அவள்!
அடங்கியிருந்த வேதனை கிளறி விடப்படவே சித்ராவும் விம்மினாள்.
“அது என் குழந்தையும் தான் ரஞ்சன். அதை நானே கொல்வேனா. இது இன்றுதான் உங்களுக்குத் தெரியும். ஆனால் எனக்கு? இத்தனை மாதங்களாக உங்களிடம் சொல்லமுடியாமல் மனதிலேயே போட்டு உள்ளுக்குள்ளேயே அழுதுகொண்டு இருக்கிறேன் தெரியுமா. என் முதல் குழந்தை அது.. உருவாகி இருக்கிறது என்று தெரிந்த அன்றே என்னை விட்டுப் போய்விட்டது.” என்று கதறியவளை வேதனையோடு பார்த்தான் ரஞ்சன்.
“நீ என்ன சொன்னாலும் நம் குழந்தை நம்மை விட்டுப் போனது போனதுதானே! என்ன சொல்லி என்னை நானே சமாதானம் செய்வேன்? எனக்காக என் பிள்ளை உயிரைக் கொடுத்தது என்றா? அல்லது நான் செய்த பிழைக்கு என் பிள்ளைக்குத் தண்டனை என்றா? ஏன், ஏன் இப்படி நடந்துகொண்டார்கள் உன் அம்மா. இதற்கு நீங்கள் என்னை வெட்டிப் போட்டிருக்கலாமே!” என்று சுயவெறுப்போடு சொன்னவனைக் கட்டிக் கொண்டு கதறினாள் சித்ரா.
“இப்படியெல்லாம் பேசாதீர்கள் ரஞ்சன். எனக்கு வலிக்கிறது.” என்றவள் கேவிக்கேவி அழ, அவளைப் பார்த்தவனின் மனமும் கசிந்தது.
அவளுக்கும் அது இழப்புத்தானே. நேற்று அவள் அவனிடம் வெடித்ததற்குக் காரணமும் இப்போது புரிந்தது.
அப்படிப் பார்க்கையில் அவனைவிட அவளுக்குத்தானே வேதனைகளும் வலிகளும் அதிகம். யாரை யார் தேற்றுவது என்று தெரியாமல் நெஞ்சம் ரணமாகிப் போனது அவனுக்கு.
ஆனாலும், வயிற்றில் இரட்டைக் குழந்தைகளைச் சுமந்தபடி கதறும் மனைவி கருத்தில் படவே, முயன்று தன்னைத் தேற்றிக் கொண்டான். தான் தேறிவிட்டதாக அவளுக்குக் காட்ட முயன்றான்!
“ப்ச்! விடு. எல்லாம் நான் செய்த பாவம். அதற்கு நீயேன் அழுகிறாய். அதுவும் இந்த நேரத்தில்” என்றவன், அவள் கன்னங்களைத் துடைத்துவிட்டான்.
விசும்பலுடன் கணவனின் மார்பில் சாய்ந்துகொண்டாள் சித்ரா.
அவள் தலையை ஆறுதலாக வருடிக் கொடுத்துக் கொண்டிருந்தவனின் மனமோ, உள்ளே வலியில் துடித்துக் கொண்டிருந்தது.
தன் மனவேதனைகளுக்கு மருந்தாக இருந்தவனை விழிகளை உயர்த்திப் பார்த்தாள் சித்ரா.
அவன் காட்டிய கோபத்தில், இதற்கு நீங்கள் என்னை வெட்டிப் போட்டிருக்கலாமே என்றவனின் அன்பில் அவளுக்குள் ஒருவித நிறைவே தோன்றியது.
பின்னே, அவளைப் போலவே அவனும் துடிக்கிறானே! ஆழ்ந்த நேசத்தின் வெளிப்பாடுதானே அவனது கோபமும் ஆத்திரமும்!
புருவங்கள் நெரித்திருக்க இலக்கின்றி விழிகளை எங்கோ பதித்திருந்தவனின் ஒருபக்கக் கன்னத்தில் தன் கரத்தை வைத்தாள் சித்ரா.
அவன் குனிந்து அவளைப் பார்க்கவும், “என்னை மன்னித்து..” என்று அவள் சொல்லி முடிக்க முதலே தன் கரத்தால் அவள் இதழ்களை மூடினான் ரஞ்சன்.
“நீ என்ன பிழை செய்தாய் என்று மன்னிப்புக் கேட்கிறாய். விடு! இதெல்லாம் நமக்கு நடக்கவேண்டும் என்று இருந்திருக்கிறது போல..” என்றவனுக்கும் அதற்கு மேலே குரல் எழும்ப மறுத்தது.
மனைவியின் அருகாமை உள்ளே வேதனையில் துடித்துக் கொண்டிருந்த மனதுக்கு மருந்தாக இருக்கவே அவளை இதமாக அணைத்துக்கொண்டான்.
அதன் பிறகு அவர்களுக்குள் அமைதி மட்டுமே ஆட்சி செய்தது.
அப்படியே எவ்வளவு நேரம் கடந்ததோ, “அந்தக் குழந்தையையும் சேர்த்துத்தான் கடவுள் இந்தமுறை நமக்கு இரண்டு குழந்தைகளாகத் தந்திருக்கிறார்..” என்றாள் சித்ரா ஆறுதலாக.
ஆச்சர்யத்தோடு மனைவியைப் பார்த்தவனுக்கும் அது உண்மைதானோ என்று மனம் கேட்டது!
ஆசையோடு குனிந்து மனைவியின் மணிவயிற்றில் மீண்டும் மீண்டும் முத்தமிட்டான் ரஞ்சன்.
இழந்த குழந்தை மீண்டும் கிடைத்துவிட்டதாக நினைத்தானோ..!
அங்கே முத்தமிட முத்தமிட அவன் மனதில் ஏற்பட்டிருந்த ரணம் மெல்ல மெல்ல ஆறுவது போலிருந்தது அவனுக்கு.
அவனையே பார்த்துக் கொண்டிருந்தவளின் விழிகளிலும் மெல்லிய நீர் படலம்.
இனியாவது நம் வாழ்வில் அனைத்தும் நன்றாக நடக்கவேண்டும் என்று வேண்டிக் கொண்டவள், அவனை அந்தத் தாக்கத்தில் இருந்து வெளியே கொண்டுவர எண்ணி, “போதும் போதும், உங்கள் குழந்தைகளைக் கொஞ்சியது! இங்கே நானும் இருக்கிறேன் ” என்றாள் பொய்க் கோபத்தோடு.
அதிர்ச்சியோடு மனைவியைத் திரும்பிப் பார்த்தவனுக்கு அவளின் முயற்சி புரியவே உள்ளம் கனிந்தது.
என்றுமே இழப்பு இழப்புத்தான்! அதை யாராலுமே மீளப் பெறமுடியாது. அதேபோல அதை என்று நினைத்தாலுமே அந்த வலியும் மாறப்போவதில்லை!
எனவே தாய்மை அடைந்திருக்கும் மனைவியையும் அவள் வயிற்றில் இருக்கும் குழந்தைகளையுமாவது இனி மிக மிக நன்றாகப் பார்த்துக் கொள்ளவேண்டும் என்று முடிவை எடுத்தவன், தன் மனதின் வேதனையை தனக்குள்ளேயே புதைத்துக் கொண்டான்.
அவள் போக்கிலேயே செல்ல நினைத்தவன், தன் முகத்தில் புன்னகையை மலரச் செய்தான்.
“நான் உன்னைக் கொஞ்சாமலா நீ அம்மாவாகி இருக்கிறாய்? அதுவும் ஒரே நேரத்தில் இரண்டு குழந்தைகளுக்கு. அதிலிருந்தே தெரியவில்லையா நான் உன்னைக் கொஞ்சிய கொஞ்சல்.” என்று கேட்டவனின் கேள்வியில் சித்ராவின் முகம் செவ்வானமாகவே மாறிப் போனது.
ரசனையோடு அவளை விழுங்கியவனின் விழிகளின் வீச்சைத் தாங்க முடியாமல், “இ..தயன்..” என்று சிணுங்கியவள், அவன் விழிகளைத் தன் மலர்க் கரம் கொண்டு மூடினாள்.
ரஞ்சனோ உரக்கச் சிரித்தான். “இன்னும் என்ன வெட்கம் என்னிடம்?” வெட்கத்தில் சிவந்தவளின் அதரங்களில் ஆசையோடு முத்தமிட்டான்.
அடுத்தடுத்த நாட்கள் மிக மிக வேகமாக நகர்ந்தது அவர்களுக்கு. சித்ராவை மிக நன்றாகவே பார்த்துக்கொண்டான் ரஞ்சன்.
விஷயம் அறிந்த சந்தானம் முதல் கண்ணன் வரை திருவிழா கொண்டாடாத குறையாகக் கொண்டாடினார்கள். எல்லோருக்கும் அவ்வளவு மகிழ்ச்சி!
லக்ஷ்மி அம்மாள் கொஞ்ச நாட்களுக்கு மகளைத் தங்கள் வீட்டில் விடச் சொல்லிக் கேட்டதற்கு மட்டும் உறுதியாக மறுத்துவிட்டான் ரஞ்சன்.
அவன் மனதையும், தாய்மேல் அவனுக்கிருந்த கோபத்தையும் அறிந்திருந்த சித்ராவும் கணவனை வற்புறுத்தவில்லை. அதோடு, அவளுக்குமே அவனைப் பிரிந்து தாய் வீட்டுக்குப் போக மனமில்லை!
முதலில் லக்ஷ்மியின் முகத்தைப் பார்க்கவே பிடிக்கவில்லை ரஞ்சனுக்கு. அவ்வளவு ஆத்திரம் கனன்றது அவனுக்குள். பிறகு பிறகு அந்தக் கோபமும் மெல்ல மெல்ல ஆறிப்போனது.
அதுவும், மனைவி அவன் பிள்ளைகளை சுமக்கும் இன்று தனக்கொரு பெண்பிள்ளை இருந்தால், அவள் சித்ராவின் நிலையில் தன்னிடம் வந்து நின்றால், தான் என்ன செய்வேன் என்று சிந்திக்கையில் அவனால் அவரை முழுவதுமாகக் கோபித்துக் கொள்ளமுடியவில்லை.
அதற்காக அவர்கள் வீட்டுக்கு சித்ராவை விடவும் இல்லை. தன்னுடனேயே வைத்துக் கொண்டான்.
அன்று இரவு குளியலறை சென்று நைட்டியை மாற்றிக்கொண்டு, வேகமாக நடந்தால் குழந்தைகளுக்கு வலித்துவிடுமோ என்று பயந்து அழகிய தேர் என அசைந்தாடி கட்டிலுக்கு வந்த மனைவியைக் குறுஞ்சிரிப்போடு பார்த்து ரசித்தான் ரஞ்சன்.
அவன் பார்வையில் மனம் படபடத்தபோதும், அதை அவனுக்குக் காட்டாதிருக்க முயன்றபடி, “இங்கே என்ன பார்வை?” என்று அதட்டினாள் சித்ரா.
“நான் பார்க்காமல் வேறு யார் பார்ப்பதாம்?” என்று புருவங்களை உயர்த்திக் கேட்டான் அவன்.
“நீங்கள் அளவுக்கு அதிகமாகப் பார்த்துத்தானே இருக்கவும் முடியாமல் நிற்கவும் முடியாமல் இந்தப்பாடு படுகிறேன்..” என்று பொய்யாக நீட்டி முழக்கிக்கொண்டு அவனருகில் அமர்ந்தாள் சித்ரா.
அவளின் பேச்சில் உண்டான சிரிப்போடு உருண்டு அவளருகில் வந்தவன், அவள் வயிற்றில் ஆசையோடு இரண்டு முத்தங்களைப் பதித்தான்.
“ம்க்கும்! இதற்கு மட்டும் ஒரு குறைச்சலும் இல்லை.” கட்டிலில் தளர்வாகச் சாய்ந்தபடி அவள் முணுமுணுத்தது அவன் காதில் தெளிவாகவே விழுந்தது.
“வேறு எதில் குறை வைத்தேனாம்..” என்று கேட்டவன், மனைவியின் அதரங்களை ஆசையோடு சிறை செய்தான்.
மனம் முழுவதும் நிறைந்திருந்தவனின் முத்தத்தில் கிறங்கிப் போனாள் சித்ரா. உள்ளமும் உடலும் அவனது ஆக்கிரமிப்புக்காக ஏங்க, எதிர்பார்ப்புடன் விழிகளை மூடிக் காத்திருந்தாள்.
இதோ.. இதோ.. என்று அவள் காத்திருக்க, அவள் கழுத்து வளைவில் முகம் புதைத்தவனோ அதற்கு மேல் முன்னேறவே இல்லை.
இவன் இப்படி இருக்கமாட்டானே.. புயலாக மாறி அவளை புரட்டிப் போடுகிறவனுக்கு இந்த ஒரு வாரமாக என்னவாகிற்று? அவளை அணைத்தான், முத்தமிட்டான், அப்படியே அவளைத் தன் மார்பில் போட்டுத் தூங்க வைத்தும் விடுவான். அதற்குமேல் போகவே மாட்டான்.
இன்று இவனை விடக்கூடாது என்று நினைத்தவள், “இதயன்?” என்றாள் கேள்வியாக.
“ம்ம்..”
“என்ன?”
ஒன்றுமில்லை என்பதாக அவள் கழுத்து வளைவுக்குள் இருந்த அவன் தலை மட்டும் ஆடியது.
“ப்ச் இதயன்! முதலில் என்னைப் பாருங்கள்.” என்றவள் அவன் தலையைத் தூக்க, ரஞ்சனின் முகமோ சிவந்து போயிருந்தது.
ஆச்சர்யமாகப் பார்த்தாள் சித்ரா. கம்பீரமான அந்த ஆண்மகனின் வெட்கம் கூட அவ்வளவு அழகாக இருந்தது.
இதழ்களில் மலர்ந்த புன்சிரிப்புடன் விழிகளில் குறும்பும் மின்ன, “என்ன?” என்று கேட்டாள் அவள்.
“அது.. நம் குழந்தைகள் பாவம் இல்லையா.. அவர்களுக்கு வலிக்காதா? அதுதான்..” அவளைப் பாராது சொன்னான் அவன்.
அதைக்கேட்ட சித்ரா இப்போது மலர்ந்து சிரித்தாள்.
“என்ன, என் பாடு உனக்குச் சிரிப்பாக இருக்கிறதா?” என்று பொய்யாக அதட்டியவனின் விழிகள் மனைவியின் சிரிப்பை ஆசையோடு ரசித்தன.
“இப்படி எத்தனை நாட்களுக்குத் தள்ளியிருப்பீர்கள்?” கிண்டலோடு அவள் கேட்க, “அதுதான்டி தவிப்பாக இருக்கிறது. இனி என்ன செய்யப் போகிறேனோ தெரியவில்லை..” என்றான் அவன்.
புன்னகையோடு அவன் கழுத்தில் தன் கைகளை மாலையாக்கியவள், “அட என் மக்குப் புருசா.. அப்படி ஒன்றும் நடக்காது. அதனால் நீங்கள் ஒன்றுக்கும் பயப்படத் தேவையில்லை.” என்றாள்.
“உனக்கு எப்படி அது தெரியும்?”
“என் புருசனைப் பற்றி எனக்குத் தெரியாதா? அதனால் லதாக்காவிடம் எல்லாம் கேட்டுக்கொண்டேன்.”
“என்றாலும்..” என்று அவன் இழுக்க, “உங்களை!” என்று பல்லைக் கடித்தாள் அவள்.
“உங்கள் முரட்டுத் தனத்தைக் கொஞ்சம் மூட்டை கட்டிவைத்தால் போதும். மற்றும்படி பயமில்லை!” என்றவள், அதற்கு மேலும் பொறுமையின்றி அவன் இதழ்களைத் தானே சிறை செய்து, நடக்கப்போகும் ஆலிங்கனத்தை அழகாக ஆரம்பித்து வைத்தாள்.
ஆரம்பித்தது மட்டுமே அவள். மீதியைத் தன் கையில் எடுத்துக்கொண்டான் அவள் கணவன்!
வாழ்வில் தனக்கான ஒரு முகத்தைத் தேடி அலைந்தவன், அவன் முகவரியாகக் கிடைத்த முழுநிலவை அந்த மஞ்சத்திலே இதமாகப் பதமாக மலரச் செய்தான்.
முற்றும்!!