முகத்தில் பூத்த புன்னகையுடன் வந்தவளை, அதுவும் ஓடி வந்தவளை முகேஷும் ராகினியும் வித்தியாசமாகப் பார்த்தனர். சற்று முன் கோபப்பட்டுச் சிடுசிடுத்தவள் இவள்தான் என்றால் யாருமே நம்ப மாட்டார்கள். அந்தளவுக்கு புன்னகையால் நிறைந்திருந்தது அவள் முகம்.
அவர்களின் பார்வையில் இருந்த ஆராய்ச்சியை உணராமல், “போகலாம் வாருங்கள்..” என்றபடி கடைக்கு வெளியே நடந்தாள் சித்ரா.
அங்கே, ஏற்கனவே மோகனும் மகியும் வண்டியில் அமர்ந்து தயாராக நின்றனர். சித்ரா ராகினியின் ஸ்கூட்டியின் பின்னால் ஏறப் போகவும், ‘அவளை என்னிடம் அனுப்பு..’ என்று ராகினியிடம் பார்வையால் கெஞ்சினான் முகேஷ்.
“சித்து நீ முகேஷ் வண்டியில் வாடி..” என்ற ராகினியிடம், “ஏன்?” என்று கேட்டாள் சித்ரா. அவன் வண்டியில் ஏறியதே இல்லை என்று இல்லைதான். என்றாலும் சாதாரணமாகக் கேட்டாள்.
சட்டென்று பதில் சொல்ல முடியாமல் முழித்துவிட்டு, “ஏண்டி, இன்று ஒரு நாளைக்கு அவன் வண்டியில் வரமாட்டாயா? நான் என்ன உனக்கு டிரைவரா?” என்று பொய்க் கோபம் காட்டினாள் ராகினி.
“அடிப்பாவி! நான் என் ஸ்கூட்டியில் வரவா என்று வீட்டில் வைத்துக் கேட்டதற்கு, எதற்கு ஆளுக்கு ஒரு வண்டியில் போவான். என்னுடன் வா என்று கூப்பிட்டவள் நீ. இப்போது இப்படிச் சொல்கிறாயே..” என்றபடி, அவள் முதுகில் ஒரு அடியைப் போட்டுவிட்டு முகேஷின் வண்டியின் பின்னால் ஏறிக்கொண்டாள்.
அதைப் பார்த்தபடி ஒரு பெட்டியோடு வந்த ரஞ்சனின் உதடுகள் ஏளனமாக வளைந்தன. இவள் தன்னுடன் மட்டுமல்ல எல்லா ஆண்களிடமும் இப்படித்தான் பழகுவாள் போல என்று எண்ணிக் கொண்டான்.
ராகினி சொல்லித்தான் முகேஷின் வண்டியில் ஏறுகிறாள் என்பதை அவன் அறிய வழி இல்லையே! இல்லா விட்டாலும் அதில் ஒன்றும் பெரும் தவறும் இல்லையே! இது அவனுக்குத் தெரியாதா அல்லது அதை அவளளவில் அவன் ஏற்றுக் கொள்ளத் தயாராக இல்லையா?
ஆனால், ஒரு நாள் இந்த எண்ணமே அவளை அவன் குற்றம் சாட்டவும், தூக்கி எறியவும் வழி வகுக்கப் போகிறது என்பதை உணராத சித்ரா, அவனின் ஏளன உதட்டு வளைவை மட்டும் கண்டு, கண்களில் குறும்பு மின்னப் பழிப்புக் காட்டிவிட்டு முகேஷின் வண்டியில் பறந்தாள்.
இப்போதும் பல்லைக் கடிப்பது ரஞ்சனின் முறையானது!
ஒரு வழியாக பெட்டிகள் அனைத்தையும் லாரியில் ஏற்றியதும், மற்றக் கடைகளில் அவற்றை இறக்கிவிட்டு வருவதாகச் சொல்வதற்கு சந்தானத்திடம் சென்றான் ரஞ்சன்.
“அப்படியே போய்விட்டு வரும் வழியில் வங்கியில் இந்தப் பணத்தையும் போட்டுவிடு..” என்று, இரண்டு லட்சம் ரூபாய்கள் அடங்கிய பையை அவனிடம் நீட்டினார் சந்தானம்.
அதுவரை காலமும் ஒவ்வொரு வெள்ளியும் அந்த வாரத்தில் அவரின் அனைத்துக் கடைகளிலும் நடக்கும் மொத்த வியாபாரப் பணத்தையும் கண்ணன் தான் வங்கியில் வைப்புச் செய்து கொண்டிருந்தார்.
இப்போதெல்லாம் அந்தப் பணியை அவ்வப்போது ரஞ்சனிடமும் கொடுத்தார் சந்தானம். அந்தளவுக்கு அவன் மேல் நம்பிக்கை வளர்ந்திருந்தது அவருக்கு. அன்று அவராகவே வேலைக்கு வா என்று அழைத்தும், இன்னொரு வேலை கிடைப்பது கஷ்டம் என்று தெரிந்தும் வர மறுத்த அவனது தன்மானமும் நேர்மையும் அவருக்கு மிகவும் பிடித்துப் போயிருந்தது.
அப்படியே இன்றும் கொடுத்தார். அதையும் வாங்கிக்கொண்டு கிளம்பினான் ரஞ்சன்.
இங்கே வண்டியில் சென்று கொண்டிருந்த சித்ராவோ கனவில் இருந்து விழித்தவள் போன்று இதுவரை அவளைச் சூழ்ந்திருந்த மாய வலையில் இருந்து நடப்புக்குத் திரும்பிக் கொண்டிருந்தாள். அப்படித் திரும்பியவளுக்கோ தன்னை நினைத்துக் குழப்பமாக இருந்தது.
இன்றைய அவளின் நடவடிக்கைக்கான காரணம் அவளுக்கே புரியவில்லை.
அவளோடு மல்லுக்கட்டும், அவளை மதிக்காத அவனுக்கு ஒன்று என்றதும் அவளுக்குக் கோபம் ஏன் வந்தது? அது போதாது என்று அவனுக்காக அவனிடமே சண்டை இட்டிருக்கிறாள்! ஏன்?
என்னதான் அவனை அவளுக்குப் பிடிக்காது என்றாலும், எப்போதும் அவனிடம் இருக்கும் அந்த நிமிர்வு பிடிக்கும் என்பதாலா? எதற்கும் அஞ்சாத குணம் பிடிக்கும் என்பதாலா? அல்லது கல்லூரி முதற் கொண்டு வெளியிடங்களில் எல்லாம், எல்லா இளந்தாரிகளும் அவளுடன் பழகுவதற்கு ஆர்வம் காட்டுகையில் அவளை ஒரு மனுஷியாகவே மதியாத அவனின் அந்த அலட்சியம் பிடித்ததாலா?
அவனின் கம்பீரமான நடை முதற்கொண்டு அசாத்தியமான அந்த உயரம் வரை அனைத்துமே அவனிடம் அவளுக்குப் பிடிக்கும் என்பதாலா?
இவை எல்லாம் பிடித்தபோதும் அவனை மட்டும் அவளுக்குப் பிடிக்கவே பிடிக்காது! திமிர் பிடித்த சிடுமூஞ்சி என்று நினைத்தவளுக்குச் சிரிப்புத்தான் பொத்துக் கொண்டு வந்தது.
பின்னே, இதுநாள் வரை அவனுடன் கீரியும் பாம்புமாகச் சண்டை இட்டுக்கொண்டு இருந்தவள் அவனைப் பற்றி இவ்வளவு தெரிந்து வைத்திருக்கிறாளே! அதுவும் மிகத் துல்லியமாக! அது எப்படி?
நமக்குப் பிடிக்காதவர்களிடம் உள்ள பிழையைக் கண்டு பிடிக்கிறேன் பேர்வழி என்று அவர்களையே கண் கொத்திப் பாம்பாகப் பார்வையாலேயே பின் தொடர்வோமே.. அதனாலா?
எது எப்படி இருந்தாலும் அந்தத் திமிர் பிடித்தவனை எண்ணி வியந்தாள். அவனின் அத்தனை செயல்களுமே அவனை மற்றவர்களிடம் இருந்து தனித்துக் காட்டியது.
அதுவும் அவன் விழிகளில் இருக்கும் கூர்மை.. அதை எண்ணியவளின் விரல்கள் கழுத்தைத் தடவியது. அவன் பிடித்த பிடியின் வலியின் மிச்சம் அங்கே இருந்தாலும், இப்போது அதை நினைத்து சிரித்துக்கொண்டாள்.
எவ்வளவு கோபம் வருகிறது அவனுக்கு? பற்ற வைக்காமலேயே தீபோல் சட்டென்று பற்றிக் கொள்ளும் அவனது கோபத்தை ரசிக்கத் தோன்றியது. இன்னுமின்னும் கோபமூட்டி அவன் திணறுவதை அப்படியே மனப் பெட்டகத்தில் பதுக்கத் தோன்றியது.
சற்று முன் பழிப்புக் காட்டியபோது அவன் முகத்தில் தோன்றிய சினத்தை மனக்கண்ணில் கண்டவளுக்குச் சிரிப்புப் பொங்கவும், அதை அடக்கப் பெரும் பாடு பட்டாள்.
அவளின் எண்ண ஓட்டங்களை அறியாமல், அவளும் தன்னுடன் வருவதை எண்ணி மகிழ்ந்தபடி வண்டியை ஓட்டிக் கொண்டிருந்த முகேஷ் ஹோட்டலுக்கு முன்னால் நிறுத்தி, “இறங்கு சித்ரா..” என்றான் உற்சாகக் குரலில்.
முகேஷின் குரலில் நடப்புக்குக் வந்தவள் வண்டியில் இருந்து இறங்கினாள்.
எல்லோருமாக ஹோட்டலுக்குள் நுழைந்து ஆறுபேர் அமரக் கூடிய மேசையில் அமர்ந்து, அவரவருக்குப் பிடித்த உணவுகளை ஆடர் கொடுத்து உண்ணத் தொடங்கினர்.
ராகினி முகேஷிடம் கண்ணைக் காட்டிவிட்டுப் பேச்சை ஆரம்பித்தாள்.
“மோகன்! நீயும் மகியும் எப்போது திருமணம் செய்து கொள்ளப் போகிறீர்கள்?”
அந்தக் கேள்வியில் சிவந்துவிட்ட முகத்தோடு, “இப்போ இது ரொம்ப முக்கியம்!” என்ற மகியை ரசித்தபடியே, “படிப்பு முடிந்து வேலை கிடைத்ததும்..” என்றான் மோகன்.
“விட்டால் அதற்கு முதலேயும் செய்வாய் போலவே..” மகியை மேய்ந்த அவன் பார்வையைக் கிண்டல் செய்தாள் சித்ரா.
“நானா மாட்டேன் என்கிறேன்..” என்றான் மோகன் சோகம்போல.
அதைக் கேட்டவர்களின் ஓகோ என்ற சிரிப்பில் தானும் இணைந்தபோதும், “எங்களை விடு. உனக்கு எப்போது திருமணம்? மாப்பிள்ளை யார்..?” என்று, சித்ராவின் புறம் கேள்வியைத் திருப்பினாள் மகேஸ்வரி.
“எனக்கா?” என்று கேட்டு, ஏதோ பெரிய நகைச்சுவையைக் கேட்டவள் போல் நகைத்தாள் சித்ரா.
“சிரிக்காமல் சொல்லுடி..” என்றது ராகினி.
“யாருக்குத் தெரியும்? முதலில் எவனாவது சிக்கட்டும். பிறகு பார்க்கலாம்.” என்றவள், “உனக்கு எப்போது?” என்று ராகினியிடம் கேட்டாள்.
“படிப்பு முடிந்த பிறகுதான். அதற்கு முதல் என் மனசை அப்படியே அள்ளுறவனா எவனாவது மாட்டினால் உடனே திருமணம் தான். அதுவும் ஒரே ஓட்டமா அவனைக் கூட்டிக் கொண்டு ஓடிவிடுவேன்..” என்றாள் ராகினி.
அதற்கும் சிரித்தது அந்தக் கும்பல்.
சிரிப்பினூடே “முஹி, நீ?” என்று கேட்டாள் சித்ரா.
அதுவரை தன் காதலை எப்படிச் சொல்வது என்று திணறிக் கொண்டிருந்தவன், அவளின் கேள்வியில் இன்னுமே தடுமாறினான். நெற்றியில் வியர்வைத் துளிகள் உற்பத்தியாக, கைகால்களில் உதறல் எடுக்க நின்றவனைப் பார்த்துப் பல்லைக் கடித்தாள் ராகினி.
‘சொல்லு..’ என்றவளின் பார்வையில் இருந்த மிரட்டலை எதிர்கொள்ள முடியாமல் பார்வையாலேயே அவளிடம் கெஞ்சினான் முகேஷ்.
‘உன்னை!’ என்று பல்லைக் கடித்தவள், “அவன் யாரையோ காதலிக்கிறானாம்..” என்று ஆரம்பித்து வைத்தாள்.
“உண்மையாடா..?” ஆச்சர்யமாகக் கேட்டான் மோகன்.
மகி நம்பாமல் அவனைப் பார்க்க, “இந்தச் சோத்து மூட்டையா..?” என்று கலகலத்தது சித்ரா.
அவள் சொன்ன ‘சோத்து மூட்டை’யில் முகம் வாடியவனைப் பார்த்துவிட்டு, “ஏண்டி! அவனுக்கு என்ன குறை? கொஞ்சம் குண்டு. மற்றும்படி அழகாகத் தானே இருக்கிறான்..” என்று அவனுக்காகக் கேட்டாள் ராகினி.
அதைக் கேட்டதும் கையை நீட்டி, “ஹேய் ராக்கி! நீதானா அது? கொடு கொடு கையைக் கொடு. இது தெரியாமல் நான் சும்மா அவனை ஓட்டினேன். சூப்பர் ஜோடி நீங்கள் இருவரும்.” என்று ஆர்ப்பரித்தாள் சித்ரா.
“பார் மகி. கூடவே இருக்கிறோம் இந்தக் கழுதைகள் இரண்டும் நம்மிடம் சொல்லவே இல்லையே. நாமும் கண்டு பிடிக்கவில்லை.” என்றவளைக் கொலை வெறியுடன் பார்த்தாள் ராகினி.
“லூசு மாதிரி உளறாதே. அவன் என்னைக் காதலிக்கவில்லை.” என்று கடுப்புடன் அவள் சொல்ல, “ஓ.. நீயில்லையா? சாரிடி, அவனுக்காக சப்போர்ட் பண்ணவும், நீயாக்கும் என்று நினைத்துவிட்டேன்.” என்றாள் சித்ரா.
முகேஷிடம் திரும்பி, “யாருடா உன் ஆள்? நமக்குத் தெரியுமா? நம் கல்லூரியா? உன் பின்னாலேயே சுற்றினாளே அந்த வேணியா ?” என்று, அவன் காதலியை அறியும் ஆர்வத்தோடு கேள்விகளை அடுக்கினாள்.
அப்போதும் அவன் தடுமாற, அருமையாகக் கிடைத்த சந்தர்ப்பத்தை நழுவ விடுகிறானே என்கிற கடுப்பில், “வாயைத் திறந்து சொல்லேன்டா..” என்று முகேஷிடமும் பாய்ந்தாள் ராகினி.
எல்லோரும் குழப்பமும் கேள்வியாக அவனைப் பார்க்க, அவனுக்கோ வெளிப்படையாகவே உதறல் எடுத்தது. வேகமாக எழுந்து, “இதோ வருகிறேன்..” என்றபடி அந்த இடத்தை விட்டு அகன்றான்.
அவன் சென்றதும் ராகினியைப் பிடித்துக் கொண்டாள் சித்ரா. “சொல்லுடி. அவன் விரும்பும் பெட்டை(பெண்) யார்?”
“எனக்கு.. எனக்குத் தெரியாது.”
“பொய் சொல்லாதே. நீங்கள் இருவரும் சிறுவயதில் இருந்தே நல்ல நண்பர்கள். அவனைப் பற்றி உனக்குத் தெரியாமல் இருக்காது.”
“தெரியாதுடி..”
“சும்மா விளையாடாதே ராக்கி. நமக்குள் என்ன ஒளிவு மறைவு? நானும் மோகனும் எங்களைப் பற்றி உங்களிடம் சொல்லாமல் மறைத்தோமா.” என்று மனத்தாங்கலுடன் கேட்டாள் மகி.
அவர்கள் விடப் போவதில்லை என்பதை உணர்ந்து, “எனக்குத் தெரியும்தான். என்றாலும் அதை அவன் சொல்வதுதான் சரி. அதனால் அவனிடமே கேளுங்கள்.” என்று தான் கழன்று கொண்டாள் ராகினி.
ஏனெனில் அவளுக்கு சித்ராவைப் பற்றி மிக நன்றாகவே தெரியும். எவ்வளவுதான் இலகுவாகப் பழகினாலும், அவளுக்குக் கோபம் வந்தால் என்ன செய்வாள் என்று யாராலுமே கணிக்க முடியாது. அதேபோல, அவளது பிடிவாதமும் ராகினி அறிந்ததே!
இசகுபிசகாக தான் ஏதும் சொல்லி, அதுவே முகேஷின் காதலுக்கு சித்ரா மறுப்புச் சொல்லக் காரணமாக அமைந்து விட்டால்? இதை எல்லாம் தெரிந்து வைத்திருப்பதால் தான் முகேஷ் அவ்வளவு தயங்குகிறான் என்பதும் அவள் அறிந்ததே!
அதற்காகக் கடைசிவரை காதலைச் சொல்லாமலும் இருக்க முடியாதே! அதனால்தான் சொல்லிவிடும் படி முகேஷை வற்புறுத்தினாள்.
இப்போதானால் அவளே மாட்டிக் கொண்டாள். இப்படி அவளை மாட்டி விட்டுவிட்டு அவன் எங்கே தொலைந்தான் என்றபடி பார்வையைச் சுழற்றியவளின் விழிகளில் ஹோட்டலுக்குள் வந்து கொண்டிருந்த முகேஷ் பட்டான்.
சிவப்பு ரோஜாக்கள் நிறைந்த அழகான பூ பொக்கேயும் வாழ்த்து கார்ட்டுமாக வந்து கொண்டிருந்தவனைப் பார்த்தவளின் விழிகள் அவனை மெச்சிக் கொண்டது.
அவளின் பார்வையைத் தொடர்ந்த மற்றவர்களும், அவனையும் அவன் கையில் இருந்தவைகளையும் கண்டதும் ஆர்வமும் கேள்வியுமாகப் பார்த்தனர்.
அருகில் வந்தவனோ உலகில் இருக்கும் அனைத்துக் கடவுள்களையும் வேண்டிக்கொண்டு, “சித்து! ஐ லவ் யு!” என்றபடி, அந்த பொக்கேயையும் கார்ட்டையும் நீட்டினான்.
ராகினி மனதுக்குள் சபாஷ் போட, மகி அதிர்ச்சியில் வாயைப் பிளக்க, மோகனோ சித்ராவையே பார்த்தான்.