அவளுக்கும் முகேஷின் செய்கை அதிர்ச்சியே.. மெல்ல மெல்ல அதிர்ச்சி நிறைந்திருந்த இடத்தைக் கோபம் ஆட்கொள்ள ராகினியை சித்ரா முறைக்க, அவளோ தலையைக் குனிந்து கொண்டாள்.
இதற்கிடையில் அங்கு அமர்ந்திருந்த வேறு சிலரும் முகேஷையும், அவன் கையில் இருந்த பொக்கேயையும், சித்ராவையும் வேடிக்கை பார்க்கத் தொடங்கி விட்டனர்.
அப்படித் தன்னை பலருக்குக் காட்சிப் பொருளாக்கிய முகேஷின் மீது எழுந்த கோபத்தைக் கட்டுப் படுத்தியபடி, “இது என்ன முகேஷ்?” என்று பார்வையால் அவன் கையில் இருந்தவைகளைக் காட்டிக் கேட்டாள்.
அவற்றை இன்னும் அவள் புறமாக நீட்டியபடி, “நான் உன்னை விரும்புகிறேன்..” என்றான் அவன் மீண்டும்.
எரிச்சல் கோடுகள் முகத்தில் தெரிய, “உளறாதே!” என்று அதட்டினாள் சித்ரா. “நான் அப்படி உன்னுடன் பழகவில்லை. மோகன் எப்படியோ அப்படித்தான் நீயும் எனக்கு.” என்று படபடத்தாள்.
“ஆனால் எனக்கு உன்னை நிறையப் பிடிக்கும். உன்னைப் பார்த்த நொடியில் இருந்து காதலிக்கிறேன். நீ இல்லாமல் என்னால் வாழவே முடியாது. நீதான் என் உயிர்.” என்றவனின் உளறலைக் கேட்டவளின் பொறுமை பறந்தது.
வேகமாகக் கதிரையில் இருந்து எழுந்து, “எருமை! ஒருக்காச் சொன்னால் விளங்காதா உனக்கு? நான் உன்னை விரும்பவில்லை!” என்றவள், அவன் கையில் இருந்ததை கோபத்தோடு தட்டி விட்டாள்.
கீழே விழுந்த ரோஜாக்களையும் கார்ட்டையும் பார்த்து அவமானப்பட்டு முகம் சிறுக்க அதிர்ந்து நின்றான் முகேஷ்.
அவளின் கோபத்தில் கலவரம் அடைந்த மகி, “சித்து இரடி. எல்லோரும் பார்க்கிறார்கள்.” என்றபடி, அவள் கையைப் பிடித்து மீண்டும் கதிரையில் அமர்த்தப் பார்த்தாள்.
“ப்ச், விடு மகி. பார் இவன் வேலையை. நான் போகிறேன். இங்கேயே நின்றேன் என்றால் இவனை அடித்தாலும் அடித்து விடுவேன்.” என்றவள், அங்கிருந்து வெளியேறினாள்.
ஹோட்டலின் வெளியே வந்தவளின் கையை, ஓடிவந்து முகேஷ் பற்றினான். “மரியாதையாகக் கையை விடு முகேஷ்!” என்றாள் பல்லைக் கடித்தபடி.
“நீ என்னை விரும்புகிறேன் என்று சொல் விடுகிறேன்..” என்றவனின் பேச்சில் இப்போது மெல்லிய குழறல் வந்திருந்தது.
அதில் அதிர்ந்து அவனை பார்க்க, முகேஷின் பின்னாலேயே வந்த ராகினியும், எதுவும் விபரீதமாக நடந்து விடுமோ என்று பயந்து, “முகேஷ், அவளை விடு.” என்றாள்.
“அவளை என்னைக் காதலிப்பதாகச் சொல்லச் சொல் விடுகிறேன்.” என்றான் அவன்.
அவன் பேச்சில் இருந்த வித்தியாசத்தை உணர்ந்த ராகினியும் அதிர்ந்து, சித்ராவைக் குற்ற உணர்ச்சியோடு பார்த்தாள். முகேஷைக் குடிக்கச் சொல்லி அவள் சொல்லாவிட்டாலும், இதற்கு அவளும் ஏதோ ஒருவகையில் காரணம் அல்லவா!
வெறுப்போடு அவளைப் பார்த்த சித்ரா பொறுமை இழந்து, “எல்லோரும் பார்க்கிறார்கள். கையை விடு முகேஷ்.” என்றபடி அவனிடம் இருந்து கையை உதற முயன்று கொண்டிருந்தாள்.
அதற்குள் உண்ட உணவுக்குப் பணத்தைச் செலுத்திவிட்டு மகியுடன் வந்த மோகன், அங்கிருந்த சூழ்நிலையை நொடியில் கணித்து, முகேஷை நெருங்கி,“அவளை விடு முகேஷ்.” என்று அதட்டினான்.
“இல்லை. விடமாட்டேன். அவள் எனக்கு வேண்டும்..” என்றவனிடம் இருந்து வந்த நெடியில் முகத்தைச் சுளித்தான் மோகன்.
“குடித்திருக்கிறாயா?”
மோகனின் காதருகில் குனிந்து, “ம்.. கொஞ்சம். அதனால்தான் தைரியமாகக் காதலைச் சொல்ல முடிந்தது.” என்று கோணல் சிரிப்புடன் ரகசியமாகச் சொன்னான் முகேஷ்.
‘அதுதானே பார்த்தேன். உன் தைரியம் எங்கிருந்து வந்தது என்று..’ என்று மனதில் எண்ணியபோதும், “வா.. வீட்டுக்குப் போகலாம்..” என்றான் மோகன்.
குடித்திருப்பவனோடு இப்போது எதையும் பேசவும் முடியாது. அப்படிப் பேசுவதில் ஏதும் பலன் கிடைக்கும் என்றும் தோன்றவில்லை. அதானால் இப்போது அவனை இந்த இடத்தில் இருந்து அகற்றுவதே முக்கியமாகப் பட்டது மோகனுக்கு.
“இல்லை. சித்து இல்லாமல் நான் எங்கும் வரமாட்டேன்.” என்று உளறத் தொடங்கினான் முகேஷ்.
மகி பயந்தபடி நிற்க, காதலைச் சொல் என்று முகேஷைத் தூண்டிய தன்னுடைய மடத்தனத்தை நொந்தபடி ராகினி நிற்க, வீதியில் வைத்து எதையும் செய்ய முடியாது தடுமாறினாள் சித்ரா.
கையை விடுடா!” என்றாள் அடக்கப்பட்ட ஆத்திரத்தோடு.
மோகனோ, “இது வீதி முகேஷ். போகிற வருகிறவர்கள் எல்லோரும் பார்க்கிறார்கள். அவளை விடு. பிறகு நாம் இதைப்பற்றிக் கதைக்கலாம்..” என்று முகேஷிடம் நைச்சியமாகச் சொல்லிக் கொண்டே, அவன் கையைப் பிடித்து இழுக்க, தடுமாறிய முகேஷ் முன்தினம் பெய்த மலையில் சேறாகி இருந்த இடத்தில் ஒற்றைக் காலை வைத்துவிட்டான்.
அதில் சகதி அவன் உடையிலும் தெறிக்க, அன்று கலையில் புதிதாக வங்கிப் போட்டிருந்த ‘ஷூ’வும் சேற்றில் முற்றாகத் தோய்ந்து விட்டிருந்தது.
“என் புது ஷூ..” என்றபடி, காலைச் சேற்றில் இருந்து தூக்கிக்கொண்டு மோகனைத் திட்ட நிமிர்ந்தவனின் பார்வையில், வீதியில் வண்டியில் வந்துகொண்டிருந்த ரஞ்சன் பட்டான்.
ஹோட்டலின் வாசலில் நின்றிருந்தவன் பிடித்திருந்த சித்ராவின் கையை விடாமல் வீதியின் ஓரத்துக்கு வந்து மற்றக் கையை நீட்டி, “நிற்பாட்டு நிற்பாட்டு” என்று ரஞ்சனை நிறுத்தினான்.
காலையில் சந்தானம் கொடுத்த பணத்தோடு, லாரியை தனக்குப் பின்னால் வரச் சொல்லிவிட்டு தன்னுடைய வண்டியில் மற்றக் கடைகளுக்குச் சென்ற ரஞ்சன், அங்கே ஒவ்வொரு கடையிலும் பெட்டிகளை இறக்கி, விலை விபரங்கள் சொல்லி, எதையெதை எப்படி விற்பது போன்று அனைத்து வேலைகளையும் நான்கு கடைகளிலும் செய்து களைத்துப் போயிருந்தான்.
ஆனாலும் முழு ஈடுபாட்டோடு இஷ்டப்பட்டே கஷ்டப் பட்டான். அந்தளவுக்கு அந்த வேலைகள் அவனுக்குப் பிடித்துப் போயிருந்தது. மதியத்தைப் பொழுது கடந்துவிட்ட போதும், பசி வயிற்றைக் கிள்ளியபோதும் முழு மனதோடு வேலைகளை முடித்துவிட்டு, சந்தானம் சொன்னது போல பணத்தையும் வங்கியில் வைப்புச் செய்துவிட்டு திரும்பிக் கொண்டிருந்தான்.
கடைக்குச் சென்றதும் சாப்பிட வேண்டும் என்று நினைத்தபடி வந்து கொண்டிருந்தவனை ஒருவன் திடீரென்று மறிக்கவும், வண்டியைச் சட்டென்று நிறுத்திவிட்டே யார் என்று பார்த்தான்.
மறித்தது முகேஷ் என்று கண்டதும் கேள்வியாக உயர்ந்த அவன் விழிகள், சித்ராவின் கையைப் பற்றியிருந்த முகேஷின் கையைத் தொட்டு பின் சித்ராவிடம் திரும்பின.
அவளும் அவனைத்தான் பார்த்துக் கொண்டிருந்தாள்.
அவள் விழிகளை அவன் விழிகள் சந்தித்தது ஒரு நொடிதான்.
அந்த விழிகளில் தெரிந்த தவிப்பா, பயமா, தடுமாற்றமா அல்லது இறைஞ்சலா ஏதோ ஒன்று, அவளிடம் என்ன ஏது என்று எதையும் கேட்காமலேயே அவனையும் மீறி இயங்க வைத்தது.
வண்டியை நிறுத்திவிட்டு இறங்கி வந்தவன் சித்ராவைப் பற்றியிருந்த முகேஷின் கையைப் பிடித்தான்.
நடந்தது அவ்வளவுதான்!
ரஞ்சன் வண்டியை நிறுத்தியதும், “என் ‘ஷூ’வில் சேறு பிரண்டு விட்டது. வேறு கொண்டு வா..” என்று சொல்லிக் கொண்டிருந்தவன் ரஞ்சனின் பிடியில், “ஆஆஆ…” என்று கத்தியபடி சித்ராவின் கையை விட்டான்.
சட்டென்று முகேஷை விட்டுத் தள்ளி நின்று கொண்டாள் சித்ரா.
“ஐயோ.. என் கையை என்ன செய்கிறாய். விடு வலிக்கிறது..” என்று முகேஷ் அலற, சித்ராவை ஒரு பார்வை பார்த்துவிட்டு அவன் கையை விட்டவன் தன் வண்டியை நோக்கித் திரும்பி நடந்தான்.
ரஞ்சனின் பிடியில் வலித்த கையைத் தடவிக்கொண்டே, “ஏய் ரஞ்சன்! எங்கே போகிறாய். எனக்கு வேறு ஒரு செருப்புக் கொண்டுவா. இப்படியே நான் போக முடியாது. யாராவது பார்த்தால் சிரிப்பார்கள். முதலில் இதைக் கழட்டி எறிந்துவிடு. இந்த லூசன் பார்த்த வேலையால் நான் சேற்றில் காலை வைத்துவிட்டேன்..” என்றான் முகேஷ்.
தன் வண்டியில் ஏறியபடி, “பார்ப்பவர்கள் சிரிப்பார்கள் என்றால் செருப்பைக் கழட்டி விட்டு வெறும் காலுடன் போ.” என்றான் ரஞ்சன் நக்கலாக.
“என்னது? இதை நான் தொட்டுக் கழட்டுவதா? ச்சிக்! என்னை என்ன உன்னைப் போல கூலிக்கு மாரடிக்கிறவன் என்று நினைத்தாயா? ஆனால் இது உன் வேலைதானே. கழட்டி விடு.” என்றபடி, சேறு பிரண்டிருந்த காலை அவன் புறமாக நீட்டினான்.
சித்ராவுக்கே அவன் செயல் முகத்தைச் சுளிக்க வைக்க, மோகன் செய்வதறியாது நிற்க, ராகினி நடப்பவைகளை ஒருவித அதிர்ச்சியோடு பார்த்திருந்தாள்.
அவர்களை எல்லாம் வேகமாக ஒரு பார்வையால் அளந்தவன், ஆட்காட்டி விரலை நீட்டி முகேஷைத் தன்னருகே அழைத்தான்.
“என்ன?” என்றபடி அருகே வந்தவனின் கன்னத்தில் பளார் என்று ஓங்கி ஒன்று விட்டான் ரஞ்சன்.
“அம்மாஆ..” என்றபடி, சுற்றிச் சுழன்றுபோய் அதே சேற்றிலே விழுந்தான் முகேஷ்.
அறை விழுந்த வேகமும், முகேஷ் சுழன்ற விதத்தையும் பார்த்த சித்ராவுக்கு உடலில் பெரும் நடுக்கமே ஓடியது. அன்று இவன் என்னைத் திருப்பி அடித்திருந்தால் என்ன ஆகியிருப்பேன் என்று நினைக்கவே நெஞ்சு நடுங்கியது. அந்தளவுக்குப் பலமாக இருந்தது அவன் அறை.
அச்சம் நிறைந்த விழிகளால் அவள் பார்த்திருக்க, “கடையில் மட்டும்தான் அது என் வேலை. வெளியே இப்படிக் காலை நீட்டினாய் என்று வை, நீட்டும் காலை உடைத்து விடுவேன் ராஸ்கல்!” என்று முகேஷிடம் சுட்டு விரல் நீட்டி உறுமினான் ரஞ்சன்.
பிறகு ஸ்தம்பித்து நின்ற மற்ற நால்வரையும் பார்த்து, “எல்லோரும் கிளம்புங்கள். ம்!” என்றவனின் உறுமலில் மற்ற மூவரையுமே காணவில்லை.
எப்படி எதில் கிளம்பினார்கள் என்று தெரியாமலேயே மின்னலென மறைந்திருந்தனர் மூவரும்.
“உனக்குத் தனியாகச் சொல்லவேண்டுமா? கிளம்பு!” என்றவனையும், முகேஷையும் மாறிமாறிப் பார்த்தாள் சித்ரா. அவளிடம் வண்டி இல்லையே. முகேஷுடன் தானே அவள் செல்ல வேண்டும். அந்த முகேஷ் இப்போதைக்கு எழுவான் போன்றும் தெரியவில்லை. அதோடு, அவனோடு செல்லவும் இப்போது அவளுக்குப் பிடிக்கவில்லை. இதுதான் அவளின் எண்ணமாக இருந்தது.
அதை அறியாத ரஞ்சன், “ஓ.. நண்பனைத் தனியாக விட்டுவிட்டுப் போக மனம் வரவில்லையோ..” என்று நக்கலாகக் கேட்டவன், “நண்பன் தானா?” என்று அவளைத் துளைக்கும் பார்வையோடு கேட்டான்.
“இவன் எல்லாம் ஒரு நண்பன். குடிகாரன் கையைப் பிடித்தால் மட்டும் இந்தா பிடி என்று கொடுத்துவிட்டு நிற்பாளாம்..” என்று வாய்க்குள் முணுமுணுத்தான் ரஞ்சன்.
அவளுக்குக் கேட்க வேண்டும் என்பதற்காகவே சொல்லப்பட்டது!
அதைக் கேட்டு வெகுண்டு, “வீதியில் வைத்து, அதுவும் குடித்துவிட்டு நிற்பவனை என்ன செய்யச் சொல்கிறீர்கள்? அவன் இன்னும் அசிங்கமாக நடந்து கொண்டால்? இல்லாவிட்டால் நீங்கள் கொடுத்ததையே நானும் கொடுத்திருப்பேன்.” என்று ஆத்திரத்துடன் சொன்னவள் அவன் வண்டியின் பின்னாலேயே ஏறிக் கொண்டாள்.
அதை எதிர்பாராத ரஞ்சன், “ஏய் என்ன செய்கிறாய். இறங்கு!” என்றான் கோபமாக.
“ஏன்?” இறங்காது கேட்டாள் சித்ரா.
“என்ன ஏன்? உன்னை எல்லாம் என் வண்டியில் ஏற்ற முடியாது.”
“அதுதான் ஏன்? நான் ஏறக் கூடாதா? அல்லது நான் ஏறினால் உங்கள் வண்டி ஓடாதா?”
“உன்னை எல்லாம் ஏற்றி நான் ஓட்ட மாட்டேன்.” என்றான் அவன் கடினப்பட்ட குரலில்.
அதைக் கேட்டவளுக்கு மனதில் சுருக்கென்று வலிக்க, சட்டென்று இறங்கிக் கொண்டாள். ஏன் எனக்கு என்ன குறை? அவன் அம்மாவையும் தங்கையையும் மட்டும்தான் எற்றுவானா? நான் ஏறினால் என்னவாம்?
முகத்தைத் தொங்கப் போட்டுக்கொண்டு இறங்கி நின்றவளைத் திரும்பிப் பார்த்து, “உன் ஸ்கூட்டி எங்கே?” என்று கேட்டான் ரஞ்சன்.
“அது வீட்டில்.”
“ஓ..! நண்பரோடு வந்தீராக்கும்! இவனை எல்லாம் ஒரு மனிதன் என்று நம்பி வந்திருக்கிறாய்.” என்று எரிந்து விழுந்தவன், வீதியில் சென்ற ஆட்டோவைக் கைகாட்டி மறித்தான்.
அவனின் செய்கையில் அவளுக்குச் சினம்தான் வந்தது.
அப்படி என்ன தங்கக் கட்டியா அவன் வண்டி? அவள்தான் அதில் ஏறத் தகுதி அற்றவளா? அல்லது அவளை ஏற்றிச் சென்றால் அவன் குறைந்து போவானாமா?
ஆத்திரத்தோடு அவனை முறைத்தவளைச் சட்டை செய்யாது, “ஆட்டோவில் ஏறு!” என்றான் உத்தரவாக.
பொங்கிய கோபத்தோடு விசுக்கென்று ஆட்டோவினுள் ஏறி அமர்ந்தவளின் அருகே தன் வண்டியை நகர்த்தி, சற்றே குனிந்து அவள் முகத்தை பார்த்து, “பெட்டைக் கோழி முட்டை போட மட்டும்தான் லாயக்கு என்று இப்போதாவது புரிந்திருக்குமே! இனியாவது அடங்கி இரு.” என்றான் வீம்புக்கு.
அதைக் கேட்டு ஆத்திரத்தில் முகம் சிவக்க சொல்வதறியாமல், சீண்டி விடப்பட்ட நாகம் போல் சிலிர்த்துக்கொண்டு நின்றவளைப் பார்த்தவனின் உதடுகள் முதன்முறையாக அடக்கப்பட்ட சிரிப்பில் துடித்தது.
ஆட்டோக் காரரிடம் திரும்பி, “வண்டியை எடுங்கள்.” என்றான் ரஞ்சன்.


