“ஐம்பதாயிரம் தானே. வங்கியில் இருந்து எடு.” என்று இராசமணி சொன்னபோது கூட, “அப்பாவும் நீங்களும் செய்த அதே பிழையை நானும் செய்யக் கூடாது. என்ன கஷ்டப் பட்டாலும் சேமிப்பு என்று கொஞ்சமாவது இருக்கவேண்டும்.” என்றவன், இப்போது எதற்குக் கேட்கிறான் என்று ஓடியது அவர் சிந்தனை.
“அதம்மா, இங்கே ஒரு கடை வாடைக்கு வருகிறதாம். ஒரு பத்து லட்சம் இருந்தால் எடுத்து நடத்தலாம். அதுதான் கேட்டேன்.” என்றவனிடம்,
“சரிதான். ஆனால், ஏதாவது நஷ்டத்தில் போய்விட்டால் நித்திக்கு என்ன செய்வது? அவளுக்கு என்று சேர்வது அந்தப் பணம் மட்டும் தானே.” என்று தன் கருத்தைச் சொன்னார் இராசமணி.
கடையை ஆரம்பிக்க முதலே நஷ்டத்தைப் பற்றிய பேச்சா என்று தோன்றியபோதும், தங்கையை நினைத்தவனுக்கு அவரின் பேச்சில் பெரும் பிழை இருப்பதாகவும் தோன்றவில்லை.
“அப்படி என்றால் வீட்டை அடவு வைத்துப் பணம் எடுக்கவா?” என்று கேட்டவன், தாய் பதில் சொல்ல முதலே, “நல்ல இடம் அம்மா. அங்கே தொடங்கினால் எண்ணி ஆறு மாதத்தில் வீட்டை மீட்டுவிடுவேன்.” என்றான், நம்பிக்கையும் உறுதியும் நிறைந்த குரலில். அதற்குச் சம்மதியுங்கள் என்கிற வேண்டுதலும் தூண்டுதலும் இருந்தது அவன் கூற்றில்.
“இல்லை. வீட்டை அடவு வைக்க நான் சம்மதிக்க மாட்டேன்!” முடிவான குரலில் உடனேயே சொன்னார் இராசமணி.
“அம்மா?” தாயின் பேச்சையும் அது காட்டிய தொனியையும் அவனால் நம்ப முடியவில்லை.
“ஏன்மா? அதுதான் ஆறு மாதத்தில் மீட்டுவிடுவேன் என்கிறேனே. என் மேல் உங்களுக்கு நம்பிக்கை இல்லையா?” கோபமும் மனத்தாங்கலுமாகக் கேட்டான்.
“ரஞ்சன்! உன் மேல் நம்பிக்கை இருக்கிறதா இல்லையா என்கிற பேச்சுக்கே நான் வரவில்லை. என் பிள்ளையை நான் நம்பாமல் இல்லை. இது உன் அப்பாவின் வீடு. அவர் நினைவாக நம்மிடம் எஞ்சி இருப்பது. நம்மிடம் இருக்கும் ஒரே சொத்தும் இதுதான். அதற்கு ஒன்று என்றால் பிறகு நீ உன் அம்மாவையும் உயிருடன் பார்க்க மாட்டாய். சரி.. வேண்டுமானால் அப்பாவின் பென்ஷன் காசை எடுத்து என்னவாவது செய். வீட்டின் மேல் கடன்வாங்க நான் சம்மதிக்கவே மாட்டேன்.” என்றவரின் பேச்சைக் கேட்டு ஸ்தம்பித்து நின்றான் ரஞ்சன்.
என்ன சொல்கிறார் அம்மா. அவன் அப்பா மீது அவனுக்குப் பாசம் இல்லையா? அவரின் நினைவாக எஞ்சியிருப்பது அந்த வீடு மட்டும்தான் என்று அவனுக்கு மட்டும் தெரியாதா. அந்த வீட்டை அவ்வளவு இலகுவாகப் போனால் போகிறது என்று அவன் கையைக் கழுவி விட்டுவிடுவானா? தங்கை மீது அவனுக்குப் பாசம் இல்லையா? அல்லது அவளது எதிர்காலத்தின் மீது அக்கறைதான் இல்லையா? அவள் வாழ்க்கையோடு அவன் விளையாடுவனா?
இதற்கு முதல் இப்படி அவரிடம் அவன் பணம் கேட்டிருக்கிறானா? அல்லது எதையாவது நாசமாக்கித்தான் இருக்கிறானா?
ஏன் இப்படி எல்லாம் அம்மா கதைக்கிறார்? இதில் உயிரை விட்டுவிடுவேன் என்று மிரட்டல் வேறு!
மனதில் ஒரு புறம் வலித்தாலும், என்ன ஆனாலும் சரி அந்தக் கடையை எடுத்து முன்னுக்கு வந்து காட்டியே ஆகவேண்டும் என்கிற வெறியும் மறுபுறம் உண்டானது.
அவனை நம்பாத அம்மாவிடமே உங்கள் மகன் ஒன்றும் அவ்வளவு திறமை இல்லாதவன் இல்லை என்று காட்டவேண்டும்! நான் தோற்றுவிடவில்லை என்று நிரூபிக்க வேண்டும்!
பிறகு மற்றவர்களிடமும்!
ஆனால் பணத்துக்கு என்ன செய்வது?
மீண்டும் அந்த ‘ஆனால்..’ முன்னுக்கு வந்து அவனது உறுதியை உருக்குலைக்கப் பார்த்தது.
இல்லை விடக்கூடாது! வென்று காட்டவேண்டும்!
அதற்கு என்ன செய்யலாம்?
அப்பாவின் பென்ஷன் காசு ஐந்து லட்சம் என்றால். மீதி?
யாரிடம் கேட்பது? அவ்வளவு பணம் தரக்கூடிய அளவில் அவனுக்குத் தெரிந்து யார் இருக்கிறார்கள்?
கண்ணனைப் பற்றி யோசிக்கவே தேவை இல்லை. சுகந்தனுக்கும் ஜீவனுக்கும் இவனை விட மோசமான நிலை. அடுத்து யார்..? சந்தானம். அவரிடம் கேட்கலாம், ஆனால் ஐந்து லட்சம் கேட்கலாமா?
அப்படியே கேட்டாலும், அவர் எதற்கு என்று கேட்டால் என்ன சொல்வது? உங்களுக்கு எதிராக இன்னொரு செருப்புக் கடை திறக்கப் போகிறேன் என்று சொல்லத்தான் முடியுமா? சொன்னால் அவர்தான் தருவாரா?
சும்மா வேறு எதற்கும் என்று சொல்லி ஒரு.. ஒரு லட்சம் கேட்கலாம். மீதி? என்று ஓடிய சிந்தனையை அவன் கைபேசி சத்தமிட்டுக் கலைத்தது.
எடுத்துப் பார்த்தால், அழைத்தது சுகந்தன். அதை உயிர்ப்பித்துக் காதுக்குக் கொடுத்தபடி, “சொல்லுடா..” என்றான் சலித்த குரலில்.
“என்ன மச்சான் இவ்வளவு சலிப்பு? அந்த சண்டைக் கோழி திரும்ப உன்னிடம் வம்புக்கு வந்தாளா?” என்று கன அக்கறையாகக் கேட்டான் அவன்.
கடையைப் பற்றிய யோசனையில் இருந்தவனுக்கு சுகந்தன் சொன்ன ‘சண்டைக் கோழி’ யார் என்று புரிவதற்கே நேரமெடுத்தது.
“யாரடா…” என்று ஆரம்பித்தவன், சித்ராவைச் சொல்கிறான் என்று தெரிந்ததும், அன்று நடந்தவைகளும் அவளும் மனக்கண்ணில் ஆடியபோதும், “அவளால் ஒன்றும் இல்லையடா..” என்றான்.
“பிறகு?”
“என்ன பிறகு? எனக்கு அவள் மட்டும்தான் பிரச்சினையா? இது வேறு.” என்றான் ரஞ்சன் சற்றே சூடான குரலில்.
“இல்லை, எனக்குத் தெரிந்து உனக்குப் பிரச்சினை அவள் மட்டும்தான். அதுதான் கேட்டேன். சரி விடு. அவள் இல்லை என்றால் வேற என்ன?”
கடையப் பற்றிச் சொன்னவன், “காசு இருந்தால் ஆரம்பிக்கலாம். வேகமாக முன்னேறி விடலாம் என்று பார்த்தால், எங்கேடா? நமக்கு நம் வீட்டிலேயே சப்போர்ட் இல்லை. பிறகு எங்கே..” என்றான் அப்போதும் விரக்தியான குரலில்.
சுகந்தனும் அமைதியாகிப் போனான். பெற்றவர்களே பிள்ளைகளை நம்பவில்லை என்றால் வேறு யார்தான் நம்புவார்கள்?
சரி, அப்படியே ஒன்றை ஆரம்பித்து அதிலே தோற்றுப் போனால்தான் என்ன? தோல்விகள் தானே வெற்றிகளைவிடப் பாடம் கற்பிப்பவை?
விழுந்தால் தானே எழுந்துவிடத் தோன்றும்! எழுந்தால் தானே ஓடத் தோன்றும்! இது புரிவதில்லையா பெற்றவர்களுக்கு?
ஏட்டிலும் பேச்சிலும் மட்டும் வாய்கிழியக் கத்திவிட்டு செயலில் ஒன்றும் இல்லாமல் இருக்கும் உலகம்தானே இன்றைய உலகம் என்று நினைத்தவனுக்குத் தன்னாலும் அவனுக்கு உதவ முடியவில்லையே என்று கஷ்டமாக இருந்தது.
“இனி என்னடா செய்யப் போகிறாய்?” என்று மெல்லக் கேட்டான்.
“தெரியவில்லை. ஆனால் கடையை விடக்கூடாதுடா..”
“வேறு வழி ஏதும் இருக்கிறதா என்று யோசி.” என்றவன், “அந்த நாதனிடமே கதைத்துப் பாரேன்.” என்றான் தொடர்ந்து.
“ம்.. அப்படித்தான் நானும் நினைத்திருக்கிறேன். சரிடா, நீ வை. இங்கே கடைக்கு ஆட்கள் வருகிறார்கள்..” என்றுவிட்டு கைபேசியை அணைத்தான்.
வேலை அவனை வெட்டி முறித்தபோதும் மனதில் யோசனை ஓடிக்கொண்டே இருந்தது.
நாதனுடன் காசைப் பற்றிக் கதைக்கவேண்டும் என்பதாலும், கடையைப் பார்க்கும் ஆவலிலும் அவருக்கு அழைத்து இரவு வேலை முடிந்ததும் கடைக்கு வருவதாகச் சொன்னான்.
ஒருவழியாக வேலை முடிய, கண்ணனையும் அழைத்துக் கொண்டு நாதனின் கடைக்குச் சென்றான் ரஞ்சன்.
அட்வான்ஸ் பற்றி அவன் பேச, “பணத்தேவையும் இருப்பதால் தான் விற்க நினைத்தேன். வாடகைக்கு என்றால் வரப்போகும் அட்வான்ஸ் எனக்குக் கட்டாயம் வேண்டும். அதனால் முழுவதும் தருவதாக இருந்தால் கடையை எடு. இல்லை என்றால் நான் வேறு யாருக்கும் கொடுக்கிறேன்..” என்றுவிட்டார் அவர் உறுதியாக.
இனி என்ன செய்வது?
யாரிடம் கேட்பது?
எந்த வழியால் முன்னுக்கு வருவது?
பதில் தெரியக் கேள்விகளுடன் நின்றவனின் விழிகள், அந்தக் கடையை அளந்தது. அதைப் பார்க்கப் பார்க்க விடவே கூடாது என்கிற உத்வேகம் இன்னும் அதிகரித்தது.
கடையின் அமைப்பை அவன் மனது படம் பிடிக்க, அதை எப்படி மாற்றி, எங்கெங்கே என்னென்ன மாதிரி செருப்புக்களை அடுக்க வேண்டும். என்ன செய்ய வேண்டும் என்று வேகமாகக் கணக்குப் போட்டது அவன் மூளை.
மனதுக்குள் அந்தக் கடைக்குத் திறப்புவிழாவே கொண்டாடிவிட்டான் ரஞ்சன். அந்தளவு வேகம் இருந்தது அவன் நெஞ்சில். அதைச் செயலாக்கம் செய்ய முடியாமல் தவித்தது அவன் தேகம்.
என்ன ஆனாலும் சரி கடையை விடுவதில்லை என்கிற பிடிவாதம் தோன்ற, “நான் இந்தக் கடையை எடுக்கிறேன்.” என்றான், உறுதியான குரலில்.
அதைக் கேட்ட கண்ணனுக்கோ பெரும் சந்தோசம். “உண்மையாகவா ரஞ்சன். எனக்குச் சந்தோசம்டா. இனி நீ நன்றாக வந்துவிடுவாய். கையைக் குடு..” என்று அவனை மனமார வாழ்த்தினார்.
நாதனின் பக்கம் திரும்பி, “உங்களை நம்பலாம் தானே நாதன். பிறகு வேறு யாரும் கூடுதலாகப் பணம் தருகிறேன் என்றதும் அவர்களுக்குக் கொடுத்து எங்களை ஏமாற்ற மாட்டீர்கள் தானே.” என்று கேட்டார் கண்ணன்.
நல்லதொரு அமைவிடத்தில் அமைந்திருக்கும் அந்தக் கடையை யாரும் விடமாட்டார்கள் என்பதை உணர்ந்தே கண்ணன் அப்படிக் கேட்டார். அதைப் புரிந்துகொண்ட நாதனும், “என்னை நம்பலாம் கண்ணன். இந்தக் கடை ரஞ்சனுக்குத்தான். அதில் மாற்றம் இல்லை. பணம் கூட என் மாப்பிள்ளைக்குத் தேவைப் படுகிறது. அதனால் தான் அது கட்டாயம் வேண்டும் என்கிறேன்.” என்று தன்னை விளக்கினார்.
இதை எல்லாம் கேட்டுக் கொண்டிருந்த ரஞ்சனுக்கு, சந்தானத்தை எப்படி எதிர் கொள்வது என்கிற யோசனையும் ஓடியது. “நாதன் அண்ணா, இந்தக் கடையை நான் எடுக்கப் போகிறேன் என்பது யாருக்கும் தெரிய வேண்டாம். முக்கியமாக எங்கள் முதலாளிக்கு.” என்றான்.
அவருக்கும் அவன் நிலை புரிந்தது. சந்தானத்திடமே வேலை செய்துகொண்டு, அவருக்கு எதிராகவே ரஞ்சன் ஒரு கடையைத் திறக்கப் போவதை அவர் அறிந்தால், என்ன சொல்வாரோ என்று அவன் யோசிக்கிறான் என்று புரிந்துகொண்டவர், “சரிப்பா, நான் யாரிடமும் சொல்லவில்லை.” என்றார், தெளிவான குரலில்.
வெளியே வந்தவனுக்கு அந்தக் கடையை விட்டுவிட்டு வரவே மனமில்லை. அப்போதே வேலைகளை ஆரம்பித்தால் என்ன என்று மனம் பரபரத்தது. கடையைப் பார்த்தபடியே நின்றவனின் தோளைத் தட்டி, “இனி இது உன் கடைதான். அதனால் இப்போது சந்தோசமாக வீட்டுக்குப் போ. நானும் கிளம்புகிறேன். நேரமாகிவிட்டது..” என்றுவிட்டுத் தானும் கிளம்பினார் கண்ணன்.
பிறகும் அங்கேயே நின்றவனின் மனது பல கணக்குகளைப் போட்டது. அது அவன் வாழ்க்கைக் கணக்கை எப்படி மாற்றுமோ என்கிற யோசனையை விட்டொழித்தான்.
ஒன்றை இழந்துதான் இன்னொன்றைப் பெற முடியும்!