அதனால், “வாருங்கள் அங்கிள் ஆஸ்பத்திரிக்குப் போகலாம்..” என்று அழைத்தான்.
“உனக்கு எதற்கப்பா சிரமம்.” என்று, அப்போதும் அவர் தயங்க, “சிரமம் ஒன்றுமில்லை. வாருங்கள்!” என்று பிடிவாதமாக அவரை ஏற்றிக் கொண்டு வைத்தியசாலைக்குச் சென்றான்.
அங்கே அவரைப் பரிசோதித்து, பெரிதாக ஒன்றுமில்லை என்றபிறகு, வலி மாத்திரைகளும் வாங்கிக்கொண்டு அவரை அவர் வீட்டில் விட்டுவிட்டு அவன் வந்தபோது வங்கி மூடி விட்டிருந்தது.
சந்தானத்திடம் பணத்தைக் கொடுத்து நடந்ததைச் சொல்லலாம் என்று போனால், கடையில் அவரும் இல்லை.
விசாரித்தால் அவருக்கும் ஏதோ மாரடைப்பு என்றும், வைத்தியசாலைக்குக் கொண்டு சென்றுவிட்டார்கள் என்றார்கள்.
‘என்னடா இது!’ என்றிருந்தது ரஞ்சனுக்கு. பெரும் தொகைப் பணம் வேறு கையில். அது வேறு பயமாக இருந்தது.
கோழி குஞ்சை அடை காப்பதுபோல அந்தப் பணத்தைத் திங்கள் வரை பாதுகாத்தவன், அன்று பணத்துடனே வேலைக்கு வந்து, வங்கி திறந்ததும் ஓடிப்போய்ப் அதை வைப்புச் செய்துவிட்டு வந்தான்.
மதியம் போல முகத்தில் சோர்வு தெரிய சோர்ந்த நடையில் வந்த சந்தானத்திடம், “எப்படி இருக்கிறீர்கள் அங்கிள்? வைத்தியர் என்ன சொல்கிறார்.” என்று மெய்யான அன்போடு நலத்தை விசாரித்தான்.
“பரவாயில்லை. சாதாரண நெஞ்சு வலிதானாம். எனக்கு வயதென்ன திரும்பிக் கொண்டா இருக்கிறது சொல்லு. அதோடு இந்தக் கடைகளை எடுத்துப் பார்க்க ஆண்பிள்ளையும் இல்லையே. சித்தும்மாவும் இன்னும் குழந்தை.” என்றவரின் பேச்சைக் கேட்டவனுக்கு, ‘அவளா குழந்தை. பிசாசு!’ என்றுதான் தோன்றியது.
அதை வாய்விட்டா சொல்லமுடியும்? அமைதியாக நின்று அவர் சொன்னதைக் கேட்டுக் கொண்டான்.
பிறகு வெள்ளிக்கிழமை நடந்ததைச் சொல்லி, அன்று காலையில் வைப்புச் செய்த ரசீதை நீட்டியபடி, “சாரி அங்கிள். வெள்ளி என்னால் பணத்தைப் போட முடியவில்லை. அதனால், ஏதும் பில் திரும்பிவிடுமா?” என்று கேட்டான்.
“இல்லை. அப்படித் திரும்பாது. எப்போதும் அங்கே பணம் அதிகமாகத்தான் இருக்கும். அதனால் பயம் ஒன்றுமில்லை. நானும் மாசக் கடைசியில் என் கணக்கும் அவர்கள் ஒவ்வொரு மாதம் அனுப்பும் நிலுவையும் சரியா என்று பார்த்துக் கொள்வேன். அதனால் கவலையில்லை விடு.” என்று சொன்னவர், அவன் வண்டியில் மோதுண்ட நபரைப் பற்றியும் விசாரித்துக் கொண்டார்.
அந்த வாரம் முழுவதும் சிறிது நேரமே சந்தானமும் கடைக்கு வந்துவிட்டுப் போனதில் அவனுக்கும் வசதியாகிப் போனது. மதிய உணவு நேரத்தை அவனது கடையிலேயே கழித்தான். தன்னால் முடிந்த வேலைகளை அப்போதே செய்யத் தொடங்கி விட்டிருந்தான் ரஞ்சன்.
அடுத்த கட்டமாக செருப்புக்கள் மொத்தமாகக் கொள்வனவு செய்யவேண்டும். அவற்றை யாரிடம், எங்கே, எப்படி மலிவு விலையில் வாங்குவது என்பது எல்லாமே அவனுக்கு அத்துப் படியாக இருந்தது. சந்தானத்தின் கடையில் மூன்று வருடம் கடினமாக உழைத்ததற்கு உண்டான பரிசு அது! சிலரைச் சந்தித்தும், சிலரை தொலைபேசியிலும் பிடித்துக் கதைத்தும் விட்டான்.
அவற்றை வாங்குவதற்குப் பணம்? உயிரில்லாப் பணம் உயிருள்ள மனிதர்களுக்கு எத்தனை அவசியம் என்பதை ஒவ்வொரு நொடியும் அவனுக்குத் திரும்பத் திரும்பக் கற்பித்துக் கொண்டிருந்தது.
என்ன செய்வது?
எங்கே போவது?
யாரிடம் கேட்பது?
மீண்டும் அதே கேள்விகள்!
நோயில் வாடிப்போய் இருக்கும் சந்தானத்திடம் கேட்கவும் ஒரு மாதிரியாக இருந்தது. கேட்கத்தான் வேண்டும், இன்னும் கொஞ்சம் அவர் நன்றான பிறகு என்று எண்ணிக் கொண்டான்.
வண்டியை விற்றுவிடலாம் என்று நினைத்தவனுக்கு, எதற்கு எடுத்தாலும் வண்டியை விற்க நினைக்கிறோமே, அதை விற்றால் மட்டும் என்ன பணம் கொட்டவா போகிறது என்று வேறு தோன்றியது.
அவனுடைய பதினெட்டாவது பிறந்தநாளுக்கு அப்பா வாங்கிக் கொடுத்த வண்டி. ஐந்து வருடப் பழையது. அவன் தந்தையின் கடைசிப் பரிசு. ஆனாலும் இப்போதைக்கு அவனிடம் சொத்தாக இருப்பது அது ஒன்றுதானே! அப்படி அதை விற்றாலும் அந்தப் பணமும் பற்றாதே என்று யோசித்துக் கொண்டிருந்தவனிடம் அன்று மாலை சுகந்தனும் ஜீவனும் வந்தார்கள்.
கடைக்கு வந்தவர்கள் ஒதுக்குப் புறமாக அவனை அழைத்துச் செல்ல, “என்னடா?” என்று கேட்டான் ரஞ்சன்.
அதற்குப் பதிலைச் சொல்லாது, சட்டைப் பைக்குள் வைத்திருந்த பணத்தை எடுத்து நீட்டினான் சுகந்தன். “ஏதோ எங்களால் முடிந்ததுடா.”
அவர்கள் நீட்டிய பணத்தையும் அவர்களையும் பார்த்தவனுக்குப் பேச்சு வருவேனா என்றது. தொண்டையைச் செருமிச் சீர்படுத்திக் கொண்டு, “ஏதுடா?” என்று கேட்டான்.
“இரண்டுபேர் வீட்டிலும் இருந்த நகை நட்டெல்லாம் விற்றது. ஒன்றுதான்டா வந்தது. வேறு எங்களிடம் இல்லை மச்சான்..” என்றான் ஜீவன்.
“விசராடா உங்களுக்கு. நான் கேட்டேனா அதை எல்லாம் விற்றுக் கொண்டுவாருங்கள் என்று. மரியாதையாகத் திருப்பிக் கொண்டு போங்கள்.”
“ஏன், நீ கேட்டால் தான் நாங்கள் குடுக்க வேண்டுமோ? நாங்களாகத் தந்தால் வாங்க மாட்டாயா?” என்று அவனுக்கு மேலால் கோபப் பட்டார்கள் அவர்கள்.
அப்போதும் அதை வாங்காது நின்றவனிடம், “சும்மா வாங்குடா. நாளைக்கு நீ நன்றாக வந்தால் திருப்பித் தரமாட்டாயா? எங்கள் தங்கைகளுக்கு ஒரு அண்ணனாக நீயும் நிற்க மாட்டாயா?” என்று ஜீவன் கேட்டதும், அதற்கு மேலும் தன்னைக் கட்டுப் படுத்த முடியாமல் இருவரையும் பாய்ந்து அணைத்துக் கொண்டான் ரஞ்சன்.
அவன் விழிகளில் தவிர்க்க முயன்றும் முடியாமல் நீர் திரண்டது. அவர்களுக்கு அவன் எதுவுமே செய்ததில்லை. ஒரு நண்பன் அவ்வளவுதான்! அதற்கு இவ்வளவு பெரிய பரிசா?
அவன் தாய் அவன் மேல் வைக்காத நம்பிக்கையை அவர்கள் வைத்து அவனிடம் பணத்தை நீட்டுகிறார்கள். மனம் நிறைய, அதற்கு மேலும் மறுக்க முடியாமல் வாங்கிக் கொண்டான். “நிச்சயமாடா! தங்கைகளின் கல்யாணத்துக்கு இந்த அண்ணாவின் சீதனம் நிச்சயம் வரும்டா.” என்றான், உள்ளத்தில் இருந்து.
“அப்படியே வேலையை விட்டுவிட்டு வந்து விடுங்கள்டா. நீங்கள் இருவரும்தான் அந்தக் கடையை இப்போதைக்கு நடத்த வேண்டும்.” என்றவனின் பேச்சைக் கேட்டவர்களின் முகம் உடனேயே பிரகாசமாகிப் பளிச்சிட்டது. மறுக்கும் எண்ணம் அவர்களுக்குத் தோன்றவே இல்லை.
கடைசிவரை அந்த ‘கிரீஸ்’க்குள் தான் தங்கள் வாழ்க்கை முடியப் போகிறது என்று எண்ணி, வாழ்க்கையில் பிடிப்பே இன்றிக் கிடந்தவர்களுக்கு ஒரு வெளிச்சத்தை அல்லவா காட்டுகிறான் நண்பன்!
“உண்மையாவாடா? நீ சும்மா சொல்லவில்லையே?” என்று ஆச்சரியமும் எதிர்பார்ப்புமாகக் கேட்டான் ஜீவன்.
“இந்தப் பணத்துக்காக என்றால் வேண்டாம்.” என்றான் சுகந்தன்.
“இப்போது நீ அடி வாங்கப் போகிறாய் என்னிடம்” என்றான் ரஞ்சன் சுகந்தனிடம்.
“இது நான் முதலே நினைத்தது. நீங்கள் இன்று வராவிட்டால் நாளைக்கு நான் அங்கே வந்து இதைச் சொல்லியிருப்பேன்.” என்றவன், அவன் உடனடியாக வேலையை விடமுடியாத நிலையையும், அவனுக்கு அவர்களின் தேவையையும் புரியவைத்தான்.
அவர்களுக்கோ மிகுந்த சந்தோசம். “சரிடா. கட்டாயம் வருகிறோம். அப்பாடி ஒருவழியாக அந்த நரகத்தில் இருந்து விடுதலை.” என்றான் ஜீவன்.
“ஆனால் இப்போதைக்குச் சம்பளம் என்று எடுப்பது கொஞ்சம் கஷ்டம். கிடைப்பதை வைத்துத்தான் சமாளிக்க வேண்டும்.” என்றவனிடம், “அடப் போடா! அங்கு மட்டும் சம்பளம் என்ன கொட்டியா தருகிறான் அந்தக் கஞ்சன். இது நம் கடை. நமக்காக கஷ்டப் படப்போகிறோம். சந்தோசமாகக் கஷ்டப் படலாம்டா. எங்கள் இருவரையும் பற்றி நீ யோசிக்காதே.” என்றனர் இருவரும் ஒரு மனதாய்.
ரஞ்சனுக்கு அவர்களின் பேச்சில் நம்மால் முடியும் என்கிற நம்பிக்கை இன்னும் உண்டானது.
சற்று நேரம் கடையப் பற்றிப் பேசிக் கொண்டிருந்துவிட்டு முகத்தில் தெளிவுடனும் மனதில் நம்பிக்கையுடனும் அங்கிருந்து கிளம்பினார்கள் ஜீவனும் சுகந்தனும்.