உடனேயே அவனைப் பார்க்கவேண்டும் போல் ஆர்வம் எழ, மெல்ல அவரிடம் இருந்து கழன்று கொண்டாள். “சரியண்ணா. இதை நான் அவரிடம் கொடுத்துவிட்டு அப்படியே வீட்டுக்குப் போய்விடுவேன். அம்மா இன்று ஒரு இடமும் போகாமல் வரச்சொன்னார்..” என்றவள், ஒரு துள்ளலுடன் அவனைத் தேடிச் சென்றாள்.
அவன் மேலே ஸ்டோர் ரூமில் இருப்பதைக் கண்டுகொண்டு, அங்கே சென்றவளின் விழிகள், அவளுக்கு முதுகாட்டி வேலை செய்து கொண்டிருந்தவனை ரசனையுடன் தழுவியது.
விரும்பிப் படித்த படிப்பை, அதுவும் மருத்துவப் படிப்பை விடுவது என்பதே பெரிய விடயம். அப்படியிருக்க அதை விட்டுவிட்டுச் செருப்புக் கடை ஒன்றில் வேலைக்கு வருவது என்பது அதைவிடப் பெரிய விடயம்.
அவளையே, ‘ஓ.. செருப்புக்கடை முதலாளியின் மகளா நீ…’ என்று ஏளனம் செய்பவரே உண்டு. அப்படியிருக்க அவனது நிலை?
அப்படித் தன்னிலை இறங்கி, படிப்பையும் அதனால் வரக்கூடிய ஒளிமயமான எதிர்காலத்தையும் இழந்து, கௌரவம் பாராது குடும்பத்துக்காக அவன் இங்கே வேலைக்கு வந்திருக்கிறான் என்றால், குடும்பத்தின் மீதான அவனது பாசம் புரிந்தது. அக்கறை புரிந்தது.
அதையெல்லாம் தானும் அனுபவிக்க வேண்டும் என்கிற வேகம் எழுந்தது. அவனது மன சாம்ராஜ்ஜியத்தின் ராணியாய் வலம்வர ஆவல் கொண்டாள். தனக்கே தனெக்கென்று அவனைச் சொந்தமாக்கும் ஆசை எழுந்தது.
“இதய..ன்” இதயரஞ்சன் என்று அழைக்க நினைத்தவளின் நா, ‘இதய’வுக்கு மேலே நகர மறுத்ததில், அவன் அவளது இதயன் என்கிற எண்ணமும் எழவே ‘இதயன்’ னோடு நின்றுபோனது அவளது அழைப்பு.
அப்படி அழைத்தவளின் குரலில், நெஞ்சத்து நேசம் முழுவதும் நிறைந்திருந்தது. அந்தப் பெயரைச் சொல்கையிலே அவள் இதயம் நிறைந்து போனது.
அந்த அழைப்பில், அது வந்த தொனியில் ஒரு பெட்டிக்குள் குனிந்து எதையோ செய்து கொண்டிருந்தவனின் கைகள் அப்படியே நின்றன. கைகள் மட்டுமல்ல, அவனது மொத்த உடலுமே தன்னுடைய அசைவை சில நொடிகள் நிறுத்தியது. வேகமாக நிமிர்ந்தவனின் உடல் முழுவதும் இறுக, சில நொடிகள் அப்படியே அவளுக்கு முதுகு காட்டி நின்றவன், நிதானமாகத் திரும்பினான்.
அவன் முகத்தில் உணர்ச்சிகள் அனைத்தும் துடைக்கப் பட்டிருக்க விழிகள் மட்டும் நெருப்பைக் கக்கின.
அதைக் கண்டு கொண்டவளுக்கு எப்போதும் உண்டாகும் கோபமோ ஆத்திரமோ உண்டாக மறுத்தது. மாறாக நேசமே இன்னும் பொங்கியது.
மலர்ந்த விழிகளால் அவனை நோக்கி, “இந்த ‘பில்’லை வங்கியில் போட்டு விடுகிறீர்களா இதயன்?” என்று கேட்டாள்.
அதை வாங்காது கோப விழிகளால் அவளை நோக்கி, “என் பெயர் ரஞ்சன்.” என்றான் கடினமான குரலில்.
“இல்லையே. உங்கள் பெயர் இதயரஞ்சன்.” என்றவளின் உள்ளம், என் இதயத்து ரஞ்சன் என்று சொல்லிக் கொண்டது.
“அப்படியே கூப்பிடு.”
“முடியாது! உங்கள் முழுப்பெயர் சொல்லிக் கூப்பிட எனக்கு வாய் வலிக்கிறது.”
இவ்வளவு நாளும் அப்படிக் கூப்பிட்டவளுக்கு இப்போது வாய் வலிக்கிறதாமா என்கிற ஆத்திரத்தில், “அதுதான் ரஞ்சன் என்று கூப்பிடு என்று சொன்னேனே.” என்று எரிந்து விழுந்தான் அவன்.
“முடியாது! எனக்குப் பிடித்த மாதிரித்தான் நான் கூப்பிடுவேன். இதயன் என்று கூப்பிடத்தான் எனக்குப் பிடித்திருக்கிறது.” என்றாள் அந்தப் பிடிவாதக்காரி.
ஆத்திரத்தோடு அவளை உறுத்தவன் சில நொடிகளிலேயே தன் பார்வையைத் திருப்பிக் கொண்டான். “உன் திமிரை என்னிடம் காட்டாதே என்று அன்றே உனக்குச் சொல்லிவிட்டேன். மரியாதையாக இங்கிருந்து போ!” என்றான் அவள் முகம் பாராது.
இந்தச் செயல் கூட ரஞ்சனிடம் புதிதாகத் தெரிந்தது சித்ராவுக்கு. அதுவரை காலமும் அவளிடமிருந்து பார்வையை அவன் திருப்பியதே இல்லை. அவளைப் போலவே!
தளராது அவளை நோக்கும் அவன் விழிகளுக்கு என்னவாகிற்று? சிந்தனை உள்ளே ஓடியபோதும் அவனுக்குப் பதில் சொன்னாள் சித்ரா. “சரி போகிறேன். இந்த ‘பில்’லை வாங்கிக் கொள்ளுங்கள்.”
அவளிடமிருந்து அதை வாங்காமல், “கண்ணன் அண்ணாவிடம் கொடுத்துவிடு. நான் அவரிடம் வாங்கிக் கொள்கிறேன்.” என்றான் அவன்.
ஏன், என்னிடம் வாங்கினால் குறைந்து போவானா என்று கோபம் எழுந்தபோதும், அவனிடமிருந்து ஒரு வாழ்த்தைப் பெற்றுவிடும் ஆசையில் தழைந்தே போனாள் சித்ரா.
“அவரிடமே கொடுத்து விடுகிறேன். மறக்காது வாங்கிக் கட்டிவிடுங்கள்.” என்றவள், “இன்று எனக்குப் பிறந்தநாள் இதயன்..” என்றாள் மெல்ல.
ஆத்திரத்தில் பல்லைக் கடித்தான் ரஞ்சன். அவ்வளவு சொல்லியும் கேட்காமல் மீண்டும் இதயன் என்று சொல்லும் அவளுக்கு வாழ்த்துச் சொல்லக் கூடாது என்கிற பிடிவாதம் அவனிடமும் வலுத்தது. “அதற்கு?” என்று அலட்சியமாகக் கேட்டான்.
“ஒரு வாழ்த்துச் சொல்ல மாட்டீர்களா?” என்று மென்மையாகவே கேட்டவளின் குரலில் எதிர்பார்ப்பு மிகுந்திருந்தது.
“எதற்கு?” அப்போதும் சுருக்கமாகக் கேட்டவனின் கேள்வியில் அவளுக்கு வலித்தது.
ஒரு வாழ்த்துச் சொல்வதற்கு இந்தப்பாடா? அந்தளவுக்கு அவள் மீது அவனுக்கு என்ன கோபம்?
அம்மா வாழ்த்தி அவள் கட்டியிருக்கும் சேலையைக் கொடுத்தபோதும் சந்தோசப் பட்டாள் தான். தந்தை வாழ்த்தி ஒரு தங்கச் சங்கிலியை கழுத்தில் அணிவித்தபோது மகிழ்ந்தாள் தான். தோழிகள் எல்லோரும் அழைத்து வாழ்த்தியதில் குதூகலித்தாள் தான். கடையில் எல்லோரும் வாழ்த்தியபோது ஒரு புன்னகையோடு ஏற்றுக் கொண்டாள் தான். ஆனாலும் அவனது ஒரு வாழ்த்திற்காக ஏங்கியது அவள் உள்ளம். அதில் மட்டுமே நிறைவு கொள்ளத் துடித்தது அவளது நேசம் கொண்ட நெஞ்சம்.
“எதற்கா? இந்தப் பிறந்தநாளில் நான் ஆசைப் பட்டது எல்லாம் நடக்கவேண்டும் என்று வாழ்த்துங்கள் இதயன்.” என்றாள்.
அவளின் பேச்சுக்கு இணங்கி நடந்துவிட்டால் அவன் இதயரஞ்சன் அல்லவே! தயவு தாட்சண்யம் சிறிதும் இன்றி, “முடியாது!” என்றான் அவன்.
“ஏன்?” என்று கேட்டவளின் குரலில் மீண்டும் பிடிவாதம் இடம் பிடிக்க ஆரம்பித்து இருந்தது.
“அது அப்படித்தான்.” என்றவன் தொடர்ந்து, “நானாக விரும்பி உன்னை வாழ்த்தவேண்டும். அப்படி உன்னை வாழ்த்த எனக்குப் பிடிக்கவில்லை எனும்போது, இப்படிக் கெஞ்சிக்கொண்டு நிற்கிறாயே.. உனக்கு வேறு வேலையே இல்லையா?” என்று ஏளனமாகக் கேட்டவனின் கேள்வியில் நிமிர்ந்தாள் சித்ரா.
“நானும் பிடிவாதக்காரிதான் இதயன். உங்களின் வாயால் வாழ்த்தைக் கேட்காமல் நானும் இன்று கடையை விட்டுப் போகமாட்டேன்.” என்றவளின் பேச்சைக் கேட்டவனின் கீழுதடு ஏளனமாக வளைந்தது.
“உன்னால் முடிகிறதா பார்க்கலாம்.” என்று அலட்சியமாகச் சொன்னவன், அந்த ரூமை விட்டு வெளியேற எண்ணி, வாசலை நோக்கி நடந்தான்.
அவனைத் தடுக்கும் விதமாக, “இதயன்” என்று அழைத்து, “ஏன் உங்களுக்கு என் மீது இவ்வளவு கோபம்?” என்று பொறுமையாகக் கேட்டாள் சித்ரா.
அவள் கேள்வி காதிலே விழாதவன் போன்று அவளைத் தாண்டிச் செல்லப் பார்த்தவனின் கையைப் பிடித்து, “என் கேள்விக்குப் பதிலைச் சொல்லிவிட்டுப் போங்கள்.” என்றாள் பிடிவாதமாக.
அவளது கையைத் தன்னுடைய மற்றக் கையால் தட்டிவிட்டவன், வெறுப்பை முகத்தில் காட்டி, “ஒரு பெண்ணாக உனக்கு நடக்கவே தெரியாதா?” என்று கேட்டான்.
“ஏன்? நான் கையைத் தொட்டால் உங்கள் கற்பு போய்விடும் என்று பயமா?” என்றவளைப் பார்த்தவனின் விழிகளில் வெறுப்பு மூண்டது.
“நீ சொன்னாலும் சொல்லா விட்டாலும் நான் கற்புள்ள பொடியன்(பையன்) தான். உன்னைப் போல் இல்லை.” என்றவனின் பேச்சில் வெகுண்டு போனாள் சித்ரா.
ஆனாலும், அவனது கையை பிடித்ததில் மட்டுமே அப்படிச் சொல்வதாக எண்ணி, அதன் ஆழத்தை யோசிக்கத் தவறினாள்.
“ஒருவனின் கையைப் பிடிப்பதாலேயே கற்பு போய்விடும் என்றால், நான் மட்டுமல்ல நீங்களும் அப்படித்தான்.” என்றவள், அவன் முகத்தில் உண்டான கோபத்தைக் கண்டு, “அன்று என் கையைப் பிடித்து நீங்கள் இழுக்கவில்லை?” என்று அவனைப் பார்த்துக் கேட்டாள்.
அவளை முறைத்தபடி நின்றவனின் நெஞ்சில் ஆட்காட்டி விரலால் சுட்டிக் காட்டி, “அதனால் இந்தச் சிடுமூஞ்சிக்கு நான் சரியான ஜோடிதான்.” என்று இப்போது தன்னைச் சுட்டிக் காட்டிச் சொன்னாள் சித்ரா.
அதைக் கேட்டவன் அதிர்ந்து நின்றான்.
இவள் என்ன சொல்கிறாள்? சொல்வதைப் புரிந்து சொல்கிறாளா அல்லது இதையும் விளையாட்டாகச் சொல்கிறாளா என்று எண்ணியபடி அவளைக் கூர்ந்தான் ரஞ்சன்.
கண்களில் குறும்பும் இதழ்களில் மயக்கும் புன்னகையுமாக நின்றவளைப் பார்த்தவனின் விழிகளில் மாற்றம் மெல்ல உருவாக, தன்னை மறந்து அவளில் மூழ்க இருந்தவன் தலையை உலுக்கி அதில் இருந்து தன்னை விடுவித்துக் கொண்டான்.
கோப முகமூடியை மிக வேகமாக அணிந்து, “போடி லூசு! உன்னோடு மனிதன் கதைப்பானா?” என்று சீறிவிட்டு வேகமாகப் படிகளில் இறங்கலானான். அவளின் செயல்களில் தடுமாறி, அவளிடம் தொலையப் பார்த்த இதயம் இருக்கும் இடத்தைத் தடவிக் கொடுக்கத் தவறவில்லை அவன் கை.
“போ மச்சான் போ! எங்கே போகப் போகிறாய்? கீழே தானே. நானும் வருகிறேன். வந்து உன் வாயால் வாழ்த்தைக் கேட்காமல் போகமாட்டேன்..” என்றவளின் பேச்சைக் கேட்காதவன் போன்று சென்றுவிட்டான் ரஞ்சன்.
அவன் சென்ற உடனேயே கீழே செல்ல அவளுக்கு மனம் வர மறுத்தது. அவனுடன் கழித்த அந்த நிமிடங்களை அசை போட்டவளுக்குத் தன் மனநிலையும் அதில் உருவாகியிருக்கும் நேசமும் புரியாமல் இல்லை.
புரிந்த விஷயம் பயத்தையோ பதட்டத்தையோ கொடுக்கவே இல்லை. மனதுக்குள் ஒரு மலர் மலர்வது போன்று, நெஞ்சுக்குள் உருவான நேசம் அவளைப் பரவசமே படுத்தியது.
தன் மனதை அவனிடம் மறைமுகமாக உணர்த்தி விட்டதையும் அவள் அறிவாள். ஏன், அதற்கான அவனது முடிவு என்ன என்பதையும் கூட அறிவாள்.
அதை நினைத்ததெல்லாம் அவளுக்குக் கவலையே இல்லை. அவனைச் சம்மதிக்க வைத்துவிடலாம் என்கிற நம்பிக்கை மலையளவு இருந்தது.
அவனையும் அவனது கோபத்தையும் எண்ணிச் சிரித்தபடி பார்வையைச் சுழற்றியவளின் விழிகளில் அங்கிருந்த அவனது கைக்குட்டை பட, ஆவலுடன் விரைந்து சென்று அதை எடுத்தாள். அதில் இருந்த வியர்வை நாற்றம், நாற்றமாக அல்லாது அவனது வாசனையாகவே நாசியை வருடியது.
அதையும் கையில் பிடித்தபடி, கீழே இறங்கிச் சென்றவள் கண்ணனை நாடிச் சென்றாள். அங்கே கண்ணனுக்கு அருகிலேயே ரஞ்சனும் நிற்பதைக் கண்டவளின் விழிகள் பளிச்சிட, “கண்ணன் அண்ணா இன்று என் பிறந்தநாள் என்று உங்களுக்குத் தெரியும் தானே.” என்று கேட்டாள்.
“காலையிலேயே நீ சொல்லி, நானும் வாழ்த்துச் சொல்லிவிட்டேனேம்மா.”
“ஆமாம் அண்ணா. நீங்கள் சொல்லி கடையில் வேலை செய்யும் எல்லோருமே என்னை வாழ்த்தினார்கள், ஒருவரைத் தவிர..” என்றவளின் முகம் அநியாயத்துக்கு வாடி வதங்கிக் கிடந்தது.
அதைப் பார்த்தவருக்கு மனம் உருகிப் போனது. இருபத்தியோர் வயதாகியும் இன்னும் சின்னப்பிள்ளை போல் இருக்கிறாளே என்று எண்ணியபடி, “யார் சொல்லவில்லை என்று சொல்லு. நான் சொல்லச் சொல்கிறேன்.” என்று பாசத்தோடு கேட்டார்.
“உங்கள் ஆசைத் தம்பி சொல்லவில்லை அண்ணா…” என்றவளின் முகம் விட்டால் அழுதுவிடுவேன் என்பது போலிருந்தது.
அவளது நடிப்பை உணராது, “என்னடா ரஞ்சன்? அவளுக்கு பிறந்தநாள் என்று சொல்கிறாள். ஒரு வாழ்த்து சொல்ல மாட்டாயா?” என்று கேட்டார் அவர்.
விழிகளில் வெற்றிக் களிப்பு மின்ன, முகத்தை அப்பாவியைப் போன்று வைத்திருந்தவளைப் பார்வையால் எரித்தபடி வாயைத் திறக்காது நின்றவனைப் பார்த்து, “சொல்லுடா..” என்றார் மீண்டும்.
அதற்கு மேலும் ஒன்றும் செய்ய முடியாமல், “பிறந்தநாள் வாழ்த்துக்கள்.” என்று பற்களுக்குள் வார்த்தைகளைக் கடித்துத் துப்பினான் ரஞ்சன்.
முகம் முழுவதும் மலர, “நன்றி இதயன்.” என்றவள் வேகமாக அவனை நெருங்கி, “இன்று அப்பா கடைக்கு வரமாட்டார். அதனால் கண்ணன் அண்ணா கடையை விட்டுவிட்டுப் போகமுடியாது. நீங்கள் இந்த ‘பில்’லை வங்கியில் கட்டிவிடுங்கள்.” என்றபடி, அதையும் அவனிடம் நீட்டினாள்.
மறுக்க முடியாமல் வாங்கிக் கொண்டான் ரஞ்சன்.
கண்ணனிடம் திரும்பி, “நான் வீட்டுக்குக் கிளம்புகிறேன் கண்ணன் அண்ணா..” என்றாள் சித்ரா.
“சரிம்மா. கவனமாகப் போ.” என்றவர் வேலையைப் பார்க்கச் சென்றுவிட, ரஞ்சனிடம் திரும்பி, “எப்படி, நீங்கள் மறுத்த இரண்டையுமே உங்களைச் செய்ய வைத்துவிட்டேன். இந்தச் சித்ரா நினைப்பதைச் சாதிப்பவள் என்று இப்போதாவது புரிந்ததா? இந்தப் பெட்டைக்கோழி நினைத்தால் உங்கள் வாலை ஒட்ட நறுக்கி விடுவேன். ஜாக்கிரதை!” என்றாள் விழிகளில் குறும்பு கூத்தாட.
“ஏய்!” என்று பல்லைக் கடித்தவனைப் பார்த்துக் குறுநகை இலங்க, “பாய் இதயன்!” என்றவள், அவனது கைக்குட்டையைக் காட்டி, “என் பிறந்தநாளுக்கு உங்களுடைய பரிசாக இதை வைத்துக் கொள்கிறேன்.” என்றுவிட்டு, வேகமாகக் கடையை விட்டு வெளியேறினாள்.