பிரியந்தினிக்கு அன்றைய விடியல் கணவனின் கைகளுக்குள்
மிக அழகாய்ப் புலர்ந்தது. சற்றுக்கு அவனையும் அவனின் அருகண்மையையும் அனுபவித்தபடி அப்படியே கிடந்தாள். நேரம் ஆகிக்கொண்டிருந்தது. வேலைக்குப் போக வேண்டுமே என்கிற எண்ணத்தைச் சபித்தபடி அவனிடமிருந்து மெல்ல விலகி எழுந்தாள். காலைக்கடன்களை முடித்து அவள் தயாரானபோதும் அவன் எழுந்திருக்கவில்லை.
அவளுக்கும் அவனை எழுப்ப மனமேயில்லை. அந்தளவுக்கு அடித்துப்போட்டதுபோல் உறங்கிக்கொண்டு இருந்தான். ஆனால், வேறு வழி இல்லையே. இங்கேயே நிற்பானா போகவேண்டுமா எதுவுமே தெரியாது. அதையெல்லாம் எங்கே இரவு பேசிக்கொண்டார்கள். அவர்களின் கேள்விகளும் சந்தேகங்களும் வேறு ஒன்றில் அல்லவா நிறைந்துபோய்க் கிடந்தது.
தன் நினைவுகள் கொடுத்த வெட்கத் தித்திப்புடன் அவனைத் தட்டி எழுப்பினாள். வேலைக்குப் புறப்பட்டு நிற்பதைக் கண்டு கோபிப்பானோ என்கிற பதட்டம் உள்ளூர இருந்தாலும், விழித்தவனிடம், “குட்மோர்னிங்!” என்றாள் மலர்ந்த முகத்துடன்.
“குட்மோர்னிங்!” சிறு முறுவலுடன் சொல்லியபடி சுகமாகப் புரண்டுவிட்டு எழுந்து அமர்ந்தான்.
அவள் தயாராக நிற்பதைக் கண்டு கண்கள் தானாக நேரத்தைப் பார்க்க, “வேலைக்கு நேரமாயிட்டுதா?” என்றான்.
“ம். நீங்க நிப்பீங்களா? இல்ல..” என்றவளிடம், “போகோணும் யதி. ஈவ்னிங் ஷிப்ட் இருக்கு.” என்று பதிலளித்தபடி எழுந்து பாத்ரூமுக்குள் நுழைந்துகொண்டான்.
‘ஈவ்னிங் ஷிப்ட் எண்டா.. அத முடிச்சிட்டு நித்திரையே கொள்ளாம முல்லைத்தீவுக்கு வரப்போறாரா?’ என்று மனம் அவனைப்பற்றி யோசித்துக் கவலைப்பட, கைகள் வேகமாக வாட்டிய டோஸ்டில் பட்டர் தடவியது. அதற்குள், மிளகும் உப்பும் போட்டுச் செய்த ஒம்லெட்டோடு சீஸ் வைத்து, வெள்ளரித் துண்டுகளோடு சாலட்டும் வைத்தாள். கூடவே, பால் தேநீரையும் தயாரித்து எடுத்துவந்து மேசையில் வைத்தாள். அதைச் செய்த அதே நேரத்தில், இன்னொரு அடுப்பில், அவன் அங்கு பகலுக்குச் சாப்பிடுவதற்கு ஏதுவாக, இறாலும் மரக்கறிகளும் சேர்த்து அவசர உப்புமாவைக் கிண்டி முடித்தாள்.
குளித்துவிட்டு வந்தவனின் உலர்ந்த உடைகளை மட்டும் அவனுடைய பயணப்பையினுள் எடுத்து வைத்தாள். ஈரமாக இருந்தவற்றைக் காட்டி, “அது இங்கயே இருக்கட்டும். பிறகு வரேக்க தேவைப்படும் தானே!” என்று இயல்பாகச் சொன்னவளை நெருங்கி, அணைத்துக்கொண்டான் அவன்.
“பிறகும் வரச்சொல்லி சாடைமாடையா சொல்லுறியா?” என்றான் அவளின் காதோரம்.
“ஏன் வரமாட்டீங்களா?” அவன் கைகளுக்குள்ளேயே திரும்பி, அவனோடு தானும் இழைந்தபடி கேட்டாள் அவள்.
“எனக்குப் போகவே மனமில்லாம இருக்கு!”
“எனக்கும் தான்..”
“முடிஞ்சவரைக்கும் கெதியா இங்க வரப்பாக்க வேணும் யதி. இது விசர் வாழ்க்கை!” இந்தப் பிரிவை அறவே வெறுத்தபடி சொன்னான் அவன்.
அதே ஏக்கம் அவளுக்கும் தானே. எப்படி இப்படி மாறிப்போனார்கள் என்பது இருவருக்குமே புரியாத புதிர்தான். அவர்களுக்கிடையிலான அந்த முறுகல் நிலை இன்னும் அப்படியேதான் இருக்கிறது. இருந்தாலும் இருவரும் மற்றவரின் அருகண்மைக்காக மிகவுமே ஏங்கினர். தன் ஏக்கத்தைச் சொல்கிறவளாக, அவனை இறுக்கிக் கட்டிக்கொண்டு அவன் மார்பில் முத்தமிட்டாள் அவள். அதையே அழைப்பாக ஏற்று அவளை அள்ளிக்கொண்டு படுக்கையை நோக்கி நகர்ந்தான் அவன். முகம் சிவந்தாலும் மறுக்கவில்லை அவள்.
இருவரும் இதமான அணைப்பிலேயே கட்டுண்டு இருந்தனர். பிரியவே மனமில்லை. அவளுக்கு நேரமாவதை உணர்ந்து அவன் விலகினான். அவள் தன்னைச் சீர் செய்துகொண்டு வந்தாள். கலைந்துபோயிருந்த தலையைக் கவனித்துவிட்டு மீண்டும் வாரினாள்.
அதன் காரணத்தை உணர்ந்து, கண்ணாடியில் அவளைப் பார்த்துக் கண்ணடித்துச் சிரித்தான் அவன். முகம் சூடாக, கையில் இருந்த சீப்பினாலேயே அவனுக்கு ஒன்றைப் போட்டுவிட்டுச் சாப்பிட வந்தாள் பிரியந்தினி.
காலை உணவுவேளை மௌனமாகவே நகர்ந்தது. கடக்கிற நொடிகள் எல்லாம் அவர்களின் பிரிவை நோக்கித் தள்ளியதில் வார்த்தைகள் தொண்டைக்குள் சிக்கிக்கொண்டன. வேகமாகத் தன் உணவை முடித்துவிட்டு ஓடிப்போய் ஆறவைத்திருந்த உப்புமாவை ஒரு பொக்சில் போட்டு எடுத்துவந்து, அவனிடம் கொடுத்தாள். “கூடத்தான் செய்தனான். பகலுக்கும் சாப்பிட்டு இரவுக்கும் சாப்பிடுங்கோ.”
கிடைத்த சொற்ப நேரத்தில், அவனுக்காகச் செய்திருக்கிறாள். எப்போதுமே அவளிடம் இருக்கிற பொறுப்பும், எறும்பின் சுறுசுறுப்பும் அவனை மிகவுமே ஈர்த்தது. மனம் கனிய ஒரு கையால் அவளைத் தோளோடு அணைத்து, “தேங்க்ஸ் செல்லம்!” என்றான் நெற்றியில் முத்தமிட்டு.

