பிரியந்தினிக்கு வழமையாகக் கோகுலன் அழைக்கும் நேரம் தாண்டி இருந்தது. ஆனாலும், அவனிடமிருந்து அழைப்பு வரவில்லை. ஏனோ? கேள்வி பிறக்க அவளே அவனுக்கு அழைத்தாள்.
“சொல்லு யதி!”
அவனுடைய சோர்ந்த குரல் என்னவோ ஏதோ என்கிற கலக்கத்தை அவளுக்குள் விதைத்தது. “உடம்பு சரி இல்லையா கோகுல்? ஏன் ஒரு மாதிரி இருக்கிறீங்க?” கரிசனையும் கவலையுமாக விசாரித்தாள். “ஏலாது எண்டா நீங்களா எடுத்துச் சொல்ல மாட்டீங்களா? நான் லீவு போட்டுட்டு அங்க வந்திருப்பன் எல்லா?” அவளின் அந்த மெல்லிய கோபம், தன் மீதான அன்பில் விளைந்தது என்பதால் மனதில் இதமாய் உணர்ந்தான் அவன்.
“அப்பிடி ஒண்டும் இல்ல யதி. நான் நல்லாத்தான் இருக்கிறன். நீ பதறாத. இந்த வேலைதான்..” தான் சொல்ல நினைப்பதை முழுமையாகச் சொல்ல முடியாமல் இடையில் நிறுத்தினான்.
அவர்களுக்குத் திருமணமாகி ஐந்தாவது மாதம் நடந்துகொண்டிருந்தது. மூன்று மாதங்களில் கொழும்பில் வேலை தேடிக்கொண்டு வந்துவிடுவேன் என்றவன், அதற்காக முழுமூச்சாக முயன்றுகொண்டு இருக்கிறான் என்று அவளுக்குத் தெரியும். அவளும் தானே தனக்குத் தெரிந்த இடங்களில், அவளுடைய அலுவலகத்தில் என்று முயன்றுகொண்டிருக்கிறாள். அவன் எதிர்பார்க்கிற சம்பளத்துடனான பேக்கேஜ் இன்னுமே அமையமாட்டேன் என்றது. இதெல்லாம் அவள் அறிந்தது. அப்படி இருக்கையில் புதிதாக என்ன?
“என்ன எண்டாலும் சமாளிக்கலாம். அதுக்கு ஏன் இப்பிடிச் சலிக்கிறீங்க? முதல் என்ன விசயம் எண்டு சொல்லுங்கோ, பிறகு என்ன செய்றது எண்டு பாக்கலாம்.” மனைவியாக அவனுக்குத் தைரியமூட்டினாள், அவள்.
அவ்வளவு நேரமாக, அவளிடம் இதை எப்படிச் சொல்வது என்று யோசித்துக்கொண்டு இருந்த கோகுலனுக்கு, அவளின் அனுசரணையான பேச்சும், ஊக்கமும் தைரியத்தைத் தந்தது. தன்னை விளங்கிக்கொள்வாள் என்கிற நம்பிக்கையுடன், “இத நான் உன்னட்டக் கேக்கிறது நியாயம் இல்லை எண்டு எனக்குத் தெரியும் யதி. எனக்கும் இது பிடிக்க இல்லத்தான். ஆனா, எங்கட விருப்பு வெறுப்பைத் தாண்டி யோசிச்சுப் பாத்தா இது நல்ல ஓபர் எண்டு விளங்கும். நீ கொஞ்சம் கோபப்படாம கேக்கவேணும்.” என்றான் அவன்.
அவனுக்கு ஒன்றுமில்லை என்பதிலேயே அவள் ஆசுவாசமாகியிருந்தாள். இதில் அவன் நயமாகப் பேசியவிதம் இப்போது சிரிப்பை மூட்டிற்று. “நான் ஒண்டும் உங்களை மாதிரி மூக்கு நுனியிலேயே கோபத்தைக் கொண்டு திரியிற ஆள் இல்ல. அதால கவலைப்படாமச் சொல்லுங்கோ!” என்று மென்னகையுடனேயே ஊக்கினாள்.
“உன்ன..” என்று சிரித்தாலும், தன்னுடைய கோபத்தை எப்போதுமே கேலிபேசும் அவளோடு விளையாடும் மனநிலையில் அவன் இல்லை. பேசவந்த விசயத்துக்கே தாவினான். “உன்ர பிரென்ட் சொன்ன கொழும்பு ஒபீஸ்ல இருந்து ஓபர் வந்திருக்கு யதி. ஆனா, சம்பளம் இப்ப இருக்கிறத விடக் குறைவு. இங்க என்ர ஒபீஸ்லயும் புது ப்ராஜெக்ட்டோட ப்ரோமோஷனும் வந்திருக்கு. இப்ப இருக்கிற சம்பளத்தின்ர ரெண்டு மடங்கு. இதை நான் அக்செப்ட் பண்ணினா ரெண்டு வருசம் வெளில வரவே ஏலாது. இந்தச் சம்பளம் எனக்குப் பாமினின்ர கலியாணத்துக்கும் பெரிய உதவியா இருக்கும். ரெண்டு வருசம் பல்லைக் கடிச்சுக்கொண்டு இருந்திட்டா பாமினின்ர கலியாணமும் முடிஞ்சு கொஞ்சம் சேவிங்க்ஸும் இருக்கும். பிறகு எங்களுக்குச் சிரமம் இல்லாத வாழ்க்கையும் அமையும்.” என்றான், அவள் தன்னைச் சரியாகப் புரிந்துகொள்ள வேண்டும் என்கிற எதிர்பார்ப்புடன்.
அவளுக்கும் விளங்காமல் இல்லை. இப்போதைய அவனுடைய சம்பளத்தில் இரண்டு மடங்கு என்றால் உண்மையில் மிகப்பெரிய தொகைதான். நினைக்கையிலேயே வியப்பாகவும் மகிழ்ச்சியாகவும் இருந்தது. அதற்கு அவன் தகுதியானவனும் கூட. ஆனால், அதுவரை அவள் இங்கேயும் அவன் அங்கேயும் இருப்பதா?
அதையே அவள் அவனிடம் கேட்டபோது, “அதுதான் யதி. தொடக்கமே கோவப்படாம கேளு எண்டு சொன்னனான். நீ இங்க வா. நான் உனக்கு என்ர ஒபீஸ்லேயே வேல வாங்கித் தாறன். ரெண்டு வருசத்துக்கு மட்டும். பிறகு உனக்கு விருப்பமான மாதிரி கொழும்பிலயே நாங்க செட்டில் ஆகலாம்.” வார இறுதியில் முல்லைத்தீவிலும் நேரம் கிடைத்தால் அவசர அவசரமாகக் கொழும்புக்கு ஓடிப்போவதிலும் சலித்துப் போயிருந்தான் அவன்.
அவளுக்கோ அவன் கேட்ட விசயத்தில் மெல்லிய அதிர்ச்சி. கூடவே, தன் வேலை என்று வருகிறபோது அவளைப்பற்றி யோசிக்காமல் விட்டுவிட்டானே என்கிற ஏமாற்றமும் படர்ந்தது. இருந்தும், “உங்களுக்கு முதலே சொல்லியிருக்கிறன் தானே கோகுல். எனக்கும் வேலைய விடேலாது. நானும் உங்களை மாதிரி ஒரு ப்ராஜெக்ட்ல ஏற்கனவே சைன் பண்ணி இருக்கிறன்.” என்று
மெல்ல நினைவூட்டினாள்.

