தன் தந்தையிடம் அவன் பேசியவற்றை அறிந்துகொண்டவளுக்கு விழிகளில் நீர் திரண்டது. அவளை நிரந்தரமாகப் பிரிகிற வரைக்கும் யோசிக்க அவனால் முடிந்திருக்கிறதே. அவ்வளவு இலகுவாகத் தூக்கிப்போடும் இடத்திலா அவன் மனதில் அவள் இருக்கிறாள்? தன் இயல்பைத் தொலைத்து, சிந்தையெங்கும் அவனை நிறைத்து, அல்லும் பகலும் அவனை மறக்கமுடியாமல் அலைப்புறுகிறாளே, இந்த நிலை அவனுக்கு இல்லையோ?
“இனி என்னம்மா செய்யப்போறாய்?” என்று கேட்டார் கஜேந்திரன்.
“இதுல நான் செய்ய என்னப்பா இருக்கு? அவர் நினைக்கிற மாதிரி, நான் வீண் பிடிவாதம் பிடிக்க இல்லையே. என்ர நிலைமையைத்தான் சொன்னனான். அதை அவர் விளங்கிக்கொள்ள இல்லை எண்டுதான் கவலை. பரவாயில்ல, அவர் சொன்ன மாதிரி ரெண்டு வருசம் இப்பிடியே போகட்டும். பிறகு பாப்பம்.”
அவரிடம் அப்படிச் சொன்னாலும், தான் ஏதாவது தவறு செய்கிறோமா என்று யோசித்துப் பார்த்தாள். அப்படி எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை.
தன் விருப்பம், எதிர்பார்ப்பு என்ன என்பதை, திருமணத்துக்கு முதலே தெளிவாகச் சொல்லிவிட்டாள். அப்படியிருந்தும், திருமணமானதும் என்னுடன் வா என்று, அவனை அவள் வற்புறுத்தவில்லை. ஐந்து மாதங்கள் அவனுக்கான காலத்தைக் கொடுத்திருக்கிறாள். இனியும், அவன் கேட்டாலும் கொடுப்பாள். ‘இரண்டு வருடங்கள் இப்படியே இருப்போம் யதி, அதன் பிறகு நான் அங்கே வருகிறேன்’ என்றாவது அவன் சொல்லியிருக்கலாம். தனிமை வாட்டினாலும், அவன் நிலையைப் புரிந்துகொண்டு அனுசரித்துப் போயிருப்பாள். மாறாக, உன் வேலையை விட்டுவிட்டு இங்கே வந்து வேலையைச் செய் என்று சொன்னதைத்தான் ஏற்க முடியாது என்றாள். அதைத்தானே மறுத்துரைத்தாள். அது தவறா?
அப்படியானால், இதற்கு ஆம் என்றால் மாத்திரமே திருமணப்பேச்சை முன்னெடுக்கலாம் என்று, திருமணத்திற்கு முதலே அவள் அழுத்திச் சொன்னதற்குப் பொருள் என்ன? எல்லாம் கணவன் மனைவி என்று ஆகிறவரைக்கும் தானா?
காலம் காலமாகத் திருமணமானதும் விட்டுக்கொடுப்பதும், கனவுகளைத் தொலைப்பதும், இலட்சியங்களைத் தலை முழுகுவதும் பெண்ணுக்கானது மட்டுமே தானா என்று மனம் முரண்டியது.
அன்றைக்குப் பிறகு, அவளுக்கு அவன் அழைக்கவேயில்லை. அதுவேறு அவளைப்போட்டு வருத்தியது. என்னவோ அவள்தான் இந்த விடயத்தில் முழுமையாகத் தவறிழைத்தவள் போன்ற உருவகத்தை அவன் உருவாக்கிவிட்ட உணர்வு. அதற்காக, அவனோடு கதைக்காமலும் இருக்க முடியவில்லை. அமைதியிழந்து தவிக்கும் மனதுக்கு அம்மாவின் அருகாமையும் வேண்டுமாயிருக்க, “இந்த வீக்கெண்ட் முல்லைத்தீவுக்குப் போறன். நீங்களும் வாறீங்களா?” என்று குறுஞ்செய்தி ஒன்றை அனுப்பிவைத்தாள்.
அவள் காலையில் அனுப்பியதற்கு, ஒற்றை வார்த்தையில், “நோ!” என்று இரவுதான் பதில் வந்தது.
அவ்வளவு நேரமாகக் கைபேசியை அவன் தொடவேயில்லையா? ஒன்றுமே செய்யத் தோன்றாமல், நிறைய நேரமாக, அவனுடைய அந்த, ‘நோ’வையே பார்த்திருந்தாள். அது, அவள் கேட்டதற்கு மட்டும் தானா, இல்லை, அவளுக்குமேயா? அந்தக் கேள்வியிலேயே மனம் சிக்குண்டு சின்னாபின்னமாயிற்று.
ஆனாலும், அவனோடான உறவை இன்னுமே விரிசலாக்கிக்கொள்ள விரும்பவில்லை. ஊருக்குப் புறப்படுகிறபோது புறப்படுகிறேன் என்றும், போய்ச் சேர்ந்ததும் வந்து சேர்ந்துவிட்டேன் என்றும் தெரிவித்தாள்.
அவனுக்குச் சுறுசுறு என்று ஏறியது. இந்தக் குறுந்தகவல் அனுப்புகிற வசதியை அவள் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்தும் சாதுர்யம் எரிச்சலூட்டியது. தன்நிலை இறங்கிவந்து அவனோடு நேரே எடுத்துக் கதைக்க அவளின் சுயகௌரவம் விடவில்லை. அதே நேரம், அவள் நல்ல மனைவியாம், கடமை தவறவில்லையாம். அதைக் குறுந்தகவல் அனுப்பி நிரூபிக்கிறாளாம்.
நீதான் நல்ல கணவனாக நடக்கவில்லை என்று மறைமுகமாக அவனைக் குற்றவாளியாக்க முனைகிறாளா? தாராளமாக ஆக்கிக்கொள்ளட்டும்.
அவள் அனுப்பிய அத்தனை மெசேஜ்களுக்கும் ஒற்றை விரல் உயர்த்தலை மாத்திரம் அனுப்பி, உன் சமாதான முயற்சியை நான் ஏற்றுக்கொள்ளவே மாட்டேன் என்பதை, ஒரு வார்த்தை கூட உதிர்க்காமல், அவளுக்குத் தெளிவாக உணர்த்தினான் கோகுலன்.
——————
ஊருக்கு வந்துவிட்டு அவனுடைய வீட்டுக்குப் போகாமல் இருக்க முடியாது. போகத் தயக்கமாய் இருந்தது. இருக்கிற பிரச்னையை இன்னும் பெரிதாக்க வேண்டாம் என்று எண்ணிக்கொண்டு, சாந்தினியின் ஸ்கூட்டியை எடுத்துக்கொண்டு. அங்குச் சென்றாள்.
வரவேற்றார்கள் தான். உபசரித்தார்கள்தான். பேசினார்கள்தான். ஆனாலும், ஏதோ ஒன்று குறைந்தது. இதுவரை காலமும், ஒரு மகாராணியைப்போல் நடத்தப்பட்டவள், அந்த வித்தியாசத்தை உடனேயே கண்டுகொண்டாள். முக்கியமாக, ஜெயராணி அப்பட்டமாக முகம் திருப்பினார்.
எதையும் காட்டிக்கொள்ளாமல், “சுகமா இருக்கிறீங்களா மாமி?” என்று எல்லோரின் நலனையும் விசாரித்துக்கொண்டாள்.
“நாளைக்கே கொழும்புக்கு வெளிக்கிடுறீங்களோமா?” என்ற மாமனாரின் கேள்விக்கும், “ஓம் மாமா. இரவு ட்ரெயினைப் பிடிச்சா விடியப் போயிடுவன். அப்பிடியே குளிச்சு, உடுப்பு மாத்திக்கொண்டு வேலைக்குப் போகவேணும்.” என்று பதிலளித்தாள் அவள்.
அங்கு, யாருமே கோகுலனின் பேச்சை எடுக்கவே இல்லை. இனி என்ன செய்யப் போகிறீர்கள் என்று கேட்கவில்லை. இப்படிக் கவனமெடுத்துத் தவிர்ப்பது ஏன்? அவனுக்கும் அவளுக்குமிடையில் மெல்லிய உரசல் உண்டாகியிருக்கிறதுதான். அதற்காக? அவளைக் கண்டாலே தமையனுக்கு வீடியோ கோல் போட்டுப் பேச வைக்கும் பா
மினி கூட வழக்கமில்லாத அமைதி காட்டினாள்.

