“பின்ன வேற ஆரு? ரெண்டு வருசம் கழிச்சுக் கலியாணம் எண்டு சொன்னவளுக்கு இவ்வளவு அவசரமா நடக்கவும் நீதான் காரணம்!” என்று குற்றம் சாட்டினான் அவன்.
“ஏன் கோகுல் இப்பிடி எல்லாம் கதைக்கிறீங்கள்? இதெல்லாம் எனக்கு எவ்வளவு கவலையா இருக்கும் எண்டு யோசிக்க மாட்டீங்களா?” அவள் மனது மீண்டும் தவிக்கத் தொடங்கிற்று. அவன் கூட அவளைப் புரிந்துகொள்ளவில்லை என்றால் எப்படி?
“வேற எப்பிடிக் கதைக்கச் சொல்லுறாய்? விட்டது தொல்லை எண்டு இந்த ஆறுமாதமா நீயும் உன்ர பாட்டுல தானே இருக்கிறாய்? முக்கியமான அலுவல் எண்டா மட்டும் மெசேஜ். நான் என்ன உன்ர ஹயர் ஒபீஸரா? தேவையானதை மட்டும் இன்போர்ம் பண்ணிப்போட்டு நீ போக? அது சரி, உனக்கு என்னோட வாழவேணும் எண்டுற ஆசை இருந்தாத்தானே!” என்றான் அவன் குத்தலாக.
அது அவளைச் சுட்டது. அதில், “சொல் ஒண்டு செயல் ஒண்டு எண்டு நீங்க இருந்தா வாழ்க்கை இப்பிடித்தான் போகும் கோகுல். அதுக்கு என்னைக் குற்றவாளி ஆக்காதீங்க. கலியாணத்துக்கு முதல் எல்லாத்துக்கும் ஓம் ஓம் எண்டு சொல்லிப்போட்டு இப்ப மாறி நிக்கிறது நீங்கதான். நான் இல்ல!” என்று, தாங்க முடியாத மனவேதனையில் சொன்னாள் பிரியந்தினி.
அந்தப் பக்கத்திலிருந்து சத்தமே இல்லை.
திகைத்து நின்றுவிட்டாள் பிரியந்தினி. தேவையற்றுப் பேசிவிட்டது அப்போதுதான் புரிந்தது. “கோகுல்?” என்றாள், பயத்தில் உமிழ் நீரை விழுங்கியபடி.
“நீ சொன்னது சரிதான். சொன்ன சொல்லு மாறினது நான் தான். அதுக்கு அண்டைக்கே உன்ர அப்பாட்ட மன்னிப்புக் கேட்டுட்டன். நீயும் என்னை மன்னிச்சிக்கொள்ளு!” என்றுவிட்டு அழைப்பைத் துண்டித்தான் அவன்.
தலையைப் பிடித்துக்கொண்டு அமர்ந்துவிட்டாள் பிரியந்தினி. என்ன செய்து வைத்திருக்கிறாள்? சும்மாவே சாமி ஆடுவான். இனி? நினைக்கைவே அடிவயிறு கலங்கிற்று. அவள் ஒன்றும் இல்லாததைக் கேட்கவில்லை தான். ஆனால், சிலவற்றைப் பேசுதல் கூடாது! அதுதான் மிகுதி வாழ்க்கை ஆரோக்கியமாக நகர்வதற்கு ஏதுவாய் இருக்கும். அவள் பேசிவிட்டாள். இனி என்னாகப்போகிறதோ? நினைக்கையிலேயே நெஞ்சு அதிர்ந்தது.
அடுத்தது அவளின் மாமி. அவரையும் சமாளிக்க வேண்டும். பாமினியின் திருமணம் பற்றி அறிந்த பிறகும் அவரோடு கதைக்காமல் இருக்க முடியாது. தயக்கத்தை உதறிவிட்டு அவருக்கு அழைத்தாள்.
“நான் எப்ப வர மாமி?” பொதுவாக எல்லோரின் நலனையும் விசாரித்துவிட்டு மெல்லக் கேட்டாள்.
“ஏனம்மா?”
அவரின் நிதானமும், ஒன்றுமே தெரியாதவர் போன்ற பேச்சுமே அவளுக்குள் கலக்கத்தை விதைக்கப் போதுமாக இருந்தது. இருந்தும், “பாமினின்ர நிச்சயத்துக்கு.” என்றாள் அவள்.
“அதுக்கு வாறதைப்பற்றிப் பிறகு கதைப்பம். இவ்வளவு நாளும் ஏனம்மா எடுக்க இல்ல?” என்று வினவினார் அவர்.
நான் வந்தபோது நீங்கள் யாரும் என்னோடு இயல்பாகக் கதைக்கவில்லை என்று சொல்ல முடியுமா? அல்லது, அன்று நீங்கள் சொன்ன வார்த்தை என்னை ஆழமாகக் காயப்படுத்திவிட்டது என்றுதான் சொல்ல முடியுமா? அவள் மௌனம் சாதித்தாள்.
“ஒரு ஃபோன் இல்ல. இந்தப் பக்கம் வரவும் இல்ல. நாங்க எப்பிடி இருக்கிறோம், என்ன செய்றோம் எண்டு கேக்கவும் இல்ல. இப்ப மட்டும் வரட்டா எண்டு கேட்டா, ஊருக்கு முன்னால நான் நல்ல மருமகள் எண்டு காட்ட நினைக்கிறீங்களா?” என்று நிதானமாய்க் கேட்டார் அவர்.
அவளுக்கு அழுகை வரும் போலிருந்தது. ஒவ்வொரு செய்கையாலும் தள்ளி நிறுத்தி அவளை ஒதுங்கிப்போகச் செய்ததே அவர்தான். பிறகு இப்படிக் கேட்டால்?
“உங்களுக்கு எல்லாத்தையும் விட வேலை முக்கியம் தானேம்மா. அதால சம்மந்தக்கலப்புக்கு எல்லாம் வேலையை விட்டுப்போட்டு வரவேண்டாம். கலியாணத்துக்கு நீங்க வந்து நிண்டாலே பெரிய சந்தோசம்
.” என்றுவிட்டு வைத்தார் அவர்.

