என் பிரியமானவளே 15 – 3

அவள் போனதும் அப்படியே கட்டிலில் அமர்ந்துவிட்டான் கோகுலன். நிறைய நாட்களுக்குப் பிறகு அவளை நேரில் கண்ட பாதிப்பு அவனுக்கும் தான். அதுவும், மெலிந்து, முகம் வாடி, கண்களில் கண்ணீரைத் தேக்கியபடி, அடிவாங்கிய குழந்தையாகத் தன் முகம் பார்க்கும் அவளைப் பார்க்க மனதைப் போட்டுப் பிசைந்தது.

 

இதனால் தானே என்னுடனேயே வந்துவிடு என்று அழைத்தான். அதற்கு மறுத்தது மாத்திரமல்லாமல் சொல் ஒன்று செயல் ஒன்று என்று இருக்கிறவன் என்றாளே. அப்படியான அவனைப்பார்த்து எதற்கு அவள் தவிக்க வேண்டும்? இரண்டு வருடங்களின் பிறகு அவளுக்கு விருப்பம் இருந்தால் சேர்ந்து வாழ்வதைப்பற்றி யோசிப்போம் என்றதைக்கூடப் பொருட்படுத்தாதவள், இப்போது எதற்கு அவன் முகம் பார்த்து ஏங்குகிறாள்? மனம் மீண்டும் இறுகிவிட எழுந்து வேலைகளைப் பார்க்கத் தயாராகினான்.

 

பிரியந்தினிக்குக் கைகள் வேலைகளைப் பார்த்தாலும் நெஞ்சு உள்ளுக்குள் அழுதுகொண்டிருந்தது. அவனாக ஒரு வார்த்தை அவளிடம் பேசவே இல்லையே. அங்கே, அவன் காலை உணவைச் சாப்பிடுவது தெரிந்தது. ஜெயராணியிடம் என்னவோ திருமண வேலைகள் பற்றிப் பேசுவதும் கேட்டது. பின் புறப்பட்டு வெளியேறினான். அவளிடம் மட்டும் மூச்சும் இல்லை பேச்சும் இல்லை.

 

“கலியாணத்துக்குப் பிறகு மாப்பிள்ளை பொம்பிளை எங்க இருக்கப்போயினம். இந்த வீட்டில தானா இல்ல திருகோணமலைக்கே போயிடுவினமோ?” இவர்கள் வீட்டின் அனைத்து விடயங்களையும் அறிந்திருந்த சொந்தக்காரப் பெண்மணி ஒருவர் விசாரித்தார்.

 

“அதைப்பற்றி ஒழுங்காக் கதைக்காம நாங்க படுற பாடு காணும் மச்சாள். அதால எல்லாம் முதலே தெளிவாக் கதைச்சுத்தான் ஓம் எண்டே சொன்னது. பிறகு வந்து, நான் ஏற்கனவே சொன்னனான் தானே எண்டு நிக்கக் கூடாது எல்லா. என்னவோ சொன்ன சொல்லுல இருந்து மாறவே மாட்டோம் எண்டு நிக்கிறதெல்லாம் என்னத்த சொல்ல.. எல்லாம் படிச்சிருக்கிறம், உழைக்கிறம் எண்டுற திமிர் தான். என்ன எண்டாலும் மனுசனோட கதைச்சுப் பேசித்தான் முடிவு செய்யவேணும், அவருக்கு ஏற்ற மாதிரித்தான் நடக்கவேணும் எண்டு பாமினிக்குச் சொல்லிப்போட்டன்.” அதுவரை, நெஞ்சுக்குள் அடக்கி வைத்திருந்த குமுறலை மிக வேகமாக வெளியேற்றினார் ஜெயராணி.

 

‘என்னம்மா இது?’ என்று சலிப்புடன் பார்த்த பாமினியையும் பொருட்படுத்தவில்லை, கண்டிப்புடன் பார்த்த கணவரையும் கணக்கில் எடுக்கவில்லை.

 

பிரியந்தினியின் விழிகள் மளுக் என்று நிறைந்துபோனது. என்னவோ அங்கே அவள் மட்டும் தனியாகிப்போன உணர்வில் மனம் துடித்துப் போயிற்று. தன் கண்ணீரை மறைக்க வீட்டின் பின்புறம் நடந்தாள்.

 

——————————–

 

அடுத்தநாள், வெகு விமரிசையாக எவ்விதக் குறையுமின்றிப் பாமினி பகீரதன் திருமணம் நடந்துமுடிந்தது. அண்ணனும் அண்ணியுமாக நின்று அனைத்துக் காரியங்களையும் செய்தனர். அவசியத்துக்கு மட்டும் பேசினான் கோகுலன். அதைக்கூடச் செய்யத் தைரியமற்றுப் பேசாமடந்தையாகிப் போனாள் பிரியந்தினி.

 

அன்றைய இரவுக்கு, யாழ்ப்பாண ஹோட்டல் ஒன்றில் எடுக்கப்பட்டிருந்த அறையில், கணவனும் மனைவியுமாகச் சென்று, புதுமணத் தம்பதியினரை விட்டுவிட்டு வந்தனர். வாகன ஓட்டி இருந்ததில் எதையும் பேசிக்கொள்ள முடியாமல் போனது. இல்லையானாலும் பிரியந்தினி வாயைத் திறந்திருப்பாளா தெரியாது. அந்தளவில் மனதளவில் உடைந்து போயிருந்தாள்.

 

அந்த வீடே, ஒரு திருமணத்தைச் சீரும் சிறப்புமாகச் செய்துமுடித்த அத்தனை அடையாளங்களையும் சுமந்து, சுகமான அயர்ச்சியுடன் காட்சி தந்தது. நாகராஜன் வாசல் பக்கம் நின்று, எஞ்சியிருந்த உறவினர்களோடு பேசிக்கொண்டு நின்றிருந்தார். ஜெயராணி களைப்புடன் சோபாவில் அமர்ந்திருந்தார். கோகுலனும் அவர் அருகிலேயே சென்று அமர்ந்துகொண்டான்.

 

பிரியந்தினிக்கு அடுத்ததாக என்ன செய்வது என்று தெரியவில்லை. யாரும் அவளை அங்கே தங்கும்படி சொல்லவும் இல்லை. அவன் முகத்தை முகத்தைப் பார்த்தாள். ‘நில்’ என்று ஒருவார்த்தை சொல்லமாட்டானா என்று மனம் ஏங்கிற்று. ‘இங்கயே ஏன் நிக்கிறாய். போய் உடுப்பை மாத்தன்!’ என்று மறைமுகமாகச் சொன்னாலே போதும். அறைக்குள் ஓடிவிடுவாள். அவனோ, சோபாவில் உடலைத் தளர்த்திச் சாய்ந்துகொண்டு, மிகுந்த சோர்வுடன் விழிகளை மூடி இருந்தான். அவள் நிற்கும் பக்கம் திரும்பவே இல்லை.

 

இப்படியே கைகளைப் பிசைந்துகொண்டு எவ்வளவு நேரத்திற்கு நிற்பது? “நான் வீட்டை போகவா மாமி?” என்று அவளே வினவினாள்.

 

அதற்குப் பதில் சொல்லாது மகனைப் பார்த்தார் ஜெயராணி. அதை உணர்த்தாற்போல், “போகட்டும் மா.” என்றான் அவன்.

 

நொடியில் விழிகளைச் சூழ்ந்த கண்ணீரை உள்ளுக்கு இழுத்துக்கொண்டாள் பிரியந்தினி.

 

“நல்லா நேரம் போயிட்டுதே..” அவன் கொண்டுபோய் விடுவானோ என்று மீண்டும் அவனைப் பார்த்தார் ஜெயராணி.

 

அவன் மூடியிருந்த விழிகளைக் கூடத் திறக்க மறுத்தான்.

 

“அப்பாவை வரச் சொன்னனான். இப்ப வந்திடுவார்.” அவள் கஜேந்திரனிடம் சொல்லவே இல்லை. ஆனாலும், தொண்டை அடைக்கச் சொன்னாள். இல்லாமல், இருண்டுவிட்டது தெரிந்தும் அசையாமல் இருக்கிறவனிடம், கூட்டிக்கொண்டுபோய் விடு என்று கெஞ்சவா முடியும்?

 

அப்போதும், அவன் அசையவே இல்லை. தானே கூட்டிக்கொண்டுபோய் விடுவதாகச் சொல்லவும் இல்லை. வேறு வழியற்றுச் சற்றுத் தள்ளிச்சென்று கஜேந்திரனுக்கு அழைத்தாள். “அப்பா, என்னைக் கூட்டிக்கொண்டு போக வாறீங்களாப்பா?” என்று தழுதழுத்த குரலில் கேட்டாள்.

 

“ஓ.. தம்பி.. அவரிட்ட சொன்னியாம்மா?” திருமணத்துக்கு அவர்களும் எல்லோரும் வந்திருந்தார்கள் தான். கவனிப்பில் எந்தக் குறையும் இருக்கவில்லை. என்ன, மகள் மருமகன் முகத்தில் தான் மருந்துக்கும் சிரிப்பிருக்கவில்லை. அதையெண்ணி ஏற்கனவே கவலையில் ஆழ்ந்திருந்தவரை இது இன்னுமே வருத்திற்று.

 

“அவர்தான் போகச் சொன்னவர் அப்பா.”

 

“ஓ..! இந்தா… இப்ப.. உடன வாறன்.” அவரும் இதை எதிர்பார்க்கவில்லை என்பது அவரின் தடுமாற்றத்திலேயே தெரிந்தது.

 

வாசலிலேயே நின்றாள். அதன்பிறகு, கோகுலனை அவள் திரும்பிப் பார்க்கவே இல்லை. தப்பித்தவறி அவன் விழிகளைச் சந்தித்துவிட்டால் அவளின் மொத்தக் கட்டுப்பாடும் உடைந்துவிடும். எதற்கு அந்த அவமானம்?

 

சற்று நேரத்தில் கஜேந்திரனும் ஸ்கூட்டியில் வந்தார். அவரின் கால் பிரச்சனையால் ஸ்கூட்டிதான் வசதி என்று வாங்கிக் கொடுத்தது அவள்தான். எல்லோருக்கும் பொதுவான ஒரு, “போய்ட்டுவாறன்.” உடன் புறப்பட்டாள்.

 

நடுங்கிய உதட்டினை அழுத்திப் பற்றியபடி வீட்டுக்கு வந்

தவள் கட்டிலில் விழுந்து உடைந்து விம்மினாள்.

 

 

 

error: Alert: Content selection is disabled!!