இலகுவில் அழுகிறவள் அல்ல பிரியந்தினி. நிதானம், திடம், தைரியம் அத்தனையும் கைவரப் பெற்றவள். திருமணமானதில் இருந்து, அதையெல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக இழந்துகொண்டு வந்தவள், இன்று, முற்றிலுமாக உடைந்து போயிருந்தாள். அவள் மனம் துடியாகத் துடித்தது. இத்தனை நாட்களாக, மனதுக்குள்ளேயே அடைத்து வைத்திருந்த அத்தனை துன்பத்துக்கும் சேர்த்து அழுதாள்.
அவளை அப்படிப் பார்க்க முடியாமல், என்ன என்று கேள் என்று கண்ணாலேயே சொல்லிவிட்டு, வெளியே சென்று அமர்ந்துகொண்டார் கஜேந்திரன். ஒற்றைக் காலும் இல்லாமல், இதையெல்லாம் தட்டிக் கேட்க வலுவும் இல்லாமல், மனதளவில் நொருங்கிப் போயிருந்தார்.
தன் நெஞ்சின் பாரத்தை மறைத்துக்கொண்டு, அவளருகில் அமர்ந்து, “போதுமாச்சி எழும்பு! இனி என்ன செய்றது எண்டு யோசிக்கிறத விட்டுப்போட்டு இது என்ன அழுகை?” என்று அதட்டலும் கனிவுமாக அவளை எழுப்பி அமரவைத்து, முகத்தைத் துடைத்துவிட்டார் அற்புதாம்பிகை.
“முதல் இந்த சாறிய கழட்டு. நான் தேத்தண்ணி ஊத்திக்கொண்டு வாறன்.” என்றுவிட்டுச் சென்று, தேநீர் ஊற்றி எடுத்துக்கொண்டு வந்தார். அவளும் சேலையை மாற்றியிருந்தாள்.
“இந்தா, இத முதல் குடி!”
அவளும் வாங்கிப் பருகினாள். மகள் அழுவதை நிறுத்திவிட்டாள் என்றதும் தானும் வந்து அவளருகில் அமர்ந்துகொண்டார் கஜேந்திரன். “என்னம்மா செய்யப் போறாய்?” அவள் அருந்திமுடித்த கோப்பையை வாங்கி அருகில் இருந்த மேசையில் வைத்துவிட்டு வினவினார்.
“எனக்கும் தெரியேல்ல அப்பா. எங்கட வாழ்க்கையைப் பற்றி அவர் என்னோட ஒரு வார்த்த கூடக் கதைக்கேல்ல.” அதைச் சொல்லும்போதே சிவப்பேறியிருந்த விழிகளில் மீண்டும் கண்ணீர் பெருகிற்று. அவனைப் பார்க்க, பேச, அவனோடு சமாதானமாக இது நல்ல சந்தர்ப்பம் என்று, இன்றைய நாளை உள்ளூர மிகுந்த ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்துக்கொண்டு இருந்தாள். நடந்ததோ அத்தனையும் தலைகீழ்.
“நான் போய்க் கதைக்கவாம்மா.” அப்படிக் கேட்டாலும் அவருக்கும் எதை எப்படிக் கதைப்பது என்று புரியவில்லை. ஏற்கனவே கதைத்து, அந்தப் பேச்சு வார்த்தை தோல்வியிலும் முடிந்தாயிற்றே.
ஒன்றும் சொல்லாமல் அவர் தோளில் தலையைச் சாய்த்துக்கொண்டாள் அவள். அவர் கை தன்னிச்சையாக அவளின் தலையை வருடிக்கொடுத்தது.
“இப்பிடி ஒண்டுமே சொல்லாம இருந்தா எப்பிடிப் பிள்ளை? அத்தானை விட்டு கதைப்பமோ?” தியாகு எல்லாவற்றையும் மிகுந்த நிதானத்துடன் அணுகுகிறவன் என்பதில் கேட்டார், அற்புதாம்பிகை.
“இல்ல அம்மா. வேண்டாம்.”
“ஏன் பிள்ளை? இவ்வளவு நாளும் நீ சொன்னதைக் கேட்டுத்தான் அமைதியா இருந்தோம். இது ஒண்டும் நீங்க ரெண்டுபேரும் காதலிச்சு நடந்த கலியாணம் இல்ல. பேசிச் செய்தது. உன்ர மாமியார் அப்பிடி எல்லாம் கதைக்கேலாது. இனியும் இத இப்பிடியே விடுறது எனக்குச் சரியா படேல்ல. ஐயாவை நடுவில வச்சுக் கதைக்கிறது எண்டாலுமே சரிதான். இது அவர் பேசின கலியாணம் தானே.” திருமணமான புதிதில் சின்ன சின்ன சண்டைகள் வருவதும், பின் ஒருவரை மற்றவர் விளங்கிக்கொண்டு ஒரு நிலைக்கு வருவதும் எங்கும் நடப்பதுதான். அதற்கிடையில் நாம் தலையிட்டு எதையும் பெரிசாக்கிவிட வேண்டாம் என்று நினைத்துத்தான், இத்தனை நாட்களாகப் பொறுமையாக இருந்தார் அற்புதாம்பிகை. இன்றைக்கு, அவரின் பொறுமையுமே தீர்ந்து போயிற்று. இதற்கு ஒரு முடிவைப் பெற்றே ஆகவேண்டும் என்று தோன்றிற்று.
அதற்கும் வேண்டாம் என்றாள் பிரியந்தினி. அவளுக்கு என்னவோ இது அவளைச் சுற்றியிருக்கிற யார் பேசியும் தீர்கிற விடயமாகத் தோன்றவில்லை. இத்தனை நாட்களாகத் தீர்வு காணமால், காணப் பயந்து தள்ளிப்போட்டுக்கொண்டு வந்த ஒன்று, அதன் எல்லையைத் தொட்டுவிட்ட உணர்வு. இனி, இதற்கு முடிவு கண்டே ஆகவேண்டும் என்கிற இடத்தில், அவளின் மனம் வந்து நின்றிருந்தது.
இவ்வளவு நாட்களும், கோகுலன் அப்படிச் சொல்லிவிட்டான், மாமி இப்படிச் சொல்லிவிட்டார், முகத்தைத் திருப்பிவிட்டார்கள் என்று ஏதோ ஒன்றைப் பிடித்துத் தொங்கியவளுக்கு, இன்றைக்கு, அபாயமணி ஒலித்திருந்தது.
ஜெயராணியின் வார்த்தைகள் அவளை ஆழமாகக் காயப்படுத்தியது உண்மைதான். ஆனால், இங்கே அவர் அல்ல விடயம். நிரப்பப்பட வேண்டியது அவளுக்கும் கோகுலுக்கும் இடையிலான பள்ளம். அது நடக்காவிட்டால் விபரீதமாய் எல்லாமே முடிந்துவிடும் என்று புரிந்துவிட, எழுந்து புறப்பட்டாள்.
கொழும்பு வந்தும் இரண்டு நாட்களாயிற்று. இந்த இரண்டு நாட்களும், ‘இனி அவள் என்ன செய்ய வேண்டும்’ என்கிற கேள்விதான் சிந்தையை நிறைத்திருந்தது. மீண்டும் அவசரப்பட்டு எதையும் செய்யக்கூடாது என்பதில் மட்டும் மிகுந்த கவனமாக இருந்தாள். யோசித்து யோசித்து உடலும் மனதும் களைத்தே போயிற்று. ஒரு உற்சாகம் இல்லை; துள்ளல் இல்லை; எதிலும் ஈடுபாடு இல்லை.
எல்லாவற்றிலும் ஒருவித வெறுப்பு.

