தலையைப் பற்றிக்கொண்டு அமர்ந்திருந்தான் கோகுலன். அவளை பஸ் ஏற்றுகிறவரை அவனைப்போட்டு ஆட்டிய வீம்பு இப்போது எங்கோ தொலைந்திருக்க, மனம் அவளிடமே சிக்கிக்கொண்டு நின்றது. அதுவும், பஸ் ஏறுவதற்கு முதல் அவள் சொன்ன வார்த்தைகள் அவனை அறுத்தன. இந்தக் கோபத்தை அவள் காட்டவில்லை என்பதுதானே அவனது கோபமே.
அவளின் ஏமாற்றம் நிறைந்த முகமும், கண்ணீரை அடக்கிய விழிகளும் அவனுக்கு நரகத்தைக் காட்டின. ‘ஏனடா உனக்கு இவ்வளவு அகங்காரம்? அவளை அழவச்சு அப்பிடி என்ன சந்தோசத்தைக் காணப்போறாய்? உன்ன மாதிரி அவளும் வேல முடிஞ்ச கையோட வெளிக்கிட்டு ஓடி வந்திருப்பாள். சமாதானம் செய்துபோட்டு ரெண்டு நாள் சந்தோசமா இருந்திட்டுப் போகலாம் எண்டு நினைச்சிருப்பாள். எல்லாத்தையும் கெடுத்து அவளின்ர முகத்தைச் சுருங்க வச்சு அனுப்பி இருக்கிறியே’ என்று அவனால் நிம்மதியாக இருக்க முடியாமல் போயிற்று.
கொழும்பில் வேலை எந்தளவுக்குத் தேடினான் என்று அவளுக்குத் தெரியும். ஏன் இந்த வேலையில் நிலைத்திருக்க நினைத்தான் என்றும் தெரியும். அப்படி இருந்தும், ‘சொல் ஒன்று செயல் ஒன்றாக நீதான் இருக்கிறாய்’ என்று எப்படிச் சொல்லமுடிந்தது? மாமனார் கேட்டதைக்கூட, ‘ஒரு பெண்ணின் தகப்பனாகப் பேசுகிறார்’ என்று கடந்து வந்தவனால் அவளின் குற்றச்சாட்டைக் கடக்க முடியாமல் போயிற்று.
அதைவிட, என்னவோ அவளைப் புரிந்துகொள்ளாமல், அவளின் கனவை நசுக்கியே ஆகவேண்டும் என்று சங்கல்பம் பூண்டு, அவன் நடப்பதுபோன்று அவள் காட்டிய உருவகமும் அவனை எரிச்சல்கொள்ள வைத்திருந்தது.
இரண்டு வருடங்கள் கழிந்தபிறகு பார்க்கலாம் என்றதற்குக் கூட இன்று கோபப்பட்டது போன்று அவள் கோபப்படவே இல்லையே. இதெல்லாம் சேர்ந்துதான் பாமினியின் திருமணத்தில் அவளை விலக்கி நிறுத்த வைத்தது.
ஆனாலும், அன்று முழுக்க அவள் அருகில் இருந்தும் ஒரு பேச்சற்று, சிரிப்பற்று, அவளை நெருங்காமல் இருப்பதற்குள் படாத பாடுபட்டுப் போய்விட்டான். அதுவும் ஏக்கம் நிறைந்த விழிகளோடு தன்னையே தொடர்ந்தவளைப் பார்த்த ஒவ்வொரு நொடியும் அவனுக்குள் மிகப்பெரிய எரிமலையே வெடித்தது. வா வா என்று கூப்பிட்டபோதெல்லாம் வரமாட்டேன் என்றுவிட்டு, இப்போது ஏனடி, ‘அம்மா தூக்கு’ என்று உதடு பிதுக்கும் பிள்ளையைப் போல் என்னையே பாக்கிறாய் என்று கத்தும் ஆத்திரமே வந்திருந்தது.
பாமினியைக் கணவனோடு அனுப்பி வைத்துவிட்டு வீடு வந்தபோது அவன் முற்றிலுமாக நிலைகுலைந்து போயிருந்தான். இதில், இரவுக்கு அவளும் தன்னுடன் தங்கினால் ரோச மானம் பாராமல் அவளை நெருங்கிவிடுவோம் என்றுதான் அவளின் வீட்டுக்கே போகவிட்டான்.
அந்தப் பாதிப்பிலிருந்தே வெளி வராதவனை இதோ மீண்டும் வந்து ஆட்டிப் பார்த்துவிட்டுப் போகிறாள் அவள். ஒரு பெரு மூச்சுடன் தலையைக் கோதிக்கொண்டு எழுந்து சென்று கட்டிலில் விழுந்தான். இந்த நொடியே காற்றுக்கூட புகமுடியாத நெருக்கத்தில் அவள் வேண்டுமாய் இருந்தது. இன்னும் இரண்டு வருடங்கள்.. அதை எப்படிக் கழிக்கப் போகிறானோ தெரியாது.
…………………………
கொழும்புக்குச் சென்றுகொண்டிருந்த பிரியந்தினி உடைந்துபோயிருந்தாள். அவளின் நம்பிக்கை முற்றிலுமாகத் தகர்ந்து போயிருந்தது. பாமினியின் திருமணத்தின்போது நெருங்காதவன், அவளுக்குப் பேசச் சந்தர்ப்பமே தராதவன், தேடிப்போயும் ஏற்காதவன் இனி என்ன செய்தால் ஏற்பான்? அவளுடைய சுயமரியாதையை, தன்மானத்தை எல்லாம் கைவிட்டுவிட்டு அவன் காலடியில் விழவேண்டும் என்று எதிர்பார்க்கிறானா?
அப்போது பார்த்து அவளுக்கு அழைத்தார் அற்புதாம்பிகை.
“அம்மா..” எனும்போதே குரல் தழுதழுத்தது.
“என்னம்மா? எங்க நிக்கிறாய்?” அவள் காலிக்குப் புறப்பட்டது அவருக்குத் தெரியும். அதனால் தான் நிலவரம் என்ன என்று அறிய எடுத்தார். அவளின் அம்மா என்ற அழைபிலிருந்த பரிதவிப்பு அன்னையின் மனதை அலைக்கழித்தது. கூடவே கேட்ட வாகன இரைச்சல் வேறு யோசிக்க வைத்தது.
“என்ர காலியாண வாழ்க்கை நிலைக்கும் எண்டுற நம்பிக்கை இனியும் எனக்கு இல்லை அம்மா..” மாற்றமுடியாத வேதனையோடு தழுதழுத்த குரலில் உடைந்துபோய்ச் சொன்னாள் அவள். “நான் தோத்திட்டன் அம்மா. இனியும் என்ன செய்றது எண்டு எனக்கு தெரியேல்ல..” தான் பஸ்ஸில் இருக்கிறோம் என்பதையே நொடிநேரம் மறந்து விசும்பினாள்.
அவள் சொன்னதைக் கேட்டு இடிந்துபோனார் அற்புதாம்பிகை. இதற்கா அவளைப் பெற்று, காலில்லாத கணவரோடு அத்தனை சிரமங்களையும் சுமந்து, படிப்பித்து, நல்ல வேலையில் அமர்த்தி, அழகுபார்த்து, சீரும் சிறப்புமாகத் திருமணம் செய்து வைத்தது? என்னவோ காலுக்கு ஷு அளவில்லை என்பதுபோல் சொல்கிறாளே. கண்ணீரோடு கோபமும் சேர்ந்தே வந்தது. போராடிப் பார்க்காமலேயே பின்வாங்குவதும், போட்டியிடாமலேயே தோல்வியை ஏற்றுக்கொள்வதும் என்னவிதமான மனப்பாங்கு?
“நீ இப்ப எங்க நிக்கிறாய் பிள்ளை?” தானாகவே அவர் குரலில் ஒருவித இறுக்கம் வந்து அமர்ந்தது.
“பஸ்ல. கொழும்புக்கு போய்க்கொண்டு இருக்கிறன்.” அன்னையின் மனநிலையை அறியாமல் தன் துன்பத்திலேயே உழன்றுகொண்டிருந்தாள் அவள்.
“சரி! ஒண்டுக்கும் யோசிக்காத. அப்பிடி எல்லாம் லேசுல எதுவும் நடக்காது. என்ன எண்டு பிறகு கதைக்கலாம். வீட்டப்போய் இறங்கின பிறகு எனக்கு எடு.” என்றுவிட்டு அழைப்பைத் துண்டித்தார் அவர்.
அமைதியாக இருந்து, ஆழ மூச்சை எடுத்து தன் நெஞ்சின் பதட்டத்தை முதலில் தணித்துக்கொண்டார். அதன்பிறகு, மனம் மகளோடு பேச வேண்டியவற்றைத் தனக்குள்ளேயே கோர்க்க ஆரம்பிக்க, அவளின் அழைப்புக்காகக்
காத்திருந்தார்.
அவளும் அழைத்தாள்.

