என் பிரியமானவளே 17 – 2

சாப்பிட்டியாம்மா?”

 

“ஓம் அம்மா..” அவளின் சோர்ந்த குரலே ஒழுங்காக வயிற்றைக் கவனித்திருக்க மாட்டாள் என்று சொல்லிற்று. அவளின் வயிற்றைக் காட்டிலும் வாழ்க்கைச் சிக்கல் பெரிதாய் தெரிந்ததால், அதைக் கவனித்தார்.

 

“ஏன் பிள்ளை அப்போத அப்பிடிச் சொன்னனீ?” முதலில் அவளைப் பேச வைத்தார்.

 

“வேற என்னம்மா சொல்ல? அவர் சமாதானம் ஆகிற மாதிரியே இல்ல. நான் அங்க வரேல்லயாம், அவரைத் தேடிக் கதைக்கேல்லையாம், சொன்ன சொல்ல அவர் காப்பாத்தேல்ல எண்டு சொல்லிட்டேனாம் எண்டு அதுலயே நிக்கிறார். நான் செய்தது முழுக்கப் பிழை எண்டு சொல்லுறார். ‘சரி, நான் செய்தது, கதைச்சதுதான் பிழை. இனி என்ன செய்றது’ எண்டு இறங்கிப்போய்க் கேட்டாலும் பதில் சொல்லுறார் இல்ல. சொறியும் கேட்டுட்டன். கெஞ்சியும் பாத்திட்டன். இதுக்கு மேல என்ன செய்ய எண்டு எனக்கு விளங்க இல்ல. நானும் மனுசி தானேம்மா. எனக்கும் மான ரோசம் இருக்குத் தானே. அவர் கதைக்கிறதுக்கு எல்லாம் பதில் சொல்ல ஏலாது அம்மா. அந்தளவுக்கு வார்த்தையால நோகடிப்பார். இப்பவும், ரெண்டு வருசம் கழிச்சு என்ன எண்டு முடிவு செய்வமாம். அவரின்ர குணத்துக்கு, ரெண்டு வருசம் கழிச்சு அவரா கொழும்புக்கு வந்தாரோ, அதுக்குப் பிறகு எனக்கு நரகம் தான். அவ்வளவு சொல்லியும், நான் வேலையை விட்டுட்டு அங்க போகாம, அவரைத்தான் வரவச்சிருக்கிறன் எண்டு, காலத்துக்கும் இந்த விசயம் அவரின்ர மனதில இருக்கும் அம்மா. சொல்லிக்காட்டுவார், சண்டை பிடிப்பார். நிம்மதியே இருக்காது. எனக்கு நம்பிக்கையே போச்சு.” தழுதழுத்த குரலில் அவள் சொன்னதைக் கேட்டவரின் மனம் பாரமாகிற்று. ஆனாலும், அவளுக்குக் கண்திறப்பு ஒன்று தேவை என்பதையும், அவர் மனது கணக்கிட்டது.

 

“சரி பிள்ளை. நான் கேக்கிற கேள்விகளுக்குப் பதில் சொல்லு.” என்றுவிட்டு, “அவரைப் பிரிஞ்சு நீ இருப்பியா? உன்னால அவர் இல்லாத ஒரு வாழ்க்கையை வாழ ஏலுமா?” என்று நிதானமாகக் கேட்டார் அற்புதாம்பிகை.

 

“அம்மா..”

 

“இன்னொரு கலியாணம் செய்ய நீ ரெடியா?”

 

“அம்மா.. என்னம்மா?” அன்னையின் கேள்வியில் மிகவும் அதிர்ந்தாள் அவள்.

 

“இது எல்லாத்தையும் விட, உன்ர வாழ்க்கையைச் சந்தோசமா கொண்டு போறதுக்கு உன்னளவில நீ என்ன முயற்சி செய்திருக்கிறாய்? ஒரே ஒருக்கா அந்தத் தம்பிட்ட போயிட்டு வந்திருக்கிறாய். இந்தளவுதான் உன்ர போராட்ட குணமா? இல்ல, ஒரு கலியாண வாழ்க்கையை முடிவுக்குக் கொண்டு வாறதுக்கு இதெல்லாம் காணுமா?”

 

“…”

 

“உன்ர ஒபீஸ்ல நீ சேர்ந்த புதுசுல, ‘என்னத்த படிச்சு கிழிச்சுப்போட்டு வந்ததுகளோ தெரியாது. எங்கட கழுத்த அறுக்க எண்டே வந்து சேருங்கள்.’ எண்டு உன்ர டீம் லீடர் திட்டினவன் எண்டு சொல்லி என்னட்ட அழுதனி தானே? அப்ப ஏன், ‘நீயும் உன்ர வேலையும், போடா’ எண்டு தூக்கிப்போட்டுட்டு வரேல்ல. ரோசம் பாராட்ட இல்ல. அதுக்குப் பதிலா என்ன செய்தனி? மாடா வேலை செய்து, நான் மக்கு இல்ல கெட்டிக்காரிதான் எண்டு காட்டினனி. இந்த அஞ்சு வருசத்தில உன்ர ஒபீஸ்ல நீ எந்த அவமானத்தையும் சந்திக்கவே இல்லையோ? அப்ப எல்லாம் என்னம்மா செய்தனி? விட்டுட்டு ஓடி வராம நிண்டு போராடினனி. ஓமோ இல்லையோ?”

 

“ஓம்…” அன்னையின் அழுத்தம் திருத்தமான பேச்சில் அவள் குரல் உள்ளே போயிற்று.

 

“அதை ஏன் செய்தனி? ஏன் எண்டால் உனக்கு வேலை தேவையா இருந்தது. அதால கிடைக்கிற காசும் முன்னேற்றமும் முக்கியமா இருந்தது. அந்தச் சம்பளத்தில் நீ, உன்ர குடும்பம் எல்லாரும் தங்கி இருந்ததால எல்லாத்தையும் பொறுத்துப்போய், கடந்துவந்து, இண்டைக்கு அந்த வேலையில நிலைச்சும் நிக்கிறாய். அப்பிடித்தானே?”

 

“ம்”

 

“அதே முறையை நீ ஏன் இங்க யோசிக்க இல்ல? அவர் இல்லாட்டியும் என்னால வாழ ஏலும் எண்டுற அந்த எண்ணமா? இல்ல, பொருளாதார ரீதியா நீ அவரைத் தங்கி இருக்கேல்ல எண்டுற தைரியமா?” அவரின் எந்தக் கேள்விக்கும் அவளிடம் பதில் இல்லை.

 

மகளின் மௌனம் அவருக்குள்ளும் கோபத்தை விசிறி விட்டது.

 

“என்ன வாழ்க்கை வாழுறீங்க எண்டு எனக்கு ஒண்டும் விளங்க இல்லையம்மா. இந்தக்காலத்துப் பிள்ளைகள் எல்லாம் படிப்பில நல்ல கெட்டிக்காரர். படிச்சு, நல்ல உத்தியோகம் எடுத்து, வேலையிலயும் கெட்டிக்காரரா இருந்ததும் நினைக்கிறீங்க போல, உங்களுக்கு எல்லாம் தெரியும் எண்டு. உண்மையா, வாழ்க்கை பற்றின விளக்கம் உங்களுக்குக் கொஞ்சமும் இல்ல. ஒண்டுமே இல்லாத விசயத்தப் பெருசாக்கிறதும், எதுக்கு எண்டில்லாம ரோசம் பாக்கிறதும், நானா நீயா எண்டு போட்டி போடுறதும், என்னம்மா இதெல்லாம்?”

 

“நான் எங்கம்மா போட்டி போட்டனான். அவர்தானே..” எனும்போதே இடையிட்டார் அவர்.

 

 

 

“இதுதான் பிள்ளை நீங்க செய்ற பிழை. நீ அவரைக் குற்றம் சாட்டுறது. அவர் உன்னைக் குற்றம் சாட்டுறது. எல்லாத்துக்கும் சட்ட நியாயம் பேசுறது. உங்கள நீங்க திருத்தாம ஈஸியா மற்றவரப் பிழை சொல்லுறது. நியாயம் பேசுறோம் நீதி கேக்கிறோம் எண்டு தேவையில்லாத பிரச்சனைகளை எல்லாம் இழுத்து வைக்கிறது. ஒரு நேரம் அவர் பிழை விட்டா நீ சமாளிச்சுப் போ. நீ பிழை விடுற நேரம் அவர் சமாளிச்சு நடக்கட்டும். எப்ப பாத்தாலும் நீயா நானா எண்டு போட்டி போட வாழ்க்கை ஒண்டும் கேம் ஷோ இல்ல பிள்ளை. குணம் சரியில்ல. பழக்கவழக்கம் சரியில்ல, உழைப்பில்ல, நேர்மை இல்ல, தறுதலை எண்டா அது வேற. அப்ப, வெளில வா, சுதந்திரமா இரு எண்டு நானே சொல்லுவன். ஆனா, இங்க அந்தத் தம்பியும் நல்ல பிள்ளை. நீயும் அருமையான பிள்ளை. அப்பிடி இருந்தும் உங்களால சந்தோசமா வாழ முடியேல்ல எண்டா, இன்னும் நீங்க ரெண்டுபேரும் ஒருத்தர ஒருத்தர் வடிவா விளங்

கிக்கொள்ள இல்லை எண்டுதான் அர்த்தம்.”

error: Alert: Content selection is disabled!!