என் பிரியமானவளே 18 – 2

சற்று நேரம் அப்படியே அமர்ந்திருந்தான். அனைத்திலும் பற்றற்றுப் போனதுபோன்ற, இயந்திர கதியிலான அவளின் பதில்களே காதுக்குள் ரீங்காரமிட்டுக்கொண்டிருந்தது. மெல்ல மெல்ல நிதானத்துக்கு வந்த மனது, அவள் தன்னிடம் நிரந்தரமாக வந்துவிடப் போகிறாள் என்பதை, அப்போதுதான் கொஞ்சம் கொஞ்சமாக உள்வாங்க ஆரம்பித்தது. இப்போது, ஒரு வித உற்சாகமும் சந்தோசமும் பொங்கிற்று.

 

‘வரட்டும்.. எனக்காக வேலையை விட்டுட்டு வாறவள எந்தக் குறையும் இல்லாம சந்தோசமா வச்சிருக்க வேணும்.’ என்று முடிவு செய்துகொண்டு, அப்போதிலிருந்தே வீடு பார்க்க ஆரம்பித்தான். அனைத்திலிருந்தும் அவள் விலகி நிற்க முயன்றாலும் விடவில்லை. பார்த்த வீடுகளின் ஃபோட்டோக்களை அவளுக்கு அனுப்பி, அவளின் எதிர்பார்ப்புக்களையும் அவள் வாயிலிருந்து பிடுங்கி, ஒரு வீட்டினைப் பார்த்து முடித்தான்.

 

வீட்டுக்குத் தேவையான பொருட்களை அவள் வந்த பிறகு இருவருமாக வாங்கிக்கொள்வதாக முடிவு செய்தான். மனதினை இனிய கற்பனைகளும் கனவுகளும் ஆக்கிரமிக்க ஆரம்பித்தன. திருமணமாகிக் கிட்டத்தட்ட ஒரு வருடத்தைத் தொடப்போகிறார்கள். ஆனாலும், இப்போதுதான் அவர்களுக்கு என்று ஒரு வீடும், அதிலே ஓர் அழகிய இல்லறமும் மலரக் காத்திருந்தது.

 

இரண்டு மாதங்கள் எப்படி என்றில்லாமல் விரைந்தோடி மறைந்தன. நெஞ்சு முழுக்கப் பாரத்துடன் தன் அலுவலகத்திலிருந்து, தன் நண்பர்களிடம் இருந்து, விடைபெற்றுக்கொண்டாள் பிரியந்தினி.

 

‘கொழும்பில வேலை கிடைச்சிருக்கு’ என்று ஊரில் பெருமையாகப் பகிர்ந்த நாட்கள், தலைநகரை விழிகள் விரியச் சுற்றிவந்த நாட்கள், முதல் சம்பளத்தைப் பார்த்து மலைத்தது, வீட்டுக்கு என்று அவள் முதன் முதலாகச் செய்தபோது பெற்றவர்களின் கண்களில் மெல்லிய ஈரலிப்போடு மின்னிய ஆனந்தம் என்று, அந்த நாட்கள் எல்லாம் ஒரு வரிக் கவிதைகளாக மனதினில் ஓடி மறைந்தன. அவள் வாழ்வில் வந்திருக்கிற இந்தப் புதிய திருப்பமும் அவளுக்கு என்ன வைத்திருக்கிறது என்று தெரியவில்லை. எது வந்தாலும் எதிர்கொள்வோம் என்கிற எண்ணத்தோடு தன் எதிர்காலத்தை நோக்கிப் புறப்பட்டாள்.

 

கோகுலனும் முதல் நாளே கொழும்புக்கு வந்திருந்தான். அவளின் பொருட்களை எல்லாம் ஒரு வாகனத்தில் ஏற்றி அனுப்பிவிட்டு, அவர்கள் இருவருமாக பஸ்ஸில் புறப்பட்டனர்.

 

அது ஒரு ஏசி பஸ். ஜன்னலை மறைத்திருந்த திரைச்சீலையை விலக்கிவிட்டு, புற உலகில் கவனமின்றிப் பார்வையைப் பதித்திருந்தாள் பிரியந்தினி. அவசியம் தவிர்த்துத் தன்னிடம் வார்த்தைகளை விரயமாக்காமல் விலகி நிற்பவளை கோகுலனும் கவனித்துக்கொண்டுதான் இருந்தான்.

 

மெல்ல அவளின் கரம் பற்றி, “எனக்காக வேலையை விட்டுட்டு வாறதுக்குத் தேங்க்ஸ் யதி.” என்றான் மனதிலிருந்து.

 

திரும்பி அவனைப் பார்த்து, “உங்களுக்காக இல்ல. எனக்காகத்தான் இந்த முடிவு.” என்றுவிட்டு, அவனிடமிருந்த தன் கையை நாசுக்காக விலக்கிக்கொண்டாள் அவள்.

 

தான் நினைத்திருந்தது போன்று சமாதானப்படலம் இலகுவாக முடியாதோ என்று தோன்றிற்று அவனுக்கு. அவனுக்குத் தெரிந்த பிரியந்தினி இலகுவாகக் கையாளப்படக் கூடியவள். எதையும் நேரே கதைத்து, அந்தப் பிரச்னையை முடித்துவிட்டு, இலகுவாகவே அடுத்ததை நோக்கி நகர்கிறவள். இந்த மௌனக் கோபமும் விலகளும் புதிது.

 

வீட்டுக்கு வந்து சேர்ந்து, இருவரது அறைகளிலும் இருந்து கொண்டுவந்த அவர்களுக்குச் சொந்தமான பொருட்களை எல்லாம் ஒழுங்கு செய்து, தேவையான தளபாடங்களை வாங்கி என்று, அவர்களின் நாட்கள் வழமைக்குத் திரும்ப ஒரு வரமாயிற்று. அதற்குள், நாம் ஒருமுறை வரட்டுமா என்று ஆவலுடன் கேட்ட பெற்றோரிடமும், தமக்கையிடமும் இப்போதைக்கு வேண்டாம் என்று சொல்லியிருந்தாள் பிரியந்தினி.

 

இரு வீட்டினருக்கும், அவளின் இந்த முடிவு பெருத்த நிம்மதியைக் கொடுத்தது. ஜெயராணிக்கு மருமகள் மீதிருந்த கோபம் இருந்த இடமே தெரியாமல் மறைந்து போயிற்று. இனி எல்லாம் சரியாகிவிடும் என்று நம்பினார். அற்புதாம்பிகைக்கு மகளின் மனநிலையை அனுமானிக்க முடிந்தது. சில காயங்களைக் கடந்துதானே காலத்தை வெல்ல வேண்டியிருக்கிறது. எடுத்துச் சொல்ல எல்லோராலும் முடியும். தக்க நேரத்தில் தக்க முடிவை எடுப்பதற்குச் சிலரால் மாத்திரமே முடியும். அது மகளுக்கு இருப்பதில், இருந்ததில் மிகுந்த நிறைவாய் உணர்ந்தார். அலைகள் மிகுந்த கடலில் நீந்தக் கற்றுக்கொள்ளுவாள் என்று நம்பிக்கை பிறந்தது.

 

அன்று, வேலை முடிந்து வீடு திரும்பினான் கோகுலன். பைக்கை அதற்குரிய இடத்தில் நிறுத்திவிட்டு வீட்டுக்குள் நுழைந்தபோது, சாப்பாட்டு மேசையில் லேப்டாப்புக்கு முன் அமர்ந்திருந்தாள் பிரியந்தினி.

 

அவர்களுக்கு ஏற்றவாறு மரத்திலான வட்ட மேசையை வாங்கிப் போட்டிருந்தார்கள். அதைச் சுற்றியிருந்த நான்கு நாற்காலிகளில் ஒன்றில் தன்னைக் குடிவைத்திருந்தாள் அவள். காதினுள் ஹெட்போன்கள், பக்கத்தில் ஒரு பென்னும் நோட் பேடும், அதனருகிலேயே அவளின் கைபேசி, பெரிய கோப்பை ஒன்றில் ஏதோ குடிபானம். சில பேப்பர்கள் மேசையில் பரவிக் கிடந்தன. சித்திரமாகத் தீட்டப்பட வேண்டிய காட்சியாக மனதில் பதிந்தாள் அவள்.

 

தன் லேப்டாப் பேக்கையும் ஃபோனையும் அதே மேசையில் இன்னொரு பக்கமாக வைத்துவிட்டு, அவளைப் பின்னிருந்து அணைத்துக் கன்னத்தோடு கன்னம் வைத்து இழைந்தான் அவன்.

 

வேகமாகத் திரும்பி, “என்ன இது?” என்றாள், புரிந்துகொள்ளவியலா புருவச் சுளிப்பு ஒன்றுடன்.

 

“என்ன எண்டு தெரியாதா?” சிறு சிரிப்புடன் அவளின் நெற்றியில் முட்டியபடி வினவினான்.

 

அவன் முகத்தையே ஒரு நொடி கூர்ந்தவள் மீண்டும் பார்வையைத் தன் மடிக்கணனி மீது பதித்தாள். கைகள் அவன் கைகளைத்

தன்னிடமிருந்து அகற்ற முனைந்தது.

 

error: Alert: Content selection is disabled!!