என் பிரியமானவளே 17 – 3

உண்மைதானோ என்று ஓடியது அவள் சிந்தனை. இப்போது அழுகை நின்றிருந்தது.

 

“திரும்பவும் சொல்லுறன், அவர் இல்லாம உன்னால வாழ ஏலுமா, இன்னொரு வாழ்க்கையைச் சந்தோசமா ஏற்க ஏலுமா எண்டு நிதானமா யோசி. ஏன் எண்டால், உன்னைத் தனியா கடைசிவரைக்கும் நாங்க விடமாட்டோம். இது எல்லாத்துக்கும் நீ ஓம் எண்டா நீ நடக்கிற மாதிரியே நட. இல்லையா, கட்டின மனுசனிட்ட மான ரோசம் பாக்காத. உன்ன விளங்கப்படுத்து, மனம் திறந்து கதை, அழு, சண்டை பிடி, அவரின்ர சட்டையைப் பிடிச்சுக் கேக்க நினைக்கிறதக் கேளு. என்ன எண்டாலும் செய். கடைசில வாழ்க்கையைச் சந்தோசமா வாழு. அவர் உன்ன விளங்கிக்கொள்ளாட்டிப் பரவாயில்லை. அவருக்கும் சேத்து நீ முயற்சி எடு. உன்னை அவருக்கு விளங்க வை. அதுல ஒரு பிழையும் இல்ல. வாழ்க்கையைச் சீராக்கப் போராடுறதும் ஒருவிதமான புத்திசாலித்தனம் தான். அவருக்கு உன்ன விளங்க வச்சு, உன்ர வாழ்க்கையை நல்லமாதிரிக் கொண்டுபோறது கூடப் பெரும் கெட்டித்தனம் தான். அது எல்லோராலயும் முடியிறேல்ல பிள்ளை. சில நெளிவு சுளிவுகளைத் தெரிஞ்சு, விட்டுக்குடுக்க வேண்டிய இடத்தில விட்டுக் குடுத்து, இறுக்கிப் பிடிக்கவேண்டிய இடத்தில இறுக்கிப் பிடிச்சு வாழுறது எண்டுறதே பெரும் விசயம். கலியாணமாகி அஞ்சு வருசம் கணவன் மனைவியா வாழ்ந்தாலே வாழ்நாள் சாதனை மாதிரி வெளிநாட்டு ஆக்கள் கொண்டாடுவீனம். ஆனா நாங்க, முப்பது நாப்பது வருசத்த வாழுறதே தெரியாம வாழ்ந்திட்டு போற ஆக்கள். எங்களுக்குப் பிள்ளைகளாப் பிறந்திட்டு என்னம்மா இதெல்லாம்?” என்று கேட்டார் அற்புதாம்பிகை.

 

அவள் ஒன்றுமே சொல்லவில்லை. ஆனால், உன்னிப்பாகக் கேட்டுக்கொண்டாள்.

 

“கொஞ்சம் சகிப்புத்தன்மை கொஞ்சம் விட்டுக்கொடுப்பு இருக்கவேணும் பிள்ளை. சில இடங்கள்ல தோற்றுப்போறதும் வெற்றிதான். விட்டுக்குடுத்துப் போறதும் புத்திசாலித்தனம் தான். எல்லாத்தையும் விட இன்னொரு விசயத்த தெரிஞ்சுகொள்ளு” என்றவர் நிதானமாக எடுத்துரைத்தார்.

 

“ஒரு காலத்தில, குடும்பம், பிள்ளைகள், மனுசன், மாமனார் மாமியாரை அனுசரிச்சுப் போறது மட்டும் தான் வாழ்க்கை எண்டு நினைச்சு, பொம்பிளைகள் சமையல் கட்டுக்கையே காலத்தைக் கழிச்சது எவ்வளவு பெரிய முட்டாள் தனமோ, அதே மாதிரித்தான் நான் படிச்சிருக்கிறன், நான் உழைக்கிறன், நான் சம்பாதிக்கிறன், எனக்குத் தைரியம் இருக்கு, என்னால வாழ முடியும் எண்டு நினைச்சுக் குடும்பத்தைத் தூக்கி எறியிறதும். வண்டிக்கு ரெண்டு சக்கரம் மாதிரி ஒவ்வொரு மனுசனுக்கும், குடும்பம், தொழில் ரெண்டும் ரெண்டு கண்ணா இருக்க வேணும். அது ஆணுக்கா இருந்தாலும் சரிதான் பெண்ணுக்கா இருந்தாலும் சரிதான்.

 

“கனவையும் லச்சியத்தையும் விட்டுப்போட்டு, வாழ்க்கையை மட்டுமே காப்பாத்திக்கொண்ட பிள்ளைகளுக்கு ஆசைப்பட்டதை விட்டுட்டோமே, கனவை தொலைச்சுட்டோமே எண்டுறது, கடைசிக் காலம் வரைக்கும் எப்பிடி வலிக்குமோ, அதே மாதிரித்தான், லச்சியத்துக்காகவும் கனவுக்காகவும் வாழ்க்கையைத் தொலைச்சுப்போட்டு, கனவையும் லச்சியத்தையும் மட்டும் நோக்கிப் போற ஆக்களின்ர நிலையும். ஆசைப்பட்டதை அடைஞ்ச பிறகு, குடும்பத்தையும் சேர்த்துக் கொண்டு வந்திருக்கலாமோ எண்டு மனம் அழும். இனி அது முடியதே எண்டுற வலி காலத்துக்கும் இருக்கும். அதைத் தாங்கேலாது அம்மாச்சி. அதுக்குப்பிறகு, ‘எனக்கு ஒரு குறையும் இல்ல, நல்ல வேலையில இருக்கிறன், நல்ல சம்பளம் வருது, நான் நல்லாத்தான் இருக்கிறன்.’ எண்டு, நாலுபேருக்கு முன்னால நீ பொய்யா சிரிச்சு வாழுற வாழ்க்கை மட்டும் தான் மிஞ்சும். அம்மா உன்ர நல்லதுக்குத்தான் சொல்லுறன். நீ கெட்டிக்காரி. புத்திசாலியா நட! எதுக்கும் அவசரப்படாத. யோசிச்சு என்ன செய்றது எண்டாலும் செய்.” என்றுவிட்டு அழைப்பைத் துண்டித்தார் அவர்.

 

இல்லறமும் ஒரு வரம்தான். அதற்கென இறங்கிப்போவதில் தவறில்லை. ஒருமுறை ஆணின் கை ஓங்கினால் இன்னொருமுறை பெண்ணின் கை ஓங்கும். அதுதான் யதார்த்தம். கல்வி என்பது அறிவுக்கும், உழைப்புக்கும், உயர்வுக்குமே தவிர, நான் என்கிற பிடிவாதத்துக்கல்ல என்று புரிந்தது. ஒரு உறையில் இரு வாள்கள் உறைவதுதான் குடும்பம். இரண்டுமே சமபலம் கொண்டவை. பரிசோதிக்க ஆரம்பித்தால் இழப்பு இருபக்கமும் தான். அன்னையின் கண்டிப்புடன் கூடிய பேச்சு, அவளின் விழிகளை மெல்லத் திறந்துவிட்டது.

 

error: Alert: Content selection is disabled!!