ஒரு நொடி அவள் முகத்தைக் கூர்ந்துவிட்டு, அவனும் விலகி அவளுக்கு அருகில் இருந்த இருக்கையை இழுத்துவிட்டு அமர்ந்தான். “பிளீஸ் யதி, கொஞ்ச நேரம் அதை மூடி வை.” என்றவன், அந்த வேலையைத் தானே செய்தான். அவள் அமைதியாக இருக்க, அவள் முகத்தைத் தன் புறமாகத் திருப்பினான்.
“இன்னும் எத்தனை நாளைக்கு இந்தக் கோபத்தைப் பிடிச்சு வச்சிருக்கப் போறாய்?” என்று கேட்டான். “பிடிச்ச வேலைய விட்டுட்டு வாறது எவ்வளவு பெரிய வலி எண்டு எனக்குத் தெரியும். இப்ப உனக்குக் கஷ்டமாத்தான் இருக்கும். ஆனா, எல்லாம் மாறும். நான் மாத்துவன். நீ அண்டைக்குச் சொன்னியே, பிள்ளை, குடும்பம், வீடு எண்டு வந்தபிறகு நீ நினைக்கிற அளவுக்கு உன்னால மேல போகேலாது எண்டு. நிச்சயமா அப்பிடி இருக்காது. உன்ர கனவுக்கும் லச்சியத்துக்குமான உயரம் மட்டுப்பட்டதா இருக்க நான் விடமாட்டன். என்னை நம்புறியா?” என்றான் அவள் விழிகளையே பார்த்து.
அவள் உதட்டோரம், அவனை நம்பாத கசந்த முறுவல் ஒன்று வந்துவிட்டுப் போனது. அவள் தன்னை நம்பவில்லை என்று விளங்கிற்று. வார்த்தைகளால் சொல்வதைக் காட்டிலும் செயலால் நிரூபிக்கவே அவனும் விரும்பினான். அவளின் பார்வை இன்னுமே தளராமல் அவன் மீதே இருக்க, அவன் உதட்டினில் மென்னகை மலர்ந்தது. அந்த விழிகளின் மீதே முத்தமிட்டு, “நான் என்ன செய்தா இந்தக் கோபம் போகும் எண்டு சொல்லு?” என்று கேட்டான்.
அவன் கண்களில் நேசம் மிகுந்திருந்தது. உதட்டினில் சிரிப்பிருந்தது. அந்தச் சிரிப்பின் பின்னே மறைந்து கிடக்கும் பிடிவாதக் கோபத்தைக் கொஞ்சம் கூடக் குறையாமல் அனுபவித்தவளால், எப்போதும்போல் அதை ரசிக்க முடியவில்லை. மாறாக, ஒருவித எரிச்சலும் சினமும் தான் பொங்கிற்று. அதில், “தயவு செய்து என்னைப் பாத்து சிரிக்காதீங்க.” என்றாள் முகத்துக்கு நேராகவே.
அவன் சிரிப்பு துணி கொண்டு துடைத்தது போன்று மறைந்தது. முகம் இறுகியது. கண்களில் அனல் பறந்தது. “என்ன கதைக்கிறாய் எண்டு தெரிஞ்சுதான் கதைக்கிறியா?” என்று சீறினான்.
“தெரியாமக் கதைக்க நான் ஒண்டும் குழந்தை இல்ல.”
“எரிச்சலைக் கிளப்பாமப் போடி!” என்றான் அவனும். சேர்ந்து வாழ என்று வந்துவிட்டு எதற்கு இந்தக் குத்தலும் குடையலும். இதற்கு வராமலேயே இருந்திருக்க வேண்டியதுதானே!
“எரிச்சலைக் கிளப்புறனா? அப்ப நான் என்ன செய்யவேணும் எண்டு நினைக்கிறீங்க? நீங்க சொன்னதை நம்பிக்கொண்டு உங்களோட கொஞ்சிக் குலாவ வேணுமோ?”
அவன் முறைத்தான்.
“ஏற்கனவே தந்த வாக்கே இங்க சிரிப்பா சிரிக்குது. இதுல புது வாக்கு! அரசியல்வாதி தோத்துடுவான் உங்களிட்ட. நீங்க சொன்னதையெல்லாம் நான் நம்புவன் எண்டு நினைக்கிறீங்களா?” என்றவளின் கேள்வியில் திகைப்புடன் பார்த்தான் அவன்.
“சிரிக்கிறீங்க, கொஞ்சுறீங்க, குலாவுறீங்க. இதெல்லாம் எப்ப இருந்து? நீங்க நினைச்ச மாதிரி வேலைய விட்டுட்டு இங்க வந்ததுக்குப் பிறகுதானே. அதுக்கு முதல் திரும்பியும் பாக்காமத் தானே இருந்தனீங்க? என்ர கண்ணீர், கவலை, துடிப்பு எதுவுமே உங்களை அசைக்க இல்லையே. கல்லு மாதிரித் தானே இருந்தனீங்க. அண்டைக்கு உங்கட அம்மா எல்லாரையும் வச்சுக்கொண்டு என்னைக் குத்தி கதைக்கிறா. சொன்ன சொல்லு மாறாம நிக்கக் கூடாது எண்டா, பிறகு என்னத்துக்குக் கலியாணத்துக்கு முதல் அது வேணும் இது வேணும் எண்டு மெனக்கெட்டுக் கதைக்க? உங்கட அம்மாவும் தான் பாமினின்ர கலியாணச் செலவு இருக்கு எண்டு சொன்னவா. கட்டி வந்த பிறகு, ஒரு ரூபாயும் அங்க குடுக்கக் கூடாது எண்டு நான் சொல்லியிருந்தா ஓம் எண்டு நீங்கதான் கேட்டு இருப்பீங்களா? இல்ல, உங்கட அம்மாதான் சும்மா இருந்திருப்பாவா?” என்று சீறினாள் அவள்.
இத்தனையையும் நெஞ்சுக்குள் வைத்துக்கொண்டா இங்கே வந்தாள் என்று அதிர்ச்சியோடு அவளைப் பார்த்தான் அவன்.
“பிறகும் ஏன் இங்க வந்தனீ எண்டு கேக்கிறீங்களா? என்ர வாழ்க்கை பிழைச்சிடுமோ எண்டுற பயம் வந்திட்டுது. நீங்க என்னை விட்டுட்டு இன்னொரு வாழ்க்கையைத் தேடிப் போயிடுவீங்களோ எண்டுற சந்தேகம் வந்திட்டுது. என்ர மனுசன் எனக்காக நிப்பார் எண்டுற நம்பிக்கை போயிட்டுது. உங்கட அம்மா வேற, தன்ர மகனுக்குப் பொருத்தமே இல்லாத ஒருத்திய யோசிக்காம கட்டி வச்சிட்டாவாம் எண்டு என்னட்டையே சொல்லிக் கவலைப் பட்டவா. அதுதான், நானேதான் என்ர வாழ்க்கையையும் என்னையும் காப்பாத்திக் கொள்ளவேணும் எண்டு யோசிச்சிட்டுத்தான் இங்க வந்தனான். சோ, எப்பவும் போலவே நீங்க இருங்க. அடுத்தகட்டமா உங்களுக்கும் உங்கட அம்மாவுக்கும் குழந்தை தேவை எண்டா வாங்க! எல்லாத்துக்கும் தயாராத்தான் வந்திருக்கிறன்.” மனதில் இருந்த ஆத்திரத்தை எல்லாம் பொரிந்து தள்ளிவிட்டு அங்கிருந்து எழுந்துபோனாள் அவள்.
அசையக்கூட மறந்தவனாய் அப்படியே அமர்ந்திருந்தான் அவன். அவமானத்தில் முக
ம் கருத்துப் போயிற்று!

