இரண்டு நாட்களாக, அன்னை சொன்னதையேதான் யோசித்துக்கொண்டிருந்தாள் பிரியந்தினி. போராடிப் பார்க்காமலேயே தோல்வியைத் தழுவ முயன்ற தன் எண்ணம், எவ்வளவு முட்டாள் தனமானது என்று, இப்போது புரிந்தது. அந்தளவுக்கு, முதுகெலும்பு அற்றவளாகிப் போனாளா? அதோடு, திருமணவாழ்க்கை பிழைத்துவிட்டால் என்னாகும் என்கிற பயமும், இப்போது அப்பிக்கொள்ள ஆரம்பித்திருந்தது. அதன் பின்னான எதிர்காலத்தை யோசிக்கவே நெஞ்சு நடுங்கியது. அதற்குப் பதிலாகப் போராடலாம், இருக்கிற வாழ்க்கையைச் சீராக்கலாம், சந்தோசமாக வாழலாம்.
அப்படியானால், இனி அவள் என்ன செய்ய வேண்டும்? மீண்டும் அதே கேள்வி.
வேலையை மாற்றிக்கொண்டு அங்குப் போக வேண்டுமோ? அதை நினைக்கையிலேயே மனதில் ஒரு வலி. ஆனால், அதைத் தவிர்த்து வேறு வழியும் புலப்பட மாட்டேன் என்றது. அன்னையிடம் சொன்னதுபோல, அவள் தன் பிடியிலேயே நின்று, இரண்டு வருடங்கள் கழிந்தபிறகு, அவன் இங்கே வந்தாலும், அவள் இறங்கி வரவேயில்லை, தன் முடிவில் உறுதியாக நின்றுவிட்டால் என்கிற எண்ணம், அவன் மனதில் நிரந்தரமாகத் தங்கிவிடாதா? அது, அவர்களின் பிற்கால வாழ்க்கைக்கு ஆரோக்கியமானதாக நிச்சயமாக இராது. காலத்துக்கும் இப்படி நெஞ்சில் தைத்த முள்ளுடனேயே அவள் வாழ வேண்டுமோ?
அதோடு, இப்போதெல்லாம் தான் பலமிழந்தவளாக, பலவீனம் மிக்கவளாக மாறிக்கொண்டு போவதாகப் பட்டது. எதிலும் ஒரு நிதானமின்மை, பதட்டம், நிலையற்ற தன்மை மனதைப்போட்டு அரித்தது. பாதுகாப்பற்ற தன்மை ஒன்று உருவாகிப் பயமுறுத்தியது. இது அவளுக்கு நல்லதல்ல என்று புத்தி எடுத்துரைத்தது.
அதற்குமேல் நிறைய யோசிக்கவில்லை. இதே அலுவலகத்தை நிறுவனத்தினர் இழுத்து மூடினால் என்ன செய்வாள்? அல்லது, அவர்களே அவளை வேலையை விட்டுத் தூக்கினால் என்ன செய்வாள்? அப்போது, அடுத்து என்ன என்று பார்ப்பாள் தானே. அப்படி நினைத்துக்கொள்வோம் என்று எண்ணிக்கொண்டு, நாட்களைக் கடத்தாமல், மேனேஜரிடம் தன் மூடிவை முறைப்படித் தெரிவித்தாள்.
தாம் தூம் என்று குதித்தார் அவர். இதற்குத்தான் உங்களை எல்லாம் நம்பக் கூடாது என்றார். நிறைய மாற்று யோசனைகளைச் சொன்னார். வேறு மாதிரியான ஓபர்களை முன் வைத்தார். எல்லாவற்றுக்கும் வாயை மூடிக் கேட்டுக்கொண்டு, தன் முடிவிலேயே நின்றாள் பிரியந்தினி. ‘நீ வேலை செய்யும் இடத்தில் உன்னை யாராவது திட்டினால் விட்டுவிட்டு ஓடியா வருவாய்?’ என்று அன்னை சொன்ன வார்த்தைகள், பின்னணியில் வந்து போயின. முறைப்படியாக அவள் அனுப்பிய மெயிலுக்கு, ஒரு வாரம் கழித்து, மூன்று மாத அவகாசத்தில், அங்கிருந்து அவள் வெளியேறலாம் என்று பதில் வந்தது. பிறகும், தேவை ஏற்பட்டால் அவள் உதவி செய்ய வேண்டியது கட்டாயம் என்றிருந்தது.
இந்தளவில் அவர்கள் சம்மதித்ததே போதும் என்றானதில், அடுத்து வந்த நாட்களில் அவர்கள் காட்டிய இறுக்கமான முகமோ, அதிகப்படியான வேலையோ அவளைத் தாக்கவே இல்லை. தன் பொறுப்புகளை எல்லாம் அவளுக்குப் பதிலாக நியமிக்கப்பட்டவரிடம் கையளிப்பதும், அவரை வழி நடத்துவதுமாகவே அவளின் நாட்கள் கழிந்தன.
அன்று, கோகுலனுக்கு அழைத்து விசயத்தைச் சொன்னாள். இதை மருந்துக்கும் எதிர்பாராதவன் அதிர்ந்து போனான். “யதி?” என்றான் பேச்சு வராமல். அவனைக் காட்டிலும், அந்த வேலை அவளுக்கு முக்கியமாகப் போயிற்றா என்பதுதான், அவன் கோபத்துக்கெல்லாம் அடிநாதம். இன்று, அந்த வேலையை விட்டுவிட்டு உன்னிடம் வருகிறேன் என்று அவள் சொன்னபோது, மகிழ முடியவில்லை. மாறாகத் தொண்டைக்குள் எதுவோ சிக்கிக்கொண்ட உணர்வு.
“நீங்க வீடு பாருங்கோ. இன்னும் ரெண்டு மாதத்தில நான் அங்க வருவன்.”
“பேப்பர் போட்டுட்டியா?” அவனால் இன்னுமே நம்பமுடியவில்லை. இரண்டு வாரங்களுக்கு முதல், காலிக்கு வந்தபோது கூட, இந்த முடிவை அவள் எடுத்திருக்கவில்லை. திடீரென்று இப்போது ஏன்? அவன் கொடுத்த அழுத்தம் தான் காரணமோ? மேலே நினைக்கவே பயந்தான். என்னவோ தான் மிகுந்த கொடுமைக்காரனாக மாறிவிட்டது போலொரு தோற்றம் உண்டாயிற்று.
“பேப்பர் போட்டு, அவேயும் அக்செப்ட் பண்ணி ரிப்லை தந்திட்டினம். இன்னும் ரெண்டு மாதத்துக்கு நான் ஒபீஸ் போயே ஆகவேணும். மூண்டாவது மாதம் வீட்டில இருந்தே வேலை செய்யலாம். சோ, அதுக்கு ஏற்ற மாதிரி வீடு பாருங்கோ. வேலைக்கும் ஏற்பாடு செய்ங்கோ.” என்றுவிட்டு அழைப்பைத் துண்டித்தாள் அவள்.
உணர்ச்சிகள் அற்ற அவளின் பேச்சு நெஞ்சைப் பிசைந்தது. கோகுல் என்று ஒருமுறை கூட விழிக்கவில்லை என்பதையும் கவனித்தான். அடுத்த நொடியே திருப்பி அழைத்தான்.
“திடீர் எண்டு ஏன் இந்த முடிவு யதி?”
“எனக்கும் உங்களுக்கும் நடந்துகொண்டிருக்கிற பிரச்னைக்கு வேற முடிவு ஏதும் இருக்கா?” என்று திருப்பிக் கேட்டாள் அவள்.
“ஆனா, இவ்வளவு நாளும் இல்லாம இப்ப திடீரெண்டு ஏன்?”
“தெரிய இல்ல. ஆனா, எங்கட விருப்பு வெறுப்பைத் தாண்டி, சில நேரங்கள்ல வாழ்க்கைக்கு எது தேவை தேவையில்லை எண்டுற கேள்வி வரும். அப்பிடி, இப்ப எனக்கு இந்த முடிவு தேவையா இருந்தது.”
அவளின் பதில் அவனைச் சுருக்கென்று தைத்தது. அதற்குமேல் அவளின் முடிவின் மீது கேள்விகளை வைக்கும் தைரியம் இல்லாமல் போயிற்று. “வீடு என்னமாதிரிப் பாக்கிறது? எப்பிடி இருந்தா உனக்குப் பிடிக்கும்?” என்று பேச்சை மாற்றினான்.
“இருக்க ஒரு வீடு. அது எப்பிடி இருந்தாலும் ஓகே
தான்.” என்றுவிட்டு வைத்தாள் அவள்.

