கஜேந்திரன் சொன்னதைக் கேட்டுக் கோயில் ஐயாவின் முகத்தில் முறுவல் மலர்ந்தது. அவர் பார்க்க வளர்ந்த பெண் தான் பிரியந்தினி. அவள் இப்படிச் சொல்லாவிட்டால் தான் ஆச்சரியப்பட்டிருப்பார். மாப்பிள்ளை வீட்டார் நல்ல பெண் இருந்தால் சொல்லுங்கள் என்று வினவியபோதே, “எனக்குத் தெரிஞ்ச பிள்ளை இருக்கிறாதான். கண்ணுக்கு நிறைஞ்ச பிள்ளை. அவேன்ர குடும்பத்தையே நிமித்தி விட்டது அவதான். என்ன, ஆள் கொஞ்சம் ரோசக்காரி. ஆனா, நல்ல கெட்டிக்காரி. நீங்க ஏதும் எதிர்பாப்பீங்களோ?” என்று, அவரே அவளைப்பற்றிச் சொல்லி இருந்தார்.
“இவ்வளவு வேணும் எண்டு எல்லாம் கட்டாயம் இல்லை ஐயா. எங்களிட்ட என்ன இல்லை எண்டு வாற மருமகளிட்ட வாங்க, சொல்லுங்கோ? வாழப்போறது அவே ரெண்டுபேரும். நல்ல குடும்பமா நல்ல பிள்ளையா இருந்தா காணும். மற்றும்படி ஏலுமானதை அவே செய்தா சரி.” என்றுதான் அவர்களும் சொல்லியிருந்தனர்.
அதில், கஜேந்திரன் பெரும் கவலையோடு சொன்னதைப்பற்றி அவர் பெரிதாக அலட்டிக்கொள்ளவில்லை. மாப்பிள்ளை வீட்டினர் சொன்னதையும் இப்போது சொல்லவில்லை. அவசரப்பட்டு ஏன் ஆசையை வளர்ப்பான்?
“முதல் நான் குறிப்புப் பாக்கிறன். பொருந்தி வந்தா மிச்சத்தைப் பாப்பம். நீங்க எதுக்கும் பிரியான்ர போட்டோ ஒண்டு கொண்டுவாங்கோ. அங்கேயும் கதைச்சுப்போட்டு என்ன எண்டு பிறகு சொல்லுறன். பிரியான்ர நம்பர் என்னட்ட இருக்கு. தேவை எண்டா அவவோடயே கதைக்கிறன்.” என்று மட்டும் சொல்லி கஜேந்திரனை அனுப்பிவைத்தார்.
அவர் ஆசைப்பட்டதுபோன்று குறிப்பு நூற்றுக்கு எண்பத்தைந்து விழுக்காடு பொருந்தி இருந்தது. ஐயாவுக்கு மிகுந்த மகிழ்ச்சி. திருமண யோகம் வேறு இருவருக்கும் அருமையாக அமைந்திருந்தது. அதன்பிறகுதான், பெண்ணின் சீதனம் பற்றிய நிலைப்பாடும் சேர்த்து கோகுலன் வீட்டினருக்கு அவரால் தொலைபேசி வாயிலாகப் பகிரப்பட்டது.
பொருத்தம் பொருந்தி இருப்பதில் அவர்களுக்கும் மிகுந்த சந்தோசமே. இருந்தும், சீதனத்தைப்பற்றிப் பேசக்கூடாது என்று பொம்பிளையே சொன்னாள் என்பதைப் பற்றித்தான் சற்றே யோசித்தனர். அவர்களாக எதிர்பார்க்கவில்லை என்பது வேறு. அவளாக அதை ஒரு விதிமுறையாகச் சொல்வது வேறாயிற்றே. பிடிவாதக்காரியோ? நான் சொல்வதுதான் நடக்கவேண்டும் என்று நிற்பாளோ என்று யோசிக்க வைத்தது. கோகுலனும் சட்டென்று கோபப்பட்டுவிடுகிற ராகம். பிறகு, இருவரும் முட்டிக்கொண்டு நிற்கமாட்டார்களா என்று பலதையும் அலசினர்.
அதையே ஐயாவுக்கும் சொல்லிவிட்டு, “ஆர் ஐயா அவே? எங்களுக்கும் தெரிஞ்ச ஆக்களோ?” என்று விசாரித்தார் கோகுலனின் அன்னை, ஜெயராணி.
“தெரிஞ்சிருக்கும் எண்டுதான் நினைக்கிறன். எண்டாலும் ஆர், என்ன எண்டு பிறகு சொல்லுறன். அதுக்கு முதல் நான் சொன்னதைப்பற்றி நல்லா யோசிங்கோ. மகனோடையும் கதையுங்கோ. அவா சொன்னதுக்கு நீங்க ஓம் எண்டு சொன்னால் அந்தக் குடும்பம் பற்றின மேலதிக விபரத்தைச் சொல்லுறன். ஆனா, பிள்ளை நல்ல பிள்ளை. அதுக்கு நான் பொறுப்பு. சும்மா எல்லாம் கதைக்கமாட்டன், தெரியும் தானே. நாளைக்கு ஒண்டு எண்டால் ரெண்டு தரப்பும் என்னட்டத்தான் வந்து நிப்பியல்(நிற்பீர்கள்) எண்டு தெரியும். நல்லா படிச்சு, நல்ல உத்தியோகம், நல்ல சம்பளம். வெளிநாடு எல்லாம் போய் வந்திருக்கிறா. தெளிவா சிந்திக்கிற இந்தக்காலத்துப் பிள்ளைகள், ‘எனக்கு என்ன குறை எண்டு நான் சீதனம் குடுத்துக் கலியாணம் கட்டவேணும்?’ எண்டு யோசிக்கிறதில பிழை இல்லை எல்லோ. அதோட, தங்கட விருப்பு வெறுப்ப மறைக்காம, நேரா சொல்லுறதும் நல்லது தானே. குறிப்பு நல்ல பொருத்தம். ஆறுமாதம் கழிச்சு கலியாண யோகம் வேற அருமையா அமைஞ்சு வருது. இனி நீங்கதான் கோகுலனோடயும் கதைச்சுப்போட்டு முடிவைச் சொல்லவேணும்.” என்றுவிட்டு அழைப்பைத் துண்டித்தார், அவர்.
ஜெயராணிக்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை. நல்ல சம்மந்தமாக இல்லாதுபோனால் ஐயா இந்தளவுக்கு அழுத்திச் சொல்லமாட்டார் என்று தெரியும். அதே நேரம், அந்தப் பெண் தங்கள் குடும்பத்துக்குப் பொருந்தி வருவாளா என்கிற கேள்வி பெரிதாக எழுந்து நின்றது. கோகுலனுக்கு ஒரு தங்கை வேறு இருக்கிறாள். அவளுக்கு இருபத்தியிரண்டு வயது. இருபத்திநான்குக்குப் பிறகுதான் கட்டுவேன் என்று முடிவாகச் சொல்லியிருந்தாள். அவளுக்குப் பிறகு என்றால் அவனுக்கு முப்பது முடிந்துவிடும் என்றுதான் அவனுக்குப் பார்க்க ஆரம்பித்தார்கள்.
அதுபார்த்தால் இப்படி ஒரு பெண். நாளைக்கு, தங்கையின் திருமணத்துக்குச் சீதனம் என்று அவன் செலவு செய்ய, அங்கும் வந்து அவள் நியாயம் பேச ஆரம்பித்தால் அனைவரின் நிம்மதியும் கெட்டுவிடாதா? வேறு சம்மந்தம் பார்ப்போமா என்று யோசித்தவர் இதைப்பற்றி மகனுக்கு அழைத்துச் சொல்ல அவசரம் காட்டவே இல்லை. கணவரோடு மட்டும் கலந்தாலோசித்தார்.

