என் பிரியமானவளே 2 – 2

அதையறியாத அவரின் மகள் பாமினி, அன்று இரவு அழைத்த கோகுலனிடம், “டேய் அண்ணா, உனக்கு அம்மா பாத்த பெட்டை பொல்லாத ராங்கிக்காரியா இருப்பா போலவே. சீதனம் எல்லாம் தரமாட்டாவாம். கொழும்பில வேலை செய்றாவாம். வேலையையும் விடமாட்டாவாம், இடமும் மாறமாட்டாவாம். நீதானாம் உன்ர பெட்டி, படுக்கை எல்லாம் கட்டிக்கொண்டுபோய் அவாவோட இருக்கோணுமாம் எண்டு ஒரு ரூல்ஸ் லிஸ்ட்டே குடுத்துவிட்டிருக்கிறா.” என்று அனைத்தையும் சொல்லி இருந்தாள்.

 

கோகுலனின் முகத்தில் இளஞ்சிரிப்புப் படர்ந்தது. யாரந்த ரூல்ஸ் ராமானுஜி என்கிற கேள்வி குறுகுறுப்புடன் அவனுக்குள் தலைதூக்கியது. “விடு! காலம் முழுக்க என்ன வச்சு ஒருத்தி கஞ்சி ஊத்துவாள் எண்டா கசக்கவா போகுது.” என்றான் அவனும் குரலில் கேலி இழையோட.

 

மகள் இப்படி உளறுவாள் என்று ஜெயராணி எதிர்பார்க்கவில்லை. கோபத்துடன் வந்து, “உன்னை ஆரு இப்ப முந்திரிக்கொட்டை வேல பாக்கச் சொன்னது? முதல் கொண்டுவா இங்க ஃபோன!” என்று அவளிடமிருந்து பறித்தெடுத்தார். “தம்பி, அவள் தான் சின்னப்பிள்ளைக் கதை கதைக்கிறாள் எண்டால் நீயும் பொறுப்பில்லாமக் கதைக்கிறதோ?” என்றார் கண்டிக்கும் குரலில். அவரே இன்னும் ஒரு முடிவுக்கு வரவில்லை. அதற்குள் உளறிவைத்துவிட்டாளே. ஒரு பெண்ணைப் பற்றிச் சும்மாவேனும் சொல்லி மகனின் மனதில் சலனத்தைத் தோற்றுவிக்க அவர் விரும்பவில்லை.

 

“சும்மா விளையாட்டுக்குத்தானே அம்மா.” என்று அவரைச் சமாதானம் செய்த கோகுலன், “அது ஆர் அந்தப் பிள்ளை?” என்று விசாரித்தான்.

 

அவர் பயந்ததுபோலவே அவன் கேட்கவும் பாமினியை நன்றாக முறைத்துவிட்டு, “அது, நல்ல சம்மந்தம் ஏதும் இருந்தா சொல்லுங்கோ எண்டு ஐயாட்ட நான்தான் சொல்லி வச்சனான் தம்பி. அதுதான் அவரும் அப்பிடி ஒண்டு இருக்கு, பாக்கப்போறீங்களோ எண்டு சும்மா கேட்டவர். ஆனா, அந்தப் பிள்ளைக்குச் சீதனம் எண்டு குடுக்கிறதும் வாங்கிறதும் விருப்பம் இல்லையாம். கொழும்பில இருக்கிறாவாம். வேலைய விடமாட்டாவாம். இடம் மாறவும் மாட்டாவாம். அப்ப எங்களுக்கு அது சரிவராதுதானே. மற்றும்படி ஒண்டும் பெருசா கதைக்க இல்லையப்பு. ஆக்கள் ஆர் எண்டும் தெரியாது.” என்று, அதை ஒன்றுமே இல்லை என்பதுபோல் அவன் மனதில் பதியவைக்க முயன்றார், அவர்.

 

“ம்ம்..” என்று கேட்டுக்கொண்டான் அவன். ‘சீதனம் குடுக்கிறதும் வாங்குறதும் விருப்பம் இல்லை’ என்று நேராகச் சொன்ன அவளின் அந்த நிமிர்வு ஏதோ ஒரு வகையில் அவனை ஈர்த்தது.

 

“கஷ்டப்பட்ட ஆக்களாமோ அம்மா?”

 

இதோடு விட்டுவிடுவானாக்கும் என்று அவர் நினைக்க அவன் மீண்டும் அவர்களைப் பற்றியே கேட்டதில் உள்ளூர அரண்டுதான் போனார், ஜெயராணி. ஆனாலும் பதில் சொல்லாமல் இருக்க முடியாதே. “தாய் தகப்பனுக்குப் பெரிய வசதி இல்லப்போல. இந்தப் பிள்ள வேலைக்குப்போக வெளிக்கிட்ட பிறகுதான் அந்தக் குடும்பம் நல்லா வந்திருக்குப்போல.” என்று அப்போதும் அக்கறையற்றவர் போன்று சொல்லிவிட்டு, “இன்னும் ஒண்டும் முடிவு இல்ல தம்பி. நிறைய யோசிக்க வேணும். இப்பவே நான் இப்பிடித்தான் எண்டு பிடிவாதம் பிடிக்கிற பிள்ளை நாளைக்கு ஒரு பிரச்சனை எண்டு வந்தா அனுசரிச்சுப் போவாவா தெரியாது. பிறகு, உனக்குத்தான் அது தலையிடியா போயிடும். அதால, இன்னும் வேற இடங்கள் இருந்தா சொல்லச் சொல்லி ஐயாட்ட சொல்லப்போறன். நீ இதைப்பற்றி ஒண்டும் யோசிக்காத. உனக்கு எண்டு ஒருத்தி இனியா பிறந்து வரப்போறாள்? வேற என்ன அப்பு? சாப்பிட்டியா?” என்று அப்படியே பேச்சை மாற்றினார், ஜெயராணி.

 

அன்னையின் முயற்சி கோகுலனுக்கும் விளங்கியது. சின்னச் சிரிப்புடன் அவரின் போக்கிலேயே சென்று வேறு பேசிவிட்டு அழைப்பைத் துண்டித்தான்.

 

அதன்பிறகும் அதைப்பற்றியோ அந்தப் பெண்ணைப் பற்றியோ அவன் பெரிதாக யோசிக்கவில்லை. எப்போதும்போலத் தன் வேலைகளைப் பார்த்தான். இரவு, உணவையும் முடித்துக்கொண்டு கட்டிலில் சரிந்தபோது அந்த முகமறியாத பெண்ணின் நினைவு மீண்டும் வந்தது.

 

யார் அந்த ரூல்ஸ் ராமானுஜி? தன் குடும்பத்தையே நிமிர்த்தியவள் குணம் சரியில்லாத பெண்ணாக இருக்க வாய்ப்பில்லை என்றுதான் அவனுக்குத் தோன்றியது. எது எப்படி என்றாலும் அம்மா சொன்னதுபோல அவனுக்கானவள் இனியா பிறந்து வரப்போகிறாள். வரட்டும் வருகிறபோது பார்த்துக்கொள்ளுவோம் என்கிற முடிவோடு உறங்கிப்போனான்.

 

அவன் இலகுவாக விட்டதுபோல் ஜெயராணியால் விடமுடியவில்லை. முதல் காரணம், ஐயா கொண்டுவந்த வரன் நல்லதாகத்தான் இருக்கும் என்கிற நம்பிக்கை. கூடவே, அவர் சொன்ன எண்பத்தைந்து விழுக்காடு பொருத்தம். தானாக வருகிற நல்லதைத் தவற விட்டுவிட்டுப் பிறகு தவிக்க வேண்டி வந்துவிடுமோ என்கிற பயம். அடுத்தது, அந்தப் பெண்ணின் விதிமுறைகளைப் பற்றிப் பாமினி சொன்னபோதும், ‘அது எனக்குச் சரிவராது அம்மா’ என்று சொல்லாத கோகுலனின் நிலைப்பாடு.

 

error: Alert: Content selection is disabled!!