என் பிரியமானவளே 20 – 3

அவள், ‘போகவா’ என்பதுபோல் கோகுலனைப் பார்த்தாள். அவனும் போ என்று தலையை அசைத்தான். அவளோடு நடக்கையில் திரும்பிப் பார்த்த அஸாமிடம், அவளைப் பார்த்துக்கொள் என்று கண்ணைக் காட்டினான். இவனுக்கு ஒற்றை விரலை உயர்த்திக் காட்டிவிட்டு நடந்த அஸாம், “உனக்கு வேற மாப்பிள்ளையே கிடைக்கேல்லையாமா? போயும் போயும் இவனக் கட்டியிருக்கிறாய்.” என்று அவளிடம் கேட்பது, இவன் காதிலும் விழுந்தது. சிரித்துக்கொண்டு தன் கேபினுக்கு நடந்தான்.

 

அன்று முழுக்க, அவனுக்குள் மெல்லிய பதட்டம் தான். கொழும்பில், தான் உண்டு தன் உலகம் உண்டு என்று பழகிய பாதுகாப்பான வட்டத்துக்குள் இருந்தவளை, இங்கே கொண்டுவந்து சேர்த்திருக்கிறான். பொருந்திக்கொண்டாளா இல்லையா என்று மனம் அவளிடமே சிக்கிக்கொண்டு நின்றது.

 

என்றைக்கு, இதுவரையான அவனுடைய பேச்சு, செயல் எல்லாமே ஒருவித அடக்குமுறையாக, அவனுக்கே தோன்ற ஆரம்பித்ததோ, அன்றிலிருந்தே, தன் நிம்மதியைத் தொலைத்திருந்தான் அவன்.

 

முடிகிறபோதெல்லாம் இரண்டாம் மாடிக்கு அஸாமிடம் வந்துவிட்டுப் போனான். “என்னடா உனக்குப் பிரச்சினை?” என்று, அஸாம் உட்பட எல்லோரும் கேலி செய்து வாரியபோதும் பொருட்படுத்திக்கொள்ளவில்லை.

 

தன்னிடம் வந்து நேரடியாக விசாரிக்காதபோதும், அவன் பதட்டத்தோடு தன்னையே வட்டமிடுகிறான் என்று அவளுக்கும் விளங்காமல் இல்லை. அவளுக்கான கவனிப்பும் அனுசரணையும் கூட அவனின் மனைவி என்பதால் தான் என்றும் தெரிந்தது. நாட்கள் சில கடந்தும் அங்கே தன்னைப் பொருத்திக்கொள்ள முடியாமல் தடுமாறினாள் பிரியந்தினி. என்னவோ மூச்செடுக்க முடியாத இருட்டறை ஒன்றுக்குள் மாட்டிக்கொண்ட உணர்வு. எல்லோரும் நன்றாகத்தான் பழகினர். அவளால்தான் ஒட்டிக்கொள்ள முடியவில்லை.

 

அன்றைக்கும், ஏதோ அலுவல் போன்று அவளிடத்துக்கு வந்த கோகுலன், அவளைக் காணாமல், கோப்பி ஏரியாவுக்குத் தேடிக்கொண்டு வந்தான். அங்கே, தனியாக அமர்ந்திருந்து கோப்பி அருந்திக்கொண்டிருந்தாள் அவள். பார்வை ஜன்னல் புறமாக இலக்கற்று வெறித்திருக்க விழியோரம் மெல்லிய நீர்க்கசிவு. தனக்குள் தானே எதற்கோ போராடுகிறாள் என்று அவளின் முகமே சொல்லியது. அப்படி, அவள் தனியாக அமர்ந்திருந்த காட்சி, அவன் நெஞ்சினில் சுருக்கென்று தைத்தது. இதற்கெல்லாம் காரணம் அவன் தானே. பேசாமல் சென்று, தனக்கும் ஒரு கோப்பியை கோப்பி இயந்திரத்தில் வார்த்துக்கொண்டு, அவளெதிரில் சென்று அமர்ந்தான்.

 

எதுவம் பேசவில்லை. ஆனால், மனமோ பரிதவித்தது. இதுவரையான அவளின் போராட்டமும் மனப்பாரமும் அவனிடம் இடம் பெயர்ந்திருந்தது.

 

அவளை வரச்சொல்லி இருக்கக் கூடாதோ. பெரும் தவறு செய்துவிட்டானோ. ஒரு இரண்டு வருடங்கள் தானே. அதன் பிறகு, அவனே கொழும்புக்குப் போயிருக்கலாமோ. அவனவன் சவூதி, கட்டார் என்று வருடக்கணக்கில் மனைவி பிள்ளைகளைப் பிரிந்து வேலை பார்க்கவில்லையா? இரண்டரை மணித்தியால தூரத்தில் இருக்கிற கொழும்பு எல்லாம் ஒரு தூரமா என்ன?

 

நடந்துமுடிந்தவற்றைப் பற்றி யோசிப்பதில் அர்த்தமில்லை என்று புரிந்தாலும் மனம் அமைதியடைய மறுத்தது. இதை எப்படி அவள் கடக்கப்போகிறாள்? அவளை என்ன சொல்லிச் சமாதானம் செய்யப் போகிறான்? அவனுடைய யதியை யதியாகவே எப்படி மீட்கப்போகிறான்?

 

எப்போதுமே அவள் முகத்தில் மிளிரும் தன்னம்பிக்கையை, தைரியத்தை, நிமிர்வை, தெளிவை எப்படி மீண்டும் கொண்டுவரப்போகிறான்? வழி புலப்படவே இல்லை. ஆனாலும், செய்தே ஆகவேண்டும், அவளின் முன்னேற்றத்துக்கு உறுதுணையாக நிற்கவேண்டும் என்கிற வைராக்கியம் மட்டும் அவனுக்குள் உண்டாயிற்று.

 

அருந்தி முடித்த பேப்பர் கப்பை அருகிலிருந்த குப்பை வாளிக்குள் போட்டுவிட்டு அவள் எழுந்துகொள்ள, “இங்க.. பிடிக்கேல்லையா?” என்றான் மெல்ல.

 

“கொஞ்ச நாள் போனா எப்பிடியும் பிடிச்சிடும்.” அவனின் முகம் பாராமல் சொல்லிவிட்டு எழுந்துபோனாள் அவள்.

 

வேலைக்குச் சொன்னாளா அவனுக்குச் சொன்னாளா? இரண்டுமே அவனைக் காயப்படுத்திற்று.

 

 

error: Alert: Content selection is disabled!!