என் பிரியமானவளே 21 – 1

கோகுலன் சொன்னதைக் கேட்டு அதிர்ந்துபோய் அமர்ந்திருந்தாள் பிரியந்தினி. இவன் என்ன அவளோடு விளையாடுகிறானா? அல்லது, அவளைப் பேசவைக்கும் முயற்சியா? அந்தளவில் நம்ப முடியாததாக இருந்தது அவன் சொன்ன செய்தி.

 

அலுவலகம் அவனைச் சிங்கப்பூருக்கு ப்ராஜெக்ட் விசயமாக அனுப்பி வைக்கிறதாம். இன்னும் இரண்டு நாட்களில் புறப்படுகிறானாம். என்னவோ, இதோ பக்கத்தில் இருக்கிற கொழும்புக்குப் போய்விட்டு வருகிறேன் என்பது போன்று சொல்லிக்கொண்டிருந்தான் அவன்.

 

உன்னோடு கொஞ்சம் பேசவேண்டும் என்று அழைத்து, அவர்களின் அந்த வட்ட மேசையைக் கைகாட்டியபோது, எதையும் பெரிதாக நினைக்கவில்லை அவள். இருவருமாக எதையாவது பேசி முடிவெடுக்க வேண்டுமாயின், அவர்களின் சந்திப்புப் புள்ளியாக, அந்த மேசையைத்தான் பயன்படுத்துவார்கள்.

 

இன்றும், இரண்டு தேநீர் கோப்பைகளோடு அவன் அவளெதிரில் வந்து அமர்ந்தபோது, பெரும் முன்னேற்பாடுதான் என்று தனக்குள் நினைத்துக்கொண்டாளே தவிர, நிச்சயமாக இப்படி ஒன்றை எதிர்பார்க்கவில்லை.

 

“நான் இந்த ப்ராஜெக்ட்ல சைன் ஆகி ஆறுமாதம் ஆகியும் உன்ர முடிவில மாற்றம் இல்ல. என்னாலயும் நீ இல்லாம இங்க தனியா இருக்கேலாம இருந்தது. எப்பிடியோ ரெண்டு வருசத்துக்குத் தனியாத்தான் இருக்கப்போறன். அதை வெளிநாட்டுல போயிருந்தா காலமும் ஓடிடும் சம்பளமும் கூட வருமே எண்டு நினைச்சு, நானாத்தான் இதுக்கு முயற்சி எடுத்தனான். இருந்த சேவிங்ஸ் எல்லாம் பாமினின்ர கலியாணத்தோட சரி. போய்வந்தா வீடு வாங்கிறதுக்கு இன்னும் ஈஸியா இருக்கும் எண்டும் அப்ப நினைச்சன். அது பாத்தா இப்ப சரிவந்திருக்கு.”

 

அவளிடமிருந்து எந்தச் சத்தமும் இல்லை என்றதும் நிமிர்ந்து பார்த்தான். அவளும், அவனிலேயேதான் தன் பார்வையை வைத்திருந்தாள். தான் கொடுத்த அதிர்விலிருந்து அவள் இன்னும் வெளியே வரவில்லை என்று தெரிந்தது. நெஞ்சுக்குள் என்னவோ செய்தது. அவளை அணைத்து ஆறுதல் சொல்ல மனமும் உடலும் உந்திற்று. ஆனாலும், அவள் சொன்ன வார்த்தைகள் அவனை விலக்கி நிறுத்தியது. “சொறி, நீ வேலையை விட்டுட்டு இங்க வருவாய் எண்டோ, நீ வந்தபிறகு இப்பிடி நடக்கும் எண்டோ உண்மையா எதிர்பார்க்க இல்ல. முதலே தெரிஞ்சிருந்தா நீ கொழும்பிலேயே இருந்திருக்கலாம்.” என்றான்.

 

அவளுக்கு இன்னுமே பேச்சு வர மறுத்தது. பெரும் துக்கப் பந்து ஒன்று வந்து தொண்டைக் குழாயை அடைத்தது. அவன் முகம் பார்க்கமாட்டாள், தேவையற்றுப் பேசமாட்டாள், ஒரு சிரிப்பில்லை, கணவன் மனைவியாகக் கைப்பிடித்து உலாத்தல் இல்லை. அவன் அவன் பாடு. அவள் அவள் பாடு. இப்படித்தான் இத்தனை நாட்களும் அவர்களுக்குள் நகர்ந்தது.

 

ஆனால், அவன் அருகிலேயே இருக்கிறான் என்கிற அந்த உணர்வு இருந்ததே. அவனருகில் நிம்மதியாக உறங்க முடிந்ததே. அவனோடு பயணிக்கையில் ரகசியமாக ரசிக்க முடிந்ததே. இனி? அவன் போன பிறகு தனியாக இந்த வீட்டிலிருந்து என்ன செய்வாள்? எப்படி இருப்பாள்? ஒரே வீட்டில் அவர்கள் வசிப்பதே இந்த ஒன்றரை மாதமாகத்தானே. அதற்குள் மீண்டும் ஒரு பிரிவா? சந்தோசமான இல்லறம் அவர்களுக்கு விதிக்கப்படவே இல்லையோ?

 

கோகுலனுக்கு அவளை அப்படிப் பார்க்க முடியவில்லை. தன் கட்டுப்பாட்டை இழந்து, எழுந்துபோய், அவளை அணைத்து விடுவோமோ என்று பயந்தான்.

 

ட்ரேயில் இருந்த தேநீர் கோப்பைகளில் ஒன்றை எடுத்து, அவளின் முன்னே வைத்து, “குடி!” என்றான். தன்னுடையதைத் தானும் எடுத்துக்கொண்டான்.

 

இருவருக்கும் தானாகவே சில மிடறுகள் உள்ளே போயிற்று. கோகுலனுக்கு அவளிடம் மனம் திறந்து நிறையப் பேசவேண்டும்போல், சொல்லவேண்டும்போல் இருந்தது. ஆனால், அவன் சொல்கிறவற்றை எப்படி எடுத்துக்கொள்வாள்? என் தவறுகளை நான் உணர்ந்துகொண்டேன் என்று சொன்னால், நம்புவாளா? அல்லது, அன்று என் முகம் பார்த்துச் சிரிக்காதே என்றதைப்போன்று, இன்றும், இந்தப் பிரிவைப் பயன்படுத்திக்கொள்ள நினைக்கிறாயா என்று கேட்டுவிடுவாளா?

 

அவனுக்கு அதை நினைத்து வாயைத் திறக்கவே அச்சமாயிருந்தது.

 

சத்தமே இல்லாமல் அகிம்சைப் போராட்டம் ஒன்றை நடத்தி, கதைக்க முதல் யோசித்துக் கதைக்கும் நிலைக்கு அவனைக் கொண்டுவந்திருந்தாள் அவள். அதை அவளும் உணரவில்லை; அவனும் உணரவில்லை.

 

மீண்டும் சில மிடறுகள் இருவருக்கும் உள்ளே போயிற்று. அவள் தேறிக்கொண்டாள் என்று சற்றே தெளிந்த முகம் சொல்லிற்று.

 

“என்ன உதவி எண்டாலும் யோசிக்காம அஸாம கேளு. அவன்ர வைஃபும் நல்ல மாதிரித்தான். இங்க வீட்டில உன்னோடயே இருக்கிற மாதிரி ஒரு சிங்கள அம்மாக்கு சொல்லி இருக்கிறன். சமையலுக்கு, வீடு கிளீன் செய்ய, இரவு தங்குறதுக்கு எண்டு அவா கூடவே இருப்பா. நாளைக்கு வரச் சொன்னனான்.” என்றவன் எழுந்து தன் பின் பொக்கெட்டில் இருந்து பேர்சை எடுத்தான்.

 

அதிலிருந்து வங்கி அட்டை ஒன்றினை எடுத்து அவளின் முன்னே வைத்தான். “என்ர எக்கவுண்டுக்கு உன்னையும் பாட்னர் ஆக்கி இருக்கிறன். யோசிக்காம தேவையானதை எடு. அங்க உன்ர அம்மா வீட்டுக்கு, சாம்பவன்ர படிப்புச் செலவுக்கு எல்லாம் குடு.” என்றவன் சற்றே நிதானித்து அவள் விழிகளையே பார்த்து, “நான் நிறையக் கோபப்பட்டிருக்கலாம், வார்த்தைகளை விட்டிருக்கலாம், உன்ன ஆழமா காயப்படுத்தியிருக்கலாம். ஆனா, உன்னையோ உன்ர குடும்பத்தையோ பிரிச்சுப் பாத்தது இல்ல. என்னில இருக்கிற கோபத்தில உன்ர வீட்டுக்குச் செய்யாம விட்டுடாத, பிளீஸ்!” என்றான் கெஞ்சல் குரலில்.

 

error: Alert: Content selection is disabled!!