அவள் விழியோரம் மெல்லக் கரித்தது. பார்வையை அருந்தும் கப்புக்கு மாற்றினாள். சற்று நேரம் அமைதியில் கழிய, மெல்ல கையை நீட்டி அந்த அட்டையை எடுத்துக்கொண்டாள். அவன் மனம் நிறைந்துபோனது.
இதோ, இரண்டு நாட்கள் மின்னலாக விரைந்து கரைந்தன. துக்கத்தைத் தொண்டைக்குள்ளேயே அடக்கிக்கொண்டு நடமாடினாள் பிரியந்தினி. அவனும் தயாராகினான். மகனைப் பயணம் அனுப்பிவைக்க ஜெயராணியும் நாகராஜனும் கூட வந்திருந்தனர். எல்லோருமாக வேனில் கொழும்பு செல்வது என்றும், அவன் புறப்பட்டதும் ஜெயராணியும் நாகராஜனும் அங்கிருந்தே முல்லைத்தீவுக்குப் பயணமாக, பிரியந்தினி வந்த வேனிலேயே காலி திரும்புவதாகவும் ஏற்பாடு.
பெட்டி தயார், பாஸ்போர்ட் விசா தயார், அவனும் தயார். இனி புறப்படுவதுதான் மிச்சமாக இருந்தது. அதற்குமேல் முடியாமல் அறைக்குள் நின்றுகொண்டு, “யதி, இங்க ஒருக்கா வா!” என்று அழைத்தான் கோகுலன்.
கண்ணுக்குள் கண்ணீரை அடக்கியபடி அவன் முன்னால் வந்து நின்றாள் அவள்.
“போயிட்டு வரட்டா?”
அவளால் பதில் சொல்ல இயலவில்லை. இத்தனை நாட்களாக, அவன் மீதான கோபங்களைச் சுமந்து திரிந்துவிட்டு, இப்போது மட்டும் நெஞ்சே வெடித்துவிடும் போன்ற வலி ஏன் என்று, அவளுக்குப் புரியவே இல்லை.
“போயிட்டு வரட்டா யதி? கவனமா இருப்பியா?” என்றான் மீண்டும் பரிதவிப்புடன்.
பெரும் சிரமப்பட்டுத் தலையை மட்டும் ஆட்டினாள் அவள்.
“அத வாயத் திறந்து சொல்லமாட்டியா? இன்னும் அந்தளவுக்குக் கோபமா? முதல் நீ என்னைப் பார்!” போகிற நேரத்தில் கூட முகம் பார்க்கிறாள் இல்லையே என்கிற ஆற்றாமை கோபமாக உருவெடுக்க ஆரம்பித்திருந்தது அவனுக்கு. அப்போதும் தலைநிமிர மறுத்தாள் அவள். அவள் தன்னைப் பிரிந்து கொழும்பில் இருப்பதையே தாங்கமாட்டாமல் தான் இத்தனை பிரச்சனைகளையும் இழுத்துவைத்தான். இன்றோ நாடு தாண்டியே போகப்போகிறான். இனி எப்போது பார்ப்பானோ? எத்தனை நாட்கள் ஆகுமோ? அவளைப் பிரிந்து ஒரு அடிகூட எடுத்துவைக்க என்னால் முடியாது என்று அவன் மனம் இன்னுமே சண்டித்தனம் செய்துகொண்டிருக்கிறது. அவளோ இப்போதுகூட முகம் பார்க்க மறுக்கிறாள்.
“என்னைப் பாரு யதி. கதைக்காம இருந்து சாகடிக்காத! நான் போகப்போற இந்த நேரத்திலயும் இவ்வளவு பிடிவாதமா உனக்கு!” ஆத்திரத்தோடு அவள் முகத்தை நிமிர்த்தியவன், இதோ அணையை உடைக்கிறேன் என்று அவள் விழிகளுக்குள் கரைபுரண்ட கண்ணீரைக் கண்டதும் துடித்துப்போனான்.
“யதி, என்னம்மா இது?” இனி அவளின் அனுமதியற்று அவளை நெருங்குவதில்லை என்று எடுத்திருந்த முடிவை மறந்து, வேகமாக அவளைத் தனக்குள் பொத்திக்கொண்டான். “என்ர செல்லம் எல்லா. அழாத. அது ஒரு வருசம் மின்னல் மாதிரி ஓடிடும். அம்மா அப்பப்ப வருவா. மாமா மாமியையும் கூப்பிடு. உன்ர அக்காவையும் துருவனையும் வரச்சொல்லு. லீவு கிடைக்கிற நேரமெல்லாம் சாம்பவனையும் கூட்டிக்கொண்டு இலங்கையில போகாத இடமெல்லாம் போயிட்டு வா. காலம் பாத்துக்கொண்டு இருக்க ஓடிப்போயிடும்.” என்றான் அவளின் உச்சியில் தன் உதடுகளைப் பதித்து.
அதற்கு எந்தப் பதிலும் சொல்லாமல், அவனுக்குள் அடங்கி நின்றவளின் உடல் அழுகையில் குழுங்கியது. “இவ்வளவு நாளும் முகத்தைத் திருப்பிக்கொண்டு திரிஞ்சுபோட்டு வெளிக்கிடுற கடைசி நேரம் என்னடி நீ..” என்றவனுக்குப் பிரிவைத் தள்ளிப்போட முடியாத இந்த நொடி நரகமாயிற்று.
இன்னும் இரண்டு நாட்கள் அவளோடு இருந்துவிட்டுப் போக முடிந்தால்? இருவருக்கும் இடையில் இருக்கிற கண்ணாடிச் சுவரை நொறுக்கிவிட முடிந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும். அது முடியாதே என்கிற ஏக்கம் கோபமாய் உருவெடுக்க, “முகம் பாத்து சிரிக்காத எண்டு சொன்னவள் தானேடி நீ. இப்ப மட்டும் என்னத்துக்கு அழுகிறாய்? நான் போனபிறகு சந்தோசமா இரு!” என்றவனுக்கு நெஞ்சின் தவிப்புத்தான் அதிகரித்துப் போயிற்று.
“வாயத் திறந்து கத யதி. ஏதாவது சொல்லு! எனக்கு நேரமாகுது!” அவன் விழிகள் பரிதவிப்புடன் சுவரில் தொங்கிய மணிக்கூட்டுக்குச் சென்று வந்தது.
“கவனமா போயிட்டு வாங்கோ.” கண்ணீர் கன்னங்களை நனைக்க, தழுதழுத்த குரலில் சொல்லிவிட்டு விலகியவளை, இழுத்தணைத்து அழுத்தமாக முத்தமிட்டான். ஆழ்ந்த, அழுத்தமான, நீண்ட நெடிய முத்தம். அதன்மூலம் தன் உள்ளத்துத் தவிப்பையெல்லாம் அவளுக்குக் கடத்தினான். அவளும் அவனுக்கு இசைந்து நின்றாள். முத்தத்தை முடித்துவைத்தவன் அவளைத் தன் நெஞ்சுக்குள் புதைத்துக்கொண்டு சற்று நேரம் விமூடி நின்றான். நேரம் ஓடிக்கொண்டிருந்தது. விருப்பமே இல்லாமல் அவளைத் தன்னிடமிருந்து பிரித்து, “நீயும் கவனமா இரு என்ன.” என்றான் தவிப்புடன். “வா!” என்று கைபிடித்து வெளியே அழைத்துச் சென்றான்.
அறையிலிருந்து ஒரு கையில் ஷூட்கேஸும் மறு கையில் மனைவியுமாக வந்த மகனைக் கண்டபோது, பிரிகிற துயரையும் தாண்டி மனதில் ஒரு நிம்மதி பரவியது அவனைப் பெற்றவர்களுக்கு.
அங்கு வருகிறவரைக்கும், மனைவி வீட்டாரை தன் வீட்டுக்குக் கூப்பிட்ட மகன், நாங்கள் வருகிறோம் என்று சொல்லியும் இப்போதைக்கு வேண்டாம் என்று சொல்லிவிட்டானே என்று பெரும் குறையோடு இருந்தார் ஜெயராணி. இங்கே வந்தபிறகுதான், ஒன்றாக இருந்தாலும் இருவருக்குள்ளும் ஒன்றுமே சரியாக இல்லை என்று தெரிய வந்திருந்தது. அதைப்பற்றிக் கதைக்க இது நேரமல்ல என்று காத்திருந்தவரின் மனதின் கவலையை, இந்தக் காட்சி சற்றே ஆற்றியது.

