நாட்கள் அதன்பாட்டுக்கு நகர்ந்துகொண்டிருந்தது. என்னவோ பெரிதாக ஏற்பாடு செய்கிறேன் என்றான், சத்தமே இல்லாமல் இருக்கிறானே என்று பிரியந்தினி யோசித்துக்கொண்டு இருக்க,
சொன்னதுபோலவே செய்திருந்தான் கோகுலன். அவன் சிங்கப்பூர் வந்து நான்குமாத முடிவில், அவளுக்கே தெரியாமல் அவள் வீட்டினரிடமிருந்து கடவுச்சீட்டை எடுத்து, அஸாம் மூலம் அனைத்து ஏற்பாடுகளையும் செய்து, பத்துநாள் விடுமுறையில் அவள் சிங்கப்பூர் செல்வதற்கு ஒழுங்கு செய்திருந்தான். அவளுக்கு அது இனிய அதிர்ச்சி. அவன் இங்கு வருவான் என்றுதான் எண்ணியிருந்தாள்.
சிங்கப்பூர் சர்வதேச விமான நிலையத்தில், ஒரு கை ஃபோனை பற்றியிருக்க, அதே கையில் அணிந்துவந்திருந்த ஓவர்கோட்டை தொங்கவிட்டபடி, மற்ற கையால் ட்ரோலியை இழுத்துக்கொண்டு, அவளை மிகுந்த அழகியாகக் காட்டும் முக்கால் ஜீன்ஸ் மற்றும் கையில்லாத டொப் அணிந்து, அவனை விழிகளால் தேடியபடி வந்தவளிடம் இருந்து பார்வையை அகற்ற முடியாமல் நின்றான் கோகுலன்.
நிறைய நாட்களுக்குப் பிறகு நேரில் காண்கிறான். அதற்கு முதலும் அவர்களுக்குள் சீரான உறவு இருக்கவில்லை. தன்னைத் தேடும் அவளை அள்ளியணைக்க உடலும் உள்ளமும் துடித்தது. அதற்குமேல் விலகி நிற்க முடியாமல் அவளின் முன்னே சென்று நின்றான்.
நடை நிற்க, கண்ணும் முகமும் மலர, விழியுயர்த்திப் பார்த்தாள் பிரியந்தினி. இருவருக்குள்ளும் என்னென்னவோ உணர்வுகள் பொங்கிக்கொண்டு வந்தன. மற்றவரின் அருகண்மை தித்தித்தது. கூடவே, இருவருக்குமான அந்த நொடிகளை எப்படிக் கொண்டாடுவது என்கிற திண்டாட்டம். அவள் தடுமாறுகையில் மென் சிரிப்புடன் அவளை நோக்கி இலேசாகக் கைகள் இரண்டையும் விரித்தான் அவன். அடுத்த நொடியே, அவன் கைகளுக்குள் அடங்கினாள் பிரியந்தினி.
அவனுக்குத் தன் உலகமே கைகளுக்குள் வந்துவிட்ட உணர்வு. தன் பிரியம் ஆனவளைத் தன் மார்போடு சேர்த்தணைத்துக்கொண்டு அவள் முகம் பார்த்தான். மெலிதாகப் பனித்திருந்த விழிகளும், விகசித்திருந்த முகமுமாக அவளும் அவனைத்தான் நோக்கிக் கொண்டிருந்தாள். பார்வைகள் கலந்து பின்னிக்கொண்டன. பின்னிக்கொண்ட விழிகளின் வழியே மனங்கள் இரண்டும் ஏதேதோ உணர்வுகளைப் பரிமாறின. பார்வையை விலக்காமல் சற்றே குனிந்து அவளின் நெற்றியில் ஆழமான முத்தம் ஒன்றைப் பதித்துவிட்டு, “என்னில இருந்த கோபத்தை எல்லாம் விட்டுட்டு வந்ததுக்குத் தேங்க்ஸ்!” என்றான் கோகுலன்.
அதற்கு அவள் ஒன்றும் சொல்லவில்லை. மாறாக, அவன் மார்பினில் தலைவைத்துச் சாய்ந்துகொண்டாள். கோகுலனின் முகம் மலர்ந்துபோனது. ஆசையாக இன்னுமொருமுறை இறுக்கி அணைத்துவிட்டு, “வா!” என்று கரம்பற்றி அழைத்துக்கொண்டு போனான்.
அங்கிருந்து அவனின் அறை வரைக்குமான பஸ் பயணம் இருவருக்குமே ஒருவித மோனத்திலேயே கழிந்தது. என்னவோ, கணவன் மனைவி என்கிற நிலையில் இருந்து புதுக் காதலர்களாக மாறிப்போன உணர்வு. எதுவும் புதிதில்லை. இருந்தும் எல்லாம் புதிதாய். அவன், அவனுடைய அருகண்மை, அவன் பார்வை, அவன் சிரிப்பு, அவனின் தொடுகை எல்லாமே அவளுக்குள் என்னென்னவோ செய்தன. இன்ப அலைகளைத் தேகம் முழுக்கப் பரப்பிவிட்டன. அதேதான் அவனுக்கும். அவளின் விரல்களைப் பிரிய விருப்பமே இல்லை. அவளுக்கு நெருக்கமாக அமர்ந்துகொண்டான். தன்னை நேர்கொண்டு பார்க்க மறுக்கும் அவளின் தடுமாற்றம், புதிதான இந்த அமைதி எல்லாமே அவனை இன்னுமின்னும் அவள்புறமாக ஈர்த்தன.
அறைக்குள் வந்து கதவடைத்ததுமே அவளை அப்படியே அள்ளிக்கொண்டு நடந்தவன் நின்று, “களைப்பா இருக்கா?” என்று வினவினான்.
முகத்தில் செம்மை பரவ, அவன் முகம் பாராமல் இல்லை என்பதாகத் தலையை அசைத்தாள் பிரியந்தினி. முகம் மலர, அவளைக் கட்டிலுக்குக் கொண்டுசென்று ஆரத்தழுவினான். ஆழ முத்தங்கள் பதித்தான்.
பிரியந்தினியின் விழிகள் கிறங்கி மூடின. இத்தனை நாட்களாக அவளுக்குள் பரவியிருந்த வெறுமை அகன்றது. அவன் மட்டுமே உள்ளும் புறமும் ஆட்சி செய்தான். அவன் கைகளில் கரைந்தபோதுதான் அவள் மனது தன் இரைச்சல்களை எல்லாம் மறந்து அமைதியானது. அப்போதுதான், தானும் எந்தளவில் அவனைத் தேடியிருக்கிறோம் என்பதை உணர்ந்தாள். வெட்கம் வந்து பிடுங்கித் தின்றாலும் ஆசையாக அவன் கேசம் கோதினாள். கன்னம் வருடினாள். தானும் எண்ணிக்கையற்ற முத்தங்களை அவனுக்குப் பரிசளித்தாள். அவனின் எதிர்பார்ப்புகளுக்கு இசைந்துகொடுத்தாள். ஆக்கிரமிப்புக்கு அடங்கினாள். வெயிலைக் கண்டதும் உருகிக் கரையும் பனிக்கட்டியாக நழுவிக்கொண்டிருந்த பொழுதைப்பற்றி அவர்கள் அக்கறை கொள்ளவே இல்லை. அவர்களைக் கலைக்க முயன்ற கைபேசிகள் கூட களைத்து ஓய்ந்து கிடந்தன.
இத்தனை நாட்களின் தவிப்பை, தனிமையை, கடந்துவந்த கடினமான பாதையை எல்லாம் ஒருவர் மற்றவரின் அருகினில் கரைத்தனர். நீ எனக்கு எவ்வளவு முக்கியம் என்பதை உணர்வுகளால் மற்றவருக்குக் கடத்தினர். உள்ளம் ஆழமான அமைதியில் திளைத்தது. கோகுலனுக்கு விலக மனமேயில்லை. அவளைத் தன் கைகளுக்குள்ளேயே வைத்திருந்தபடி அவளின் கன்னத்தை வருடிக்கொடுத்தான். பிரியந்தினிக்கும் வேறு எதுவும் வேண்டுமாக இல்லை. உடலும் உள்ளமும் சுகமான மயக்கத்தில் திளைத்திருந்தது. சிந்தையில் எதுவுமில்லை. அவன் மார்பினில் தலை வைத்து விழிகளை மூடி இருந்தாள்.
“கலியாணம் கட்டியாச்சு, வேற வழி இல்ல, இந்த வாழ்க்கையக் காப்பாற்றிக்கொள்ளுவம் எண்டுற எண்ணம் தான் இப்பவுமா?” அவர்களை ஆட்கொண்டிருந்த சுகமான அந்த மயக்கத்தைக் கலைத்தபடி வினவினான் கோகுலன்.
வேகமாகத் தன் விழிகளைத் திறந்து அவனைப் பார்த்தாள் பிரியந்தினி. அவனும் அவளைத்தான் பார்த்திருந்தான். தான் செய்தவற்றை எண்ணி இன்னும் தவிக்கிறான் என்று புரிந்தது. ஒற்றைக் கையை மாத்திரம் கொண்டுபோய் அவன் கேசம் கலைத்தாள். கன்னம் வருடினாள். மீசையை நீவிவிட்டாள். இடையைச் சுற்றியிருந்த கரம் தன் அழுத்தத்தைக் கூட்டினாலும், அவனின் விடாத பார்வை அவளின் பதிலுக்காகக் காத்திருக்கிறான் என்று சொல்லியதில், “நீங்க என்ன நினைக்கிறீங்க?” என்று திருப்பிக் கேட்டாள் அவள்.
ஒருகணம் அவளை ஆழ்ந்து பார்த்தான் கோகுலன். அவளும் பார்வையை அகற்றவில்லை. இன்னும் இறுக்கமாக அவளைத் தன் கைகளுக்குள் கொண்டுவந்து, “என்ர யதி என்னை மன்னிச்சிட்டாள் எண்டு நினைக்கிறன்.” என்றான் அவன்.

