“மன்னிக்கிற அளவுக்கு நீங்க பெரிய பிழை ஏதும் செய்தீங்களா எண்டு தெரியா கோகுல். ஆனா, நிறைய நாள் அழுத்திருக்கிறன், இனி என்ன நடக்குமோ எண்டு பயந்திருக்கிறன், உங்களோட கதைக்கிறதை நினைச்சாலே நெஞ்சு படபட எண்டு அடிக்கும், ஏன் இப்பிடி என்னை விளங்கிக்கொள்ளுறாரே இல்லை எண்டு கவலையாவும் இருக்கும்.” என்றவளை ஒருவித திகைப்புடன் பார்த்தான். அடுத்தக் கணமே, எலும்புகள் நொறுங்கும் அளவில் அவளை இழுத்து அணைத்துக்கொண்டான். “இப்பிடியெல்லாம் உன்னப்போட்டு படுத்தினதுக்குச் சொறியடி.” என்றான் கரகரத்த குரலில்.
பிரியந்தினியின் நெஞ்சத்திலும் மெல்லிய கனம் ஏறி அமர்ந்தது. மேலே பேசாமல் தன் கழுத்தில் முகம் புதைத்திருந்தவனின் கேசத்தைக் கோதிக் கொடுத்தாள். “நடந்த எல்லாத்துக்கும் நீங்க மட்டுமே காரணமும் இல்ல கோகுல். என்ர பக்கம் எந்தப் பிழையும் இல்ல, பிறகு என்னத்துக்கு ஒரு அளவு தாண்டி இறங்கிப் போகவேணும் எண்டு நானும் பல இடங்களில பிடிவாதமா நிண்டிருக்கிறன். ஆனா..” என்றவள் அவன் முகத்தைப் பற்றி நிமிர்த்தித் தன்னைப் பார்க்க வைத்து, “அவர் இல்லாம உன்னால வாழ ஏலுமா எண்டு அம்மா என்னட்ட ஒரு கேள்வி கேட்டவா கோகுல். அவா என்னவோ சாதாரணமாத்தான் கேட்டவா. எனக்கு அப்பதான் உச்சில அடிச்ச மாதிரி, நீங்க எனக்கு எவ்வளவு முக்கியம் எண்டு விளங்கினது.” என்றாள் அவன் கண்களோடு தன் பார்வையைக் கலந்து. கோகுலனுக்கு வார்த்தைகள் அற்ற நிலை. அவளை அவன் அந்தப்பாடு படுத்தியும் அவனை இழக்க அவள் தயாராக இல்லை. விழியக்கற்ற முடியாது அவளையே பார்த்திருந்தான்.
“உங்களை மிஸ் பண்ணிட்டா வாழ்க்கைல எது இருந்தாலும் நான் ஒண்டுமே இல்லை எண்டுறதும் அப்பதான் தெளிவானது. நான் எந்த உயரத்துக்குப் போனாலும் அதைக் கொண்டாட பக்கத்தில நீங்க இல்லாட்டி எல்லாமே வீண் எண்டுறதும் தெரிஞ்சது. அதுதான் எல்லாத்தையும் தூக்கிப் போட்டுட்டு நீங்க மட்டுமே வேணும் எண்டு வந்திட்டன். ஆனாலும், கடைசில நீயும், குடும்பமா உன்ர கனவா எண்டு வரேக்க கனவைத் தூக்கி எறிஞ்சிட்டியே எண்டு எனக்கு என்னிலேயே ஒரு கோபம். அதுதான், நான் அண்டைக்கு அப்பிடிக் கதைச்சதுக்குக் காரணம். சொறி, நான் அப்பிடிக் கதைச்சிருக்கக் கூடாது. அது அழகில்லை. ஆனா, எனக்கும் எனக்குள்ள இருந்த கோபத்தை வெளியேத்துறதுக்கு ஒரு வடிகால் தேவைப்பட்டது. அவ்வளவுதான். மற்றும்படி நீங்களும் நீங்க நினைக்கிற அளவுக்கு மோசமான வில்லன் இல்ல..” கடைசி வார்த்தைகளைச் சிறு சிரிப்புடன் அவள் சொன்னபோது, பொய்யாக அவளை முறைக்க முயன்றவன் முடியாமல் மீண்டும் இறுக்கமாக அவளை அணைத்துக்கொண்டான்.
“தேங்க்ஸ் என்னை வெறுக்காம இருந்ததுக்கும், இன்னும் நம்புறதுக்கும்.” அவன் உதடுகள் அவளின் நெற்றியில் அழுந்தி மீண்டன. என்னவோ தன் சொர்க்கத்தையே மீட்டுக்கொண்டவன் போன்று அவளைத் தன் மார்போடு சேர்த்து அணைத்துக்கொண்டான். நொடிகள் நிமிடங்களாகி விரைந்துகொண்டே இருந்தன.
“நீ காலிக்கு வராம இருந்திருந்தா நான் இந்தளவுக்கு யோசிச்சு இருப்பனா எண்டு எனக்குத் தெரியாது யதி. நீ வந்தது சந்தோசத்துக்குப் பதிலா குற்றவுணர்ச்சியத்தான் தந்தது. அதுவும், எங்கட ஒப்பீஸ்ல ஒருத்தரோடயும் ஒட்டாம நீ விலகித் தனியா நிக்கிறதப் பாக்கிற ஒவ்வொரு முறையும், அவளை என்னடா செய்து வச்சிருக்கிறாய் எண்டு மனம் துடிக்கும். சீதனம் தரமாட்டன் எண்டு சொன்ன உன்ர நிமிர்வுதான் எனக்குப் பிடிச்சதே. அதையே உடைச்சிட்டனே எண்டு இப்ப வரைக்கும் நெஞ்சுக்க இருந்து அது உறுத்துது. அண்டைக்குச் சொன்னதேதான் இப்பவும் சொல்லுறன். எங்களுக்கு எத்தின பிள்ளை பிறந்தாலும் உன்ர வளர்ச்சி ஒரு இடத்தில நிக்காது. நிக்க நான் விடமாட்டன். இப்ப இது வெறும் வார்த்தைகள் தான். நீ நம்புவியோ தெரியாது. ஆனா, செயல் முறைல காட்டுவன். அப்ப பார்!” என்றான் வைராக்கியத்துடன்.
அவள் மனம் நிறைந்துபோனது. “உங்கள நான் நம்புறன் கோகுல். அங்க, ஒபீஸ்ல நீங்க என்னையே சுத்தி சுத்தி வந்தது இதாலதான் எண்டு எனக்கு அப்பவே தெரியும்.” அவன் கன்னங்கள் இரண்டையும் கைகளில் தாங்கிச் சொல்லிவிட்டு அவன் உதடுகளில் தன் இதழ்களைப் பதித்தாள். வியப்பில் விரிந்த கோகுலனின் விழிகள் கிறக்கத்தில் மூட, அவன் கரங்கள் அவளை மீண்டும் வளைத்தது. தன் பிரியமானவளைத் தன் பிரியம்போல் ஆட்கொண்டான்.
மீண்டும் அவனுடைய கைகளுக்குள் சுகமாக மயங்கி, இழைந்து, அடங்கினாள் அவள். அன்று மட்டுமில்லை. அடுத்து வந்த நாட்களிலும் அந்த அறையையே அவளின் உலகமாக்கினான் அவன். ஒன்றாகச் சமைத்தார்கள், ஒன்றாகச் சாப்பிட்டார்கள், போதுமான அளவு சண்டை போட்டார்கள், சமாதானமானார்கள். ஊடலும் கூடலுமாக நாட்கள் மின்னலாக விரைந்துபோயிருந்தது.
அத்தியாவசயம் தாண்டி அவளை அவன் வெளியே அழைத்துச் செல்லவே இல்லை. ஒரு இடமும் சுற்றிப் பார்க்கவில்லை. சிங்கப்பூர் விடிந்திருக்கிறதா இருண்டிருக்கிறதா என்பதே தெரியாமல் பத்து நாட்களையும் செலவழித்து முடித்திருந்தான் கோகுலன்.
“அடுத்த முறை வா. டைம் இருந்தா வெளில கூட்டிக்கொண்டு போறன்!” என்றான் கண்ணைச் சிமிட்டியபடி.
அவனுக்கு ஒரு அடியைப் போட்டுவிட்டு அவள் புறப்பட்டாள். போக மனமேயில்லை. ஆனாலும், அவன் புறப்பட்டு வந்தபோது இருந்ததைப்போன்று துக்கம் பெருகவில்லை. தொண்டை அடைக்கவில்லை. மனமொன்றி வாழ்ந்த நிறைவு இருவர் நெஞ்சிலும் நிறைந்திருந்தது. திருமணமாகி இரண்டு வருடங்களைத் தொடப்போகிறார்கள். ஆனாலும், இந்தப் பத்து நாட்களைப்போன்று அழகு சேர்த்த நாட்கள் வேறில்லை.

