என் பிரியமானவளே 25 – 1

மீண்டும் அவர்களின் நாட்கள் வீடியோ கோலிலேயே நகர்ந்தது. அவர்கள் ஆவலுடன் காத்திருந்த விடயமும் நடந்தேறியது. பிரியந்தினி தாய்மை உற்றாள். இரு வீட்டினருக்கும் அந்தச் செய்தி வந்தடைந்த நாள் திருவிழாவைப் போலாயிற்று. ஜெயராணி, அற்புதாம்பிகை, முடிந்தபோதெல்லாம் சாந்தினி என்று எல்லோருமே மாறி மாறி வந்து நின்று அவளைப் பார்த்துக்கொண்டனர். கைபேசித் திரைவழியே தன் நேசம் மிகுந்த வார்த்தைகள் கொண்டு அவளைத் தாங்கினான் கோகுலன். குழந்தை பிறப்பதற்கு இரண்டு மாதங்களுக்கு முதல் தான் கோகுலனுக்கு இலங்கைக்குத் திரும்ப முடிந்தது. ஒரு நாளின் அதிகாலைப் பொழுதொன்றில் வீறிட்டபடி இவ்வுலகத்துக்கு விஜயம் செய்தான் கோகுலனின் மகன்.

 

அகரனுக்கு நான்கு மாதங்கள் முடிவடைந்தபோதே வீட்டிலிருந்து பகுதி நேரமாக வேலை பார்க்க ஆரம்பித்திருந்தாள் பிரியந்தினி.

 

“உனக்கு என்ன தம்பி விசரா பிடிச்சிருக்கு? பிள்ளை பெத்தவள், பிள்ளையைக் கவனிப்பாளா இல்ல வேலையப் பாப்பாளா? அதெல்லாம் சரிவராது. நீ பேசாம அவளையும் பிள்ளையையும் கொண்டுவந்து முல்லைத்தீவில விட்டுட்டுப் போ. ஒரு வருசத்துக்கு வச்சு நான் பாக்கிறன்.” என்று நின்றார் ஜெயராணி.

 

அவரளவுக்குப் போர்க்கொடி தூக்கவில்லையே தவிர அற்புதாம்பிகைக்கும் அவரின் கருத்துத்தான்.

 

“பிள்ளையைப் பெறவும், வளக்கவும்தான் அவள் படிச்சவளா அம்மா? உங்களால முடிஞ்சா இங்க வந்து உதவி செய்ங்க. இல்லையா பேசாம இருங்க. அவளையும் பிள்ளையையும் நான் பாப்பன்!” என்றான் அவன்.

 

இத்தனை நாள் பழக்கத்தில் நம்பிக்கையானவர் என்று தெரிந்ததால், அந்தச் சிங்கள ஆச்சியை நிரந்தரமாகவே உதவிக்கு வைத்துக்கொண்டான். கூடவே, தானும் பிள்ளையைப் பார்த்துக்கொண்டு அவளுக்கான நேரத்தை ஒதுக்கிக் கொடுத்தான். மனம் கேளாமல் மகனைத் திட்டியபடி வந்து சேர்ந்தார் ஜெயராணி.

 

அன்றைக்கு, பகல் உணவு முடிந்த வேளையில் பிரியந்தினிக்கு ஒரு ஒபீஸ் கோல் இருக்கவும், அவள் அறைக்குள் சென்றிருந்தாள். அன்னையிடம் பால் அருந்தி, வயிறு நிறைந்திருந்த அகரன், ஜெயராணியின் மடியில் இருந்து விளையாடிக்கொண்டிருந்தான். குசினிக்குள் பாத்திரங்கள் கழுவாமல் கிடப்பதைப் பார்த்த கோகுலன் எழுந்துபோய் அவற்றைக் கழுவத் தொடங்கினான்.

 

பார்த்த ஜெயராணிக்கு மனதினில் சுருக்கென்று ஒரு வலி. இதனால் தானே ஓடிவந்தார். லட்சத்தில் சம்பாதிக்கும் கம்பீரமான மகனை, அப்படி, அடுப்படியில் எச்சில் பாத்திரங்களும் சோப்பும் கையுமாகப் பார்க்க முடியவில்லை. தரையில் துண்டை விரித்து, பேரனைக் கிடத்திவிட்டு எழுந்து விறுவிறு என்று குசினிக்குள் வந்தார். “விடு தம்பி, நான் கழுவுறன்.” என்று அவனிடமிருந்து அந்த வேலையைப் பறித்துத் தான் செய்தார். கைகள் வேலையைப் பார்த்தாலும், ‘இப்ப நான் செய்றன். நான் இல்லாத நேரத்தில?’ என்று எண்ணி மனம் கலங்கிற்று.

 

கோல் முடிந்ததும் வெளியே வந்தாள் பிரியந்தினி. “முடிஞ்சா?” என்றான் மகனருகில் தானும் சயனித்திருந்த கோகுலன். “ம்.. இனி நான் ஃபிரீதான். உங்களுக்கு ஏதும் அலுவல் இருந்தா நீங்க பாருங்கோ.” என்றவளும் மகனருகில் அமர்ந்தாள்.

 

“வெளில போகோணும் தான். அலுப்பா இருக்கு!” என்றபடி கைகளைத் தலைக்குக் கொடுத்தபடி தரையிலேயே மல்லாந்தான் அவன். உண்ட மயக்கம் உறக்கத்துக்கு அழைத்தது.

 

தன்னைக் கண்டதும் பொக்கைவாய் மலர்ந்த மகனின் அன்பில் கரைந்தாள் பிரியந்தினி. “எங்கட செல்லக்குஞ்சு இன்னும் நித்திரை கொள்ளாம என்ன செய்றீங்கள்? நித்திரை வரேல்லையோ? என்ர குட்டியன் அம்மாவைப் பாத்துச் சிரிக்கிறாரோ?” மகனின் முகத்தோடு தன் முகத்தை மென்மையாக உரசி விளையாடியவளைத் தலையைத் திருப்பிப் பார்த்தான் கோகுலன்.

 

பழைய பைஜாமா செட் ஒன்றில், உறக்கம் சுமந்த விழிகளோடு, வாராத தலையைத் தூக்கி உச்சியில் கொண்டையாக்கி, கொஞ்சமே கொஞ்சம் குண்டம்மா ஆகி, கண்ணுக்கும் கருத்துக்கும் குளிர்மை சேர்த்துக்கொண்டிருந்தாள் அவள். மனதினில் கள்ளம் புகுந்துவிட, கண்களாலேயே சில்மிஷம் செய்தான்.

 

காணாததுபோல் பாவித்தாலும் அவனைக் கவனிக்காமல் இருப்பாளா அவள். தலையை உயர்த்தி, சமையலறையை ஒருமுறை பார்த்துவிட்டு, “எங்கட கண்ணப்பன அப்பா படுக்க விடேல்லையோ? அரியண்டம்(தொல்லை) தாறாரோ? அப்பாக்கு அடிப்பமோ?” என்று கேட்டவள், அவன் இடுப்பில் பிடித்து நன்றாகக் கிள்ளிவிட்டாள்.

 

“அவுச்!” சத்தமில்லாமல் அலறியவனுக்குச் சிரிப்பை அடக்கவே முடியவில்லை. “பாக்கிறதுக்கும் தடை போட்டா நான் பாவமடி யதி!” அன்னைக்கு கேட்காத ரகசியக் குரலில் சொன்னவனை மெய்யாகவே முறைத்தாள் பிரியந்தினி.

 

“அங்கால மாமி நிக்கிறா. உங்கள.. எழும்பிப் பாக்கிற வேலையப் பாருங்கோ, போங்கோ!” என்று துரத்திவிட்டாள். தாய், தாரம், பிள்ளை என்று எல்லோரிடமும் விடைபெற்றுக்குக்கொண்டு அவனும் வேலையைப் பார்க்கப் போனதும் தயங்கிக்கொண்டே அவளிடம் வந்தார் ஜெயராணி.

 

“அம்மாச்சி, சொல்லுறன் எண்டு குறை நினைக்காதீங்கோம்மா. அந்தப் பாத்திரங்களை நீங்களே கழுவி வைக்கலாமே. அவன் ஆம்பிளைப் பிள்ளை, அருவருப்பா இருக்கும் எல்லோ. வடிவா கழுவி வைக்கவும் மாட்டான். என்னவோ எனக்கும் பாக்க முடியேல்ல.” என்றார் ஆற்றாமையோடு.

 

error: Alert: Content selection is disabled!!