என் பிரியமானவளே 25 – 2

அவளோ நிதானமாக நிமிர்ந்து அவரைப் பார்த்தாள். “மாமி, கேக்கிறன் எண்டு குறை நினைக்காதீங்கோ. இதுல என்ன அருவருப்பு? நான் அவரின்ர மனுசி. இவன் அவரின்ர மகன். நீங்க அவரின்ர அம்மா. நாங்க எல்லாரும் ஒரு குடும்பம். அங்க இருக்கிறது எல்லாமே நாங்க பாவிச்ச பாத்திரங்கள் தான். அவர் கழுவினா என்ன? நீங்க சொல்லுற மாதிரி நானும் அருவருப்புப் பாத்தா என்ன ஆகும்? அவர் ஒழுங்காக் கழுவாட்டி எப்பிடிக் கழுவுறது எண்டு சொல்லிக் குடுக்கவேணுமே தவிர, கழுவாத எண்டு சொல்லக்கூடாது. சொல்லுறன் எண்டு குறை நினைக்காதீங்கோ, எனக்கு உதவியா இருக்கிறவரை நீங்க ஏதாவது செய்து தடுத்துப்போடாதீங்கோ மாமி. பிள்ளையை நான் தான் பெறவேணும். பிள்ளைக்குப் பால் நான்தான் குடுக்க வேணும். அவர் பகல்ல வேலைக்குப் போறதால இரவிரவா முழிச்சுத் தம்பிய நான்தான் பாக்கிறன். இதெல்லாம் அவரால செய்யேலாது. செய்யக் கூடியதுகளைச் செய்றார். அவர் அவரின்ர மனுசிக்கும் பிள்ளைக்கும் தானே செய்றார். ஆம்பிளைப் பிள்ளை பொம்பிளைப் பிள்ளை எண்டு பாக்கிறதை விட்டுட்டுப் பிள்ளைகள் எண்டு பொதுவாப் பாருங்கோ. அப்பதான் உங்களுக்கு வித்தியாசம் தெரியாது. ஒரு குடும்பம் நல்லா வாழ மனுசனும் மனுசியும் ஒத்துழைச்சா மட்டும் காணாது. எங்களைச் சுத்தி இருக்கிற நீங்களும் உதவியா இருக்க வேணும். நீங்க ஏதாவது சொல்லி, அதுக்கு நான் பதில் கதச்சு, அவர் கோபப்பட்டு எண்டு எங்களுக்கப் பிரச்சனைகளை உருவாக்காதீங்கோ.” என்றாள் நேரடியாக.

 

அவள் என்னவோ தன்மையாகத்தான் சொன்னாள். அவருக்குத்தான் ஒருமுறை சுருக்கென்று தைத்தது. முகம் சுண்டிப் போயிற்று. கண்ணெல்லாம் கலங்கி என்னவோ பெரிதாக அவமானப் பட்டுவிட்டதுபோல் ஆகிவிட, தனக்கான அறைக்குள் சென்று முடங்கிக்கொண்டார்.

 

விளங்கினாலும் சமாதானம் செய்யப் பிரியந்தினி போகவில்லை. முன்பின் தெரியவே தெரியாத இருவர் வாழ்க்கையில் இணைந்து, ஒருவரைப்பற்றி மற்றவருக்கு ஒன்றும் தெரியாமல் பல பிரச்சனைகளைக் கடந்து, இருவருக்குள்ளும் ஒரு புரிந்துணர்வை உருவாக்கி, இப்போதுதான் அவர்களின் வாழ்க்கை ஒருவித தாளலயத்துடன் பயணிக்க ஆரம்பித்திருக்கிறது. இப்போது வந்து புதிதாக ஒன்றை இவர் ஆரம்பிக்கிறாரே என்று இருந்தது அவளுக்கு. அதில்தான் தெளிவான நீண்ட பதிலைக் கொடுத்திருந்தாள்.

 

அன்று முழுக்க அறையை விட்டு வெளியே வரவில்லை ஜெயராணி. வேலை முடிந்து வந்த கோகுலன், “என்னம்மா?” என்று விசாரித்தபோதும், “கொஞ்சம் தலை இடிக்குதப்பு(தலை வலி). அதுதான்..” என்று சமாளித்தார்.

 

அப்போதும், அப்படியே போகாமல், அவர் அருகில் வந்து நெற்றியைத் தொட்டுப்பார்த்துவிட்டு, “பரசிட்டமோல் ஏதும் வேணுமாம்மா?” என்றான் கரிசனையோடு.

 

மனம் நெகிழக் கண்ணீர் வரும் போலிருந்தது அவருக்கு. அடக்கிக்கொண்டு, “இல்லையப்பு. கொஞ்சம் சரிஞ்சு எழும்பினா காணும். நீ ஒண்டும் யோசிக்காத.” என்றார்.

 

“சரி படுங்க. என்ன எண்டாலும் கூப்பிடுங்க என்ன. இனி வீட்டில தான் இருப்பன். வெளிவேலை முடிஞ்சுது.” என்றவன், பேனை சுழல விட்டுவிட்டு, கதவையும் சத்தமில்லாமல் சாற்றிக்கொண்டு வெளியே வந்தான்.

 

தங்களின் அறையில், குழந்தை அருகில் படுத்திருக்க, கட்டிலில் அமர்ந்திருந்து லேப்டாப்பில் வேலை செய்துகொண்டிருந்த பிரியந்தினியை அவன் விழிகள் கேள்வியுடன் ஏறிட்டது. நடந்ததைப் பகிர்ந்துகொண்டாள் அவள்.

 

“அம்மா எண்டா அப்பிடித்தான். நீ ஒண்டையும் யோசிக்காம கொஞ்சம் படுத்து எழும்பு. நான் தம்பிய வச்சிருக்கிறன்.” என்றுவிட்டு மகனைத் தூக்கப் போனவனின் கையைப் பற்றி இழுத்தாள் பிரியந்தினி. அவளின் இழுவைக்கு இழுபட்டு வந்தவனின் கன்னங்களைத் தாங்கி, அவன் உதட்டினில் தன் உதட்டினை ஒற்றி எடுத்துவிட்டு, “அதென்ன அம்மாக்கள் எண்டா அப்பிடித்தான் எண்டுறீங்க? அப்ப நானும் அப்பிடித்தான் இருப்பன் எண்டு சொல்லுறீங்களா?” என்று பொய்ச் சண்டை ஒன்றை இழுத்தாள்.

 

“பின்ன இல்லையா? பெத்து நாலுமாதம் ஆன மகனுக்காக என்னையே தள்ளி வச்சிருக்கிறவள் தானே நீ.” என்றபடி அவள்மீது சரிந்தான். அப்படியே அவளையும் கட்டிலில் சாய்த்து கழுத்து வளைவில் முகம் புதைத்தான்.

 

அவளுக்குச் சிரிப்பை அடக்க முடியவில்லை. “டேய் கள்ளா! எங்கடா சாட்டுக் கிடைக்கும், புகுந்து விளையாடலாம் எண்டு பாத்துக்கொண்டே இருப்பீங்களா? காணும் எழும்புங்க.” என்றவளை சத்தமே இல்லாமல் சிவக்கவைத்தான் கோகுலன்.

 

“அச்சோ கோகுல்! என்ன இது? தம்பி இருக்கிறான்..” சத்தமில்லாமல் முணுமுணுத்தவளின் உடலும் உள்ளமும் கணவனின் கைகள் செய்த லீலையில் குழைந்து உருகியது. “தம்பி இருக்கிறதைப்பற்றி யோசிக்கிறதுக்கு இப்ப நான் என்னடி செய்தனான்?” அவளின் காது மடல்களை உரசியபடி கேட்டான் அவன்.

 

என்னது? என்ன செய்தானாமா? அவனைப் பிடித்துத் தள்ளிவிட்டுவிட்டு முறைத்தாள் பிரியந்தினி.

 

“ஒண்டும் செய்ய இல்லையா?”

 

“ம்ஹூம்!” தலை கலைந்து, முகம் சிவந்து, உடை நழுங்கி இருந்தவள் கண்களுக்கு விருந்தளிக்க, பார்வையாலேயே அவளை விழுங்கியபடி மறுப்பாகத் தலையசைத்தான் அவன்.

 

“உங்கள..” என்றவளுக்கும் கோபத்துக்குப் பதிலாக அவன் மீது ஆசைதான் வந்தது. அவளே அவனை இழுத்துத் தன் மீது கொண்டுவந்து முத்தமிட்டாள்.

 

 

————————-

 

அமைதியாக இருந்து யோசித்த ஜெயராணிக்கு அவள் சொல்வது சரி என்றுதான் புரிந்தது. வேலையை விட்டுவிட்டு வந்திருக்கிறாள், மகனின் பேச்சுக்களையோ அவரின் செயல்களையே தூக்கிப் பிடிக்கவில்லை. பிள்ளை பெறமாட்டேன் என்று தள்ளிப்போடவில்லை. இதில் மகனுக்கு ஆதரவாக அவளும் உழைக்கிறாள். இருவருமாகச் சேர்ந்து வீடு வாங்க முயன்றுகொண்டு இருக்கிறார்கள். அவன் பாமினியின் திருமணத்துக்குக் கை கொடுத்திருக்கிறான். போதாக்குறைக்கு அவர்களுக்குச் செலவுக்கு என்று மாதா மாதம் தருகிறான். அவள், அவளின் தம்பியின் வாழ்க்கைக்கு உதவியாக இருக்கிறாள். பெற்றவர்களுக்கும் செய்கிறாள். வீட்டு வேலைகளை, பிள்ளையைப் பார்ப்பதை என்று எல்லாவற்றையுமே அவர்கள் இருவருமே பகிர்ந்து கொள்கிறார்கள். இருவரும் சந்தோசமாக வேறு வாழ்கிறார்கள். இதில், அவர் நடுவில் புகுந்து குட்டையைக் குழப்ப முயன்றதுதான் பிழை என்று புரிந்தது. உண்மையிலேயே தான் மாமியார் குணத்தைக் காட்ட முயன்றோமோ என்று நினைத்த மாத்திரத்தில் அவருக்கே அவரை எண்ணி ஒரு மாதிரி ஆகிற்று.

 

error: Alert: Content selection is disabled!!