‘என்ர மகன். என்ர ஆம்பிளைப் பிள்ளை’ என்று பிரித்து எண்ணியதும் தவறுதானே.
மனம் தெளிய அடுத்தநாள் அறையை விட்டு வெளியே வந்தவரின் முகமும் தெளிவாக இருந்தது. ஆசைதீர அங்கு நின்றுவிட்டு, ஒரு மாதம் கழிந்த நிலையில், “மூண்டு பேரும் கவனமா இருங்கோ, என்ன.” என்றுவிட்டு மனதில் நிறைவுடனேயே அங்கிருந்து புறப்பட்டார்.
அகரனின் முதலாவது பிறந்தநாள் வெகு சிறப்பாக நடந்து முடிந்தது. நடை பழகியிருந்தான். ஆட்களை இனம் கண்டு தன் செம்பவள வாய் திறந்து அழைக்கவும் பழகியிருந்தான். அவன் இரண்டு வயதைக் கடக்கும்போது, கணவனிடம் விட்டுவிட்டு லண்டனுக்குப் புறப்பட்டாள் பிரியந்தினி.
இந்தமுறை, அனுபவப்பட்டவராக ஜெயராணி அமைதி காக்க, எல்லோரைக் காட்டிலும் பெரும் போர்கொடியைத் தூக்கியவர் அற்புதாம்பிகைதான். பெற்ற மகனை விட்டுவிட்டு, கணவனை விட்டுவிட்டு மகள் வேலைக்காக, படிப்புக்காக என்று வெளிநாடு செல்வதை அவரால் ஏற்கவே முடியவில்லை.
“ஆறு மாதம் தான் மாமி. ஆம்பிளைகள் பிள்ளையையும் மனுசியையும் விட்டுட்டு வெளிநாட்டுக்கு, சவுதிக்கு, கட்டாருக்கு எண்டு போனா பேசாம இருக்கிற உங்களுக்கு, பொம்பிளை போனா மட்டும் ஏன் இவ்வளவு கோவம் வருது? அவள் என்ன ஊர் சுத்தப் போறாளா இல்ல உல்லாசம் அனுபவிக்கப் போறாளா? இல்ல, என்ர மகனை நான் நல்லா பாக்க மாட்டன் எண்டு நினைக்கிறீங்களா?” என்று நேரடியாகக் கோகுலன் அவரிடமே கேட்டுவிட, மகளிடம் போன்று அவனிடம் வாதாட முடியாமல் அமைதியானார் அவர்.
என்றாலும் மனம் கேளாமல் பிரியந்தினியைத் தனியாகப் பிடித்து எவ்வளவோ சொல்லிப்பார்த்தார். இப்படிக் கூடாது, மகன் ஏங்கிப் போவான், ஊர் பிழையாகக் கதைக்கும், கணவன், பிள்ளையை விட உனக்கு வேலை முக்கியமா என்று நிறைய எடுத்துச் சொன்னார்.
“ஐயோ அம்மா, நான் கேக்கவே இல்ல. அவராத்தான் ஒபீஸ் மூலமா இதை ஏற்பாடு செய்து தந்தவர். ஆனா, எனக்கும் ஆசையாத்தான்மா இருக்கு. கொழும்பில இருந்து இங்க வரேக்க என்ர கனவு எல்லாம் இதோட சரி எண்டுதான் நானும் நினைச்சன். இனி ஒரு சாதாரண வேல. அளவான சம்பளம். இவ்வளவுதான் நான் எண்டு என்னையே சமாதானம் செய்து வச்சிருந்தனான். இல்ல, நீ கனவு காணு நான் அத நிறைவேத்தி வைக்கிறன் எண்டு அவர் சொல்லுறார். அத விடச் சொல்லுறீங்களா?” என்று அவள் கேட்டபோது அவரிடம் தான் பதில் இல்லாது போயிற்று.
பெற்ற மகளின் மனதின் ஏக்கத்தை அறிந்துகொண்டவருக்கும் மெலிதாய் மனம் கசிந்து போயிற்று. என்றாலும், “தம்பிக்குட்டி நீயில்லாம இருப்பாராம்மா?” என்று கேட்டார்.
அந்தக் கேள்விக்கு அவளாலும் சட்டென்று பதில் சொல்ல முடியவில்லை. தன் மார்புச் சூட்டுக்குள் சுருண்டுகொள்ளும் பூனைக்குட்டியாய் மகன் கண்முன்னே வந்து நின்றான். அவனைப் பிரிவது உயிரைப் பிரிவது போலொரு வலியை உண்டாக்கிற்று. கண்கள் கலங்கிப் போனது. பதில் சொன்னவளின் குரலிலும் பெரும் கலக்கம். “கொஞ்ச நாளைக்கு எனக்கும் அவனுக்கும் கஷ்டம் தானம்மா. பிறகு பழகிடும். ஆறு மாதம் தானே.” கனவுகள் ஒருபக்கம், தாய்ப்பாசம் ஒரு பக்கம் என்று அல்லாடும் ஒரு பெண்ணின் நிலையை அச்சொட்டாய் மகளில் கண்டுகொண்டவர் சட்டென்று பேச்சை மாற்றினார்.
“என்ன கஷ்டம்? இதென்ன அந்தக் காலமா? இப்பதான் வீடியோ கோலில நினைக்கிற நேரமெல்லாம் கதைக்கலாம் தானே. ஒவ்வொரு நாளும் தம்பியோட எடுத்துக் கதை. பிள்ளை ஏங்கிப் போகாம பாத்துக்கொள்ளு. நானும் உன்ர மாமியும் விடிஞ்சா பொழுதுபட்டா டீவி சீரியலை பாத்துக்கொண்டு, அயலட்டையில என்ன நடக்குது எண்டு வம்பு கதைச்சுக்கொண்டு சும்மாதானே இருக்கிறோம். எங்கட செல்லத்தை நாங்க வளத்துத் தர மாட்டமா? உன்னைவிட இன்னும் நல்லா நாங்க வளப்பம். நீ ஒண்டையும் யோசிக்காம கவனமா போயிட்டு வா!” என்று, மகள் துடிப்பதைத் தாங்க முடியாமல் அவரே தன் முடிவை மாற்றிக்கொண்டிருந்தார்.
அன்னையின் பேச்சில் அவளுக்குப் பெரிய நிம்மதி உண்டாயிற்று. இரண்டு வீட்டுப் பெரியவர்களும் மாறி மாறிக் கோகுலனோடு வந்திருந்து பேரனைப் பார்த்துக் கொள்வதாக முடிவானது. அந்த ஆச்சியும் அவனோடே தங்கிக்கொண்டார். மகனைப் பிரிகிற சோகம் மனதில் நிறைந்திருந்தாலும் நெஞ்சமெங்கும் பூரிப்புடனேயே புறப்பட்டாள் பிரியந்தினி.
வீட்டிலிருந்து வெளியேற முன், “பிள்ளை பிறந்தபிறகும் இப்பிடியெல்லாம் எனக்குச் சான்ஸ் அமையும் எண்டு நான் நினைச்சுக்கூடப் பாக்கேல்லை கோகுல். அமைச்சு தந்தத்துக்குத் தேங்க்ஸ். எல்லாமே கனவு மாதிரி இருக்கு.” என்று அவன் மார்பில் முகம் புதைத்தவளின் விழிகள் சத்தமில்லாமல் உடைப்பெடுத்திருந்தது.
ஒன்றும் சொல்லாமல் தன் மென்மையான அணைப்புக்குள் அவளை வைத்தபடி தலையை வருடிக்கொடுத்தான் அவன். “கவனமா போ. கவனமா இரு. வேலை படிப்பு எண்டு மட்டும் இருக்காம நேரம் கிடைக்கேக்க ஊர நல்லா சுத்திப்பார். சும்மா மனுசன், பிள்ளை எண்டு எங்களையே யோசிச்சுக்கொண்டு இருக்காத, சரியா? தம்பியப் பற்றி ஒண்டுக்கும் யோசிக்காத. நாங்க எல்லாரும் இருக்கிறம் தானே.” என்று தேற்றினான்.
“நீங்க எப்ப இருந்து இவ்வளவு நல்லவனா மாறினீங்க?” கைகள் அவன் இடுப்பை வளைத்திருக்க, கண்ணில் ஈரமும் உதட்டில் சிரிப்புமாக அவன் முகம் பார்த்துக் கேட்டாள் அவள்.
அவளின் உதட்டினில் தன் உதட்டை அழுத்தமாக ஒற்றி எடுத்துவிட்டு, “என்ர மனுசி எப்ப அவளின்ர கனவு, விருப்பம் எல்லாத்தையும் விட நான்தான் முக்கியம் எண்டு வந்தாளோ அப்ப இருந்து.” என்றான் அவன்.
அவனையே பார்த்தாள் பிரியந்தினி. ஆரம்பத்தில் பார்த்த கோகுலன் அல்ல அவன். அவளை அறிந்துகொண்ட புரிந்துகொண்ட அன்பான கணவன். இவனைத் தவற விட்டுவிடக்கூடாது என்று அவள் எடுத்த முடிவு எவ்வளவு சரியானது என்று தினம் தினம் உணரவைத்துக்கொண்டு இருக்கிறான். நெஞ்சத்தின் நெகிழ்வால் விழிகள் மீண்டும் கலங்கிற்று. கால்களால் எம்பி அவனைப்போலவே தானும் அவன் உதட்டினில் அழுத்தி முத்தமிட்டுவிட்டு, கண்ணீருடன் விலகினாள். அப்படியே ஈரைந்து மாதம் பெற்றெடுத்த மகனையும் கொஞ்சி விடைபெற்றுக்கொண்டாள்.
கணவனின் தோள்கள் இருக்கும் நம்பிக்கையில் தன் உயரங்களை நோக்கி நடக்க ஆரம்பித்தாள்.
முற்றும்.

