இரு தரப்புக்கும் பிடித்திருக்கிறது என்றபிறகுதான் இரண்டு குடும்பத்தினரையும் அறிமுகம் செய்துவைத்தார், ஐயா. அவர்களும் தங்களுக்குள் தெரிந்தவர் அறிந்தவர் மூலம் விசாரித்துத் திருப்தியானதும், சம்மந்தக் கலப்புச் செய்வதற்கு ஐயாவே நல்ல நாளையும் பார்த்துக் கொடுத்தார்.
அதற்குமுதல், பிரியந்தினி கேட்டது போலவே இருவருக்கும் மற்றவரின் கைபேசி இலக்கம் கொடுக்கப்பட்டது. அவர்களுக்குள் பேசி, கடைசி முடிவைச் சொல்லச் சொன்னார்கள் பெரியவர்கள்.
இப்போது, இருவரிடமும் மற்றவரின் நம்பர் இருந்தது. யார் முதலில் அழைப்பது என்கிற கேள்வியிலேயே அன்றைய பகல் பொழுது ஓடிற்று. கோகுலனுக்கு நேரிலேயே போய்ப் பார்த்துப் பேசிவிட்டு வந்துவிடலாமா என்று பரபரத்தது. அவசரப்படக்கூடாது, முதலில் முற்றாக்கட்டும், பிறகு பார்ப்போம் என்று தன்னைத் தானே அடக்கிக்கொண்டு இருந்தான்.
பிரியந்தினிக்கு மெல்லிய தயக்கம். ஆனால், பேசவேண்டும் என்று அவளே சொல்லிவிட்டுப் பேசாமல் இருப்பதில் அர்த்தமில்லை என்று உணர்ந்து, “ஹாய், நான் பிரியந்தினி. இப்ப நீங்க பிரீயா? கதைக்கலாமா?” என்று மாலைப்பொழுதில் புலனத்தின் வாயிலாக அனுப்பிவிட்டாள். அனுப்பிய அந்த நொடியிலிருந்து மெல்லிய பதட்டம் ஒன்று அவளைச் சூழ்ந்து கொண்டது.
பார்த்த கோகுலனின் உதட்டினில் மெல்லிய முறுவல். சற்று நேரம் அதையே பார்த்துக்கொண்டு இருந்துவிட்டு, பதில் போடாமல் அவனே அழைத்தான்.
“ஹலோ”
அவளின் தயக்கம் நிறைந்த குரல் அவன் இதயத்தைத் தீண்டியது. அதை இனிமையோடு உள்வாங்கியபடி, “ஹாய், நான் கோகுலன்.” என்றான் அவன்.
“ஹாய், எப்பிடி இருக்கிறீங்க?”
“நல்லாருக்கிறன், நீங்க?” இருவருக்குமே அடுத்தக் கட்டமாய் என்ன பேசுவது என்று தெரியாத நிலை.
இன்னுமே திருமணம் முற்றாகவில்லை. அதன் இறுதிக்கட்டத்தில் நிற்கிறார்கள். இது எந்தத் திசையிலும் திரும்பலாம் என்கிற திடமற்ற நிலை. இருவராலும் இலகுவாகக் கதைக்க முடியவில்லை. காலின் விரல் விளிம்பிலேயே கீறப்பட்டிருக்கும் கோட்டை தொட்டுவிடக்கூடாது என்பது போன்ற மிகுந்த கவனத்துடன் வார்த்தைகளைக் கோர்த்தனர்.
“அம்மா இண்டைக்குத்தான் உங்கட நம்பர் அனுப்பிவிட்டவா. நான்தான் கதைக்க வேணும் எண்டு சொன்னனான். அதுதான்..” அவள் தடுமாறுவது அப்படியே தெரிந்தது.
அதற்குமேல் அவளைத் தவிக்க விடாது, “ம்ம் சொல்லுங்கோ, என்ன கதைக்க அல்லது கேக்க நினைக்கிறீங்க?” என்றான் அவளைப் பேசத் தூண்டும் குரலில்.
“பெருசா ஒண்டும் இல்ல. எனக்குச் சில விசயங்கள் உங்களிட்ட முதலே சொல்லவேணும். கலியாணம் முடிஞ்சபிறகு சொல்லி, அது பிரச்சனை ஆகக்கூடாது தானே.” என்றவளின் கனிந்த பேச்சில் கோகுலன் முற்றிலுமாகச் சறுக்கினான் என்பதுதான் உண்மை.
“அங்க முல்லைத்தீவில இப்ப அம்மாவே இருக்கிற வீடு சொந்த வீடுதான். அதை எனக்குத் தரத்தான் அம்மாவுக்கும் அப்பாவுக்கும் விருப்பம். அக்காவும் அப்பிடித்தான் சொன்னவள். ஆனா, எனக்கு அதைத் தம்பிக்குக் குடுக்கத்தான் விருப்பம். நாங்க பொம்பிளைப் பிள்ளைகள் எண்டு எங்களைக் கவனிச்ச அளவுக்கு அவனை அம்மாவும் அப்பாவும் கவனிக்க இல்ல. அதால வீடு இருந்தா பிற்காலத்தில அவனுக்குப் பெரிய சிரமம் இருக்காது. அதோட, நான் இங்க கொழும்பு. அக்கா அத்தானோட அவரின்ர வீட்டில இருக்கிறா. அந்த வீட்ட தம்பிக்கு குடுத்தா அம்மாவும் அப்பாவும் கடைசி வரைக்கும் அவனோடேயே இருப்பினம். மற்றது, தம்பி இப்பதான் கம்பஸ் முதல் வருசம் போறான். அவன் படிச்சு முடிக்கிற வரைக்கும் அவன்ர செலவை நான்தான் பாப்பன். மற்றது கலியாணத்துக்குத் தேவையான நகைகள் நான் வச்சிருக்கிறன். காசும் இருக்கு. கலியாணம் பெரிய கிராண்டா வேண்டாம். கலியாணச் செலவுல பாதி நான் தருவன். இது எல்லாம் உங்களுக்கு ஓகே எண்டால் எனக்கும் ஓகே!” என்று முடித்தாள் அவள்.
“என்னத்துக்கு ஓகே?” என்றான் அவன் அடுத்த நொடியே சிரிக்கும் குரலில்.
அவ்வளவு நேரமும் இருந்த பதட்டம் போய் வெட்கச் சிரிப்பு பிரியந்தினியின் முகத்தில் அரும்பிற்று. பதில் சொல்ல முடியாமல் அமைதி காத்தாள்.
“எனக்கு இன்னும் பதில் வர இல்ல.”
அவனுடைய நகைக்கும் குரல் அவளின் காதோரமாய்ப் புகுந்து தேகம் முழுவதிலும் இசை மீட்டிவிட்டது. ஒரு நொடி உதட்டைக் கடித்தாலும், “நீங்களும்தான் நான் சொன்னதுக்குப் பதில் சொல்ல இல்ல.” என்றாள் அவளும் சிரிப்பை அடக்கிய குரலில்.
“முதல் விசயம், எனக்குச் சீதனம் வேண்டாம் எண்டு நானே சொல்லிட்டன். அதால, வீடு பற்றி நான் சொல்ல ஒண்டுமே இல்ல. அடுத்தது, ஒரு இளம் பிள்ளையின்ர படிப்பைக் கெடுக்கிற அளவுக்கு நான் மோசமானவன் இல்ல. உங்கட தம்பிக்கு படிக்கிறதுக்கு மட்டும் இல்ல அதுக்குப் பிறகும் நீங்க உதவி செய்ய நினைச்சாலும் நான் தடுக்க வரமாட்டன். எனக்கு மனுசியா வாறவள் வேலைக்குப் போகாம வீட்டில இருந்தாலுமே அவளை நல்லா வச்சுப்பாக்க என்னால ஏலும்(இயலும்). சோ.. இதையெல்லாம் நீங்க எனக்குச் சொல்லவே தேவை இல்ல.” என்று வெகு இலகுவாக முடித்தான், அவன்.
உண்மையிலேயே பிரியந்தினிக்கு இப்போதுதான் அவனை இன்னுமே பிடித்தது. அதில், “தேங்க்ஸ்!” என்றாள் மனதில் இருந்து.
“எனக்குத் தேவையானது வேற ஒண்டு.” என்றான் அவன்.
அவள் உதட்டினில் மீண்டும் சிரிப்பு மலர்ந்தது. “அதுதான் ஓகே எண்டு சொல்லிட்டனே.” அப்போதும் பிடிகொடுக்க மறுத்தாள் அவள்.
“அந்த ஓகே என்னத்துக்கு எண்டு நானும் கேட்டுட்டனே.” நானும் இலேசுப்பட்டவன் இல்லை என்று காட்டினான் கோகுலன்.
“உங்களைக் கலியாணம் கட்டுறதுக்கு எனக்கு ஓகே! இப்ப ஓகேயா?”
“ஓகே ஓகே!” என்றான் அவன் சிரிக்கும் குரலில்.
“சரி, நான் வைக்கிறன்!” என்றுவிட்டு வேகமாக அழைப்பைத் துண்டித்தவள் தனி அறையில் கூடத் தன் முகத்தை மறைக்க இடம் தேடினாள்.

