இப்படி அவர்கள் பேசிக்கொண்டு இருக்கையில், “அண்ணி, இந்தாங்கோ உங்களோட ஒரு ஆள் கதைக்கப்போறாராம்.” என்று திடீரென்று அவளுடைய கைப்பேசியைக் கொண்டுவந்து நீட்டினாள், பாமினி.
யார் என்று பார்த்தால், கோகுலன். அதுவும் வீடியோகோலில். இதைக் கோகுலனே எதிர்பாராதபோது பிரியந்தினி? தங்கையிடம் இருந்து அழைப்பு என்று அவன் ஏற்க, அவளோ விளையாட்டுக்கு இப்படிச் செய்திருந்தாள்.
இருவருக்குமே இது ஒரு ஆனந்த அதிர்ச்சி! பார்வைகள் சந்தித்துக்கொண்ட கணத்தில் பெரும் தடுமாற்றம். அவளருகில் அன்னையும் இருப்பதைக் கவனித்துவிட்டு, “என்னம்மா நடக்குது?” என்றான் அவன் புன்சிரிப்புடன்.
அவளும் கைபேசியைச் சற்றே அவர் புறமாக நகர்த்திப் பிடித்தாள். ஆனாலும், உள்ளுக்குள் ஒருவிதப் படபடப்பு. அவன் குரல், அவன் உருவம், அவன் பார்வை எல்லாம் அவளுக்குள் புகுந்து என்னென்னவோ மாற்றங்களை நிகழ்த்த ஆரம்பித்ததில் உள்ளங்கை வியர்க்க ஆரம்பித்தது.
“எல்லாரும் சாப்பிட்டுட்டு காத்தாட வெளில இருக்கிறோம் தம்பி.” என்றார் அவர். மேலும் அவருடன் கொஞ்சம் பேசிவிட்டு, மனைவியாகப்போகிறவளையும் தவிர்க்காது, “எங்க சாம்பவன்?” என்று அவளிடமும் கேட்டான், அவன்.
“அவன்..” என்று விழிகளைச் சுழற்றிவிட்டு, “அப்போத வீட்டுக்கப் போனான். எங்க எண்டு தெரிய இல்ல.” என்றாள் அவள்.
இருவருக்குமே தம்மைப் பற்றிப் பேச பெரும் ஆவல். இருந்தும், பேசமுடியாத நிலை. அதில், இப்படி எதையெதையோ பேசினர். ஜெயராணிக்கும் அது விளங்கிவிட, “இங்க நாங்க கதைக்கிற சத்தத்தில ஒண்டும் கேக்காது. நீங்க அங்கால(அந்தப்பக்கம்) போய்க் கதைங்கோமா.” என்று அவளை அனுப்பிவைத்தார்.
அவர்களிடம் இருந்து பிரிந்து வந்தாலும், மறைவாகச் செல்வது அழகில்லை என்று உணர்ந்து, அவர்களின் பார்வையில் படும் இடத்திலேயே நின்றாள் பிரியந்தினி.
அவனும் அதை உணர்ந்தவன் போல, அவளையே பார்த்தபடி, “பிறகு?” என்றான் சிறு சிரிப்புடன்.
அவளுக்கோ இனிய படபடப்பு. “என்ன பிறகு?” என்றாள், எதையும் காட்டிக்கொள்ளாமல்.
“அண்டைக்குப் பிறகு எடுக்கவே இல்லையே?”
“நீங்களும் தான் எடுக்கேல்ல.”
அவனுக்கு அவள் என்றும் அவளுக்கு அவன் என்றும் நிச்சயித்ததுக்குப் பிறகான முதல் அழைப்பை யார் தொடுப்பது என்கிற கேள்வியிலேயே இருவரும் நாட்களை நகர்த்திக்கொண்டு இருந்தனர். ஒரு சிறு விளையாட்டுப்போல. இன்றோ, எதிர்பாராமல் இப்படி மாட்டிக்கொண்டனர்.
வீடியோ கோல் என்பதில் அவன் பேசுவது வெளியேயும் கேட்கும். அதானால், அவள் தள்ளி வந்து நின்றிருந்தபோதிலும் அவர்களுக்கு மட்டுமேயான நெருக்கம் மிகுந்த பேச்சை அவனால் நிகழ்த்த முடியவில்லை. அவளும் அதுபோலவே தடுமாறுவது தெரிந்தது.
அதில், “உனக்குச் சயந்தனைத் தெரியுமா?” என்றான் அவன்.
அன்று, மரியாதை தந்து பேசியவன் இன்று உரிமையாய் ஒருமையில் விழிப்பதை அவளின் இதயம் இனிமையோடு குறிப்பெடுத்துக்கொள்ள, “இல்லையே, அது ஆரு?” என்று, அவனிடமே திருப்பிக் கேட்டாள்.
‘அடிப்பாவி!’ என்று அதிர்ந்தான் அவன். இவளுக்காக அவன் எவ்வளவு உழைத்திருப்பான். எவ்வளவு மெனக்கெட்டிருப்பான். எல்லாம் வீணா? அவன் சத்தமாகவே நகைத்தான்.
“என்ன சிரிப்பு?” என்றாள் மெல்லிய முறைப்புடன்.
ஒன்றுமில்லை என்பதுபோல் தலையை அசைத்தவனுக்கு அப்போதும் சிரிப்பை அடக்குவது சிரமமாய் இருந்தது.
சயந்தன் படாத பாடெல்லாம் பட்டபோதும் இவள் கண்டுகொள்ளாமல் இருந்ததைக் கண்டு, ‘ஆகத்தான் லெவல் காட்டுறாள்’ என்று அன்றைக்கு நண்பனுக்காகக் கோபப்பட்டவனுக்கு, அவள் தன்னிடம் முழுமையாக வந்து சேருவதற்குத்தான் அன்று அவனைத் திரும்பியே பாராமல் இருந்திருக்கிறாள் என்றுதான் இன்றைக்கு எண்ணத் தோன்றிற்று.
“இப்பிடி பேசாம இருந்தா என்ன அர்த்தம்? ஆர் அந்தச் சயந்தன்?” என்று திருப்பியும் கேட்டாள், அவள்.
“அது.. என்னோட பள்ளிக்கூடத்தில படிச்சவன்.” என்றவன், “அந்த நேரம் அவன் உனக்குப் பின்னால திரிஞ்சவன். நான் அவனோட இழுபட்டனான்.” என்றான் சிரிப்பை அடக்கிய குரலில்.
அவள் இப்போது மெய்யாகவே முறைத்தாள். “சிறப்பான காரியம் தானே செய்து இருக்கிறீங்க. அதுவும் பள்ளிக்கூடத்தில படிச்ச காலத்தில. அதுதான் பெருமையா சொல்லுறீங்க போல!”
உரிமையோடு அதட்டியவளை ரசனையோடு பார்த்தான், கோகுலன். திருத்தப்பட்ட புருவங்களோடு, கண்களுக்கு மையிட்டு, இதழ்களுக்கு இதமான மென்சிவப்பில் சாயம் பூசி, பட்டுச் சேலையில் பிரத்தியேகமாகக் கவனமெடுத்துத் தயாராகி இருந்த அவள், இனி எனக்கு என்கிற உணர்வே அவனுக்குள் கள்வெறியை உண்டாக்கிற்று.
“இப்பிடி நீ என்னட்ட வந்து மாட்டுவாய் எண்டு அப்ப தெரியாதுதானே.” என்றான், மற்றவர்களுக்குக் கேட்டுவிடாத சன்னக் குரலில்.
அப்போதுதான், அவன் பேச்சும் பார்வையும் மாறிப்போயிருப்பதைக் கவனித்தாள் பிரியந்தினி.
அவளுக்கு நெஞ்சு இனிமையாகப் படபடக்கத் துவங்கிற்று. உதட்டைப் பற்றியபடி அவனைப் பார்ப்பதை தவிர்க்க, அவளின் போனுக்கு மெசேஜ் வந்து விழும் சத்தம் கேட்டது.
யார் என்று பார்த்தாள். அவன் தான். அவனையும் தன் போனையும் மாறிமாறிப் பார்த்தாள். அதைப் பார் என்று கண்ணால் காட்டினான், அவன்.
அவளும் பார்க்க, “ஊரையே கூட்டிவச்சுக்கொண்டு என்னால உன்னோட கதைக்கேலாது. இரவுக்கு எடுப்பன். தனியா கதைக்கோணும்.” என்று அனுப்பியிருந்தான் அவன்.
பிரியந்தினியின் கன்னங்களில் செம்மை பரவிற்று.
“எடுப்பன். கதைக்கோணும்!” என்றான் இங்கே வீடியோ கோலிலும்.
“ம்ம்..” பேச்சே வராமல் நின்றாள் அவள்.
அவள் நிலைதான் அவனுக்கும். நிறையக் கதைக்க ஆசை. அவளை மனதளவில் நெருக்கமானவளாக மாற்றிக்கொள்ள விரும்பினான். எல்லோரையும் வைத்துக்கொண்டு அது முடியாதே. “வைக்கட்டா.” என்றான் மனமே இல்லாமல்.
“மாமியோட கதைக்கேல்லையா?”
“பிறகு அவவுக்கு எடுக்கிறேனாம் எண்டு சொல்லிவிடு.” என்றுவிட்டு அழைப்பைத் துண்டித்தான், அவன்.

