என் பிரியமானவளே 5 – 1

அதன் பிறகான அன்றைய மிகுதி நாள் முழுவதையுமே, இரவுக்கு அவன் அழைக்கப்போகிற அந்த ஒற்றை நொடியை நோக்கியே நகர்த்திக்கொண்டிருந்தாள், பிரியந்தினி.

 

வருங்கால மாமனார், மாமியார், மச்சாள், மற்ற உறவினர்கள் என்று எல்லோருடனும் கூடவே இருந்தபோதும், மாலைப்பொழுதில் அவர்கள் புறப்பட்ட பிறகு வீட்டை ஒதுக்கி, அன்றைய விசேசத்துக்கு என்று பயன்படுத்திய பாத்திரங்களை எல்லாம் கழுவித்துடைத்து, எடுத்துவைத்து என்று வேலைகளைப் பார்த்தபோதும் கூட, எதுவும் கருத்தில் பதியமாட்டேன் என்றது.

 

மாறாக, அவன் பேசியது, பார்த்தது, போனை எடுத்துப்பார் என்று கண்ணால் காட்டியது, உதட்டுக்குள் சிரிப்பை அடக்கியபடி அவளைப் பார்த்தது என்று, அவன்தான் பின்னணியில் நின்று கனவுலகில் மிதக்க வைத்துக்கொண்டு இருந்தான். அவனைப்பற்றியதான எண்ணங்களின் சேட்டையில் இதழ்கள் புன்னகையைச் சிந்திவிடாமலிருக்கப் பெரும் பாடுபட்டுப்போனாள், அவள்.

 

இருள் கவியத்தொடங்கவும் ஓடிப்போய் ஒரு குளியலைப் போட்டுவிட்டு வந்து பைஜாமா செட்டுக்குத் தன்னை மாற்றிக்கொண்டாள்.

 

பகல் பொழுதில் அவித்துக்கொண்டியதற்குச் சமாதானம் செய்வது போன்று மெல்லிய சாரல் போன்ற குளிர்காற்று வீசிக்கொண்டிருந்தது. அம்மா, அப்பா, சாந்தினி குடும்பம், சாம்பவன் என்று எல்லோரும் வீட்டுக்குள் போகாமல் சுகமான அயர்ச்சியுடன் முற்றத்திலேயே அமர்ந்திருந்தனர்.

 

ஒரு பெண்ணின் திருமணத்தை நல்லபடியாக ஒப்பேற்றுவது என்பது இலேசுப்பட்ட காரியமா என்ன? இதோ முக்கால் கிணறு தாண்டிவிட்டார்கள். ஆறுமாதத்தில் நடக்கப்போகிற திருமணம் பற்றிய அவர்களின் பேச்சில் கவனமாக இருந்தாலும், இரவு ஒன்பதை நெருங்க, ‘எடுக்கிறன் எண்டு சொன்னார். என்ன இன்னும் எடுக்க இல்ல..’ என்றுதான் அவளுக்கு ஓடிக்கொண்டிருந்தது. அடிக்கடி புலனத்தைக் காரணமே இன்றித் திறந்து திறந்து பார்த்தாள்.

 

அதைக் கவனித்துவிட்ட தியாகு, “பிரீக்கு இப்பவே கலியாணக் களை வந்திட்டுது. அடிக்கடி ஃபோனை பாக்கிறா. பேச்சில கவனம் இல்ல. என்னவாம் கோகுலன்?” என்று சிரிப்புடன் சீண்டினான்.

 

இவர்கள் கவனிக்கிற அளவுக்கா நடந்துகொண்டோம் என்று மனதினில் தன்னையே குட்டிக்கொண்டாலும், “ஒண்டும் இல்லை அத்தான். சும்மாதான் கதைச்சவர்.” என்று சிரிப்புடன் சமாளிக்கப் பார்த்தாள், அவள்.

 

“ஓமோம்! இனி சும்மாதான் கதைப்பியல். ஆனா, என்ன மணித்தியாலக்கணக்கா கதைப்பியல்.” என்று அவன் சொல்லிக்கொண்டு இருக்கையிலேயே அவளுக்குக் கோகுலன் அழைத்தான்.

 

பிரியந்தினிக்குத் தன்னைக் கொண்டுபோய் எங்கே ஒளிப்பது என்று தெரியாத நிலை. தியாகு அவளைப் பார்த்துச் சத்தமாகச் சிரித்தான்.

 

“அத்தான்!” என்ற, அவளின் அதட்டல் அங்கு எடுபடவே இல்லை.

 

“ஆரம்மா?” என்றார் அற்புதாம்பிகை.

 

“வேற ஆரு? கோகுலனாத்தான் இருக்கும். இனி பிரீன்ர போன் ரிங் ஆனா அது கோகுலாத்தான் இருக்கும்!” என்று இடையில் புகுந்தாள், சாந்தினி.

 

“அக்கா, ஆகத்தான் ஓட்டாத! கொஞ்சக் காலத்துக்கு முதல் நீயும் அத்தானும் இதைத்தான் செய்தனீங்க!” என்றுவிட்டு, “அவர்தான் அப்பா. கதைக்கவா?” என்று, அவனுடைய அழைப்பு அடித்து ஓய்ந்துவிட்ட தவிப்புடன் வினவினாள், பிரியந்தினி.

 

“என்ன கேள்வி இது? உன்ர அறைக்கப் போய் என்ன எண்டு கேளு!” என்றார் அவர்.

 

அவளும் விட்டால் போதும் என்று எழுந்து வீட்டுக்குள் விரைய, “ம்ம், நடக்கட்டும் நடக்கட்டும்!” என்றான் இங்கிருந்து, தியாகு.

 

போகிற போக்கில் திரும்பி அவனை முறைத்துவிட்டு, அறைக்குள் ஓடிப்போய்க் கட்டிலில் சாய்ந்து அமர்ந்துகொண்டு, கோகுலனுக்கு அழைத்தாள்.

 

“என்ன மேம்? பிசியா?” முதல் ரிங்கிலேயே ஏற்றவன் உற்சாகமாய்க் கேட்டான்.

 

இடையறாத மயக்கம் ஒன்று இன்றைய நாள் முழுக்க அவளைப்போட்டு ஆட்டியது போதாது என்று, காதோரமாய்ச் சீண்டிய அவன் குரல் வேறு, அவளின் தேகமெங்கும் மழைச்சாரலைத் தூவி விட்டது.

 

ஒரு நொடி உதட்டைப் பற்றித் தன்னைக் கட்டுக்குள் கொண்டுவர முயன்றுவிட்டு, “இல்ல. எல்லாரும் வெளில இருந்தோம். அதுதான், அறைக்கு வந்து எடுக்கிறன். உங்களுக்கு இப்பயா வேலை முடிஞ்சது?” என்று, வாயில் வந்ததைக் கேள்வியாகக் கேட்டாள்.

 

“ஏன், முதலே எடுப்பன் எண்டு பாத்துக்கொண்டு இருந்தியோ?” குரல் அப்பட்டமாக நகைக்க வினவினான் அவன்.

 

“உங்களுக்கு அப்பிடியும் ஒரு நினைப்பு போல. எனக்கு நீங்க எடுக்கிற வரைக்கும் உங்களை நினைவே இல்ல.” சிரிப்பை அடக்கிக்கொண்டு முழுப் பொய்யைச் சொன்னாள் பிரியந்தினி.

 

“ஓ……!”

 

அவன் இழுத்த அந்த ‘ஓ’வே அடக்கப்பட்ட சிரிப்பில் துடித்த உதட்டைக் கடிக்க வைத்தது. ஆனாலும் விடாமல், “என்ன ஓ? நான் உண்மையைத்தான் சொன்னனான்.” என்று சாதித்தாள், பிரியந்தினி.

 

“இப்ப என்ன? நீ என்ன நினைக்கேல்ல. நான் கோல் பண்ணுவன் எண்டு எதிர்பார்த்துக்கொண்டு இருக்கேல்ல. ஏன், என்னைப்பற்றிய நினைவே உனக்கு இல்ல. அவ்வளவுதானே? சரி விடு, நான் நம்புறன்!” இல்லை இல்லை என்று சொல்லிச் சொல்லியே இத்தனையையும் அவள் செய்தாள் என்று சாதிக்கிற இவனை என்ன செய்தால் தகும்? தலையணையை மார்போடு கட்டிக்கொண்டவளுக்குப் பதில் வரமாட்டேன் என்றது.

 

“என்ன சத்தமில்ல?”

 

“சாப்பிட்டீங்களா?” என்று பேச்சை மாற்றினாள், பிரியந்தினி.

 

“என்ர நினைவே உனக்கு இல்ல. நான் சாப்பிட்டேனா இல்லையா எண்டு தெரிஞ்சு மட்டும் என்ன செய்யப்போறாய்?”

 

“கடவுளே! சும்மா விளையாட்டுக்குச் சொன்னா அதையே பிடிச்சுக்கொண்டு தொங்குவீங்களா? மாமி என்னவோ உங்களை நல்ல பிள்ளையாம், பொறுப்பான பிள்ளையாம் எண்டு நிறையச் சொன்னா. நீங்க என்னடா எண்டா இந்தளவுக்கு வம்பு செய்றீங்க.” என்று பொய்யாய் அலுத்துக்கொண்டாள், அவள்.

 

“அப்ப உண்மையைச் சொல்லு. என்னை நினைச்சுக்கொண்டு இருந்தியா இல்லையா?”

 

error: Alert: Content selection is disabled!!