தன் பிடியிலேயே நிற்கிறானே. இருந்தேன் என்று எப்படிச் சொல்வது? அதை நினைக்கையிலேயே கன்னங்கள் சூடாகும் உணர்வு. “கோகுல் பிளீஸ்!” என்றாள் தன்னை மீறிக் குழைந்த குரலில்.
முதல் முறையாகப் பெயரைச் சொல்லியிருக்கிறாள். இனிமையாக அதிர்ந்தான் கோகுலன். கூடவே, அவளின் கெஞ்சலில் அவன் மனது மயங்கிற்று. அவளின் நிலையும் புரிந்தது. ஆனாலும் விட மனமில்லை. இங்கே, அவனும் தானே உருகிக்கொண்டு இருக்கிறான். “இருந்தியா இல்லையா?” என்றான் மீண்டும் விடாப்பிடியாக.
அவனுக்குள் ஒரு பிடிவாதக்காரனும் இருக்கிறான் என்பதை இதோடு இரண்டாவது முறையாக உணர்கிறாள். வேறு வழியற்று, “இருந்தன்.” என்றாள் மெல்ல.
ஒருகணம் அந்தப்பக்கம் மிகுந்த அமைதி. அடுத்த நொடியே வேக முத்தம் ஒன்று பறந்து வந்தது. “உண்மையச் சொன்னதுக்குத் தேங்க்ஸ். என்ர நிலையும் அதேதான். எனக்கு இப்பவே உன்னப் பாக்கவேணும் மாதிரி இருக்கு. எப்படா உன்னோட கதைக்கலாம் எண்டு இருந்தது. எங்கட வீட்டில இருந்து வந்திட்டு போனதால உங்களுக்கு நிறைய வேலை இருக்கும் எண்டு தெரியும். அதுதான் லேட்டா எடுத்தனான்.”
அவர்களைப்பற்றியும் இன்றைய அவர்களின் நிலையைப்பற்றியும் யோசித்து நடந்திருக்கிறான். அந்தப் புரிதல் அவளின் இதயத்துக்கு இதம் சேர்க்க, “தேங்க்ஸ்!” என்றாள் பிரியந்தினி.
“ம்ஹூம்!”
மீண்டும் உதட்டினில் சிரிப்பு அரும்பிற்று அவளுக்கு. எதைச் சொன்னாலும் இப்படிச் சீண்டினால் அவளும் என்னதான் செய்வது? நல்லகாலம் இந்தமுறை அவன் வீடியோ கோலில் வரவில்லை. இல்லையோ முகத்தைச் சாதாரணமாக வைத்திருப்பதற்குள் படாத பாடு பட்டுப்போயிருப்பாள்.
“சரி சொல்லு, என்னவாம் அம்மா?” என்று விசாரித்தான்.
“சாப்பாடு நல்லாருக்காம் எண்டு சொன்னவா. அதுவும், நான் செய்த பேரீச்சம்பழ கேக் நல்ல ருசியா இருந்ததாம் எண்டு என்னட்ட ரெசிபி வாங்கிக்கொண்டு போறா.” என்றாள் சந்தோசமாக.
“ஓ! அப்ப உனக்குச் சமைக்கத் தெரியும்.”
இவனுக்கு இருக்கிற நக்கல் இருக்கே! அப்பப்பா! என்ன, கோபத்துக்குப் பதிலாக அவன் என்ன பேசினாலும் மனம் கரைந்து உருகியது.
“நாலு வருசமா கொழும்பில தனியா இருக்கிற எனக்குச் சமைக்கத் தெரியாம இருக்குமா?” என்று திருப்பிக் கேட்டாள், அவள்.
“இந்தக்காலத்துக் கேர்ள்ஸ் எல்லாம் சமைக்கத் தெரியாது எண்டு சொல்லுறதையே பெரிய குவாலிபிகேஷன் மாதிரி சொல்லுவினம். அதுதான் கேட்டன்.”
“அது.. அப்பிடி சொல்லுறவையத்தான் நீங்க போய்க் கேக்கவேணும். உயிர் வாழுறதுக்கு அத்தியாவசியமான முதல் விசயமே சாப்பாடுதான். குறைஞ்சது ஒரு நாளைக்கு மூண்டு தரம் சாப்பிடுறோம். அப்பிடி எங்கட அத்தியாவசிய தேவையான சாப்பாட்டையே சமைக்கத் தெரியாம, ஒவ்வொரு நாளும் இன்னொருத்தரத் தங்கி வாழ்ந்துகொண்டு நான் சொந்தக்காலில் நிக்கிறன், சுயமா வாழுறன் எண்டு பெண்ணியம் பேசுறது எல்லாம் என்ன சொல்லுங்கோ? என்ர அடிப்படைத் தேவைகளையாவது என்னால பூர்த்திச் செய்ய முடிஞ்சாத்தான் அதுக்குப்பெயர் சொந்தக்காலில நிக்கிறது. சுயமா வாழுறது. நான் சொந்தக் காலில நிக்கிற ஆள்.” என்று பெருமையாகவே அறிவித்தாள், அவள். “ஆம்பிளை பிள்ளையா இருந்தாலும் சரிதான் பொம்பிளை பிள்ளையா இருந்தாலும் சரிதான். ரெண்டுபேருக்கும் சமையல் தெரிஞ்சிருக்க வேணும். அப்பிடி தெரியாட்டி அவே வெட்கப்பட வேணும்.”
அவள் சொன்னதைக்கேட்டு வியந்துதான் போனான், கோகுலன். அவளோடு விளையாடிப்பார்க்கும் ஆசையில் தான் சும்மா கேட்டான். ஆனால், இதைப்பற்றி இப்படி ஒரு கோணத்தில் இதுவரை யோசித்தது இல்லை. அவளின் தெளிவான சிந்தனையினால் அவள் மீது மதிப்பு உண்டாயிற்று. “எனக்கு உன்ன பிடிச்சிருக்கு!” என்றான் பட்டென்று.
“என்ன?” இதென்ன சம்மந்தமே இல்லாமல் சொல்லுகிறான் என்று குழம்பினாள், அவள்.
“இல்ல. முதல் உன்ர தோற்றமும், உன்னைப் பள்ளிக்கூடத்திலேயே தெரியும் எண்டுற ஒரு எண்ணமும் தான் பிடிக்க வச்சது. ஆனா, இப்ப உன்ர குணம், நீ யோசிக்கிற விதம் எல்லாம் பிடிச்சிருக்கு. அதுதான்.”
அவளின் எண்ணங்களை,சிந்தனைகளை, கருத்துக்களை மதிப்பது மாத்திரமல்லாமல் ஏற்றுக்கொண்டவனின் குணம் அவளையும் வசீகரித்தது. ஆனாலும் காட்டிக்கொள்ளாமல், “நீங்களும் இதேமாதிரி எனக்குப் பிடிக்கிற விதமா நடக்கோணும்.” என்றாள் சிரிப்பை அடக்கிய குரலில்.
“எனக்கும் அப்பிடி நடக்கத்தான் ஆசையா இருக்கு. ஆனா இவ்வளவு தூரத்தில இருந்துகொண்டு என்னால என்ன செய்யேலும் சொல்லு? நேர்ல பாக்கேக்க உனக்குப் பிடிச்ச்ச்ச மாதிரியே நடப்பேனாம், சரியா?” என்னவோ அதற்கு அவள் அடம்பிடித்தது போலவும் அவன் சமாதானம் செய்வது போலவும் அவன் சொன்ன அழகில், “கோகுல்!” என்று தன்னை மீறியே அதட்டியிருந்தாள், பிரியந்தினி.

