என் பிரியமானவளே 5 – 3

“கோகுலுக்கு என்ன? நீ கேட்டதுக்குத்தான் பதில் சொன்னனான்.” என்று அவன் சொல்லும்போதே இங்கே, “சித்தி!” என்று கூப்பிட்டுக்கொண்டு சாந்தினியின் மகன் துருவன் வருவது கேட்டது.

 

“ஓமோம்! சித்தி சித்தின்ர அறைக்க இருக்கிறன். இங்க வாங்கோ!” என்று இவளும் குரல் கொடுத்தாள்.

 

“ஆரு? சாந்தினி அக்கான்ர மகனா?” என்று வினவினான் கோகுலன்.

 

“ஓம். அவருக்கு நான் இங்க நிண்டா நான் தான் எல்லாத்துக்கும் வேணும். இவ்வளவு நேரமும் சாம்பவனோட விளையாடிக்கொண்டு இருந்திருப்பார். இல்லாட்டி எனக்குப் பின்னாலேயே வால் பிடிச்சுக்கொண்டு வந்திருப்பார்.” என்று சொன்னாள், அவள்.

 

அதற்குள், துருவன் வந்து கட்டிலில் ஏறி அவளின் மடிக்குள் புகுந்துகொண்டான். “சித்தி, ஆரோட கதைக்கிறீங்க” என்று, அவன் மழலைக்குரலில் கேட்பது இவன் காதிலும் விழுந்தது. தன்னை எப்படி அறிமுகம் செய்கிறாள் என்று அறியக் காத்திருந்தான் கோகுலன்.

 

அதற்குப் பதிலைச் சொல்லாது, “நீங்களும் கதைக்கப் போறீங்களா?” என்று துருவனிடம் கேட்டாள்.

 

“ம்ஹூம்!” என்று தலையை ஆட்டி மறுத்தான் அவன். பிறகும் அவளின் கழுத்தைக் கட்டிக்கொண்டு, காதுக்குள் புகுந்து, “ஆரு சித்தி?” என்றான் மீண்டும்.

 

“சித்தப்பா எண்டு சொல்லு யதி!” மறுபக்கக் காதினுள் நெருக்கம் தொனிக்கும் குரலில் சொன்னான் கோகுலன்.

குப் என்று முகம் சூடாகிவிட அதைச் சொல்ல முடியாமல் தடுமாறினாள், அவள். அவனுடைய யதி வேறு அவள் இதயத்தில் தாளமிட்டது. அதற்குள், அவன் ஃபேஸ்டைமை அழுத்தி இருந்தான். பிரியந்தினி திகைத்தாள். அவனுடைய சீண்டும் விழிகளை எதிர்கொள்வதை நினைத்தாலே அவளுக்குள் என்னென்னவோ செய்தது. வேறு வழியற்று ஏற்றாள்.

 

இருவர் விழிகளும் ஈர்ப்புடன் கலந்தன. என்னென்வோ உணர்வுகள் இருவருக்குள்ளும் எழுந்தது.

 

ஒரு மேசையில் போனை நிறுத்தி வைத்துவிட்டு, அதற்கு முன்னால் அமர்ந்திருந்தான் அவன். அவனுடைய முகவடிவுக்குப் பொருந்துகிற வகையில், சமீபத்தில் தான் வெட்டப்பட்டிருக்கிறது என்று சொல்லு கேசமும், அளவாக நறுக்கிவிடப்பட்டிருந்த மீசையும் அவளின் விழிகளில் நாணத்தைத் தோற்றுவிக்க முயன்றுகொண்டிருந்தன.

 

அவன் பார்வை அவளிடமே இருந்தது. என்ன எதிர்பார்க்கிறான் என்று அவளுக்கு விளங்காமல் இல்லை. அமைதியாக இருந்தே தான் நினைத்ததை அவளைச் செய்ய வைக்கிறான் என்று தெரிந்தபோதும், “சித்தப்பா வீடியோ கோலில வந்திருக்கிறார். நீங்க கதைக்கேல்லையா?” என்றாள், துருவனின் முகம் பார்த்து.

 

கோகுலனின் முகம் மலர்ந்துபோயிற்று.

 

அவளின் மடியில் இருந்த துருவன், போனில் தெரிந்த இவனைத் திரும்பிப் பார்த்துவிட்டு, வெட்கச் சிரிப்புடன் பிரியந்தினியின் மார்பில் முகத்தைப் புதைத்துக்கொண்டான். அதைப் பார்த்திருந்த பெரியவர்கள் இருவரின் முகத்திலும் முறுவல் அரும்பிற்று.

 

“செல்லம், உங்கட சித்தியோட மட்டும் தான் கதைப்பீங்களா? என்னோட கதைக்க மாட்டீங்களா?” என்றான் கோகுலன்.

 

அப்போதும், அவன் முகத்தை எடுக்கவில்லை. தலையை மட்டும் மாட்டேன் என்பதுபோல் அசைத்தான்.

 

“எங்கட துருவ்குட்டி எவ்வளவு தைரியசாலி. இப்பிடி வெக்கப் படுறதோ? சித்தப்பா உங்களோட கதைக்கத்தான் வெய்ட் பண்ணிக்கொண்டு இருக்கிறார். அவரைப் பாத்து எப்பிடி இருக்கிறீங்க சித்தப்பா எண்டு கேளுங்கோ.” முதன் முறை வெட்கத்தில் நனைந்து வந்த சித்தப்பா இப்போது இயல்பாய் வந்தது. அதை, அவள் உணராதபோதும் அவன் உணர்ந்தான். அவன் பார்வை இப்போது சிறுவனிடம் இருந்து அவனை மடியில் வைத்திருந்தவளிடம் நகர்ந்தது.

 

“சரியான செல்லம் போல.” என்றான்.

 

“ஓம். எனக்கு மட்டுமில்ல. எல்லாருக்கும். எங்கட வீட்டுல முதல் பேரக்குழந்தை எல்லோ.” சின்னவனின் கேசத்துக்குள் விரல்களை நுழைத்துக் கோதிவிட்டபடி சொன்னாள். பார்த்திருந்தவனுக்கு அந்தத் தளிர் விரல்களுக்குள் தன் தலையைக் கொடுக்கமாட்டோமா என்று இருந்தது.

 

அவனிடமிருந்து சத்தமில்லாமல் போக, திரும்பிப் பார்த்தாள் பிரியந்தினி. அதுவரை இல்லாத புதுவிதமாக அவன் பார்வை அவள் மீது படிந்திருந்தது. தடுமாறி, “என்ன?” என்றாள்.

 

ஒன்றுமில்லை என்று தலையை அசைத்துவிட்டு, “உன்ன இப்பவே பாக்கவேணும் மாதிரி இருக்கு!” என்றான் ஆழ்ந்த குரலில். அவளுக்கும் தான். ஆனால், அதை அவன் முகம் பார்த்து எப்படிச் சொல்லுவாள்?

 

“நீ கொழும்புக்கு வந்தபிறகு வருவன். பாப்பம், பழகுவம். முக்கியமா உனக்குப் பிடிக்கிறமாதிரி நடக்கிறன்.” என்றவனை, மடியில் இருந்த துருவ்வை கண்ணால் காட்டிவிட்டு முறைத்தவளின் உதட்டினில் வெட்கச் சிரிப்பு.

 

சத்தமே இல்லாமல் கண்ணைச் சிமிட்டினான் அவன். வேகமாக முகத்தைத் திருப்பிக்கொண்டவளின் முகம் செக்கச் சிவந்துபோயிற்று!

 

 

 

error: Alert: Content selection is disabled!!