அவளின் எந்தச் சமாதானமும் அவனிடம் எடுபட மாட்டேன் என்றது. “அவ்வளவுதானே. ஓகே பாய்!” என்றுவிட்டு அழைப்பைப் பட்டென்று துண்டித்தான்.
ஒரு நொடி கூட அவளை மறந்திருக்க முடியாமல் கிடந்து அல்லாடுகிறான் அவன். அவளானால் அவனை மறந்துவிட்டாளாமே. நினைவில் நீங்காமல் இருக்கிற அளவுக்கு அவன் அவள் மனதுக்கு நெருக்கமாயில்லை என்பதுதானே அதன் பொருள். இல்லாவிட்டால் நில்லுங்கோ ஓடிவாறன் என்றுகூடச் சொல்லாமல் இப்போதும் விளக்கம் சொல்லிக்கொண்டு இருப்பாளா?
அங்கிருந்து மெனக்கெட்டு பஸ் பிடித்து எவ்வளவு ஆவலாக வந்தான். அவளுக்காகவே பிரத்தியேகமாகத் தன்னைக் கவனமெடுத்துத் தயாராகிக்கொண்ட அவனே அவனைப் பார்த்துச் சிரிப்பது போலிருந்தது. புத்தம் புதிதாக, கடையில் பார்த்து பார்த்து வாங்கி அணிந்துகொண்டிருந்த டீ ஷர்ட், ஜீன்ஸ் முதல் அன்று காலையில் கவனித்து நறுக்கிவிட்ட மீசை வரை இதெல்லாம் இப்படி ஏமாந்து போவதற்கா என்று கேட்டுக்கொண்டிருந்தது.
அவன் அழைப்பைப் பட்டென்று துண்டித்ததில் பிரியந்தினிக்கு முகம் சுண்டிப் போயிற்று. இருந்தும், தன் தவறை உணர்ந்து மீண்டும் அவனுக்கு அழைத்தாள்.
“இப்ப என்ன?” இப்போதும் சுள் என்றுதான் பாய்ந்தான் அவன்.
“இனி உங்களுக்கு எப்ப டைம் இருக்கும்? நாளைக்கு? இன்னுமே என்ர வேக் முடியேல்ல. இனியும் வாறது கஷ்டம்.” என்று, தயங்கிக்கொண்டே சொன்னாள் அவள்.
அவனுக்கு இருந்த கொஞ்ச நஞ்ச பொறுமையும் பறந்து போயிற்று.
“உன்ன இப்ப கேட்டானானா? டைம் இருக்கா வருவியா எண்டு? நீ வரவே தேவையில்லை. வை ஃபோன!” முகத்தில் அடித்தாற்போன்று சொன்னவன் மீண்டும் அழைப்பைத் துண்டிக்கப்போகிறான் என்று உணர்ந்து, “பிளீஸ் கோகுல், வச்சிடாதீங்ககோ!” என்று அவசரமாய் இடையிட்டாள் பிரியந்தினி.
அவன் பதில் சொல்லவில்லை. அழைப்பையும் துண்டிக்கவில்லை. அந்த நிமிடத்தில் அதுவே பெரிதாய் இருக்க, “இந்த வீக்கெண்ட்?” என்றாள் மீண்டும், தன் தவறைச் சரிசெய்ய முயன்று.
“இல்ல!”
“பிறகு அடுத்தக் கிழமை?”
“இல்ல!” அவன் கோபவீம்பில் மறுக்கிறான் என்று பதில் சொன்ன வேகத்திலேயே புரிந்தது.
செய்தது பிழைதான். மன்னிக்கக் கூடாதா? அவளின் மனம் அவன் கோபத்தைத் தாங்கமாட்டாமல் துவண்டது.
“அப்ப எப்ப உங்களுக்கு டைம் இருக்கும்? நான் காலிக்கு வாறது எண்டாலும் ஓகே தான். இந்த வீக்கெண்ட் வரட்டா?” எப்படியாவது அவனைச் சமாதானம் செய்துவிட முயன்றாள், அவள்.
“இனி எப்ப பிரீ எண்டு எனக்கே தெரியாது.” அப்போதும் தயவு தாட்சண்யம் சிறிதுமின்றி மறுத்தான், அவன்.
அவனுக்கு மிகுந்த கோபம் என்று புரிந்து போயிற்று. ‘கோபம் வராது. வந்தால் இலேசில் இறங்கி வரமாட்டான்’ என்று மாமி சொன்னது வேறு இப்போது நினைவில் வந்து அச்சுறுத்தியது. இன்னும் எப்படி அவனைச் சமாதானம் செய்வது? விளக்கம் சொல்லியாயிற்று. மன்னிப்புக் கேட்டாயிற்று. சமாதானம் செய்தும் பார்த்தாயிற்று. அவளே வருகிறேன் என்றும் கேட்டுவிட்டாள். இதற்குமேல் என்ன செய்வது என்று தெரியவில்லை. இப்படியான சூழ்நிலைகளைக் கையாண்டு பழக்கமும் இல்லை. அதில், “என்ர ஒபீஸ் அட்ரஸ் போட்டுவிடுறன். நீங்க இங்க வாறீங்களா? ஒரு டென் மினிட்ஸ் கதைக்கலாம்.” என்று கேட்டுப் பார்த்தாள்.
“என்னைப் பாத்தா எப்பிடித் தெரியுது உனக்கு? உன்னைப் பாக்க அலையிறவன் மாதிரியா? அந்தளவுக்கெல்லாம் எனக்கு நீ பெருசே இல்ல!” என்றான் அடுத்த நொடியே!
வலிக்க வைக்க வேண்டும் என்றே வீசப்பட்ட வார்த்தைகள். துடித்துப்போனாள் பிரியந்தினி. மளுக்கென்று கண்ணீர் கன்னங்களில் வழிந்தோடியது. “நான் வேணுமெண்டு செய்ய இல்ல கோகுல். பிளீஸ் விளங்கிக்கொள்ளுங்கோ. உங்களை இண்டைக்குப் பாக்கப்போறன் எண்டு நானும் ஆவலாத்தான் இருந்தனான். ஆனா..” அதற்குமேலும் அவளின் பேச்சைக் கேட்கப் பிடிக்காமல், “எனக்குப் பஸ்ஸுக்கு நேரமாச்சு. பை!” என்று அழைப்பைத் துண்டித்திருந்தான், அவன்.
செய்வதறியாது கலங்கிப்போய் நின்றாள், பிரியந்தினி.
பெரும் தவறு செய்துவிட்டோம் என்று புரிந்தது. இனியும் என்ன செய்து அவனைச் சமாளிக்க என்று விளங்கவே இல்லை. சொறி என்று ஒரு மெசேஜ் அனுப்புவமா? அதற்குச் சம்மதிக்காமல் அவளின் மனம் முரண்டியது.
அவள் வேண்டுமென்று செய்யவில்லை. அவனை அலட்சியப்படுத்தவில்லை. அவளையும் மீறி நடந்த ஒன்று. தவறு என்று தெரிந்து போதுமான அளவில் மன்னிப்பும் கேட்டாயிற்று. செய்த தவறை சரி செய்வதற்குத் தன்னால் முடிந்த அளவில் முயன்றும் பார்த்துவிட்டாள். இறங்கியே வரமாட்டேன் என்று அவன் நின்றால் இன்னும் என்னதான் செய்வது?
இப்படி ஈடுபாட்டுடன் உழைத்ததால்தான் இந்த வயதுக்கு நல்ல இடத்தில் இருக்கிறாள். அவனும் அவளைப்போல ஐடியில் தான் பணிபுரிகிறான். அவனுக்குத் தெரியாதா, இப்படித் திடீர் திடீர் என்று ஒரு வேலையில் மாட்டிக்கொண்டு, இரவுபகல் பாராமல் வேலை பார்ப்பதெல்லாம் இங்கே சர்வ சாதாரணம் என்று.
அவளை ஏன் அவன் புரிந்துகொள்ளவில்லை? இன்னுமின்னும் இறங்கிச் சென்று மன்னிப்புக் கேட்டால் இதையே காலத்துக்கும் எதிர்பார்த்துவிட மாட்டானா? அதற்கு அவனை அவளே பழக்கிவிடுவது போலாகிவிடுமே. அதனால், இனியும் மன்னிப்புக் கேட்பதில்லை என்று முடிவெடுத்தாள்.
நாட்கள் நகர்ந்தது. தினமும் குறைந்தது பத்து முறையாவது அவன் ஏதும் செய்தி அனுப்பி இருக்கிறானா என்று ஃபோனை எடுத்துப் பார்த்தாள். ரோசம் பாராமல் நாமே கேட்போமா என்றும் நினைத்தாள். ஆனாலும், குறுந்தகவல் அனுப்பக் கைகள் வரமாட்டேன் என்றது.
கோகுலன் வந்தவரா, உன்னைப் பாத்தவரா, என்ன சொன்னவர் என்று கேட்கும் குடும்பத்தினரை வேறு சமாளிக்கவேண்டி இருந்தது.
அவனோடான சேட்டை அடிக்கடி எடுத்துப் பார்த்தாள். அப்படிப் பார்த்தபோது வாட்ஸ் அப்பில் டிபியாக அவன் வைத்திருந்த புகைப்படம் அவளை வெகுவாகக் கவர்ந்தது. மாப்பிள்ளை பார்க்க என்று பிரத்தியேகமாக அவர்கள் கொடுத்துவிட்ட புகைப்படத்தில் இருந்தவனைக்காட்டிலும், இலகுவாக இயல்பாகச் சிரித்துக்கொண்டு அவன் கிளுக்கியிருந்த சுயமியில் மிகவுமே மனத்தைக் கவர்ந்தான்.
அவனுக்கு மிகுந்த அழகான சிரிப்பு. ஆனால், அந்தச் சிரிப்புக்குள் மறைந்து கிடக்கும் கோபத்தையும் பிடிவாதத்தையும் நம்ப முடியாமல் இப்போதும் மலைத்தாள், பிரியந்தினி. இதோ, அவர்கள் பேசி மூன்று வாரம் கடந்துவிட்டது. அவனுடைய அன்னை சொன்னது உண்மை என்று இன்னுமே நிரூபித்துக்கொண்டு இருந்தான் அவன்.

