என் பிரியமானவளே 7 – 1

கோகுலன் ஒருவித எரிச்சலோடுதான் நாட்களைக் கடத்திக்கொண்டிருந்தான். அவளை நேரில் பார்க்க முடியாமலேயே போய்விட்ட சினம் ஒரு பக்கம் என்றால், அன்றைக்கு அவ்வளவு கெஞ்சியவள் அதன்பிறகு மருந்துக்கும் அவனைத் தேடவில்லை என்பது, இன்னுமே அவனைப் பாதித்தது.

 

அந்தளவுதானா அவன் அவளுக்கு? கோபமாகப் பேசிவிட்டு வைத்தானே, எடுத்துச் சமாதானம் செய்வோம் என்று நினைத்தாளா? குறைந்தபட்சமாக ஒரு மெசேஜ்? எதுவுமில்லை. அதுசரி, அவனை வரச்சொல்லிவிட்டுச் சொன்னதையே மறந்தவள் ஏன் இதையெல்லாம் செய்யப்போகிறாளாம்?

 

இந்தளவுக்கு மனப்புழுக்கம் அவள் மீது இருந்தாலும், அவள் முகம் பாராமல் அவளின் குரலைக் கேளாமல் அவனின் நாட்கள் விடியவேயில்லை. எப்படியோ கழிந்துகொண்டிருந்தது. அவளின் பெயரைப்போட்டு முகப்புத்தகத்தில் தேடினான். வந்தது. முகத்தில் வெளிச்சம் படர, ஏங்கிக்கிடந்த மனதுக்கு மருந்தாக, அவளின் புகைப்படங்களை எடுத்துப் பார்த்தான்.

 

அந்தப் பிடிவாதக்காரி அத்தனையிலும் அழகாய் இருந்து அவனை இம்சித்தாள். அவள் போட்டிருந்த அத்தனை போஸ்ட்டுகளையும் மெனக்கெட்டு வாசித்தான். கருத்திடுபவர்களுக்கு அவள் இட்ட பதிலில் இருந்த நகைச்சுவையை ரசித்தான். தினசரி குறைந்தது ஐம்பது தடவையாவது அவளின் முகப்புப் புத்தகத்தை மேய்ந்தான். அவள் ஒரு பதிவேனும் போட்டிருந்தால் அதை அவன் வாசித்த தடவைகள் கணக்கு வைக்க முடியாத அளவில் பெருகிக்கொண்டு போயிற்று. அதை லைக் பண்ணியவர்களின் பெயரைப் பார்த்தான். அவர்களின் பதிவுகளுக்குப் போய் இவள் ஏதாவது, ‘கமெண்ட்’ செய்து இருக்கிறாளா என்று பார்த்தான். அவளின் நட்பில் இருப்பவர்களை ஆராய்ந்தான். அவள் ரசித்துப் பகிர்ந்த பாடல்களை அவனும் கேட்டு ரசித்தான். இப்படி, அவளைப்பற்றிய தேடல் அவனுக்குள் அவனையறியாமலேயே நிகழ்ந்துகொண்டிருந்தது. இவ்வளவையும் செய்தவன் அவளுக்கு நட்பழைப்பு விடுக்கவே இல்லை.

 

ஒரு நாள், அவனுக்கு அவளிடமிருந்து நட்பழைப்பு வந்திருந்தது. பரபரப்பாகிப்போனான். முகத்தில் மிகுந்த வெளிச்சம் பரவிற்று. அவளும் அவனைப்போல இந்த முகப்புத்தக உலகில் அவனைத் தேடியிருக்கிறாள் என்று அறிந்து, நீண்ட நாட்களுக்குப் பிறகு சிறு சிரிப்பு ஒன்று உதயமாயிற்று. அதுவரை இருந்த கோபத்தின் அளவுகூடக் குறைந்து போயிற்று.

 

தான் என்னவெல்லாம் செய்தோம் என்பது தெரியுமாதலால், தன் போஸ்டுகளை, தன் கமெண்டுகளை எல்லாம் அவனே ஆராய்ந்தான். தன்னைச் சில்லறைத்தனமாக, விளையாட்டுப் பிள்ளையாகக் காட்டும் பதிவுகளை எல்லாம் வேகமாக நீக்கினான். இதற்குள் அதையெல்லாம் அவள் பார்த்து, பைல் பண்ணியிருப்பாள் என்று அறிவுக்கு விளங்கினாலும் அனைத்தையும் செய்தான்.

 

என்னதான் முறுக்கிக்கொண்டு திரிந்தாலும் அவளின் கடைக்கண் பார்வைக்குத்தான் தான் தவமாகக் கிடக்கிறோம் என்பது மட்டும் அவனுக்கு நன்றாகவே புரிந்துபோயிற்று.

 

“ஹாய், நீங்க பிரென்ட் ரிக்குவெஸ்ட் அனுப்பி இருக்கிறீங்க. உங்களுக்கு என்னைத் தெரியுமா? நீங்க ஆர் எண்டு நான் தெரிஞ்சுகொள்ளலாமா?” என்று, வேண்டுமென்றே அவளுக்கு மெசெஞ்சரில் மெசேஜ் அனுப்பினான்.

 

இதைப் பிரியந்தினி எதிர்பார்க்கவே இல்லை. அத்தனை நாட்களாக வாடிப்போயிருந்த அவள் உலகம், அவனின் ஒற்றைக் குறுந்தகவலில், மழையைக் கண்ட பூமியாகப் பட்டென்று உயிர்த்துக்கொண்டது. உள்ளம் துள்ளிற்று. என்ன பதில் அனுப்ப என்றே தெரியாத திணறல் உண்டாயிற்று. கணநேரம் யோசித்துவிட்டு வேண்டுமென்றே முறைக்கிற ஸ்மைலிகளை வரிசையாக அனுப்பிவிட்டாள். இத்தனை நாட்களாகக் கோபத்தில் முகத்தைத் திருப்பிக்கொண்டு இருந்தது காணாது என்று இப்போது அவளைத் தெரியாதாமே!

 

கோகுலனின் உதட்டோர முறுவல் விரிந்தது. அந்த மெசெஞ்சரில் இருந்த பச்சை வண்ணத் தொலைபேசியை அழுத்திவிடக் கையும் மனமும் பரபரத்தது. இருந்தபோதிலும், தன் கோபத்தை விடுத்து அவளோடு பேச அவன் தயாராக இல்லை. பேசாமல் இருக்கவும் இயலவில்லை. அதில் இப்படி ஒரு வழியைத் தேர்ந்தெடுத்தான்.

 

“இல்ல, பிரீ எண்டு பெட்டை(பெண்) பெயரா இருக்கு. ஆர் எண்டு தெரியாத பொம்பிளைப் பிள்ளைகளோட கதைக்கக் கூடாது எண்டு அம்மா சொல்லியிருக்கிறா. அதுதான்.” என்று மீண்டும் அனுப்பிவிட்டான்.

 

‘இவனுக்கு இருக்கிற திமிர் இருக்கே..’ நிறைய நாட்களுக்குப் பிறகு பிரியந்தினிக்குச் சிரிப்பு வந்தது. “பிரென்ட் ரிக்குவெஸ்ட் தெரியாம அனுப்பிட்டேன். டிலீட் பண்ணிவிடுங்க!” என்று அனுப்பிவிட்டாள்.

 

“சொறி! நாங்க எல்லாம் அப்பிடி எங்களைத் தேடி வந்த ஆட்களை அவமானப்படுத்தி அனுப்புறேல்ல.” என்றவன் நட்பழைப்பை ஏற்றுக்கொண்டான். இருந்தபோதும், அதுவரை இருந்த துள்ளல் மனநிலை முற்றிலுமாக வடிந்து போயிற்று. அன்றைய நாளின் நினைவுகள் வந்து அவனை ஆட்டிப்படைத்தது.

 

“எனக்கும் அந்தப் பழக்கம் இல்ல. செய்தது பிழை எண்டும் தெரியும். என்னால முடிஞ்ச வரைக்கும் விளக்கம் சொல்லி, மன்னிப்பும் கேட்டாச்சு. மன்னிக்கிறதும் பெரிய மனுசத்தனம் எண்டு மாமி..” என்று எழுதியவள் மாமியை அழித்துவிட்டு, “இந்தக் குட்டி பேபிக்கு உங்கட அம்மா சொல்லித் தர இல்லையா?” என்று கேட்டு அனுப்பினாள்.

 

குட்டி பேபி பெறுகிற வயசில என்னைக் குட்டி பேபியாம். இவளை.. கேசத்துக்குள் கையை நுழைத்துக் கோதிக்கொண்டவனின் எண்ணங்கள் எங்கெங்கோ விரிய மென் சிரிப்பொன்று அவன் உதட்டினில் மலர்ந்தது. கூடவே, இன்னுமொருமுறை மன்னிப்புக்கேட்டு அவனைச் சமாதானம் செய்ய அவள் தயாரில்லை என்பதும் புரிந்தது. அவ்வளவு ரோசமா? அது அவனுக்கும் தானே உண்டு.

 

மனம் மீண்டும் சீண்டப்பட்டுவிட, “ஓகே பாய்!” என்றுவிட்டு அங்கிருந்து வெளியே வந்தான்.

 

பிரியந்தினியின் முகம் வாடிப் போயிற்று. என்ன சொன்னாலும் சமாதானம் ஆகிறான் இல்லையே. நல்ல மாதிரி பேசிக்கொண்டு இருக்கையில் சட்டென்று, ‘ஓகே பாய்’ என்றால் என்ன செய்வது? ‘கோல் பண்ணவா’ என்று கேட்க நினைத்ததை இனியும் கேட்க முடியாமல் அப்படியே அமர்ந்திருந்தாள்.

 

 

error: Alert: Content selection is disabled!!