நாட்கள் மீண்டும் நகர்ந்தன. திருமணத்துக்கு இன்னும் இரண்டு மாதம் இருக்கிறது என்கிற நிலையில் திருமணச் சேலைகள் எடுக்க முல்லைத்தீவுக்குப் புறப்பட்டாள். அவனும் வருவான் என்றுதான் ஜெயராணி சொல்லியிருந்தார். வருவான், சமாதானம் செய்யலாம் என்று மிகுந்த எதிர்பார்ப்புடன் அவள் காத்திருக்க, அவன் வரவில்லை. வேலை என்றுவிட்டான். ‘நீ மட்டும் தான் வேலை செய்கிறாயா? நானும் தான்.’ என்று அவளுக்கு உணர்த்திவிட நினைத்தான்.
“என்னம்மா இது? தம்பி உன்னோடயாவது நல்லா கதைக்கிறவரா? நாங்க எல்லாரும் பாக்கவேணும் எண்டு ஒரே ஒருக்கா வந்திட்டுப் போனார். பிறகு வரவே இல்ல. இந்த முறையும் வாறன் எண்டுபோட்டு வரேல்ல.” திருமணம் நெருங்கிவிட்ட நிலையில் மருமகனாகப் போகிறவனின் செயலில் மெல்லிய பயம் உண்டாயிற்று அற்புதாம்பிகைக்கு.
பிரியந்தினிக்கும் அதேதான். அதை வெளியே காட்டிக்கொடுத்து அவனை விட்டுக்கொடுக்க மனதில்லாமல், “கலியாணத்துக்குப் பிறகு அவர் கொழும்புக்கு வேலை மாறிக்கொண்டு வரவேணும் அம்மா. அதுக்குமுதல் எப்பிடியும் அவர் செய்ற ப்ராஜெக்டை முடிச்சுக் குடுக்கவேணும். அதுதான். மற்றும்படி ஒண்டுமில்ல. சும்மா யோசிச்சுக் கவலைப்படாதீங்க.” என்று, ஆறுதல் படுத்தினாள்.
அவளுக்குள் மட்டும், நான்தான் இறங்கிப்போக வேண்டுமோ, அதை எதிர்பார்த்துதான் அமைதியாகவே இருக்கிறானோ என்கிற கேள்வி ஓடத்தொடங்கிற்று. பொன்னுருக்கல் நடந்துவிட்டால் அதன்பிறகு மாப்பிள்ளையும் பெண்ணும் பார்க்கக் கூடாது. இதையெல்லாம் இந்தக்காலத்தில் எல்லோரும் பின்பற்றுவதில்லை என்றாலும், அவளின் அம்மாவும் மாமியாரும் பின்பற்றுவார்கள் என்று அவர்களின் பேச்சிலேயே கண்டுகொண்டாள். ஆக, அவள் எதைச் செய்வதாக இருந்தாலும் பொன்னுருக்கலுக்கு முதல் செய்து அவனைச் சமாதானப்படுத்த வேண்டும்.
ஜெயராணிக்கும் மகன் மீது அதிருப்திதான். “என்ன தம்பி இதெல்லாம்? ஏற்கனவே நீ தூரத்தில வேலை பாக்கிறாய். அதுல நினைச்ச நேரம் உன்னப் பாக்கவும் ஏலாது. இதுல நிக்கவேண்டிய நேரத்தில கூட நிக்காட்டி பொம்பிளை வீட்டில என்ன நினைப்பீனம், சொல்லு? அவே நல்ல மனுசரா இருக்கப்போய் ஒரு வார்த்த கேக்க இல்ல. பிரியா பாவம் அப்பு. நீ வரேல்ல எண்டதும் பிள்ளையின்ர முகம் அப்பிடியே வாடிப்போச்சுது!” அன்னை சொன்ன மற்றவற்றை விட, பிரியாவின் முகம் வாடிய செய்தி அவன் மனதுக்குக் குளிர்ச்சியைப் பரப்பிற்று. அவள் அவனைத் தேடியிருக்கிறாள் என்கிற மகிழ்வோடு அன்னையைச் சமாளித்துவிட்டு வைத்தான்.
தனக்குப் பிடித்த மூன்று விதமான பட்டுச் சேலைகளை மேலோட்டமாகக் கட்டி, அதை போட்டோ எடுத்து, அவனுக்கு அனுப்பிவிட்டாள் பிரியந்தினி.
“எது நல்லாருக்கு எண்டு சொல்லுங்கோ?” அவனுக்குப் பிடித்ததாய் எடுக்க வேண்டும் என்கிற ஆவலும், கூடவே, எப்படியாவது அவனைச் சமாதானம் செய்துவிட வேண்டும் என்கிற ஆசையும் சேர்ந்துகொள்ள, இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக்கொள்ள நினைத்தாள்.
அப்படி, தன் விருப்பம் கேட்டவளின் செய்கை அவனையும் மகிழச் செய்தது. சேலையை விட அதிகமாக அவன் அவளைத்தான் பார்த்தான். இருந்தாலும், “கட்டப்போறது நீ. உனக்குப் பிடிச்சதா எடுக்கிறதை விட்டுட்டு என்னை ஏன் கேக்கறாய்.” என்று வேண்டுமென்றே முறுக்கிக்கொண்டான்.
“நான் கட்டத்தான். எண்டாலும் உங்களுக்குப் பிடிச்சதை எடுக்கத்தான் விருப்பமா இருக்கு. சொல்லுங்கோ, பிளீஸ்.” அவளின் அந்தப் பிளீசில் இன்னும் கொஞ்சம் இறங்கி வந்தான் கோகுலன்.
இரண்டாவதாக வந்திருந்த சேலை பிடித்திருந்தது. இருந்தாலும் அவளின் போட்டோக்கள் இன்னும் வேண்டும் என்பதால், “இவ்வளவு தானா? வேற டிசைன்ஸ் இல்லையா?” என்று அனுப்பினான்.
அவளும் சலிக்காமல் வேறு வேறு சேலைகளை அணிந்து, போட்டோ எடுத்து, அவனுக்கு அனுப்பினாள். கிட்டத்தட்ட பதினைந்து சேலைகளுக்கு மேல் என்கிற நிலையில் மேலோட்டமாக என்றாலும் கட்டிக்கட்டியே களைத்துப்போனாள், பிரியந்தினி.
கடைசியில், “இனி என்னால ஏலாது கோகுல். இதுல ஒண்டுமே பிடிக்கேல்லையா உங்களுக்கு?” என்ற அந்தக் கேள்வியிலேயே அவளின் சோர்வு தெரிந்துவிட, பாவமாயிற்று அவனுக்கு.
இரண்டாவதாக வந்ததை அனுப்பி, “இது நல்லாருக்கு!” என்றான் முகமெல்லாம் சிரிப்பாக. ‘பக்கத்தில நிண்டிருந்தா கொலைவெறியில என்ர கழுத்தப் பிடிச்சிருப்பா’ என்று அவன் எண்ணியது சரியே என்பதுபோல், முறைக்கும் எமோஜிகளை அனுப்பிவிட்டு, “இத முதலே சொல்லி இருக்கலாம் தானே. களைச்சே போனன். அம்மாக்கும் மாமிக்கும் என்னில சரியான கோபம். ஆனா எல்லாத்துக்கும் காரணம் நீங்க.” என்று அனுப்பினாள், அவள்.
அவனுக்கும் புரிந்தது. என்றாலும், “எனக்காக இதைக்கூடச் செய்யமாட்டியா?” என்று கேட்டான்.
“அதென்ன இத கூட?”
அதற்கு அவன் பதில் போடவில்லை. அதுவரை நேரமும் நன்றாகக் கதைக்கிறான், இனி எல்லாம் சரியாகிவிடும் என்று எண்ணியிருந்தவளின் மனமும் முகமும் மீண்டும் வாடிப்போயிற்று.
எல்லாவற்றையும் தனக்குள்ளேயே போட்டு மறைத்துக்கொண்டு உடைகள் எடுத்து, அவற்றைத் தைக்கக் கொடுத்துவிட்டு மீண்டும் கொழும்புக்கு வந்து சேர்ந்தாள். அடுத்தவார இறுதியில், அவன் முல்லைத்தீவுக்கு வந்திருப்பதாகவும் வீட்டுக்கும் வந்திருந்து நல்லமாதிரிக் கதைத்துக்கொண்டு இருந்துவிட்டுப் போகிறான் என்றும் அன்னை சொன்னபோது, பிரியந்தினிக்கு என்ன சொல்வது என்று தெரியாத நிலை.
தயக்கம், மனவருத்தம், வீண்பிடிவாதம் எல்லாவற்றையும் உதறிவிட்டு அவனுக்கு அழைத்தாள். “சொல்லியிருந்தா நானும் வந்திருப்பனே. மீட் பண்ணியிருக்கலாம்.” அவனைப் பார்க்கவே முடியாமல் போகிறதே என்பதில் அவளுக்குக் குரல் அடைத்துக்கொண்டது.
அவளின் கேள்வி ஆறிக்கொண்டிருந்த கோபத்தை விசிறிவிட்டது போலாயிற்று அவனுக்கு. “பக்கத்தில இருந்த கஃபே பெயிண்ட்டுக்கே வர உனக்கு நேரமில்லை. இதுல கொழும்பில இருந்து முல்லைத்தீவுக்கு வர நேரமிருக்குமா என்ன? அதுதான் சொல்ல இல்ல. எப்பிடியும் கலியாணத்தில பாக்கத்தானே போறம். என்ன அவசரம்.” என்றான் அக்கறையற்றவன் போன்று.
பிரியந்தினிக்கு வாயடைத்துப் போயிற்று. அவள் பதிலற்று நிற்க, “முதல் இந்தக் கலியாணம் உனக்கு ஓகே தானே?” என்றான் அவன்.
“ஏன் கோகுல், இப்பிடி எல்லாம் கேக்கிறீங்க?” என்றாள் மிகுந்த வருத்தத்தோடு.
“ஊரே கூடி நிக்கிற மண்டபத்திலையும் என்னால அவமானப்படேலாது. அதுதான். அப்பிடி ஏதும் எண்டா தயவு செய்து முதலே சொல்லிப்போடு!” குத்தலாக மொழிந்துவிட்டு அழைப்பைத் துண்டித்தான் அவன்.
அதற்குமேல் முடியாமல் தனிமையில் கிடந்து விசித்தாள் பிரியந்தினி. ஏன் இப்படி இவ்வளவு கோபம்? அவளுக்குப் புரியவே இல்லை.
கோகுலனும் மனதின் புழுக்கம் தாங்கமாட்டாமல் அறைக்கு வெளியே வந்திருந்தான். இரண்டு கைகளாலும் தலையைக் கோதிக்கொடுத்தவனுக்கு இப்படி வார்த்தைகளை விடாமல் இருந்திருக்கலாமோ என்றுதான் இருந்தது. ஆனால், அவள் செய்தது தவறு என்று தெரிந்தாலும், ஒரு அளவு தாண்டி இறங்கி வராமல் நிற்கிறவளின் செய்கையில், அவள் மீதான கோபம் முற்றிலுமாக நீங்கமாட்டேன் என்று நின்றது. அதில்தான் அப்படிச் சொன்னான். இப்போதோ அழுகிறாளோ என்று மனம் துடித்தது. குரல் வேறு தழுதழுத்ததே.
மீண்டும் ஃபோனை கையில் எடுத்துவிட்டு, “ப்ச்!” என்கிற சலிப்புடன் மீண்டும் வீட்டுக்குள் நடந்தான்.

