என் பிரியமானவளே 8 – 1

சுபநேர சுபமுகூர்த்ததில் சுற்றமும் சொந்தமும் வாழ்த்த, மணமாலை சூடி பிரியந்தினியைத் தன் துணைவியாகக் கரம் பற்றிக்கொண்டான் கோகுலன். அதன்பிறகுதான் இருவருமே ஆசுவாசமாகினார். புதிதாய்ச் சூடிக்கொண்ட இந்தச் சொந்தம் மனதினில் ஒருவித இன்பத்தைப் பரப்பிற்று!

 

அதன் பிறகான சடங்குகள் எல்லாம் முடிந்து சற்று ஓய்வு கிடைத்தபோதுதான், கணவனாகிப் போனவனை முழுமையாகப் பார்த்தாள் பிரியந்தினி. தோள்கள் உரசும் தூரத்தில், பட்டுவேட்டி சட்டையில், நெற்றியில் திருநீறு சந்தனம் தீட்டி, மாப்பிள்ளைக் கோலத்தில் முகத்தில் திருமணக் களை மின்ன, யாரோ ஒரு நண்பனைக் கண்டுவிட்டு கையை ஆட்டிச் சிரித்தவனின் தோற்றம், அப்படியே, அவள் மனதை அள்ளிற்று.

 

இனி அவன் அவளின் கணவன். அந்த நினைவு தந்த தித்திப்புடன் அவனையே பார்த்திருந்தாள். அதை உணர்ந்து சிறு சிரிப்புடன் அவனும் திரும்பிப் பார்த்தான்.

 

அதற்காகவே காத்திருந்தவள், “ஹாய்! நான் பிரீ. நீங்க?” என்றாள் கையை நீட்டி.

 

அவளின் திடீர் செயலில் கண்களில் சிரிப்பு மின்ன, “சொறி! நான் என்கேஜ்ட்!” என்றான் அவன் அடக்கப்பட்ட நகைப்புடன்.

 

“அது ஃபிரீ இல்ல பிரீ.” என்றாள் பொய் முறைப்புடன்.

 

“ம்ஹூம்!” என்று புருவங்களை உயர்த்தினான் அவன்.

 

அவனின் அந்தச் செய்கையில் அவள் உள்ளம் மயங்கிற்று. இந்த அழகிய முகத்தைக் காண எத்தனை நாட்கள் ஏங்க வைத்துவிட்டான். ஆசையாக அவனையே பார்த்தாள்.

 

சும்மாவே அவளின் காலடியில் குப்புற விழுந்து கிடப்பவன் கோகுலன். இதில் இப்படிப் பார்த்தால்? அவன் மனதும் சலனப்பட்டது. மணப்பெண்ணுக்கான விசேச அலங்காரத்தில், அவன் தெரிவு செய்துகொடுத்த பட்டுச் சேலையில், அவன் வைத்துவிட்ட குங்குமத்தையும் அணிவித்துவிட்ட தாலியையும் தன்னில் தாங்கி, முகமெங்கும் பூரிப்புடன் நின்றிருந்தவளின் அழகு, அவன் நெஞ்சைக் கொள்ளை கொண்டது. பார்க்க பார்க்கத் தெவிட்டவில்லை.

 

அவள் அவனைப் பார்த்தபோது தோன்றாத தடுமாற்றம் அவன் அவளை ரசித்தபோது உண்டாயிற்று. வேகமாக விழிகளை அகற்றிக்கொண்டு, “எல்லாரும் எங்களைத்தான் கவனிச்சுக்கொண்டு இருப்பினம்.” என்றாள் மெல்லிய குரலில்.

 

அது தெரியாமல் இல்லை. ஆனால், நீண்ட காத்திருப்பின் பின் இன்றைக்குத்தான் அவளைப் பார்க்கிறான். அதற்குள் அளந்து பார் என்றால்? “நீ மட்டும் என்னைப் பாக்கலாமாக்கும்.” சற்றே அவள் புறமாகச் சரிந்து கிசுகிசுத்தான்.

 

ஒரு நொடி உதட்டைக் கடித்துவிட்டு, “அநியாயத்துக்கு வடிவா இருக்கிறீங்க கோகுல். அதுதான்.” என்றாள் அவள்.

 

அவன் விழிகளில் இதை எதிர்பாராத திகைப்பும் சிரிப்பும். கேசம் கோத எழுந்த கையை அடக்கிக்கொண்டு பார்வையை அகற்றிக்கொண்டான். உதட்டோரம் மட்டும் சிரிப்பில் துடித்தது.

 

அவளின் குடும்பத்தினர் ஆயிரம் புத்திமதிகளைச் சொல்லி, ஆனந்தமும் ஆனந்தக் கண்ணீருமாக அவளை அவன் வீட்டில் விட்டுச் சென்றனர். அவனின் அறையில் அவனுக்காகக் காத்திருந்தாள், பிரியந்தினி.

 

ஆர்வம் பாதியும் பதட்டம் மீதியுமாக நொடிகள் கழிந்தன. இதுவரைக்கும் அவன் முகம் திருப்பவில்லை. பழையதைப் பேசவில்லை. இப்படியே விட்டுவிடுவானா அல்லது தனிமை கிடைத்ததும் அதைப் பற்றிப் பேசி, அவளை நோகடித்துவிடுவானா என்கிற கலக்கம், அவளுக்குள் மெல்ல மெல்ல மேலோங்கத் தொடங்கிற்று.

 

அவனும் வந்தான். கதவடைத்துவிட்டு அதிலேயே சாய்ந்து நின்று, “பிறகு?” என்றான்.

 

என்ன பிறகு? கண்களில் கேள்வியுடன் நிமிர்ந்தவள், அவன் விழிகளின் வீச்சில் முகம் சிவப்பது போலிருக்க வேகமாகப் பார்வையை அகற்றிக்கொண்டாள். எவ்வளவு நேரம் தான் அப்படி நிற்பது? அவன் தன்னையே பார்க்கிறான் என்கிற உணர்வே அவளுக்குள் மெல்லிய படபடப்பை உண்டாக்கிற்று. அதில், உதட்டின் மேலே மெல்லிய வியர்வைப் பூக்கள் அரும்ப ஆரம்பித்தன.

 

அதைக் கவனித்துவிட்டு சிறு சிரிப்புடன், “வெக்கையா இருக்கா? ஃபேன் போட்டுத்தான் இருக்கு.” என்றபடி வந்து ஜன்னல் கதவுகளைச் சற்றுக்குத் திறந்துவிட்டான். கூடவே, “ஏன் நிக்கிறாய்? இரு.” என்று கட்டிலைக் காட்டினான். சட்டையைக் கழற்ற பட்டனில் கையை வைத்துவிட்டு சிறு சிரிப்புடன் திரும்பி, “கழட்டலாமா?” என்றான் அவளிடம்.

 

அதுவரை, ஒருவித மோனநிலைக்கு ஆட்பட்டு விழிகளால் அவனையே தொடர்ந்துகொண்டிருந்தவள், இதையெல்லாமா வெட்கமே இல்லாமல் கேட்பது என்று முறைத்துவிட்டு, பார்வையைத் திருப்பிக்கொண்டாள். வெறும் உள் பனியனோடு வரப்போகிறானோ என்று அவள் தடுமாற, நல்லகாலம் அவன் இலகுவான ஒரு டீ ஷேர்ட்டில் வந்து அவளருகில் அமர்ந்தான்.

 

இருவருக்குமே என்ன பேசுவது என்று தெரியாத நிலை. மெதுவாக அவளின் கரம் பற்றினான் அவன். மெல்ல விரல்களை நீவி விட்டான். அவளுக்கு நடுங்கியது. அவனுக்கும் தடுமாற்றமாகத்தான் இருந்தது. இருபத்தியெட்டு வயது நிரம்பிய முழுமையான மனிதனாக இருந்தபோதிலும், மனைவி என்கிற ஒரு பெண், அவளோடான வாழ்க்கை முறை என்று எல்லாமே அவனுக்கும் புதிதாக இருந்தது.

 

“நான் கொழும்புக்கு வாறதுக்கு இன்னும் ரெண்டு மூண்டு மாதம் பிடிக்கும் போல இருக்கு யதி.” என்றான் மெல்ல.

 

அந்த இரவுக்கான பேச்சாக அன்றி, பொதுவான பேச்சை அவன் ஆரம்பித்ததில் தடுமாற்றம் அகன்று அவன் முகம் பார்த்தாள், பிரியந்தினி. “அதுக்கு என்ன?” என்றாள் இதமான முறுவலோடு.

 

அவன் பார்வை அந்தப் புன்னகையில் தங்கிற்று. “உனக்குக் கோபம் இல்லையே? கலியாணத்துக்குப் பிறகு கொழும்புக்கு வந்துடுவன் எண்டுறதுதான் பேச்சு.”

 

அவள் இல்லை என்று தலையசைத்தாள். “என்னால வேலைய விடேலாது எண்டுதான் சொன்னனான் கோகுல். மற்றும்படி நீங்க உடனேயே கொழும்புக்கு வரவேணும் எண்டு இல்ல. எங்கட வேலைகளைப் பற்றி எனக்கும் தெரியும் தானே.” மென் குரலில் சொன்னாள்.

 

“தேங்க்ஸ்!” அவள் தன்னை விளங்கிக்கொண்டதில் அவனுக்கு மெய்யாகவே மனதுக்கு ஆறுதலாக இருந்தது.

 

“ம்ஹூம்!” என்று, இப்போது அவள் தன் புருவங்களை உயர்த்தினாள்.

 

error: Alert: Content selection is disabled!!