“உனக்கு நானா வேலையா எண்டு வந்தா வேலை தானே முக்கியம்.” அவளிடமிருந்து விலகிக்கொண்டு சொன்னான் அவன்.
இதற்குத்தானே பயந்துகொண்டு இருந்தாள். பயந்ததுபோலவே நடக்கிறதே. வேதனையோடு பார்த்தாள்.
“உனக்கு என்னோட இருக்க விருப்பமில்லாம கூட இருக்கலாம்.” என்றான் அவன் மீண்டும்.
அவளுக்கு விருப்பமில்லையா? இந்த ஐந்து நாட்களில் எந்தத் தருணத்தில் அப்படி உணர்ந்தானாம்? இதைக் கேட்டு அவனுக்கு விளங்கவைப்பதில் அவளுக்கு விருப்பமில்லை. அவளின் செய்கைகள் உணர்த்தாத எதையும் வார்த்தைகள் உணர்த்திவிடப் போவதில்லையே. “எனக்கு லீவு இல்ல. நான் நாளைக்கே போகவேணும்!” என்றாள் சுருக்கமாக.
“என்ர பிரென்ட்ஸ் நாளைக்கு லஞ்சுக்கு இன்வைட் செய்திருக்கினம் யதி!” சூடாகிவிட்ட குரலில் அறிவித்தான், அவன்.
“அடுத்த வீக்கெண்ட் வாறம் எண்டு சொல்லுங்கோ!” என்றுவிட்டு வெளியேறியவளின் மனது புண்ணாகிப் போயிற்று. அவன் ஏன் அவளைப் புரிந்து கொள்ளவே இல்லை. மனமும் முகமும் வாடிப்போயிற்று. அன்று முழுவதும் அதை மற்றவர்களிடம் காட்டாமல் சமாளிப்பதே அவளுக்கான மிகப்பெரிய சவாலாக இருந்தது. அன்று இரவு, அவளுக்கு முதுகு காட்டிக்கொண்டு படுத்தான் அவன்.
இத்தனை நாட்களும், இரவுகளில் சிறுபொழுதேனும் அவளை அவன் தனியாக விட்டதேயில்லை. இன்றோ முதுகைக் காட்டிக்கொண்டு படுத்திருக்கிறான். அவளாக நெருங்கிச் சமாதானம் செய்ய ஆவலும் ஆசையும் இருந்தாலும், இன்னும் சுடுசொற்களை வீசிவிடுவானோ என்கிற பயம் தடுத்துப் பிடித்தது. கூடவே, இதில் என் பிழை என்ன இருக்கிறது என்கிற கேள்வியும் சேர்ந்துகொண்டது.
இந்தச் சரி பிழைகளைத் தாண்டிக்கொண்டு மனமும் உடலும் அவன் அருகாமையை மிகவுமே தேடிற்று. விடிந்தால் புறப்படவேண்டும். அதற்கு நடுவில் அவர்களுக்கு என்று இருக்கும் இந்த ஒரே ஒரு இரவை இப்படித் தனிமையில் தவிக்கவிட்டு வதைக்கிறானே என்று மனம் அழ அழ, அந்த இரவையே உறக்கமின்றிக் கழித்தாள் பிரியந்தினி.
அருகில் படுத்திருந்தவனின் நிலையும் அதேதான். அவன்தான் கோபத்தில் இருக்கிறான். அவளாவது சமாதானம் செய்திருக்கலாமே. அன்று நடந்ததற்கும் இப்படித்தானே இறங்கி வராமல் நின்றாள். அவ்வளவு பிடிவாதமா? ‘நீ நிக்கவே வேணாம். போடி!’ என்று முறுக்கிக்கொண்டான், அவன்.
அவர்கள் விரும்பாத காலையும் விடிந்தது. ஏதாவது பேசுவானா என்று அவளும், ஏதாவது சொல்லமாட்டாளா என்று அவனும் மனதுக்குள் பரிதவித்தபடியே இருக்க, அவள் தயாராகிக்கொண்டாள்.
உடைகள் அடங்கிய பையை அவள் எடுக்கப்போக, தடுத்து அவன் வாங்கிக்கொண்டான். மாமா, மாமி, பாமினி என்று எல்லோரிடமும் விடைபெற்று, வண்டியில் ஏறி அமர்ந்து அவனுடைய தோளைப் பற்றினாள். அந்தத் தொடுகை மனதுக்குள் பெரும் பிரளயத்தைக் கிளப்பியது. தொண்டை அடைத்துக்கொண்டு வந்தது. எதையும் காட்டிக்கொள்ளாமல் இருக்க முயன்றபடி அவனைப் பார்க்க, அவனும் கண்ணாடி வழியே அவளைத்தான் பார்த்தான்.
அவளின் அந்தத் தொடுகையும் அதன்மூலம் அவள் மீது அவனுக்குள் சுரந்த பாசமும் புறப்படுகிறவளை மனதில் பாரத்தோடு அனுப்புகிறோமே, இரவே சமாதானமாகி இருக்கலாமோ என்கிற பரிதவிப்பை அவனுக்குள் விதைத்தது.
“நேரா ரெயில்வேக்கு விடவா?” இந்த மௌனப் போராட்டத்தை முடித்துவைக்க வேண்டும் என்கிற உந்துதலில், பெற்றோரும் அருகில் நிற்பதால் கதைக்காமல் இருக்கமாட்டாள் என்று தெரிந்து கேட்டான்.
“அம்மா வீட்டை போயிட்டு போவம்.” என்றாள் அவள்.
இருவருமே தமக்குள் இருந்த முறுகலை மற்றவர்களிடம் காட்டிக்கொள்ளவில்லை.
“கவனமா போகவேணும் என்னம்மா. நேரா நேரத்துக்குச் சாப்பிடவேணும். வேலைக்குப் போயிட்டு வரேக்க கவனம். நேரம் இருக்கேக்க எனக்கும் எடுங்கோ.” என்று அவளுக்குச் சொன்னார், ஜெயராணி.
மனம் கசிய, “சரி மாமி.” என்று கேட்டுக்கொண்டாள்.
“தம்பி, மெனக்கெடாம நேரத்துக்கே ரெயில்வேக்குக் கூட்டிக்கொண்டு போ. பிறகு கடைசி நேரத்தில அவசரமா ஓடுறேல்ல!” என்று அவனுக்கும் சொன்னார் அவர்.
தாய் வீட்டுக்குச் சென்று, அவர்கள் தந்த தேநீரையும் காலை உணவையும் இருவருமாக முடித்துக்கொண்ட பின், தனக்குத் தேவையான ஒருசில உடைகளை எடுக்கத் தன்னுடைய அறைக்குச் சென்றாள், பிரியந்தினி.
பின்னோடு வந்தவன், பின்னிருந்தே ஒரு வேகத்துடன் அவளை அணைத்துக்கொண்டான். அப்படியே விழிமூடி அடங்கியவளுக்கு உடைந்துவிடுவோம் போலாயிற்று! தொண்டை அடைக்கப் பிரிவின் துயர் மிகப் பெரிதாகத் தெரிய, அவனோடு தானும் ஒன்றினாள்.
“சொறி!” தன்னை மீறிச் சொன்னவனின் உதடுகள் கணவனாக அவளைத் தேடியது. இசைந்தவளுக்குமே அது பெரும் சுகமாகத்தான் போயிற்று!
“நிச்சயத்துக்கு இங்க வந்தனான். உடுப்பு எடுக்கவும் வந்து போனனான். இப்பவும் ஒரு கிழமை எடுத்ததால உண்மையாவே லீவு தரமாட்டோம் எண்டு சொல்லிட்டினம். உங்கள விட்டுப்போக மனமில்லாம நீங்க என்னட்ட கேக்க முதலே நான் கேட்டுப் பாத்திட்டன்.” முகமும் கண்களும் கலங்கிச் சிவந்திருக்க, என்னைப் புரிந்துகொள்ளேன் என்கிற தவிப்புடன் அவன் முகம் பார்த்துச் சொன்னாள், அவள்.
“பரவாயில்ல விடு. போயிட்டு வா. வீக்கெண்ட் வருவாய் தானே.” என்று சமாதானம் செய்தான், அவன்.
தாய் வீட்டிலிருந்து புறப்பட்டவர்களின் மனது நிறைந்து போயிருந்தது. பெற்றவர்களின் கண் மறைந்ததும், அவனை நெருங்கி அமர்ந்து வயிற்றைக் கட்டிக்கொண்டாள். உதட்டோர முறுவலுடன் அவன் கண்ணைச் சிமிட்ட, வெட்கச் சிரிப்புடன் அவன் முதுகிலேயே ஒன்றைப் போட்டாள், பிரியந்தினி.
வண்டியைப் பிரதான வீதியில் மிதக்க விட்டவனின் மனதில் மிகுந்த உல்லாசம். இந்த ஐந்து நாட்கள் தாம்பத்யம் தராத நிறைவை அந்த ஒரு நிமிடத்து மனதின் நெருக்கம் தந்தது போலுணர்ந்தான்.
கைப்பிடியில் அழைத்துச் சென்று, டிக்கெட் எடுத்து, புகையிரதம் ஏறி இருக்கை ஒன்றில் அமர்ந்ததும், “கவனமா போ, என்ன!” என்றான் தன் தவிப்பை அடக்கியபடி.
அவனையே விழிகளுக்குள் நிரப்பியபடி தலையை அசைத்தாள், அவள்.
“போனதும் மெசேஜ் அனுப்பு. எங்கயும் இறங்காத. முடிஞ்சா இடையில கொழும்புக்கு வரப்பாக்கிறன்.” என்று விடைகொடுத்தான், அவன்.
“நீங்களும் போறது கவனம். வீக்கெண்ட் வருவீங்க தானே?” தழுதழுத்த குரலில் மெல்லக் கேட்டாள், அவள்.
“வராம?” என்றுவிட்டு அவன் பார்த்த பார்வையில் முகச்சிவப்பை அடக்குவது சிரமமாயிருந்தது அவளுக்கு.
புகையிரதம் புறப்பட்டது. கடைசிப் பெட்டி கண்ணுக்கு மறைகிற வரையும் அங்கேயே நின்றான், கோகுலன்.
மனதை அவனிடம் விட்டுவிட்டு, உடலை மட்டும் சுமந்துகொண்டு போய்க்கொண்டிருந்தாள், அவள்.

