மிகுந்த தவிப்புடன் தனித்து நின்றான் கோகுலன். அவள் அருகில் இருக்கிறவரை ஆயிரம் குறைகளைச் சுமந்திருந்த மனது, அவள் போனதும், அவளோடு இருந்த நொடிகளை இன்னும் இனிமையாகக் கழித்து இருக்கலாமோ, அவளையும் கதைக்க வைத்திருக்கலாமோ என்று நினைத்து நினைத்தே அலைபாய்ந்தது.
என்ன சொல்லவருகிறாள் என்று முழுமையாகக் கேட்காமலேயே கோபப்பட்டு, வார்த்தைகளை விட்டு, அவளை நோகடித்துவிட்டானே. “ப்ச்!” என்று தலையைக் கோதிக்கொண்டவனுக்குத் தன்மீதே கோபம் வந்தது. அவனைப்பற்றி என்ன நினைத்திருப்பாள்? முசுடு, கோபக்காரன், கடுவன் பூனை என்றா? என்னவோ அவளின் மதிப்பில் நிலை தாழ்ந்து போவதை நினைத்துப் பார்க்கவே முடியவில்லை. இந்தக் கோபத்தைக் கட்டுப்படுத்தும் வழியும் தெரியவில்லை.
குரலை உயர்த்தாமல், படபடக்காமல் அமைதியாகப் பேசினாலும் சுயமரியாதை மிகுந்தவள். இல்லாமல், ‘லீவு கிடைக்கக்கூடாது எண்டு நான் ஏன் நினைக்கோணும்’ என்று அவனை நேராகப் பார்த்துக் கேட்பாளா? ‘என்னோட இருக்க உனக்கு விருப்பமில்லை’ என்ற அவனுடைய குற்றச்சாட்டுக்கு விளக்கம் சொல்ல வரவேயில்லையே. நீ மூடத்தனமாகப் பேசுவதற்கெல்லாம் என்னால் பதில் சொல்லிக்கொண்டிருக்க முடியாது என்று குறிப்பால் காட்டினாளோ? நேற்று கோபத்தைக் கிளப்பிய நிகழ்வு, இன்று, ரசனை மிகுந்ததாக மாறி உதட்டினில் முறுவலை வரவைத்தது.
வீட்டுக்குச் சென்றவனுக்கு அவள் இல்லாமல் அங்கே இருக்கவே பிடிக்கவில்லை. நண்பர்களுடன் பகல் உணவுக்கும் படத்துக்கும் வருவதாகச் சொல்லிவிட்டான். அவள் வேறு இல்லை. அதைச் சமாளிக்க அவனாவது கட்டாயம் போயே ஆகவேண்டும். வேறு வழியற்று அவர்களோடு நேரத்தைச் செலவழித்துவிட்டு வந்தான்.
மாலைபோல் அழைத்துக் கொழும்புக்கு வந்து சேர்ந்துவிட்டதைத் தெரிவித்தாள், அவள்.
“சரி, கவனமா இரு என்ன.” என்றான் இதமான குரலில்.
“கோகுல்” தயக்கத்துடன் அழைத்து நிறுத்தினாள், அவள்.
“ம்?”
“ஐ மிஸ் யூ!” என்றாள் மனதிலிருந்து.
அதுவரை நேரமும், எனக்கான கவனிப்பை அவளிடமிருந்து அளவுக்கதிகமாக எதிர்பார்க்கிறோமோ, அது கிடைக்காததால் தான் தேவை இல்லாமல் கோபப்பட்டு அவளையும் நோகடித்து நானும் நிம்மதி இழக்கிறோமோ என்றெல்லாம் யோசித்துக்கொண்டு இருந்தவன், இனி கவனமாக இருக்கவேண்டும் என்று முடிவெடுத்திருந்தான்.
ஆனால், அவள் சொன்ன, ‘மிஸ் யு’ அனைத்தையும் நொடியில் உடைத்துப்போட்டது. நொடியில் உணர்வுகள் பொங்க வேக முத்தம் ஒன்றை கைபேசி வழியே கொடுத்தவனுக்கு வார்த்தைகள் வர மறுத்தது. இந்த நொடியே தன் உயிருக்குள் அவள் வேண்டும் போலொரு வேகம் எழுந்தது.
“நீங்களுமா?”
“அங்க வரவா?”
“வீண் அலைச்சல் எல்லா.” அவளுக்கும் விருப்பம் தான். ஆனால், அவன் பாவமே.
“அது என்ர பிரச்சனை. வரவா?” அவன் குரலில் மெல்லிய சூடு ஏறிற்று.
வரச் சொல்லுவோமோ என்று ஒருநொடி எண்ணினாள். அதில் பிரயோசனம் இல்லை என்று தெரிந்தது. இன்று இரவே அவன் அங்கிருந்து புறப்பட்டாலும் காலையில் தான் கொழும்பு வந்து சேர முடியும். அப்போது, அவள் வேலைக்குப் போயாக வேண்டும். எப்படியும் எடுத்த லீவுக்கும் சேர்த்துத்தான் வேலை வைத்திருப்பார்கள். அவள் வேலை முடிந்து வருகிறபோது அவன் புறப்பட வேண்டும். ஏன் இந்த வீண் அலைச்சல்? அதையே அவள் சொன்னபோது, “நான் வாறது உனக்குப் பிடிக்கேல்லையோ?” என்றான் அவன் சினத்துடன்.
துவண்டுபோனாள் பிரியந்தினி. மீண்டும் முதலில் இருந்து ஆரம்பிக்கிறானே என்று இருந்தது. அன்று காலையில் இருந்து, மனதளவில் நெருங்கியிருந்த நிலை மாறி மீண்டும் விரிசல் விழுந்ததுபோல் உணர்ந்தாள். ஏன் இவன் இப்படியெல்லாம் யோசிக்கிறான் என்று புரியவே இல்லை.
“உங்களுக்காகத்தான் வேண்டாம் எண்டு சொன்னனான். மற்றும்படி தாராளமா நீங்க வரலாம்.” என்றாள் உணர்வுகளை மறைத்த குரலில். “நான் எந்த இடத்தில பிழை விடுறன் எண்டு உண்மையா எனக்குத் தெரியேல்ல கோகுல். அங்க வீட்டை வச்சு என்னோட இருக்க விருப்பம் இல்லையா எண்டு கேக்கிறீங்க, வேலையா நீங்களா எண்டு வந்தா எனக்கு வேலைதான் முக்கியம் எண்டு சொல்லுறீங்க, இப்ப நீங்க வாறது பிடிக்கேல்லையா எண்டு கேக்கிறீங்க? எங்களுக்குக் கலியாணம் நடந்து ஆறு நாள்தான் ஆகுது. ஆனா, இந்த ஆறு நாளில நீங்க எப்ப அப்பிடி உணர்ந்தீங்க எண்டு எனக்கு விளங்கவே இல்ல. உங்களுக்கு என்னை எந்தளவுக்குப் பிடிச்சிருக்கோ அதேயளவு எனக்கும் உங்களைப் பிடிச்சிருக்கு. உங்கள விட்டுட்டு வர எனக்கும் விருப்பம் இல்ல. ஆனா, வேற வழி இல்ல. இப்பவும் இந்த நிமிசம் நீங்க பக்கத்தில வேணும் மாதிரித்தான் இருக்கு. ஆனா, அதுக்குச் சாத்தியம் இல்ல. நான் நடைமுறை சிக்கலை யோசிச்சுப் பதில் சொன்னா நீங்க மனதால் யோசிச்சுக் கோபப்படுறீங்க. எனக்குத் தெரியேல்ல நான் என்ன செய்யவேணும் எண்டு.” கவலை தொனித்த குரலில் தன் மனதை எடுத்துரைத்தாள் பிரியந்தினி.
அவள் சொன்னது உண்மைதான். அவனுக்கும் புரிந்தது. இருந்தாலும், மூளை போடுகிற கணக்கும் மனதின் எதிர்பார்ப்பும் பொருந்தாமல் முட்டிக்கொண்டு நிற்கிறதே. “ப்ச்! விடு!” என்றுவிட்டு அழைப்பைத் துண்டித்தவனுக்குக் காரணமற்ற எரிச்சல்தான் மிகுதியாயிற்று.

